உம்மாச்சிக்கு No Fire

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

க்ருஷாங்கினி


நான்கு வயதுச் சிறுவன் மணி. தற்காலத்திய மற்ற குடும்பங்களைப் போன்ற ஒரே பிள்ளை. பள்ளியில் எல்.கே.ஜி. படிப்பும், பிறகு வாகனத்தில் வீடு வந்தவுடன் தனியே விளையாட்டுமாக பொழுது போக்கக் கூடியவன். ஆனால், கூட்டுக்குடும்பமாக இருப்பதால் கதை கேட்பது போன்ற கூடுதல் அனுபவங்கள் பெற்றவன். ஆண் குழந்தைகளுக்கு ஏற்றாற்போல துப்பாக்கிச் சண்டை செய்ய மாட்டான். பூ, செடி, எறும்பு போன்ற எல்லாவற்றையும் கண்டு அதிசயிக்கவும், அன்பு செலுத்தவும் செய்வான்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி குடந்தை நிகழ்ச்சியை அவனும் தொலைக்காட்சியில் பார்த்தான். அதன் முழு அர்த்தமும் தெரியாவிட்டாலும் பள்ளியில் நெருப்பும், பிள்ளைகள் சாவும் அவன் மனதில் மிக ஆழத்தில் படிந்து விட்டிருந்தது. மணிக்கு மிகப் பிடித்தது நாலு சக்கர வாகனங்கள். அதில் இருக்கும் வித விதமான உருவங்கள். லாரி, ஜீப், எல்லாவிதமான கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பொம்மைகளெல்லாமே அவனுடன் படுக்கையில் கிடக்கும். தலையில் சிவப்பு விளக்குடன் சத்தமிட்டு விளக்கு சுழல விரைந்து வரும் போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் மீது அவனுக்கு அதீத விருப்பம். ‘தலை மீது ஏன் விளக்கு வேண்டும் தெரியுமா ? சிக்னலில் எங்கும் நிற்காமல் விரைந்து செல்ல. உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் சிக்னலுக்குக் காக்க முடியுமா ? ‘ என்று விளக்கம் அளிப்பான். ‘ரயில்வே லைன் மூடி இருந்தால் எப்படி ஆம்புலன்ஸ் செல்ல முடியும் ? ‘ என்று நியாயமான கேள்வி கேட்பான். எரிந்த கூரையும் இறந்த பிஞ்சுகளின் உடல்களும், விரைந்து வரும் ஆம்புலன்ஸும் அவன் மனத்தை ஏதோ ஒரு வகையில் பாதித்தது போல.

இரண்டு நாட்கள் கழித்து பாட்டி சாமிக்கு விளக்கு ஏற்றி வைத்தார். மணி மிகவும் கலங்கிப்போய் ‘பாட்டி பாட்டி ‘ என்று கூப்பிட்டு ‘பாட்டி உம்மாச்சிக்கு நோ பயர் பாட்டி ‘ என்று திரும்பத் திரும்பக் கூறி அலறி அழ ஆரம்பித்தான். முதலில் புரியாமல் இருந்த பெரியவர்களுக்கு பிறகு புரிந்தது அவன் என்ன சொல்லுகிறான் என்று. சாமிக்கு விளக்கு ஏற்றி வைத்தது அவனுக்கு எரியும் நெருப்பாக காட்சி கொடுத்தது. குழந்தைகள் நெருப்பில் இறந்துவிட்டனர். அதனால் நம் வீட்டிற்கு நெருப்பு வேண்டாம். மேலும் சாமிக்கு நெருப்புப் பிடித்தால் சாமியும் செத்துப் போய்விடும் என்ற பயம். பிஞ்சு மனதில் எத்தனை ஆழமான ரணத்தை ஏற்படுத்தி விட்டது அந்த விபத்து ? குடந்தை நிகழ்ச்சியை டி.வி. யில் பார்த்த பின் மணிக்கு பிறகு நீண்ட நாட்கள் ஆம்புலன்ஸைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது.

இந்த ஆண்டு ஜூலை 16 அந்த விபத்து நடந்து ஓராண்டு கழிந்துவிட்ட தினத்தை நினைவு படுத்தும் விதமாகப் பெற்றோரும், மற்ற பள்ளிச் சிறார்களும், ஆசிரியர்களும், பொது மக்களும் அந்த நினைவுச் சின்னங்களின் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி, சூடம் கொளுத்தி, மாலை அணிவித்து, பூக்களைத் தூவி பிரார்த்தனை செய்தனர். தொலைக்காட்சியில் அதைக் கண்ட எனக்கு மணியின் வார்த்தைகள் மறுபடியும் செவியில் ஒலித்தன. குழந்தைகள் தெய்வங்களாகி விட்டன, தங்கள் உயிர்களை இழந்து. எனவே மெழுகுவர்த்தியும் கற்பூரமும் ஏற்றி நினைவுறுகின்றனர் மக்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு நகை முறண் போலத்தான் படுகிறது. உயிரிழந்த பிள்ளைகளுக்கெனக் கிடைத்த தொகையைக் கொண்டு அமைக்கப்பட்ட மகளிர் குழுக்களுக்கும், தொடங்கப்பட்ட தொழில் களுக்கும் கூட நெருப்புடன் தொடர்புடைய ‘அணையா விளக்கு ‘ , ‘சுடரொளி ‘, ‘அகல் விளக்கு ‘, ‘தீபம் ‘, ‘கலங்கரை விளக்கம் ‘, ‘அறிவுச் சுடர் ‘ என நெருப்பையும், குழந்தைகள் இறப்பையும் ஒருங்கிணைத்து பெயர் சூட்டி உள்ளனர்.

பஞ்சபூதங்களில் ஒன்றான தீ தரும் வெப்பம் இன்றி உலகில் எந்த உயிரும் ஜீவித்திருக்க இயலாது. எனவே, வெப்பமும், அதை உண்டாக்கக்கூடிய நெருப்பும், நெருப்பான சூரியனும், சூரியஒளியால் உயிர்க்கும் அனைத்து ஜீவனுக்கும் என தீ இனிதாக இருக்கக் கூடியதுதான். நீர், நெருப்பு, காற்று அனைத்துமே அழித்தலும் ஆக்கலும் என இரண்டுக்கும் ஆனதாகும். பஞ்ச பூதங்கள் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். மனிதனும் இயற்கையை ஒட்டிய வாழ்வும் இயற்கையைக் கொண்டாடிப் போற்றும் வாழ்தலும் என்று அமைத்துக்கொண்டு, இனியும் வரும் சந்ததியருக்கு விட்டுச் செல்ல வேண்டும் பூமிையை இயற்கையாய். எத்தனை தொல்லைகள் கொடுத்தாலும் இயற்கை இன்னமும் ஜீவனுள்ள, அன்புள்ள, தாயாகி நமக்கு அள்ளிக் கொடுகிறது. எனவே அஜாக்கிரதையாய் இல்லாமல் போற்றுவோம் இயற்கையை: நேசிப்போம் குழந்தைகளை. இன்னொரு முறை நிகழ வேண்டாம் ஜுலை பதினாறும் டிசம்பர் இருபத்து ஆறும்.

—-

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி