உன் கவிதையை நீயே எழுது

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

கே ஆர் மணிநான் வெற்றியா ? தோல்வியா ?
தொப்புள் கொடி அறுத்து
பூமியில் குதித்தபின் தொடங்கும்
என் மன ஊசலாட்டம்..

என் அரும்பு மீசையிடம்
குழந்தைதனம் தோற்கும்.
என் நரைமயிரில்
வாலிபம் தோற்கும்.

முப்பதை தாண்டியும் கல்யாணமாகலாம்.
முடியாது போனால் நித்திய கல்யாணி.
பத்து மாதத்திற்கு முன்
அது குறைப்பிரசவம்.
மூணு மாதத்தில் முழுகாது போனால்
கல்லெறியும் மலடிப்பார்வைகள்.

வெற்றியும், தோல்வியும் காலத்தின் கணக்குகளா ?

இருளின் தோல்வி ஒளியா?
ஒளியின் தோல்வி இருளா ?
பிறப்பின் முடிவு இறப்பென்றால்
இறப்பின் தொடக்கம் எதுவாகும்..
புனரபி ஜனனம்..புரிகிறது.
புனரபி மரணம்.. இடிக்கிறதே.

தோல்விகள் வெறும்
கால மணித்துகளின்
கண்ணாடியில் பாதரசமோ ?

வெற்றியும், தோல்வியும் காலத்தின் மாயங்களா ?

என் மன ஊசலாட்டம்..
முருங்கை மரத்தின்மீது..
வேதாளத்தின் கேள்விகளாய்..
விடைகளுக்காய் விக்கிரமாத்தினை தேடி..
நான் வெற்றியா ? தோல்வியா ?

நான் என் கவிதையை மறுபடி படித்தேன்.
விக்கிரமாதித்தனின் பக்கத்திலிருந்து..

வெற்றி உன் மனைவி..
தோல்வி உன் காதலி
வெற்றியை தேய்த்து பார்.
தோல்வி தெரியும்.
தோல்வியை தேய்த்து பார்
வெற்றி பல்லிளிக்கும்.
வெற்றி உன் மனைவி
தோல்வி உன் காதலி

ஒவ்வொரு மனைவி பின்னும்
எத்தனை காதலிகள்.. உனக்கே தெரியும்..
மனைவியை மட்டும் ஊருக்கு சொல்லு.
காதலிகள் உன் நினைவு கல்லறைக்குள்
நித்திரையாகட்டும்.
உன் மனைவியை உனக்கு உவப்பாக்குவது
உன் காதலியின் ஈரமான நினைவுகள்தானே..

யாரோ எனக்காய் கவிதை படித்தார்கள்
அந்த பிரபஞ்சப்பகுதியில்.

என் கேள்விக்கு நான்தான்
என் குரலில் விடை சொல்லவேண்டும் என
வேதாளம் சொல்லிற்று.

நான் வெற்றியா ? தோல்வியா ?

விதை வெடித்து, மரம் வளர்வது
விதையின் தோல்வியா ?
மரத்தின் இலையுதிர்காலம்
மரத்தின் மரணப்படுக்கையா ?
ஒவ்வொரு இலையும் மட்கி
மறுபடியும் விதையாவது
இயற்கையின் வித்தையன்று… விதி..

தோல்வி மறுக்கப்பட்ட வெற்றியா ?
இல்லை.. நீட்டிக்கப்பட்டதா ..

ஹ¤ம்.. அதெல்லாம் சரி.
நான் வெற்றியா ? தோல்வியா ?
அடுத்தவாரம் யாராவது
முடியாத என் கவிதையை
யாராவது தொடருங்களேன்.

உன் கவிதையை நீயே எழுதன
சத்தியத்தை யார் சொன்னது ?


Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி