உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

புகாரி


———————————————

தத்தித் தித்தித்தத்
தங்கநிலவே – நீ
தாவணிப் பூவுக்குள்
பூவானாய்

முத்துத் தெறித்திடும்
மெய்யழகே – நீ
முகத்தைக் கவிழ்த்தே
சிரிக்கின்றாய்

பெத்த மனங்களின்
பொந்துகளில் – நீ
பிறந்ததும் மீட்டிய
குரலிருக்கு

எத்தனை வளர்ந்து
நிமிர்ந்தாலும் – உனை
எடுத்தே கொஞ்சிடும்
உயிரெனக்கு

பத்துத் திங்கள்
சுமந்தவளும் – உன்
பருவம் கண்டே
வியக்கின்றாள்

ரத்த இழையின்
சின்னவனும் – நீ
ரத்தினத் தீவெனக்
கூவுகின்றான்

நித்தம் ஒளிரும்
நெற்றிமொட்டே – என்
நெஞ்சில் வளரும்
தாலாட்டே

புத்தம் புதிய
மழைத்துளியே – நீ
பேசிடும் மொழியும்
தேனிசையே

முத்தக் காட்டில்
விட்டுவைத்தேன் – நீ
மூர்ச்சையாகிப்
போகவில்லை

கட்டித் தழுவி
நொறுக்கிவைத்தேன் – உன்
கண்களில் தாகம்
தீரவில்லை

எத்தனைப் பாசம்
பொன்னழகே – நீ
ஏணிக்கு எட்டாத
வெண்ணிலவே

பொத்திய கைக்குள்
வைரமென்றே – உனைப்
பெற்ற நிறைவுக்கு
ஈடு இல்லை
————-
buhari@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி