ஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

முனைவர் மு.இளங்கோவன்பள்ளு என்பது சிற்றிலக்கியங்களுள் ஒன்று.பள்ளு நூலினை உழத்திப்பாட்டு என்று அழைப்பதும் உண்டு. உழவுத்தொழிலுடன் தொடர்புடைய பள்ளர் இனமக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வண்ணம் இந்நூல் அமையும்.நாடகவடிவில் எழுதப்படும் தன்மையது இஃது.கலம்பக நூல்களில் பள்ளுப்பாட்டு என்னும் ஓர் உறுப்பாக இடம்பெவதும் உண்டு.கச்சியப்பமுனிவர் பேரூர்புராணத்தில் பள்ளுப்படலம் என்றொரு பகுதியைக் குறிப்பிடுகின்றார்.பள்ளு நூல்கள் இறைவன்,அரசன் முதலானவர்களின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் எழுப்பட்டுள்ளன.இப்பள்ளு நூல்களில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும்,சமூக அமைப்பும் இடம்பெறுகின்றன என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இக்கட்டுரையில் ஈழத்தில் தோன்றிய கன்னங்குடா உழுதொழில் பள்ளு என்னும் நூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கன்னங்குடா உழுதொழிற்பள்ளு அறிமுகம்

கன்னங்குடா உழுதொழிற்பள்ளு நூலின் ஆசிரியர் ஈழத்துப்பூராடனார் ஆவார்.இவர் ஈழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்துவருகிறார்.தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பெருமை இவருக்கு உண்டு. தமிழ்இலக்கியம்,தமிழ்வரலாறு,நாட்டுப்புறவியல்,சிற்றிலக்கியங்கள்,மொழிபெயர்ப்புகள் எனப் பலதுறை நூல்களை இவர் தந்துள்ளார்.பல களஞ்சியங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.இவர் எழுதிய கன்னங்குடா உழுதொழிற்பள்ளு என்பது பிற பள்ளு நூல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு உள்ளது.கடவுளின் பெருமை, அரசனின் பெருமை கூறும் வண்ணம் பிற பள்ளுநூல்கள் இருக்க,இப் பள்ளுநூல் உழவர்களுக்கும்- உழவுத்தொழிலுக்கும் முதன்மைதரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.நெல்வகை,மாட்டுவகை,உழுதொழில் மக்களின் பேச்சுவழக்குகள், கூத்துவகைகள், கலையுணர்வு,காதல்வாழ்க்கை,உழவுமுறை முதலியவற்றை விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.சிற்றிலக்கியம் என்ற பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டாலும் வாழும் காலத்து வாழ்க்கையினையும் சமூக நடப்புகளையும் ஆசிரியர் இணைத்து எழுதியுள்ளார்.

கன்னங்குடா நூல்பெயர்

கன்னங்குடா என்பது தென் ஈழத்தின் மட்டக்களப்பு அடுத்த உழுதொழில் ஊர்.பாரதக்கதையில் குறிப்பிடப்படும் கன்னன்(கர்ணன்) நினைவாக இவ்வூர் பெயர்பெற்றதை ஆசிரியர் ‘ஈகையாலே உயிர்துறந்த இரப்பார்க்குக் கொடையளித்த மாகையன் கன்ன னவன் மாட்சியுள்ள பெயர்பூண்டு’என்று குறிப்பிடுவர்.இவ்வூரில் பண்டைத்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களும்,பண்பாடுகள்,கூத்துக்கலைகள் வழிபாட்டுமுறைகள் இன்றும் சிதைவுறாமல் உள்ளன.கன்னங்குடா கூத்துக்கலையின் தொட்டில் என்னும் சிறப்புடையது என்று சி.மௌனகுரு மதிப்பிடுவர்.
இவ்வூர் நெய்தல் சார்ந்த மருதநில ஊர்.இங்கு 350 குடும்பங்களாக ஏறத்தாழ 1500 சிவனிய வழிபாட்டு மக்கள் வாழுகின்றனர். இவ்வூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இருபாங்கு கூத்துகள்(தென்மோடி,வடமோடி) படைக்கப்பட்டுள்ளன.இருநூற்றுக்கும் மேற்பட்ட அண்ணாவிமார்கள் வாழ்ந்தனர்.இங்கு உழவர்களே மிகுதியாக உள்ளனர்.அவர்களின் வாழ்வியல் சார்ந்த செய்திகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.

கன்னங்குடாவில்(மட்டக்களப்பு உட்பட) பள்ளர் என்னும் ஓர் இனம் இங்கு இல்லை.மேலும் தாழ்த்தப்பட்டமக்கள் (மூப்பர்) வயல்வேலை செய்வது இல்லை.இங்குள்ள வயல்வெளிகளின் பெரும்பகுதி ‘போடியார்’ எனும் பண்ணையார் வசம் இருக்கும்.பிற இடங்களில் சிறு சிறு துண்டுக்காணிகளைப் பிற மக்கள் பயிர்செய்வர். ‘போடியார்’ தங்கள் நிலங்களைக் கவனிக்க ஒருவரை ‘வட்டவிதானையார்’ என்று தெரிவுசெய்து வைத்துக்கொள்வார். இவர்கள் அரச அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளும் நிலையில் இருப்பர்.இவர் நீர்ப்பங்கீடு, வேலிகட்டல், காவல்செய்தலில் அதிகாரம் செலுத்துவர். இவருக்குத் துணையாக ‘அதிகாரி’ என ஒருவர் இருப்பர்.இவர் வயல்வேலைகளைப் பார்த்துக்கொள்வர்.

எனவே மட்டக்களப்புப் பகுதியில் சாதி சார்ந்து வேளாண்மை அமையாமல் அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப ஆட்களை அமர்த்திக்கொள்வர்.எனவே பிற பள்ளு நூல்களில் குறிப்பிடுவது போல் அல்லாமல் பள்ளு என்பதை நாடகவடிவில், பள்ளர் சாதியை மட்டும் குறிப்பிடாமல் உழவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள பிற உழவர்களையும்,வயல் உரிமையாளர்களான போடியார்களையும் இணைத்து இச்சிற்றிலக்கியம் படைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாநிலத்தின் வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் வயற்களச்சொற்கள் மிகுதி. அச்சொற்கள் யாவும் உழவுத்தொழிலின் தொழில்நுட்பச் சொற்களாகும். அச்சொற்களையும், அச்சொற்களைப் பயன்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் வண்ணம் இந்நூல் வெளிவந்துள்ளது.
கன்னங்குடா உழுதொழிற்பள்ளு உள்ளடக்கச்செய்திகள்

கடவுள் வணக்கம்,பாடுகளம் பற்றிய சிறப்பு, போடியார் எனப்படும் பண்ணையாரின் வீட்டு அமைப்பு, போடியாரின் வருகை,வயல்வேலை தொடங்குதல், வயல்அதிகாரி, முல்லைக்காரன் (வேலையாள்)தோற்றம்,உழவர்களின் மனைவிமார் தோற்றம்,கழனிக்கன்னியர் நாட்டுவளம் பாடுதல்,போடியார் படியளத்தல்,போடியாரிடம் மள்ளர் மாரியம்மன் சடங்கு செய்ய வேண்டுதல், மழைவேண்டிப் பூசை செய்தல்,மழைபொழிதல்,வெள்ளம் வடிதல்,மட்டக்களப்பு வாவியின் சிறப்பு, ஆற்றுமீன்கள்,வயல்வேலை தொடக்கம்,மாட்டுவகைகள்,போடியார் உழவைத் தொடங்குதல்,கலப்பை வகை, அமைப்பு,நெல்வகை, இளையபள்ளியின் மோகத்தால் பள்ளன் கடமை தவறல்,பண்ணைக்காரன் முருகனை வினவல், இளையாள்-மூத்தாள் ஏசல்,போடியார் முருகனைக் கண்டித்தல்-தண்டித்தல்,இரு மனைவியரும் மன்னிக்க வேண்டுதல், முருகனை மாடு முட்டுதல்,இரு மனைவியரும் புலம்பல்,போடியார் பொறுப்பேற்றல், முருகன் வேளாண் வெட்டுக்கு ஆயத்தம் செய்தல்,வசந்தன் கூத்து, போடியார் வீட்டு விருந்து,போடியாரின் அன்புரை, கள்ளுண்டுமகிழல், புதுப்புனலாடல்,போடியாரின் புரட்சி எண்ணம் முதலியவற்றை விளக்கும் வகையில் நூல் அமைந்துள்ளது.

நூலின் புதுமைச்செய்திகள்

ஈழத்துப்பூராடனார் ‘பள்ளு என்னும் பழையவடிவத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் பல புதுமைகளைக் காலச்சூழலுக்கு ஏற்பச் செய்துள்ளார். கடவுள் வாழ்த்து, குடும்பக்கட்டுப்பாடு, சாதிமறுப்புத்திருமணம் முதலிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

கடவுள் வாழ்த்து

ஆசிரியர் கிறித்தவ மதம் சார்ந்தவர்.இவர் கடவுள் வாழ்த்துப்பாடும்பொழுது வள்ளுவரைப்போல் பொதுவாக இறைவணக்கம் அமைத்துள்ளார்.இறை,கதிரவன் காப்பு,பூமித்தாய் போற்றி, ஆறு, உழவு,பெற்றோர்,குருவருள்,தாய்மண்,தமிழ்த்தாய் என்ற வகையில் வாழ்த்து அமைத்துள்ளார். சிலம்புபோல் இந்நூல் இயற்கையைப் போற்றுகிறது.

குடும்பக்கட்டுப்பாடு

‘இரண்டு குழந்தைகள் போதும் என்றும்’அதற்கும்மேல் குழந்தைகள் பெற்றால் அல்லல்பட நேரும் என்று போடியார்வழி உரைக்கின்றார்.

காதல் மணத்தின் மேன்மை

பெரிய போடியார் அறுவடைமுடிந்ததும் அண்ணாவிமாரை அழைத்துக் கூத்து நடக்க ஏற்பாடு செய்தார்.அதில் சாதிமறுத்துக் காதல் மணம்புரியும் வகையில் கதை அமைக்கப் பெரிய போடியார் விரும்புகிறார்.மணமகள் சைவப்பெண்.இவள் மிக்கேல் என்ற ஆடவனை விரும்புகிறாள்.பெற்றோர் திருமணத்தை எதிர்க்கின்றனர்.இறுதியில் காதல் வெல்கிறது. இவ்வாறு நாடக நூலுள் ஒரு நாடகம் நடக்கிறது.

பழைமை போற்றல்

ஈழத்துப்பூராடனார் வயற்களச்சொற்கள் அழியாமல் காக்கவும்,வயற்கள மக்களின் வாழ்க்கையமைப்பும்,அதில் தொடர்புடைய கலைகளைப் பாதுகாக்கவும் இப்பள்ளு நூலைப் படைத்துள்ளார்.இந்நூலுள் ஈழத்தில் வழங்கும் பல கலை வடிவங்களைக்குறிப்பிட்டும் விளக்கமாக எடுத்துரைத்தும் உள்ளார். மழைக்காவியம், குரவையிடல், வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து, கொம்பு விளையாட்டு,கண்ணகையம்மன் வழிபாடு,வதனமார் சடங்கு,வசந்தன்கூத்து(வேளாண்மை வெட்டு),கும்மி,புனலாட்டு,பப்புருவாகன் கூத்து,நம்பிக்கைகள்,குறிகேட்டல் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்(மேலும் இது பற்றி அறிய என் வாய்மொழிப்பாடல்கள் நூலில் ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்னும் கட்டுரையைக் காண்க).

ஈழத்துப்பூராடனார் தமிழ்நூல் பயிற்சி,சிற்றூர்ப்புற வாழ்க்கை,உலக நடப்புகளில் மிகுந்த பட்டறிவு உடையவர்.எனவே இவர்தம் நூலில் இவரின் இலக்கியப் பயிற்சி,கூத்துப்பயிற்சி,நாட்டுப்புறவியல் சார்ந்த துறை ஈடுபாடுகள் அறியத்தக்கவண்ணம் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் பயிற்சியுடையவர் என்பதை

‘ஞாயிறு போற்றுதும்,ஞாயிற் போற்றுதும்’

‘இட்டார் உயர்குலத்தோர்’

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்’

‘சிதம்பரம் போகவென்று சிந்தனைகொள் நந்தனும்’

‘வந்தியின் பிட்டுக்காய் வைகை பெருக்கியே’

‘தாண்டிடுவேன் தீப்பள்ளந்தாயார் திரௌபதை நேர்த்தி இது’

என்னும் பாடலடிகள்வழி ஈழத்துப்பூராடனாரின் பரந்துபட்ட தமிழிலக்கியப் பயிற்சியை அறியலாம்.

ஈழத்துப்பூராடனார் மக்களிடம் வழங்கும் பல வழக்குச் சொற்களையும்,வழக்குத் தொடர்களையும் தம் நூலில் பதிவுசெய்துள்ளார்.’தம்பியுள்ளான் படைக்கஞ்சான்’, தானாடாவிட்டாலும் தன் தசைகளாடும்’, பிஞ்சிலே பழுத்துவிட்டாய்’, ‘தலைபோக வந்தது தைப்பாகையோடு போனதடா’,’ஆட்டு மாட்டைக்கடித்தபுலி ஆயனையே எதிர்த்தாற்போல’ என்னும் தொடர்கள் இதற்குச் சான்றாகும்.ஈழத்துப்பூராடனார் வயற்களமக்களின் உழுதொழிற் சொற்களைப்பதிவு செய்யும் நோக்கமும் இந்நூலில் நிறைவேறியுள்ளது.

போடியார், முல்லைக்காரன்,அதிகாரி,வட்டை,கமக்காரன்,வட்டவிதானையார்,இழவான்,கடியன்,சலவைக்
காரன், பதக்கடை,துமி,,வதனமார் சடங்கு,உம்மாரி,வேளாண்மைவெட்டு முதலான எண்ணிறந்த சொற்களை நூலாசிரியர் இந்நூலில் பதியவைத்துள்ளார்.அகரமுதலிகளில் இணையவேண்டிய ஈழத்தின் பேச்சுவழக்குச் சொற்களை இந்நூல் தாங்கியுள்ளது.

கன்னங்குடா உழுதொழிற் பள்ளு பழைமையும் புதுமையும் கைகோர்க்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. சென்ற திசையில் செல்லாமல் புது திசைகளை அமைத்துள்ள ஆசிரியர் பள்ளு இலக்கிய உலகில் பழந்தமிழ்க் கலைகளையும்,சொற்களையும் வெளிப்படுத்தித் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com
இணையம் : www.muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்