இ ன் னி சை வி ரு ந் து

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

பத்மா நாராயணன்


கார் கதவை அறைந்து சாத்தினாள் சுமதி. சந்திரனின் முகம் இறுக்கம் குறையாமல் அப்படியே இருந்தது.
காரிலிருந்து இறங்கிய சுமதியும் ஏதும் பேசாமல் அந்த சிறிய கட்டிடத்தினுள் நுழைந்தாள். கார் வேகமாகக் கிளம்பிச்செல்லும் ஓசை சுமதியை ஆத்திரமூட்டியது. அவள் ஆத்திரத்தை அதிகமாக்குவதற்கென்றே போல் அந்த ரயில் நிலய அலுவலக அறை காலியாக இருந்தது. “உருப்படவே உருப்படாது”. சுமதியின் முணுமுணுப்பிறகு பதில் அளிப்பது போல் எதிர் நாற்காலியில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள். வளமான, கருத்த, உடலமைப்பு; முகத்தில் மலர்ந்திருந்த புன்னகையைத் தவிர அழகென்று குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை. “உருப்பட வெக்கலாங்க”. சுமதி சிரித்துவிட்டாள். இறுக்கம் தளர்ந்தது. ” எனக்கு ஒரு….” சுமதி முடிக்கும் முன்பே அப்பெண்மணி குறுக்கிட்டாள், ” உங்க அபிப்ராயத்த அதுக்குள்ள மாத்திடாதீங்க. டிக்கெட் கொடுக்கறவர் தாலுகா ஆபீஸ்வர போயிருக்கார்; சொந்த விஷயமாத்தான்; வீடு கட்றார்; சர்டிபிகேட் மேல சர்டிபிகேட் கேக்கறாங்க; அவர்தான் என்ன செய்வார்? வந்துடுவார்.”
மேஜைமேலிருந்த கோப்பின்மேல் கண் செலுத்தியபடியே பாடத்தொடங்கினார் அப்பெண்மணி. ‘பூமாலை வாங்கி வந்தார், பூக்கள் இல்லையே’… சுமதிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அதே வரியை நான்கு தடவை பாடியாயிற்று. சுமதியைப் பார்த்து, “கானடா ராகம். எப்படி வேணாப் பாடேன்; நன்னாத்தான் இருக்கும். டென்ஷன் போக ஒரே வழி.” என்ற விளக்கம் வேறு
கடைசி வாக்கியம் சுமதிக்காகவோ! அப்படியொன்றும் அந்தப்பெண் சுமதியின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. கானடா ராகம் பல சங்கதிகளுடன் நன்றாகவே மலர்ந்தது. வார்த்தைகள்தான் மேலே போகாமல் பல்லவியையே சுற்றிச்சுற்றி வந்து ராகம், தானம் இல்லா பல்லவியாக ஒலித்தது. கால் மணிக்கு மேல் ஆனதும் சுமதியின் பொறுமை உடையும் நிலையை எட்டியது. நாற்காலியை வேகமாகத் தள்ளிக்கொண்டு எழுந்து வெளியே வந்தாள்.
எதிரே ‘வாங்க, வாங்க’ டீ ஸ்டால். கடைக்காரரும் ஓய்வாகத்தான் இருந்தாற்போலிருந்தது. அலுவலக அறையிலிருந்து அந்த பெண்மணியும் வெளியே வந்தார். “ஒரு டீ குடிக்கலாங்க. பஜ்ஜியும் இங்க நன்னாயிருக்கும்”. சுமதியின் பதிலுக்கு காத்திராமல் எதிர்க் கடை வாயிலிற்குச் சென்றார். டீ கடைக்காரர் உற்சாகமாக அவரை வரவேற்றார். “வாங்க கோமதிம்மா; நானே அங்க வரலாமான்னு பாத்தேன். இந்த அம்மா உள்ளார வரதப் பாத்தேனா…..ஆமாம், அந்த, ‘மன்னவன் வந்தாரடி’ என்ன ராகம்மா?” கேள்வி விசித்திரமாக இருந்தது; சுமதிக்குத்தான். கோமதியென்ற அப்பெண்மணி, “ராஜு, ரொம்பத்தான் தேறிட்டீங்க. ராகமெல்லாம் கேக்கறீங்க. அது கல்யாணி” ” அது வந்து கோமதியம்மா, ரேடியோல பழய சினிமாப் பாட்டெல்லாம் போட்டு அதுக்கு பலான பலான ராகம்னெல்லாம் சொல்றாங்க இல்ல, அதான்”
தொடர்ந்து வந்த சுமதியை கவனிக்காமலேயே இரண்டு வாழை இலைத் துண்டுகளில், அப்போதுதான் எண்ணையிலிருந்து வாறிய பஜ்ஜிகளை நான்கு நான்காக அடுக்கி, கடையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த பலகைமீது வைத்தார் டீக்கடைக்காரர். “நான் எங்கே பஜ்ஜி கேட்டேன்?” சுமதியின் கேள்வி வாய்க்குள்ளேயே நின்றுவிட்டது. காலையில் நேர்ந்த அமளியில் சரியாகச் சாப்பிடவில்லை யென்பது நினைவிற்கு வந்தது. வயிற்று அமிலங்கள் பஜ்ஜிகளை உற்சகமாக வரவேற்க ஆயத்தமாகி விட்ட பின் சாப்படுவதுதான் வழியென்று தோன்றிற்று. டீக்கடைக்காரர் டீ தயாரிப்பதில் முனைந்தார்,
“ஒங்க பாட்டு ஒண்ணு, அதென்ன- கல்யாணியா- இந்த ராகத்ல பாடுங்கம்மா” என்று கோமதியம்மாவிடம் விண்ணப்பம் வைத்தவாறே. ” நான் படிக்கற காலத்துல ஸ்கூல்ல வாரம் ஒர் நா ஒரம்மா வந்து பாட்டு சொல்லிக்குடுப்பாங்க. கார்ப்ரேஷன் ஸ்கூல்தானேன்னு இல்லாம ஆசயாவே சொல்லிக்குடுப்பங்க. அப்ப கல்யாணி ராகம், சுலபமான பாட்டுன்னு இத கத்துக்குடுத்தாங்க.” என்றவர் சுமதியைப் பார்த்து, “கார்ப்ரேஷன் ஸ்கூலான்னு கொறவா பேசுவங்க. ஆனா, எனக்கு எல்லாம் அதுதான்; அதவிட்டா வேற போக்கடம் எனக்கும் கடயாது; என்ன மாதிரி படிக்கற பசங்கள விட்டா அதுக்கும் நிமுந்து நிக்க வழி கடயாது. அப்பா சமயல் வேலன்னு பேரு. சீட்டு, வெத்தலபாக்கு, புகயல, நடுநடுவெ பலான இடத்து போக்குவரத்துன்னு சம்பாத்தியமெல்லாம் போய்டும்; அம்மாதான் வீடுகள்ல சமச்சுப்போட்டு எங்கள பெரியவங்களாக்கினா; கார்ப்ரேஷன் ஸ்கூல்ன்னாலும் நல்ல ஸ்கூல்; நானும் நன்னாபடிச்சேன்; ரயில்வே ஸர்விஸ் கமிஷன் பரிட்ச எழுதினேன். வேலக்கு வந்தேன்.” சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமில்லாவிட்டாலும் சுய சரிதை விரிந்தது.
‘கோமதியம்மாவிற்கு மனத்தடைகளே கிடையாதோ’. ‘வாணீ வந்தருள்வாய் நீ – வரமளிக்க’… குரலில் சிறிய நடுக்கம் இருந்ததென்றாலும், பாட்டு கல்யாணியை விட்டு சிறிதும் நகராமல் ஏதோ ஒரு எளிமையான கவர்ச்சியோடு….. பாட்டு முடிவதற்கும் டீ தயாராவதற்கும் சரியாக இருந்தது. டீயை எடுத்துப் பருகிய சுமதியின் கவனம் அவர்களின் தொடர்ந்த பேச்சில் நில்லாமல் தன் பாட்டிற்கு அலையத் தொடங்கியது.
சில நாட்கள் நம் திட்டங்களை முறியடிப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகத்தான் தோன்றுகிறது. அன்று மாலை அருணா சாயிராம் கச்சேரி முப்பது மைல்கள் தொலைவிலுள்ள உதகையில். சென்னையில் முன் வரிசையில் அமர்ந்து கச்சேரிகள் கேட்டதெல்லாம் சொப்பனமாகிவிட்டது. இந்தக் கச்சேரிக்காவது போவதென்ற தீர்மானம் எதிர்பாராமல் தகர்க்கப்பட்டுவிட்டது
நிதி நிறுவனம் மூழ்கிய பின் கடன்காரார்கள் தொல்லைகளிலிருந்து உற்றம் சுற்றம் ஆத்திரத்துடன், ஆதூரத்துடன், அன்புடன், எரிச்சலுடன்… பலவகைகளில் உதவி சந்திரனை மீட்டதன் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. மாமனாரின் டீ எஸ்டேட்களில் வளர்ந்த அநுபவம் இன்று ஒரு தேயிலைத் தோட்டத்தில் மேற்பார்வையாளராக சந்திரனை அமர்த்த உதவி¢யது. ‘பாட்டு, பாட்டு, பாட்டெ’ன்றிருந்தவளை இப்படி மூலையில் முடக்கிப் போடுவதென்றால்…… கச்சேரிகள் கேட்பது, கச்சேரி விமர்சனங்கள் எழுதுவது, அதற்கென்றிருந்த தனிக்குழுவில் சங்கீதத்தைப் பற்றிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, அவ்வப்போது சங்கீத உலக அக்கப்போர்கள் பேசுவது….இதுவெ வாழ்க்கையென்றிருந்தவளுக்கு, உதகைக்கு அருகிலிருந்த ஒரு எஸ்டேட்டில் எப்படிப் பொருந்தும்?
‘பெக்கர்ஸ் காண்ட் பி சூஸர்ஸ்’ வழுக்கிவிழுந்த வார்த்தைகளை நாக்கைக் கடித்துக்கொண்டு விழுங்கிய சந்திரனின் அண்ணாவை சுமதி இன்னும் மன்னிக்கவில்லை. இன்று உதவியவர்களில் நிறையப்பேர், முன்பு, சப்புக்கொட்டிக்கொண்டு அதிக வட்டியின் இனிப்பைச் சுவைத்தவர்கள்தாமே. ஆனால், அஞ்ஞாதவாசம் ஒரு விதத்தில் நிம்மதியாகவும் இருந்தது. வீடு, தோட்டம், வேலைக்காரர்கள் என்று தன்னை முடக்கிக்கொண்டு விட்டாள் சுமதி. உள்ளத்தில் மட்டும் ‘ஏன்’, ‘எப்படி’ என்ற கேள்விகள் பதில்களற்று சுற்றிச் சுற்றி வந்து மன நிம்மதியைக் குலைத்தன. ஆத்திரம், கோபம், செயலற்றுப்போய் நிற்கும் நிலை போன்ற ஊன உணர்வுகளால் உள்ளம் கனத்துக் கிடந்தது. சந்திரனும் புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டான். வேலை முடிந்ததும், தினமும் 30 கிலோமீட்டர் தூரத்திலிருந்த உதகை ‘ப்ளேண்டர்ஸ் க்ளப்’ பிற்குப் போய்விட்டு 8 மணிக்குத்தான் திரும்புவான். குடிக்கும் பழக்கமென்றில்லாவிட்டாலும், எஸ்டேட் முதலாளிகளுடன் பொழுதைக் கழிப்பது உபயோகமாகவும், இனிய பொழுதுபோக்காகவும் இருந்தது. சண்டையோ சுமுகமோ இல்லாத இரண்டுங்கெட்டான் வாழ்க்கை, எதிர்பார்ப்புக்கள் ஏதுமின்றி ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு வெறியுடன், சுமதி பாட்டையே தன் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்தாள். இந்த செயற்கை அமைதிக்கு ஒரு முடிவாக வந்தது சென்னையிலிருந்து இரண்டு நாட்கள் முன்பு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு. “14ம் தேதி அருணாவின் பாட்டு உதகையில்; நம்ம சபாக் கச்சேரி; நாங்க இந்த சாக்கில சென்னேலேந்து தப்பலாம்னு இருக்கோம். காலம்பர வந்துட்டு ராத்திரியே திரும்பறோம்; அருணா குழுவோடயே உதகைல இருப்போம்; நீ வர முடிஞ்சா நன்னா இருக்கும். மோகனும் நானும் உங்களைப் பாக்க ஆவலாக இருக்கோம்” – வழக்கம்போல் உமா இடைவிடாது பேசினாள். உமா, மோகன், இருவருமே உண்மையான நண்பர்கள். போதாததற்கு பாட்டுப் பைத்தியங்கள்; சுமதியின் சங்கீத ஞானத்தின் அருமையை உண்மையாகவே உணர்ந்தவர்கள். இப்போது அவள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, ஒதுங்க வேண்டிய நேரம் உணர்ந்து, ஒதுங்கியவர்கள். அவள் தனக்கு விதித்துக்கொண்ட தனிமை போதுமென்று உணர்த்துகிறார்களோ! கூட்டைவிட்டு வெளியே வர அவள் தயாரா?
ஒருவழியாக அன்று மாலை உதகை கச்சேரிக்குப் போவதென்று முடிவெடுத்து தன்னைத் தயார் செய்யும் வேளையில் தான் அந்த இரண்டாவது அழைப்பு காலையில். தங்கையிடமிருந்து எஸ்.ஓ.எஸ். “அம்மா கீழே விழுந்து இடுப்பு முறிஞ்சுடுத்தாம்; ஆஸ்பத்திரி¢லே சேத்துருக்கு. நீ ஒடனே வர முடிஞ்சா நன்னா இருக்கும்” டிக்கெட்டிற்காக உதகைக்கு தொலைபேசியில் பேசினது ஏமாற்றத்தில் முடிந்தது. அங்கு கணினி வழி பதிவும், சீட்டுக்கள் கொடுப்பதுமாதலால் எல்லா இடங்களும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டிருந்தன. ‘அரவங்காட்டிற்குன்னு ரெண்டு எடம் ஒதுக்குவா. அதை உபயோகப்படுத்தறவா ரொம்பப் பேர் கடையாது; நேரே போனா டிக்கெட்டு வாங்கிடலாம்னு சொல்லுவா’ -இத்தகவலை மென்று முழுங்கி ஒருவாறு சந்திரன் கூறினான். ‘போச்சு அருணா, பாட்டு எல்லாம்; தெரிஞ்சதுதானே என் அதிர்ஷ்டம்’ -சுய பச்சாதாபத்தில் மூழ்கினாள் சுமதி. சந்திரன் பேசவேயில்லை. அவன் எஸ்டேட்டிற்கு கிளம்பும்போது சுமதியும் காரில் ஏறினாள். அவளை அரவங்காட்டில் இறக்கிவிட்டான் சந்திரன்.
“ஏம்மா, உங்களுக்குத் தெரிந்திருக்கும்; ‘உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ’ என்ன ராகம் மா? ஏதோ அன்னிக்கு ரேடியோல சொன்னாங்க; மனசுல நின்னாத்தானே” சுமதியை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தாள் கோமதியம்மா. டீக்கடைக்காரர் பாட்டைப் பாடவே ஆரம்பித்துவிட்டார். ‘குரல் பரவாயில்லயே’. சுமதிக்கு அந்தப்பாட்டு பழக்கமில்லை. அவளுக்கு முந்தைய காலத்துப் பாட்டு. உற்று கவனித்தாள்.
“பைரவியென்னு நெனக்கறேன்” மெல்லிய குரலில் வந்தது சுமதியின் பதில். கோமதியம்மா பாட ஆரம்பித்துவிட்டார். “யாரோ இவர் யாரோ’ எம்.எஸ்ஸோ டி.கே.பி.யோ…. ஒலிப்பதிவையொட்டிய சுமாரான மறுபதிப்பு. தன்னையறியாமல் சுமதியின் கைகள் தாளம் போடத் தொடங்கின. ‘சந்திர பிம்ப’ வில் நிரவல், சுரம்…. எல்லாம் ஒலிநாடாவின் உபயம்தான். பாட்டு முடிந்தவுடன் டீக்கடைக்காரருடன் அவளும் சேர்ந்து கை தட்டினாள். “சபாஷ்”-
சுமதியின் பாராட்டு கோமதியம்மாவின் கருத்த முகத்திலும் செம்மையை ஏற்றி ஒருவித வண்ணக் கலவையைத் தோற்றுவித்தது. சமதானம் கூறுவதுபோல் கோமதியம்மா சொன்னாள், ” நா சின்னவளா இருந்தப்போ, அடுத்த வீட்ல இந்தப் பாட்ட பொட்டில போடுவாங்க; அப்ப கேட்டு கத்துண்டது.” திடீரென்று நினைவுக்கு வந்ததுபோல கோமதியம்மா, ” அடடா, ஐயா வந்துட்டாரே; வாங்க, டிக்கெட்டுக்குப் போலாம்” – கோமதியம்மாவின் பேச்சு சுமதியை தரை தட்டச் செய்தது. இரண்டு பேருமாக அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்.
நெற்றி நிறைய குங்குமத்துடனிருந்த ‘ஐயா’ தான் அலுவலகத்தை விட்டுப் போனதற்கு எந்த விதமான விளக்கமும் அளிக்காமல், “என்னம்மா, சென்னைக்கு டிக்கெட்டா? இன்னிக்கு ராத்திரிக்கா, நாளைக்கு ராத்திரிக்கா? ஏ.ஸி த்ரீ டயர்தானே” இங்கு வந்துவிட்டு வெறும் கையோடு கூடப் போவார்களா என்ன என்பது போல் இருந்தது அவருடைய தொனி. ”நாளைக்குத்தான்.”
கோமதியம்மா இன்னும் பைரவியை விட்டு வெளி வந்ததாகத் தெரியவில்லை. ” என்ன பாட்டு, என்ன பாட்டு; சீத ராமரப் பாத்து பாடறாரு”. “இல்ல, அது ராமர் சீதயப் பாத்துப் பாடறது,” வார்த்தைகள் வெளியே வராமல் உள்ளேயே நின்றுவிட்டன. ‘பாட்டுப்பாடறவாள்ள எத்தன பேருக்கு இது தெரியும்; இவாளுக்குத் தெரியாமயிருப்பதென்ன அதிசயம்? அத சொல்லி நம்ம ஞானத்த வெளிப்படுத்தணுமா என்ன?’ உள் மனம் சுமதிக்குத் தடை போட்டது.
கோமதியம்மா மேலே பேசிக்கொண்டே போனார், “ஐயா, நம்ம ராஜு என்னமா பாடறான் தெரியுமா? ராகமெல்லாம் கூட சொல்றான்னேன். ஒரு நா ஒங்க வீட்டு பஜனைக்கு வரச்சொல்லுங்க ஐயா அவனெ; அவனுக்கு ரெண்டு பாட்டு நீங்க சொல்லி வச்சீங்கன்னா, அவன் பஜனேலேகூடப் பாடுவான்.”
‘ஐயா’ பதிவுக் காகிதத்தை சுமதியிடம் கொடுத்துவிட்டு, “இத எழுதிடுங்கம்மா” என்றார். சுமதி பத்திரத்தைக் கையில் வாங்கியவாறே, “பஜனையா? என்ன பஜனை? எங்கே நடக்குது?” என்று கேட்டாள். “நம்ம பக்கத்து பத்ததி பஜனதாம்மா; கோவைலே க்ரமமா அது நடக்கும்; நம்ம வீட்லயும் ஞாத்துக்கெளமெல பாடுவோம். கோமதியம்மாக்கு, எனக்கு எல்லாம் பாட்டுல ஆச, இதான் சந்தர்ப்பம்னு வெளுத்து வாங்குவோம்; அப்படித்தானே கோமதியம்மா?”
கோமதியம்மா மேலே தொடர்ந்தார், “ஆனா எங்க பஜனேல எல்லாப்பாட்டும் பாடுவோம். ஐயா பழய பஜனப் பாட்டெல்லாம் நன்னாப் பாடுவாரு. போன வாரம் ஒண்ணு பாடினேங்களே….என்ன… பிலகரி ராகம்னு கூடச் சொல்லல்லே?” ” அதுவா? எங்க தாயப்பெத்த தாத்தா அந்தக் காலத்ல கோவில்ல நாதசுரம் வாசிப்பாங்களாம்; பஜனெக்கெல்லாம் கூட வாசிப்பாங்களாம். அவரு பாடிக் கேட்டு, எங்க அம்மா ஏதேதோ பாடும்; நானும் கேட்டுக் கேட்டு கொஞ்சம் பாடுவேன், அவ்வளவுதான்.” அம்மாக்கு அதக் கொஞ்சம் பாடிக்காமியுங்க ஐயா.”
‘எனக்குக் கேட்கவேண்டுமா வேண்டாமாவென்று இவர்கள் கொஞ்சமும் யோசிக்கமாட்டார்களா?’ சுமதி தயங்கிக்கொண்டு இருந்தபோதே ‘ஐயா’ பாட ஆரம்பித்துவிட்டாரே. சுமதிக்கு வேடிக்கையாக இருந்தது. எல்லாம் ஒரே பாட்டுக் கூட்டமாகவே இருக்கிறதே! அவளுக்கு ஆலிஸின் வொண்டர்லாண்ட்டில் இருப்பதுபோல தோன்றியது. சுமதியைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ‘ஐயா’வின் முறை இது என்பதுபோல் அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடினார். “பூரய மம காமம்” சொற்கள் கொஞ்சம் சிதைந்துதான் வந்தன. ஆனால் அவர் அனுபவித்துப் பாடினாரென்பதில் சந்தேகமேயில்லை. பாட்டை முடித்துவிட்டுத்தான் சுமதியின் பயணச்சீட்டைத் தயார் செய்யத் தொடங்கினார் ‘ஐயா’.
கைக்கடியாரத்தைப் பார்த்தாள். மணி 5.30. ‘அருணா பாட ஆரம்பித்திருப்பாள்’ மனம் நினைவு படுத்தியது. ஆனால் மனதில் ஏக்கமோ, கசப்போ இல்லை. பயணச்சீட்டுடன் சுமதி புறப்பட்டபோது, ஐயாவும், கோமதியம்மாவும், டீக்கடை வாயிலில், ராஜுவும் வெளியில் வந்து நின்று வழி அனுப்பினார்கள். டீக்கடைப் பையன் வாடகை வண்டி பிடித்து வந்தான்.
அவள் வீடு வந்து சேர்ந்தபோது மணி எட்டு. இரவுக்கான உணவைத் தயாரிக்கத் தொடங்கினாள். வாய் ‘பூரய மம காமம்’ என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. சந்திரன் வந்ததும், “டிக்கெட் கெடச்சுதா” என்று கேட்டான். மனதில் ஒரு பக்கம் ரயில் நிலய அநுபவங்களைப் பற்றிப் பேச வேண்டுமென்றிருந்தாலும் ஏதோ ஒன்று அந்த எண்ணத்தை ஒதுக்கியது. சில நாட்களாகவே சகஜமாகப் பேசுவது குறைந்து போயிருந்ததே. வெவ்வேறு விஷயங்களில் ஆர்வமென்றாலும், பகல்போதுகளின் நிகழ்வுகளைப் ஒன்று விடாமல் தம்முள் பகர்ந்துகொள்ளும் வாழ்மைதான் காணாமற் போயிருந்ததே.
வழக்கம் போல் இரவு உணவு முடிந்ததும் தொலைகாட்சிப் பெட்டியின் முன் சந்திரன் உட்கார்ந்துவிட்டான். சுமதி சமையலறை விளக்குகளை அணைக்கும்போது தொலை பேசி சிணுங்கியது. உமாவின் குரல். ” ஸ்டேஷன்லேந்து பேசறேன்; கச்சேரி ரொம்ப நன்னா இருந்துது. உன்னைத்தான் ‘மிஸ்’ பண்ணினோம்; நீ வந்திருக்கலாம்.” அதற்குமேல் உமா எல்லை மீற மாட்டாள்.
“ஸாரி’ உமா. நானும் ஒரு கச்சேரிக்குப் போனேன்; நன்னா ‘என்ஜாய்’ பண்ணேன்”
சுமதியின் பதில். டி.வி. முன் உட்கார்ந்திருந்த சந்திரனின் தலையும் திரும்பியது. “கச்சேரியா? எங்கே? யார் பாடினா?” உமாவின் கேள்விகளை ஒதுக்கிவிட்டு, ” நான் நாளைக்கு சென்னை வறேன். அம்மா இடுப்பை ஒடிச்சுண்டுட்டாளாம். அங்கே பார்க்கிறேன் உன்ன” என்று சொல்லி தொலைபேசிக் கருவியைக் கீழே வைத்தாள் சுமதி. உமாவின் கற்பனை என்னவெல்லாம் யோசிக்குமென்று நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் தெரிந்தது. சந்திரன் ஒரு எதிர்பார்ப்புடன் சில கணங்கள் தயங்கிவிட்டு படுக்கையறைப் பக்கம் சென்றான். ஒரு பெருமூச்சுடன்
சுமதி சாளரத்திரைச்சீலைகளை இழுத்து மூடினாள். வெளியே கனத்த இருள்; நடுவே அவ்வப்போது மின்னலின் ஒளிக் கீற்றுக்கள். அச்சமூட்டும் நிசப்தத்தினூடே ஓடிப்புரளும் இடியோசை. உள்ளேயும்தான்.

பத்மா நாராயணன்.

Series Navigation