இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

நேச குமார்


இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு பர்தா முறை ஏற்பட்டதன் பிண்ணனியை விளக்கி திண்ணையில் வெளியான எனது பர்தா பற்றிய கட்டுரையை[01]த் தொடர்ந்து, எனக்கு பர்தா பற்றி விளக்கி திண்ணையில் கடிதம் எழுதியுள்ள இஸ்லாமிய சகோதரர் சலாஹுதீன்[02], முஃமீன்கள் என்ற வார்த்தைக்கு நான் நபிகளாரைச் சுற்றியிருந்த கூட்டத்தாரைக் குறிக்கும் வார்த்தை அது என்று சொன்னதை மறுத்து, அது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தையுமே குறிக்கும் என்று வாதிட்டுள்ளார்.

இது குறித்து, விரிவாக ஒரு தனி கட்டுரை எழுதவுள்ளேன். ஏனென்றால், இந்த மூஃமீன்கள் மற்றும் காஃபிர்களுக்கான அர்த்தப் படுத்துதல் பல கோணங்களில் திருக்குரானின் போதனைகளை சிதைத்து, இஸ்லாமியர்களை தொடர்ந்து 1425 வருடங்களுக்கு முன்பிருந்த போரிடும் நிலையிலேயே (war mode) வைத்துள்ளதால், இப்படியான அர்த்தப் படுத்துதலே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தொடர்ந்து அச்சமுதாயத்தில் தோற்றுவித்துக் கொண்டிருக்கும், தோற்றுவாயாக உள்ளது. எனவே அதிமுக்கியமான இந்த அர்த்தப் படுத்துதலுக்கு தனியே விவரமாக மேற்கோள்களுடன் விரிவான ஒரு கட்டுரை எழுதுகிறேன். இப்போது, சலாஹுதீன் கூறியுள்ள மற்றொரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அவர் அதில் கூறியுள்ளதன் சாராம்சம், பர்தா முறை பெண்களுக்கு பாதுகாப்பையும், கண்ணியத்தையும் அளிக்கிறது. மற்ற மதப் பெண்களும் அதை ஏற்றுக்கொள்வது நல்ல விஷயமே என்ற அர்த்தம் தொணிக்க எழுதியுள்ளார். இதற்குத் துணையாக எஸ்.கே என்பவர் திண்ணையில் எழுதிய ‘மெய் தீண்டல் ‘ கட்டுரையையும், ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் எழுதிய ‘ கவர்ச்சி, அடக்கம் X மரியாதை ‘ என்ற கட்டுரையின் கருத்துக்களையையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

இவர் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான பர்தா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். தொடர்ந்து வலியுறுத்தப்படும் ஒரு பொய் காலவட்டத்தில் உண்மையாகிவிடுவதால், இக்கருத்தை இப்போது ஒரு சில முஸ்லீம் அல்லாதவர்களும் நம்பத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஆதாரமாக, இஸ்லாமிய மார்க்க ‘அறிஞர்கள் ‘, அமெரிக்காவில் நிகழும் பாலியல் வன்முறைகள் பற்றிய புள்ளி விவரங்களை முன்வைப்பதை எங்கும் காணமுடிகிறது. அமெரிக்காவுடனோடு முஸ்லீம் நாடுகளில் நடக்கும் பாலியல் வன்நிகழ்வுகளைப் பற்றிய புள்ளி விபரங்களை ஒப்பிட்டு வன்முறை குறைவாக இருப்பதாகவும், ஆதலால் பர்தா முறை, உளவியல் பூர்வமாக சிறந்த வழக்கம் என்று வாதிடுகின்றனர். சலாஹுதீன் மட்டுமல்ல, பல இஸ்லாமிய நன்பர்களும் என்னிடம் சவுதியையும், அமெரிக்காவையும் ஒப்பிட்டு ‘தூய ‘ இஸ்லாமிய வழக்கங்களே சிறந்தது என்று வாதிடுவதையும் செவிமடுத்திருக்கிறேன்.

இஸ்லாம் விஷயத்தில் நிறைய அர்பன் லெஜண்டுகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த பர்தாவானது பெண்களுக்கு பாதுகாப்பையும், கண்ணியத்தையும் தருகிறது என்பது. பர்தா உண்மையிலேயே பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தருகிறதா என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலவித கோணத்தில், பலவித டிகிரிக்களில் நடந்தாலும் அவற்றை பொதுவாக மூன்றுவிதமான பெரும் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்:

1. குடும்பத்துள் நிகழும் வன்முறைகள் ( கணவனால் அடித்துத் துன்புறுத்தப் படுவது, கொல்லப் படுவது, உறவினர்களின் மூலம் நிகழ்த்தப் படும் வன்முறைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், பொருந்தாத் திருமணம்,கட்டாயத் த்ிருமணம், கருவழிப்பு, க்ளிட்டோரிஸ் துண்டிப்பு, குடும்ப கெளவரவம் காக்க செய்யப் படும் கொலைகள் போன்றவை).

2. சமுதாயத்தில் நிகழ்வது ( கற்பழிப்பு, பலாத்காரம், அங்க மீறல்கள், தாக்குதல்கள், வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழில், பாலியல் தொழிலுக்காக கடத்தப் படுவது, விலை பேசி விற்பது, வயது குறைவான பெண்களுடன் திருமணம் மற்றும் புணர்தல் போன்றவை).

3. அரசின் வன்முறை ( சிறைப்படுதலின் போது நடக்கும் பாலியல் வன்முறைகள், சட்ட ரீதியான வன்முறைகள், தண்டனை மற்றும் குற்ற நோக்கில் ஆண்-பெண் பேதம் போன்றவை)

பர்தா முறையானது, இவ்வன்முறைகளிலிருந்து பாதுகாப்பை அளித்து, இஸ்லாமியப் பெண்டிருக்கு கண்ணியத்தையும், மரியாதையையும் வழங்குகிறதா என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

குடும்பத்துள் நிகழும் வன்முறைகள்:

1. இஸ்லாமிய சமுதாயத்தில் பெரிய அளவில் குடும்பத்துள் நிகழும் வன்முறைகள் நிகழ்கின்றன. ஐநா அமைப்பின் பாபுலேஷன் ஃபன்ட் தெரிவிப்பது என்னவென்றால், உலகிலேயே பெண்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடு பங்களாதேஷ் என்பது தான்[03]. பங்களாதேஷ் ஒரு இஸ்லாமிய நாடு என்பது நாம் அறிந்ததே.அது மட்டுமல்ல, அங்கு கொல்லப் படும் பெண்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தத்தம் கணவன்மார்களாலேயே கொல்லப் படுகின்றனர்.

2. கணவன்மார்களால் கொல்லப்படுவது ஒரு புறம் இருக்கட்டும், இஸ்லாமிய நாடுகளில், உறவினர்களாலும் குடும்ப கெளரவத்தைக் காப்பதற்காக ஏராளமான (பர்தா அணிந்த) முஸ்லீம் பெண்கள் கொல்லப் படுகிறார்கள். உதாரணமாக, ஈரானின் அரபு முஸ்லீம்கள் குசேஸ்தான் மாநிலத்தில் சென்ற ஆண்டு நடத்தப் பட்ட ஓர் கணிப்பின் படி, இரண்டே மாதங்களில் கெளவரவக் கொலைகளால் உயிரழந்த பெண்களின் எண்ணிக்கை 45 (இவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்) [04]. இத்தனைக்கும் ஈரானில் கடந்த 24 வருடங்களாக கட்டாயப் படுத்தப்பட்ட பர்தா முறை அமுலில் இருக்கிறது (பர்தா அணியாமல் வெளியே வரும் பெண்களுக்கு 74 சவுக்கடிகள் வரை கொடுக்க சட்டம் உள்ளது).ஜோர்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இத்தகு கெளரவக் கொலைகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் உள்ளது. கொலை செய்யப் பட்ட ஒரு பெண்ணின் உறவினர், அப்பெண்ணை குடும்பக் கெளரவத்தைக் காப்பதற்காக கொன்றோம் என்று நிறுவினால், வெறும் ஆறு மாத சிறைத்தண்டனை தான்[05]. இது போன்றே பல இஸ்லாமிய நாடுகளிலும் இத்தகைய கெளரவக் கொலைகள் தொடர்கின்றன என்று யூனிசெஃப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது[06].

3. எஸ்.கே அவர்களின் ‘மெய் தீண்டல் ‘ கட்டுரையை துணைக்கு அழைத்திருக்கும் சலாஹூதீனுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை, இத்தகு மெய்தீண்டலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் நெருங்கிய உறவு முறையில், அக்குழந்தைகள் நன்கு அறிந்த, அவர்களுடன் அன்றாடம் பழகக் கூடியவர்கள் தாம். இவர்கள், இஸ்லாத்தால் அனுமதிக்கப் பட்ட மஹராம் உறவு முறையைச் சேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருப்பதால், இஸ்லாமிய நாடுகளில் ‘மெய் தீண்டல்கள் ‘ நிறையவே நடக்கின்றன. பர்தா முறையினால், இஸ்லாமிய கண்ணோட்டங்களினால், இத்தகைய பாதிக்கப் பட்டோர் வெளியில் இதைச் சொல்லவும் முடிவதில்லை[07].

4. இது மட்டுமல்ல, கணவன் அடிக்கலாம் என்ற இஸ்லாமிய சுன்னாவின்[08] மூளைச்சலவை காரணமாக, இஸ்லாமியப் பெண்கள் மற்ற சமுதாயப் பெண்டிரைப் போல எதிர்ப்பு காட்டுவதில்லை, புகார் செய்வதில்லை. இஸ்லாமிய நாடுகளில், போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார் பெற மறுத்து விடுகின்றனர். மீறி போலீஸில் புகார் கொடுப்போர் மீதே, நடத்தை கெட்டவள் என்ற புகார் தரப்பட்டு, பாதிக்கப் படுவோரே மேலும் மேலும் இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் துன்புறுத்தப் படுகின்றனர்[09].

5. பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வாழும் இஸ்லாமியப் பெண்டிருக்கு, இருவகைத் துன்பம். இஸ்லாமிய கோட்பாடுகளின், கலாச்சார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செய்யப் படும் வன்முறைகள் தவிர மண்வழிக் கலாச்சாரத்தின் பாதிப்புகளும் தொடரத்தான் செய்கின்றன. உதாரணமாக பங்களாதேஷில் நிகழும் வரதட்சினைக் கொடுமை[ ]. இதைச் சுட்டிக் காட்டினால், இவ்வரதட்சினை முறை இஸ்லாத்துக்கு எதிரானது என்றும் இது இந்து மதத்தின் தாக்கம் என்றும் கூறும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இப்படி வாங்குபவர்களுக்கு எதிராக பெயரளவில் மட்டுமே கூப்பாடு போட்டுவிட்டு, இஸ்லாத்தின் பெண்கள் நிலைபற்றி எழுதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமே தாக்குதல்கள் நிகழ்த்துகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடனே, இதற்குத் தீர்வு இஸ்லாமிய மயமாக்கல் என்றால், இதற்கு மாற்றாக இஸ்லாம் பரிந்துரைக்கும் மெஹர் என்னும் பெண்விலையின் விளைவுகளோ இதைவிட பயங்கரமாகவே உள்ளன.

6. அரபு நாடுகளில் நிகழ்வில் இருக்கும் இஸ்லாத்தால் அங்கீகரிக்கப் பட்ட ‘பெண் விலை ‘ எனப்படும் மெஹர் கட்டனத்தின் எதிர்விளைவாக, அங்கிருக்கும் கிழவர்கள் எல்லாம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருக்கும் ஏழைப் பெண்களை விலைக்கு வாங்கி (இஸ்லாத்தின் அனுமதியோடு எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல்) அனுபவித்துவிட்டு, போகும் போது விபச்சார விடுதிகளில் (முத்தலாக் சொல்லியபிறகு) விற்று செலவழித்த பணத்தில் கொஞ்சத்தை திருப்பி எடுத்துப் போவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்படி நடந்து கொள்பவர்களில் பலர், ‘தூய ‘ இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சவுதிப் பெரியவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், நபிகள் நாயகத்தின் வாழ்வு (சுன்னாஹ்) காட்டிய எடுத்துக் காட்டின் அடிப்படையில், அறுபது வயதுக் கிழவர்கள் ஆறு வயது சிறுமிகளையும், முறையாகத் திருமணம் செய்து கொள்ள முடிகிறது. ஈரானில் ஒன்பது வயதுப் பெண்ணை(சிறுமி) சட்ட ரீதியாகவே திருமணம் செய்து கொள்ளலாம்[11]. இத்தகைய பொருந்தாத் திருமணங்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏராளமாக நிகழ்கின்றன. இப்படி சின்னஞ்சிறுமிகளை ‘நிக்காஹ் ‘ புரிவதும் கற்பழிப்புக்கு நிகரானது என்பதை சுன்னாஹ் கண்களை கட்டிவிடுவதால் எந்த மார்க்க ‘அறிஞரும் ‘ தீவிரமாக கண்டிப்பதில்லை.

7. இது தவிர பெண்களின் கிளிட்டோரிஸை துண்டித்து அவர்களின் பாலியல் உணர்வுகளைக் கட்டுப் படுத்த முயலும் வழக்கமும் இஸ்லாமிய சமுதாயத்தின் சில குழுக்களிடையே இருக்கின்றன. இஸ்லாமிய நாடான சோமாலியாவில், 90 சதவிகிதம் பெண்களுக்கு இந்த கிளிட்டோரிஸ் துண்டிப்பு நிகழ்த்தப் பட்டுள்ளதாகத் தெரிகிறது[12]. இத்தகைய பெண்களுக்கான சுன்னத்தின் விளைவாக செக்ஸ் என்றாலே அவர்கள் அலற ஆரம்பித்துவிடுகிறார்கள். அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் இன்பம், அனுபவிக்கப் படும் பெண்களுக்கு கனவுகளில் கூட அச்சமூட்டும் துன்பமே மிஞ்சுகிறது.

8. பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில், பஞ்சாயத்தாரே இஸ்லாமிய சட்டதிட்டங்களின் படி கொடூரமான தண்டனை வழங்குவதும் நடக்கிறது. உதாரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில், உயர் ஜாதிப் பெண்ணை காதலித்த ஒரு முஸ்லீம் இளைஞனின் சகோதரி, பஞ்சாயத்தார் உத்தரவின் பேரில் கூட்டுக் கற்பழிப்புக்கு உள்ளாக்கப் பட்டாள். பின் அவளை அனைவர் முன்னாலும் நிர்வாணமாக நடக்கச் செய்தனர். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற இஸ்லாமிய சட்டக் கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே இத்தண்டனை வழங்கப் பட்டது[13].

சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள் :

1. இஸ்லாமிஸ்ட்டுகளின் பிரச்சாரங்களில் அமெரிக்காவின் கற்பழிப்புக் குற்ற எண்ணிக்கைகளை சுட்டிக் காட்டியே பெரும்பாலும் பிரச்சாரம் நடைபெறுகிறது. பொதுவாகவே இஸ்லாமிய நாடுகளில் பர்தா முறையின் காரணமாக வெளிவந்து கம்ப்ளெயின்ட் கொடுப்பதே அரிதாக இருக்கிறது.

2. கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப் படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிறூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப் படுகிறது.

3. இது மட்டுமல்லாது, ஷரியத் சட்டங்கள் அமலில் இல்லாத இஸ்லாமிய நாடுகளிலும், மண் வழி மற்றும் மதவழிக் கலாச்சாரத்தாக்கத்தாலும், மத ரீதியாக செய்யப் படும் மூளைச் சலவையினாலும் பெண்கள் முன்வந்து கற்பழிக்கப் பட்டதாக அறிவிப்பது அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளள ஒப்பிடும்போது மிகவும் அரிதாகவே இருக்கிறது. உதாரணமாக, இஸ்லாமிய நாடுகளில் ஓரளவிற்கு முன்னேறிய நாடாக விளங்கும் துருக்கியிலேயே, 90 சதவிகித கற்பழிப்புகள் போலீசாருக்கு புகார் செய்யப் படாமலே போகின்றன என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது[ 14].

4. கூட்டுக் கற்பழிப்புகளும் இஸ்லாமிய நாடுகளில் பெரிய அளவில் நடக்கின்றன. பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் தேடமுடியாமல் இஸ்லாத்தால் தடுக்கப் படும் இளைஞர்கள், தீவிர இஸ்லாத்தைப் பின்பற்றும் மதக் குழுக்களில் சேர்ந்து , சில இஸ்லாமிய குழுக்களை காஃபிர்கள் என்று அறிவித்து அவர்களின் பெண்களை கூட்டமாக கற்பழிப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது (காஃபிர்களின் பெண்டிரைக் கற்பழிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள ஒன்றாகும்). ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லீம்களை காஃபிர்கள் என்று அறிவித்தபின் இத்தகைய கூட்டுக் கற்பழிப்புகளில் முஜாஹித்தீன் (அல்லாஹ்வின் வீரர்கள்) குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன. அதுபோன்று, ஒரு முஜாஹித்தீன் குழுவின் கை ஓங்கும் போது, அப்பகுதியில் வசிக்கும் வேற்று இன முஸ்லீம்களின் பெண்களை இத்தகைய அல்லாஹ்வின் வீரர்கள் கற்பழிப்பது, அடிமைகளாக்கிக் கொள்வது போன்றவையும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன[15]. பக்கத்தில் உள்ள ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, இஸ்லாமிய கோட்பாடுகளை தீவிரமாக அமல் செய்ய ஏற்பட்ட சூடானின் அரசும் கூட அங்குள்ள அரபி அல்லாத முஸ்லீம் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்ததை ஐநாவின் பல்வேறு அமைப்புகள் பதிவு செய்து பதிப்பித்துள்ளன[16].

5. பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாகத் தள்ளப் படுவதும் பல முஸ்லீம் நாடுகளில் நிகழ்வில் உள்ளது. சமீபத்தில் கொலும்பில் நடந்த யூனிசெஃப் கருத்தரங்கில், பங்களாதேஷிலிருந்து ஐந்து லட்சம் பெண்குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக கடத்தப் படுவதாக தெரிவிக்கப் பட்டது. தற்போது பாகிஸ்தானில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பங்களாதேஷ் பெண்கள் (ஏறத்தாழ அனைவருமே முஸ்லீம்கள் தாம்) பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தானுக்கு இரண்டு லட்சம் பெண்கள் கடத்தப் பட்டுள்ளனர். பங்களாதேஷில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை நிலவுவதாகவும் ( ஆசிட் எறிதல், கற்பழிப்புகள், தற்கொலைக்கு தூண்டப் படுதல்), 72 சதவிகிதம் பெண்கள் குடும்பத்தில் வன்முறைக்கு உள்ளாவதாகவும் யூனிசெஃப் தெரிவிக்கிறது. [17]. நகர்ப்புறங்களில் குழந்தைத் திருமணத்தின் சதவிகிதம் 70% ! இதுவும் யூனிசெஃப் குறிப்பிடுவதுதான் [18].

6. இது தவிர, தீவிர இஸ்லாம் அமலில் இருக்கும் சவுதி அரேபியா போன்ற நாடுகளால், ஏனைய நாடுகளில் பெண்கள் மீது நிகழ்த்தப் படும் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கவே செய்கின்றன. வளம் படைத்த சவுதியின் ஷேக்குகள் மேற்கின் விபச்சார விடுதிகளிலெல்லாம் விழுந்து கிடக்கின்றார்கள்(இது குறித்து நைபால் கிண்டலடித்தது நினைவிலிருக்கும்), வசதி குறைந்தவர்கள் பஹ்ரைனுக்கும், துபயிக்கும் வார இறுதிகளில் சென்று ஈடுபடுகின்றனர். ஏழை சவுதிக்களோ, மதராஸாக்களிலிருந்து மற்ற நாடுகளுக்கு முஜாஹிதீன்களாக ஏற்றுமதி செய்யப் பட்டு, அங்கு போய் கற்பழிப்புகளிலும் ஏனைய வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர். ஈரானில் விபச்சாரத்திற்கு மரண தண்டனை வழங்கினால், பாகிஸ்தானுக்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட் displaced sexual violenceஐத்தான் சவுதி அரேபியா, ஈரான் போன்ற தீவிர முஸ்லீம் நாடுகள் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.

அரசால் நிகழ்த்தப் படும் வன்முறைகள் :

1. இதில் முதலிடம் வகிப்பது, பெண்களுக்கு எதிராக இஸ்லாத்தின் பெயரில் இயற்றப் பட்டு , செயல் படுத்தப் படும் அல்லாஹ்வின் சட்டங்கள் தாம். ஷரியத் என்று அரபியில் அழைக்கப் படும் இந்த அல்லாஹ்வின் சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், எதோ ஒரு வகையில் அனைத்து இஸ்லாமிய நாடுகளுமே இந்த ஷரியத்தின் கூறுகளை தம்மிடையே கொண்டுள்ளன. மென்மையான சட்டங்கள் கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளில், ஹூதூது எனும் கடுமையான, கொடூரமான இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை கொண்டு வரவேண்டும், அதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கூக்குரலிட்டு வருகின்றனர்.

2. இந்த அல்லாஹ்வின் சட்டங்கள், பெண்களுக்கு எதிராக மிகவும் பாரபட்சமான முறையில் உள்ளன. நான் மேலே குறிப்பிட்டிருந்தார் போல, இந்த அல்லாஹ்வின் சட்டங்களின் காரணமாக கற்பழிக்கப் பட்ட பெண், அதை உறுதிப்படுத்தும் நான்கு ஆண் சாட்சிகள் இல்லாமல் வெளியே வந்து புகார் தர முடியாது. பாகிஸ்தானில் சிறையில் உள்ள பெண் கைதிகளில் 80 சதவிகிதத்தினர், இந்த ஹூதூது சட்டத்தின் படி குற்றம் சாட்டப் பட்டவர்களே. இவர்கள் மீது நடத்தை கெட்டவர்கள் என்ற மதக்குற்றச்சாட்டு இருப்பதால், சிறையிலும் இவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகிறார்கள். 1980 லிருந்து 1987 வரை பாகிஸ்தானின் ஃபெடரல் ஷரியத் கோர்ட்டில் மட்டும், 3349 குற்றச்சாட்டுகள் பதிவாயின. இது ஒரு சிறு துளியே என்கிறார் அஸ்மா ஜஹாங்கீர் ! [ 19].இச்சட்டத்தின் எதிரொலியாக, கற்பழிக்கப் பட்ட பெண்கள் மீது ஜினா எனும் நடத்தை கெட்டவள் என்ற குற்றம் சாட்டப் பட்டு, அவர்களுக்கே தண்டனை தரப்படுகிறது. உதாரணமாக, 2002ல் ஜஃப்ரான் பீவி என்ற முஸ்லீம் பெண், அவளது கணவனின் சகோதரனால் கற்பழிக்கப் பட்டாள். கற்பழித்தவனுக்கு தண்டனை தருவதற்கு பதிலாக, அங்குள்ள ஷரியத் கோர்ட்டு, அவளை கல்லால் அடித்துக் கொள்ள தீர்ப்பளித்தது. டூதைத் தொடர்ந்து உலக நாடுகள் எல்லாம் இத்தீர்ப்பை கண்டிக்கவே, ஜஃப்ரான் பீவிக்கு விடுதலை கிடைத்தது [20].

3. இது மட்டுமல்லாது, இஸ்லாமிய நாடுகளில், அரசின் வன்முறைக்கும் நேரடியாக பாதிக்கப் படும் பெண்களின் எண்ணிக்கை மேற்கு நாடுகளை விட மிகவும் அதிகமாகவே இருக்கின்றது. கல்வியிலும், வசதியிலும் முன்னேறிய இஸ்லாமிய நாடான துருக்கியில், குர்து இனப் பெண்கள், அலெவி பிரிவு பெண்கள் (இவர்களெல்லாம் முஸ்லீம்கள் தாம்), எதிராக கடுமையான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப் படுவதை ஆம்னஸ்டி இன் டர்நேஷனல் போன்ற அமைப்புகள் டாகுமென்ட் செய்துள்ளன[21]. ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகளில் தீவிர இஸ்லாமியப் பிடிப்புள்ளவர்கள் நடத்தும் அரசே பல சமயங்களில் கூட்டுக் கற்பழிப்புகளுக்கும், ஏனைய பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் உடந்தையாக இருந்திருக்கின்றன.

மேலே நான் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களைப் பார்க்கும் நேயர்கள், இந்தியாவில் மட்டும் என்ன வாழுது என்று கேட்கக் கூடும். உண்மைதான், நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், நான் இங்கு சொல்ல வருவது என்னவென்றால், இஸ்லாமிய கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்னவோ முஸ்லீம் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பையும் , கண்ணியத்தையும் தருவது போலவும், மேற்கத்திய நாடுகளில் பன்மடங்கு வன்முறை நிகழ்வது போலவும் செய்யப் படும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படை முரண்களையே இங்கு முன்வைத்துள்ளேன்.

மற்ற சமுதாயங்களில் இம்மாதிரியான விஷயங்கள் இருக்கிறது என்றால், அப்புறம் பர்தா மட்டும் எப்படி பாதுகாப்பை வழங்குகிறது என்று இஸ்லாமிஸ்ட்டுகள் வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. இஸ்லாமிய சமுதாயங்களை விட அமெரிக்காவில் பெண்களுக்கு பாதுகாப்பும், கண்ணியமும் இருக்கிறது. கராச்சியை விட, முஸ்லீம் பெண்களுக்கு மும்பையில் அதிக பாதுகாப்பு இருக்கிறது. பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் மீது இஸ்லாமிய நாடுகளில் நடத்தப் படும் வன்முறைகளை விட, பர்தா அணியாத முஸ்லீம் பெண்களுக்கு மேற்கத்திய நாடுகளில் மிகவும் குறைவாகவே வன்முறைகள் நடக்கின்றன. இது மேற்கில் வசிக்கும், வசித்த அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், வெளிப்படையாக பதிவு செய்யப் படும் குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து, மேற்கில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இஸ்லாம் பெண்களுக்கு பாதுகாப்பையும், மரியாதையையும் வழங்குகிறது என்று எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்கிறார்கள் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்பது புரியவில்லை.

இக்கேள்விகளை முன்வைத்தால், அதற்கு இஸ்லாமிஸ்ட்டுகளின் பதில் வாதமாக, இத்தகு குற்றங்களுக்கு காரணம், அல்லாஹ்வின் கட்டளைகளை ‘சரிவர ‘ அமல் படுத்தப்படுவதில்லை, அல்லாஹ்வின் சட்டங்களை ஷரியத் நீதிபதிகள் சரிவர ஆய்ந்து தீர்ப்பளிப்பதில்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப் படுகிறது. நான் சுட்டிக் காட்ட விரும்புவதெல்லாம், இஸ்லாமிய மயமாக்கலுக்கும் , பெண்களின் மீதான வன்முறைகளுக்கும் ஓர் நேரடி வளர் தொடர்பு இருப்பது என்பதுதான். ஹம்சா ஆலவி குறிப்பிடுகின்றார், ‘ பாகிஸ்தானில் இஸ்லாமிய மயமாக்கலைத் தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன, மத அங்கீகாரம் அவற்றுக்கு வழங்கப் பட்டது. இஸ்லாமியமயமாக்கல் என்ற கூப்பாடு, பெண்களுக்கெதிரான வன்முறையை அதிகரித்தது. இதை முன்னின்று நிகழ்த்தியவர்கள் முல்லாக்கள் ‘ [22 ]. பாகிஸ்தானிய முஸ்லீம் (பெண்) ஆய்வாளர் ஜாஸ்மின் மிர்ஜா குறிப்பிடுகின்றார், ‘Women were the primary target of Zia ‘s decade of Islamization ‘[23]. மேலும், இஸ்லாமிய நாடுகளில் செயல்படும் அநேகமாக அனைத்து பெண்கள் இயக்கங்களும், இந்த சம்பந்தத்தை உணர்ந்து அதன் காரணமாக இஸ்லாமியமயமாக்களை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், இத்தகு குற்றங்களுக்கு , குற்றவாளிகளுக்கு மத அங்கீகாரம் வழங்கப் படுவது, அக்குற்றங்கள் தொடர்ந்து நடைபெறவும், குற்றவாளிகள் எவ்வித தண்டனையும் பெறாமல், சமூக அந்தஸ்துடன் உலவவும் வழிவகை செய்து விடுகிறது.

இதெல்லாம் பல முஸ்லீம் பெண் அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன. பல முஸ்லீம்களும் இவற்றைக் கண்டித்து, சமுதாயத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து கொண்டுதான் இருக்கின்றனர்[24]. தவறான புரிதல்கள் நேசகுமார்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, மதம் கண்ணை மறைக்காத அனைவருக்கும் இத்தகைய உண்மைகள் கண்ணில் படுகின்றன. பேசாப் பொருளைப் பேசி ஃபத்வா வாங்க துணிபவர்கள் குறைவு என்பதால் , இதெல்லாம் ஸீனா-ப-ஸீனாவாகவே(இதயத்திலிருந்து இதயத்துக்கு) போய்விடுகிறது. அல்லது இஸ்லாமிய மெளன வெளியில் ஆழ்த்தப் பட்டு, அடக்கம் செய்யப் படுகின்றது.

நிதர்சனங்களை மறுதளிப்பதும், வரலாற்றையும் நிகழ்வுகளையும் திரிப்பதும், தமது மத நம்பிக்கைகள் கண்ணை மறைக்க, அவற்றை அறிவியல் பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் சரியென நிறுவ முன்பின் முரணான வாதங்களை முன்வைப்பதுமே இஸ்லாமிஸ்ட்டுகளின் வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில், திண்ணை வாசகர்களுக்கு இவ்வாதங்களில் தென்படும் இடைவெளிகள், முரண்பாடுகளைக் காட்டவே இக்கட்டுரை. மற்றபடி, இவ்விஷயத்தைப் பற்றிய விரிவான அலசல்கள் எதிர்காலத்தில் நம்மிடையே நிகழும் என நம்புகிறேன். அதற்கு இக்கட்டுரை வித்திட்டால், மிகவும் மகிழ்வேன்.

– நேச குமார் –

[03] http://www.dawn.com/2000/09/21/top16.htm

[04] Middle East Times, 31 October 2003

[05] http://news.bbc.co.uk/2/hi/middle_east/3088828.stm

[06] http://www.unicef.org/newsline/00pr17.htm

[07] ஒரு பாகிஸ்தானியர் கூறுவது இது: ‘The problem is much bigger than we think, ‘ Muzaffar maintained, adding a major component of child sexual abuse was incest, which some people did not want to acknowledge because it was considered embarrassing and shameful. ‘

http://www.irinnews.org/report.asp ?ReportID=28115&SelectRegion=Central_Asia&SelectCountry=PAKISTAN

[08] நாகூர் ரூமி : இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக்கம் 401

[09] http://www.hrw.org/about/projects/womrep/General-90.htm

[10] Dowry problem in Bangladesh :- ‘We live in a country where women are killed simply because their families can ‘t pay dowry money, ‘ women ‘s rights activist Ayesha Khanam told 2,000 demonstrators in the capital, Dhaka. ‘ http://www.dailystar.com/dailystar/relatedarticles/13063.php

[11] Minimum marriage age in Iran : 9 years

[12] Clitoris mutilation : In Somalia, more than 90 per cent of women are subjected to genital mutilation: http://www.furnitureforthepeople.com/amnestyrep.htm

[13] Mastoi rape : ‘In Pakistan in June 2002, members of Mastoi tribe sexually abused one of Mukhtaran Bibi ‘s brothers in village Meerwala in Multan and then covered up their crime by falsely accusing him of having an affair with a woman of their clan. The village ‘s tribal council (jirga) determined that the suitable punishment for the supposed affair was to rape one of the boy ‘s sisters, so the council sentenced Ms. Mukhtaran Bibi to be gang-raped. As members of the Mastoi tribe danced in joy, four men stripped her naked and raped her turn by turn. Then they forced her to walk home naked in front of 300 villagers!

Mohammad Saleem Shahid in Pakistan Observer : http://pakobserver.net/200411/05/articles04.asp

[14] http://web.amnesty.org/library/Index/ENGEUR440062003

[15] ‘ No figures exist for the number of women abducted, raped or killed by armed groups, but the threat alone limits women ‘s rights and freedoms. The lack of security for girls and women is cited by their male relatives as grounds for denying them access to education and jobs. ‘

http://pakobserver.net/200411/05/articles04.asp

[16] Sudan rapes : ‘You, the black women, we will exterminate you, you have no God. ‘

These were the terrifying words of Janjawid militiamen to a woman they abducted and raped. Khadija (not her real name) was 20 years old and two months ‘ pregnant when the government-backed militia attacked her village. ‘

‘Janjawid militiamen have raped and sexually abused thousands of women and girls as young as eight years old. They have carried out gang rapes, abducted women as sex slaves, and beaten or killed women who resisted. Abducted women have had their arms and legs broken to stop them escaping. In camps of displaced people around towns and villages in Darfur, the Janjawid have patrolled the periphery, raping women who venture out for food and water. ‘

http://web.amnesty.org/library/Index/ENGAFR541252004 ?open&of=ENG-373

[17] http://www.unicef.org/bangladesh/children_356.htm

[18] http://www.unicef.org/infobycountry/bangladesh_statistics.html

[19] http://www.ahrchk.net/hrsolid/mainfile.php/2003vol13no04-05/2292

[20] ‘ ‘What happened to me should not happen to any other living being, ‘ she says tearfully. ‘I am not an educated person, but if innocent people like me are being punished then obviously there is something wrong with the laws. ‘ http://www.womensenews.org/article.cfm/dyn/aid/1835/context/archive

[21] http://web.amnesty.org/library/Index/ENGEUR440062003

[22] Hamza Alavi : ‘Pakistani Women in a Changing Society ‘

[23] ‘Between Chaddor and Market : Female office workers in Lahore ‘ – Oxfor Press Page 31

[24] Nobel Peace Prize laureate Shirin Ebadi : ‘The failure by governments across the Islamic world to respect women ‘s rights has hampered even hesitant steps toward political change ‘ – http://www.dailystar.com/dailystar/relatedarticles/13063.php

http://islaam.blogdrive.com

http://islaamicinfo.blogspot.com

Series Navigation

இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

நேச குமார்


நாகூர் ரூமி இஸ்லாத்தை நமக்கு அறிமுகப் படுத்துமுகமாக, அவரது புத்தகத்தில், பெண்களை தலைமுதல் கால் வரை மூடும் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரம் பற்றி ஹிஜாப் என்ற ஒரு அத்தியாயம் அமைத்து, அதில் ‘ பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று இறைவன் அமைத்துக் கொடுத்த விதிமுறைகளை ‘ ப் பற்றி [1] விரிவாக எழுதுகின்றார்.

மேலே செல்வதற்கு முன், ஹிஜாப் என்றால் என்னவென்று பார்க்கலாம். இஸ்லாத்தின் அடையாளங்களுள் ஒன்றாக இன்று ஆகிவிட்ட, பெண்களின் ஆடை இது. ஹிஜாப், துப்பட்டி, பர்தா, புர்கா என்றும் இன்னும் பல்வேறு பெயர்களிலும், உலகில் பல முனைகளில் வாழும் இஸ்லாமியப் பெண்டிர், தமது உடலை மறைக்க அணியும் ஆடையே இந்த ஹிஜாப் அல்லது பர்தா. இதில் கண் மட்டுமே தெரிய வேண்டும், கைகளும் முகங்களும் தெரியலாம், எதுவுமே தெரியக் கூடாது, முடியையும் மார்பகங்களையும் மட்டும் மறைத்தால் போதும் என்று பல்வேறு விதமான அபிப்ராயங்கள், விவாதங்கள் முஸ்லீம்களிடையே உள்ளன.

பொதுவில் பர்தா முறை அல்லது ஹிஜாப் என்பது, பெண்களை உடல் முழுவதும் மூடி, அவர்களை (திருமணம் செய்துகொள்ளத்தக்க) ஆண்களுடன் நேரடியாக பேசுவதையோ அல்லது தொடர்பு வைப்பதையோ தடை செய்யும் ஒரு இஸ்லாமிய வழக்கு எனக் கொளலாம்.

இன்று ‘தூய ‘ இஸ்லாத்தின் சின்னமாகி விட்டது இந்த பர்தா! உலகெங்கிலும் முஸ்லீம்கள் மத்தியில் அடிப்படைவாதம் வளர்வதை இந்த பர்தாக்களின் பெருக்கத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். வெறும் புடவை முந்தானையால் தலையை மறைத்திருக்கும் கீழக்கரை முஸ்லீம் பெண்கள் திடாரென்று, முழு உடலையும் மறைக்கும் அங்கிக்கு மாறினால், அங்கே வகாபியிஸம் தோன்றியிருக்கிறது என்று கணிக்கலாம். நீண்ட வெள்ளை ஆடையை புடவைக்கு மேல் சுற்றிக் கொண்டு சென்ற நாகூர் முஸ்லீம் பெண்கள் கூட இந்த வகாபி வகை இஸ்லாம் பரவியதன் எதிரொலியாக, அரபிப் பெண்களைப் போல கறுப்பு அங்கி அணிந்து செல்வதை இப்போதெல்லாம் காணமுடிகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் முதல் தாக்குதல் பெண்களின் மீது தான். அதற்குப் பிறகே, அது மதம் சம்பந்தப் பட்ட விஷயங்களில் தூய்மையை(!) நிலை நாட்ட ஏனைய முயற்சிகளை எடுத்து வைக்கின்றது. தாலிபன் ஆட்சி புரிந்த ஆப்கானிஸ்தானில், அவர்கள் அறிமுகப் படுத்திய முழுவதும் மூடிய புர்காவுக்கு தாலிபன் புர்கா என்ற பெயரே ஏற்பட்டு விட்டது.

இந்த ஹிஜாப் பற்றி விளக்க வந்த ரூமி, திருக்குரானின் அல் அஹ்சாப் சூராவில் அல்லாஹ் முஸ்லீம் பெண்களுக்கு இட்டிருக்கும் , இறைக்கட்டளை பற்றிக் குறிப்பிட்டு, அதை சரி என்று நிரூபனம் செய்வதற்காக, சம்பந்தா சம்பந்தமில்லாமல், செஸ்டர்ட்டனிலிருந்து, நம்மூர் திருவள்ளுவர் வரைக்கும் மேற்கோள்களைக் காட்டி, பெண்களுக்கு ‘நோய் முதல் ‘ அவர்களது உடலே என்றும்[2], ஆதலால் அவ்வுடலை அவர்கள் மறைத்துக் கொள்வது, அவர்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும், ஆண்களின் கண்களுக்கு விபச்சாரம் புரியும் வாய்ப்பு தவிர்க்கப் படும் [3]என்று வாதிடுகிறார். இதற்கு ஆதாரமாக அல் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 59வது ஆயத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

ரூமியிடமிருந்து சற்றே விலகி, இந்த பர்தா அணிவது பற்றி திருக்குரான் என்ன சொல்லியது, எந்த வரலாற்றுச் சூழலில் இந்த வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப் பட்டன என்பதைப் பார்ப்போம். முதலில் திருக்குரான் வசனம் 33:59,

‘ நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராகி அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். ‘

இதைத்தான் ரூமி மேற்கோளிட்டு, மனித குலமனைத்துக்கும் திருக்குரான் மூலம் வழிகாட்டிய அல்லாஹ், உலகத்திலுள்ள (முஸ்லீம்) பெண்களெல்லாம் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று இறைவன் அனுப்பிய கட்டளையாக இந்த வசனத்தை நமக்கு காட்டுகிறார்.

இந்த வசனம் ‘வஹி ‘ எனப்படும் ‘இறை ஆவேசம் ‘ மூலம் முகமது நபியவர்களுக்கு வந்து இறங்கிய காலத்தைப் பார்த்தோமானால், அப்போது அவர் மிகுந்த சங்கடத்தில் ஆழ்ந்திருந்த காலம் என்பதை பார்க்கலாம். அவர் தமது (வளர்ப்பு) மகனாகிய சைத்-தினுடைய மனைவியான ஜைனப் பை மணந்து கொண்டது குறித்து, அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. நபிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதீனா வாசிகளும், அவரது மனைவிகளும் கூட இது சம்பந்தமாய் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிர்ப்பாயிருந்தனர். ஜைனப்பை அவர் மணந்து கொண்டது குறித்து, அவருக்கு எதிராக பல வித கிசுகிசுக்கள் பரப்பப் பட்டன. அதில் ஒன்று, அவர் ஒரு நாள் ஜைனப்பின் ஆடை விலகியதைக் கண்டு, அவளது அழகில் மயங்கிவிட்டார் என்பது. மிகத்தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதியான மெளதூதி கூட இந்த விஷயம் முஸ்லீம் அறிஞர்களால் கூட அறியாமையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்று தெரிவிக்கிறார்[4].

இந்நிலையிலேயே, இந்த அத்தியாயத்தின் பல வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப் பட்டன. அதில் அல்லாஹ் யாரை மணந்து கொள்ளச் சொல்கிறாரோ, அந்தப் பெண்ணை முகமது நபிகள் மணந்து கொள்ளலாம் என்றும்[5], அவர் ஒரு நபியாதலால் அவர் யாருக்கும் தந்தை கிடையாது என்றும்[6], யாராவது உறவு முறை வைத்து(மகனே, தாயே என்றெல்லாம்) கூப்பிட்டால், அது உண்மையிலேயே உறவாகிவிடாது[7] என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப்பட்டன. மேலும், யாரை வேண்டுமானாலும் முகமது நபி மணந்து கொள்ளலாம், (அவருக்கு அடங்கி நடக்காத) மனைவியரை விவாகரத்து செய்து விடலாம்[8], என்றும் அவர் இம்மாதிரி திருமணம் செய்து கொள்வது மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவே[9] என்றெல்லாம் அல்லாஹ் தெரிவித்தார்.

இதில் ஆடை விலகிய நிலையில் முகமது நபிகள் ஜைனப்பை பார்த்தார் என்ற குற்றச் சாட்டுக்கு பதிலளிக்கு முகமாகவே, இனிமேல் முகமது நபிகளின் மனைவிகளையும், அங்கிருந்த கூட்டத்தாரின் ஏனைய பெண்களையும் தமது ‘தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு ‘ இறைவன் கேட்டுக் கொண்டதைக்[10] கவனிக்க வேண்டும்.

இந்த வசனத்துக்கு முந்தய, பிந்தய வசனங்களைக் கவனித்தோமானால், இதன் பின்னனி விளங்கும்.

திருக்குரான் வசனம் 33:59 க்கு முந்தய வசங்கள்:

33:57 ‘ எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான் மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான். ‘

33:58 ‘ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவது}றையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். ‘

திருக்குரான் வசனம் 33:59 க்கு பிந்தய வசங்கள்:

33:60 ‘ முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள். ‘

33:61 ‘ அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்ி அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள் இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள். ‘

இங்கே மையமாக காணப்படுவது, நபிகள் நாயகத்தின் வாழ்வில், இந்த இக்கட்டான சூழலில் கடவுளால், நபிகள் நாயகத்தையும், அவரது மனைவிகளையும், கூட இருந்தப் பெண்களையும் பற்றிய அவதூறுப் பிரச்சாரத்தின் சாரமே. ஆடை விலகிய நிலையில் கூட இருந்த ஜைத்தின் மனைவியை முகமது நபிகள் பார்த்து மயங்கியே இம்மாதிரி முடிவெடுத்தார் என்பதும், ஜைனபும் இதற்குக் காரணம் என்பதே. இச்சூழலிலே தான், முகமது நபியவர்களின் மனைவிகள், கூட இருந்தவர்கள் ஆகியோருக்கு இத்தகு வசனங்கள் அறிவுரையாக அல்லாஹ்விடமிருந்து வந்தன.

நேரடியாக முகமது நபியவர்களை எதிர்க்க முடியாத விஷமிகள், அவரது மனைவிகளை ஜைனப்பின் மண விவகாரத்தில் தூண்டிவிடுவதை தடுக்கவே மற்ற பல வசனங்களும் அருளப் பட்டன. உதாரணமாக திருக்குரான் வசனம் 33:32:

‘நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான் இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். ‘

இது போன்றே வசனங்கள் 33:53,33:55 ஆகியவை, மற்ற ஆண்கள் முகமது நபியவர்களின் வீட்டுக்குள் செல்வதையும் (அக்காலத்தில், நபியவர்களின் வீடும் மசூதியும் சேர்ந்தே இருந்தது), அவரது மனைவிகளிடம் பேசுவதையும் தடை செய்தன.

ரூமி, இந்தப் பிண்ணனி பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. மேலும், இந்த அத்தியாயத்தைத் தவிர, இன்னொரு இடத்தில் திருக்குரானில் பெண்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்து கொள்வது பற்றி வருகிறது. அது, சூரா அந்நூர் என்கின்ற இருபத்தினான்காவது அத்தியாயம் ஆகும். அந்த திருக்குரான் வசனங்களுமே, இப்படிப் பட்ட ஒரு இக்கட்டான சூழலிலேயே அல்லாஹ்வினால் அருளப் பட்டன. அவையும், முகமது நபிகளின் மனைவிகளைக் குறித்தே சொல்லப் பட்டவைதாம். அதாவது, சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது போல, முகமது நபியவர்களின் மனைவிகள் எந்தவித குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகிவிடக் கூடாது என்ற கவலையும், அவர்கள் வேறு யாரையும் மணந்து கொள்ளக் கூடாது என்பதுமே இந்த வசனங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

இருபத்து நான்காவது அத்தியாயத்தின், ஆடைகளைப் பற்றிய வசனங்களைப் பார்ப்போம்:

24:31 ‘ இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்ி தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்ி தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்ி மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாதுி மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்ி மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். ‘

இந்த வசனம் அருளப் பட்டதன் பிண்ணனியைப் அறிவது, இந்த வசனத்தை முறையாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். முகமது நபியவர்கள் மதீனாவுக்கு இடம் பெயர்ந்து, சுற்றி இருந்தவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது(ஆறாம் ஆண்டு என இஸ்லாமிய வரலாற்றறிஞர்களுள் சிலர் கருதுகின்றனர்). அப்போது பனி அல் முஸ்தாலிக் ஜாதியினருடன் சண்டையிட்டு, அவர்களது உடமைகளை கைப்பற்றி வெற்றிகொண்டபோது திடாரென மக்காநகர முஸ்லீம்களுக்கும் (முஹாஜிர்), மதீனா வாசிகளுக்கும் (அன்சாரிகள்) உரசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மதீனாவுக்கு திரும்பியவுடன் முஹாஜிர்கள் விரட்டப் படுவார்கள் என்று அன்சாரிகளுள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதனை கேள்விப்பட்ட முகமது நபி அவர்கள், இந்தச் சூழலை தவிர்ப்பதற்காக இரவோடிரவாக மதீனாவுக்கு திரும்ப முடிவெடுத்தார்.

இதற்கிடையில், மல ஜலம் கழிப்பதற்காக டெண்டுக்கு வெளியே பாலைவனத்தில் சென்றிருந்த முகமது நபியவர்களின் மனைவியான ஆயிஷா, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் இருளில் விழுந்து விடவே அதைத் தேடிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக முகமது நபியவர்களின் கூட்டம் கிளம்பவே, ஆயிஷா பல்லக்கினுள்ளே இல்லை என்பதைக் கவனிக்காமல் பணியாட்கள் அந்தப் பல்லக்கை ஒட்டகத்தின் மீது தூக்கி வைத்து புறப்பட்டு விட்டனர்.

திரும்பி வந்த ஆயிஷா, தமது கூட்டத்தார் தம்மை மட்டும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்று அழுது கொண்டே , அவ்விடத்திலேயே படுத்து தூங்கிவிட்டார் (அப்போது அவருக்கு ஏறத்தாழ பதினாலு வயது இருக்கலாம்). காலையில் அவ்வழியே சென்ற சஃவான் என்ற முஸ்லீம் ஒருவர், ஏற்கெனவே ஆயிஷாவை கண்டிருந்ததால், அவரை அடையாளம் கொண்டு, முகமது நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பத்திரமாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார்.

இந்த சம்பவம், ஆயிஷா மேல் பலர் அவதூறு சொல்ல வழிவகுத்தது. ஆயிஷாவின் மேல் முகமது நபியவர்கள் அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததால் ஏற்கெனவே பொறாமையில் வெந்து கொண்டிருந்த முகமது நபியவர்களின் உறவுக்காரப் பெண்டிரும், மதீனாவாசிகளில் முஹாஜிர்களைப் பிடிக்காதவர்களுக்கும் இது வெறும் வாய்க்கிட்ட அவலைப் போல் ஆகியது.

இச்சம்பவத்தால் முகமது நபியவர்களும் மனதளவில் நிறைய பாதிக்கப் பட்டார். அவரது நன்பர்கள், அவரைத் தேற்றி, ‘ஆயிஷா இல்லாவிட்டால் என்ன, பெண்களுக்கா பஞ்சம் ‘ என்று கூறினார்கள் என்றும், அப்போது உடல் நிலை சரியில்லாது ஆயிஷா இருந்த நிலையில் கூட அவரிடம் நபி அவர்கள் பேசவில்லை என்றும் ஆயிஷா பிறகு தெரிவித்துள்ளதிலிருந்து, இது முகமது நபியவர்களின் மனதை மிகவும் பாதித்தது தெரிய வருகிறது. பிறகு ஆயிஷா அவர்களின் அடிமைப் பெண்ணை அழைத்து விசாரித்து, உண்மையில் ஆயிஷா தவறு செய்யவில்லை என்று நபிகளார் தெளிந்தார்கள் என்று ஆயிஷாவே சொன்னதாக மெளதூதி குறிப்பிடுகிறார்[11].

இந்த சம்பவத்தையொட்டி, முகமது நபியவர்களின் மற்ற நன்பர்களும், அவரிடம் அவரது மனைவிகளை முறையாக நடந்து கொள்ள அறிவுறுத்தும் படி கூறினார்கள். இச்சூழலில், ஆடை-ஆபரணங்கள் பற்றிய வசனங்கள் அல்லாஹ்வினால் முகமது நபியவர்களுக்கு அருளப் பட்டன. இங்கேயும், முகமது நபியவர்களின் மனைவிகளைக் குறித்தும், உடனிருந்தவர்களைக் குறித்துமே இவ்வசனங்கள் அறிவுரைகளை அறிவித்தன. இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:

24:4 ‘ எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவது}று கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். ‘

24:11 ‘எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறதுி மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. ‘

24:12 ‘முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ‘இது பகிரங்கமான வீண் பழியேயாகும் ‘ என்று கூறியிருக்க வேண்டாமா ? ‘

இது போன்றே, திருக்குரான் வசனங்கள் 24:13,24:14,24:15,24:16 போன்றவையும் அருளப் பட்டன. இவற்றின் சாராம்சம், முகமது நபியவர்களின் மனைவியைப் பற்றி இப்படிப்பட்ட அவதூறு, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரப்பப் பட்ட போது ஏன் சும்மா இருந்தீர்கள் என்று அவருடன் கூட இருந்த கூட்டத்தாரை நோக்கி அல்லாஹ் கேட்டதாகும். வசனம் 24:30 முகமது நபியவர்களின் கூட இருந்த ஆண்களுக்கு, அவர்கள் பெண்களைப் பார்க்கும் போது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதும் இதன் அடிப்படையிலேயே ஆகும்.

திருக்குரானில் இந்த இரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களே, பர்தா முறைக்கு அடித்தளமாக திருக்குரானில் காணப்படுகின்றன. இவையும், ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அல்லாஹ் இடப் பட்ட கட்டளையோ அல்லது எல்லா முஸ்லீம்களுக்குமான இறைவனின் கட்டளையோ அல்ல. முஃமின்கள் என்று இங்கு குறிப்பிடப் பட்டிருப்பது கூட எல்லா இடங்களிலும் இருந்த முஸ்லீம்களை குறிக்கு முகமாக அல்ல, அப்போது முகமது நபிகளின் கூட இருந்த கூட்டத்தாருக்கு அல்லாஹ், இரண்டு குறிப்பிடத்தக்க சம்பவங்களின் போது தெரிவித்த போதனைகளே ஆகும்.

திருக்குரான் தவிர, ஹதீதுகளைப் பார்த்தோமானால் கூட ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. பர்தா அணிவதை முகமது நபி வலியுறுத்தினார் என்று சிலர் சொல்லியிருக்கின்றனர். அதேபோல், மேலே கண்ட திருக்குரான் வசனங்கள் அருளப் பட்ட பின்னும், மற்ற முஸ்லீம் பெண்கள் சுதந்திரமாக முகமது நபியவர்களின் கூட மசூதியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள் என்றும், பர்தா அணியாமல் அவர் முன்வந்து பேசினார்கள் என்றும், சில பெண்களின் அழகில் மயங்கி அவர்களின் முகத்தையே (முகமது நபி அருகில் இருக்கும்போதே) மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டும் பல ஹதீதுகள் காணப் படுகின்றன. முகமது நபியவர்களின் காலத்தில் அவரது மனைவிகளுக்கு மட்டுமே பர்தா முறை இருந்ததாகவும் , கூட இருந்த ஏனைய பெண்களுக்கு வெறும் முடியையும், மார்பையும் மறைத்துக் கொள்ளவே அவர் அறிவுறுத்தினார் என்றும் பலர் இத்தகைய ஹதீதுகளை மேற்கோளிட்டு வாதிடுகின்றனர். முகமது நபியவர்கள் போரில் பிடித்த பெண்களிலிருந்து தாம் எடுத்துக் கொண்ட பெண்களில் பர்தா அணிவித்தால் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம் என்றும், மேல் அங்கியை நீக்கி விட்டால், அவளை வெறும் அடிமையாகவே வைத்துக் கொண்டார் என்று அர்த்தம் எனவும் அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதிலிருந்தே, முஸ்லீமான எல்லாப் பெண்களுக்கும் அவர் முகத்தையோ, உடலையோ மூடி, தனிமையில் இருக்க அறிவுறுத்தவில்லை என்று வாதிடுபவர்களும் உள்ளனர். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாக அசிரியர்களும், பாரசீகர்களும் இம்முறையைப் பின்பற்றி வந்ததாகக் கூறப் படுகிறது. அவர்களில் உயர் குலத்தோர் தம் பெண்டிரை இம்மாதிரி திரைச் சீலைக்குப் பின் மறைத்து வைப்பதும், மற்ற ஆடவர்களுடன் பழகாமல் தடுத்து வைப்பதும், அவசியம் எனில் வெளியே போகும் போது உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்து போவதும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். ஆனால், இதற்கு நேர் மாறாக அரபிப் பெண்டிர் சுதந்திரமாக இருந்திருக்கின்றனர். இஸ்லாம் பரவும் போது, ஈராக் போன்ற பிரதேசங்களில் இருந்த இம்முறை, தாமும் உயர் வகுப்பு என்று காட்டிக் கொள்வதற்காக அரபிக்களாலும், ஏனைய முஸ்லீம்களாலும் பின் பற்றப் பட்டது என்றே பிக்தால் போன்ற இஸ்லாமிய வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

திருக்குரானில் ஆணும் பெண்ணும் சமம் என்றும் வசனங்கள் காணப் படுகின்றன. ஆண்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளச் சொல்லும் வசனத்தை எந்த இஸ்லாமியரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், குறிப்பிட்ட சூழலில், அவருடைய மனைவிகளைக் குறித்தும், கூட இருந்த ஏனைய பெண்களைக் குறித்தும் வந்த வசனங்களை ‘மனித குலம் முழுமைக்குமான ‘ ஆடை முறையாக மாற்றுவது, அடிப்படை வாதத்தின் கோர முகம் தான்.

தீவிர வகாபியிஸத்தைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில், ஒரு பெண்கள் பள்ளியில் சமீபத்தில் ஒரு தீ விபத்து நிகழ்ந்தது. அப்போது தீயிலிருந்து தப்பிக்க முயன்ற பெண்களில் சிலருக்கு பர்தா விலகிவிடவே, தீயணைப்பு வாகனத்தை அருகே செல்ல தடை செய்து விட்டனர். இதன் விளைவாக, பதினைந்து பெண்கள் உயிரிழந்தார்கள்[12]. அங்கு, பெண்கள் காரோட்டுவது கூட அடிப்படைவாதிகளுக்கு இஸ்லாத்துக்கு விரோதமான ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது[13 ]. பாகிஸ்தானில் தீவிர பர்தா அமுலிம் இருக்கும் பலூசிஸ்தான், வடமேற்கு மாகானம் போன்ற மாநிலங்களில், ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்வதைத் தவிர வெளியுலகையே பார்ப்பதில்லை. வட இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மிகுந்து இருக்கும் பகுதிகளில், கொஞ்சம் வெயிலையும், காற்றையும் அனுபவிப்பதற்காகவே உடல் நிலை சரியில்லை என்று கூறி ஆஸ்பத்திரி செல்லுகின்றனர் முஸ்லீம் பெண்கள். இது போன்றே, உலகெங்கிலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் ,அவர்களை ஆதரிப்பவர்களும், பர்தாவுக்குப் பின்னே தமது மதத்தின் மரியாதையும், பிடிமானமும் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு பர்தா முறையை மறுதளிக்கும் நாகரீக சமுதாயங்கள் மீது கோபப் படுகின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருகிய நிலையில் காஷ்மீரிலும், பர்தா அணியாத பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

தற்போது பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது சம்பந்தமாக இந்த பர்தாவே இஸ்லாத்தின் அடித்தளம் என்பது போன்ற பிரச்சாரங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் செய்யப் பட்டு வருகின்றன. பள்ளிகளில் தலையை மறைத்துக்கொள்வதை தடை செய்வது, இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமையை தடை செய்வதாகும் என்று கூக்குரலிடும் இஸ்லாமிய அமைப்புகள், புருனேயில் பள்ளிகளில் முஸ்லீம் அல்லாத பெண்களும் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும் இல்லாது போனால் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும் என்ற அச்சுறுத்தலைப் பற்றி எதுவும் கூறுவதில்லை[14].

பர்தா என்பது, இஸ்லாமிய சமூகத்தின் உள் விவகாரம் கிடையாது. பர்தா முறையினால் வெகுவாக பாதிக்கப் படுவது முஸ்லீம் அல்லாத பெண்கள் தாம். உதாரணமாக தீவிர பர்தா முறை அமலில் இருக்கும் பாகிஸ்தானின் பிரதேசங்களில் இந்து, கிறிஸ்துவப் பெண்கள் கடத்தப் படுவது, கற்பழிக்கப் படுவது, வலுக்கட்டாயமாக மதம் மாற்றப் பட்டு திருமணம் செய்து வைக்கப் படுவது ஆகியவை தினம் தினம் நிகழ்கின்றன. பெரும்பாலும், இவற்றைப் பற்றி போலீசில் புகார் செய்யச் செல்லும் அவர்களின் தந்தைமார்கள், கணவர்கள், சகோதரர்கள் ஆகியோர் மீது முகமது நபியவர்களை அவமதித்த குற்றத்தின் கீழ் (Blasphemy Law) வழக்குத் தொடரப் படுவதால் அங்கிருக்கும் முஸ்லீம் அல்லாதவர்கள் இத்தகைய வன்முறைகளிலிருந்து தமது பெண்டிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக , விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்களையும் பர்தா அணிந்து கொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்கின்ற நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.

பர்தாவுக்கும் முஸ்லீம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் ஒரு எதிர்மறை உறவு உண்டு. தீவிர பர்தா முறை அமலில் இருக்கும் சமுதாயங்களில் எல்லாம், பெண்களின் சமூக, கல்வி முன்னேற்றம் மிகவும் பின் தங்கியே இருக்கின்றது. உதாரணமாக, சோவியத் ருஷ்யாவில், 1920 வாக்கில் பல மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளில் அரசின் துணைகொண்டு வலுக்கட்டாயமாக பர்தா முறை நீக்கப் பட்டது. இதை தீவிரமாக அடிப்படை வாதிகள் எதிர்த்தனர். பர்தா நீக்கி தைரியமாக வெளியே வந்த ஏராளமான முஸ்லீம் பெண்களைக் கொல்லவும் செய்தனர். ஆனால், இத்தகு சீர்திருத்தங்களின் விளைவாக இஸ்லாமிய நாடுகளில் அதிக அளவில் பெண்கள் கல்வியறிவு அடைந்த நாடுகளாக தஜிகிஸ்தான் போன்றவை உள்ளன. 2003ம் ஆண்டில் தஜிகிஸ்தானில் பெண்களின் கல்வியறிவு 99 சதவிகிதம்!. அஜர்பெய்ஜானில் 96 சதவிகிதம். தீவிர பர்தா உடைய ஆப்கானிஸ்தானிலோ, பெண்கல்வியறிவு வெறும் 21 சதவிகிதம் தான் . மேலும், இப்பர்தா முறையின் நீட்சியாக ‘கண்ணியக் கொலைகள் ‘ பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறுகின்றன[15]. ஜோர்டானோ, ஒரு சட்டமே இயற்றி, இப்படி குடும்ப ‘கண்ணியத்தை ‘ காப்பாற்றிக் கொள்வதற்காக பெண்களை கொல்வது சரியே என்று அறிவித்து விட்டது[16]. ‘சதி மாதா கீ ஜெய் ‘ என்று கோஷம் போட்டு 17 வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடந்த கொலையை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் நாகூர் ரூமி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் , இங்கு அப்படிப் பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படும் அதே வேளையில், இஸ்லாமிய நாடுகளில், சட்ட ரீதியாக அனுமதிக்கப் படும் இந்த கண்ணியக் கொலைகளை(honour killings) குறித்து வாய் திறப்பதில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இஸ்லாமிய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கேற்ப இறைவனால் அருளப்பட்டதாக சொல்லப் படும் இவ்வசனங்களை வைத்து, இப்பர்தா முறையை நியாயப் படுத்தும் இந்த இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அதன் பின்புலம் அறிந்த இஸ்லாமிய அறிஞர்களாவது கைவிட வேண்டும்.இஸ்லாத்தின் மிகப் பெரிய பலம் அது 1425 வருடங்களுக்கு முன் பெண்களுக்கு நிறைய உரிமைகளைத் தந்ததுதான் என்றால், அதன் மிகப் பெரிய பலவீனம் 1425 வருடங்களுக்குப் பின்பு, அப்போது நடந்தவைகளை, அவற்றின் பின்புலம் அறியாமல் மூர்க்கத்தனமாக பின்பற்றுவதுதான். இஸ்லாத்தின் மீது தவறான புரிதல் உலகிற்கு இருக்கிறது என்றால், அதை நீக்க வேண்டிய இஸ்லாமிய அறிஞர்கள், மேலும் மேலும் இத்தகைய தவறான பின்பற்றுதல்களை தமது இறைவன் அப்படிக் கட்டளையிட்டுள்ளார் என்று நினைத்து அதனை எப்பாடுபட்டாகிலும் ஆதரிக்கவேண்டும் என்று செயல்படுவது ஏனையோர் இஸ்லாத்தின் மீது வெறுப்பு கொள்ள காரணமாகிவிடுகிறது. நல்லதை ஏற்று அல்லதைப் புறந்தள்ளி, அன்பையும், சகோதரத்தையும், மனித நேயத்தையும் மலரச் செய்ய இத்தகைய நாகரீகத்துக்கு முரணான வழக்குகளை இஸ்லாமிய சமுதாயம் புறக்கணிக்க வேண்டும். அச்சமுதாயத்தின் அறிஞர்கள், படித்தவர்கள், ஆன்றோர்கள், ஆன்மீகவாதிகள் இதை முன்னின்று செய்ய வேண்டும்.

– நேச குமார் –

[1] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 436.

[2] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 439.

[3] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 440.

[4] http://www.islam101.com/quran/maududi/i024.htm

[5] http://www.tamililquran.com/sura33.html#33:37

[6]http://www.tamililquran.com/sura33.html#33:40

[7]http://www.tamililquran.com/sura33.html#33:4

[8]http://www.tamililquran.com/sura33.html#33:51

[9]http://www.tamililquran.com/sura33.html#33:40

[10] http://www.tamililquran.com/sura33.html#33:59

[11 ] http://www.usc.edu/dept/MSA/quran/maududi/mau24.html

[12 ] http://msnbc.msn.com/news/780082.asp ?cp1=1

[13] http://news.bbc.co.uk/2/hi/middle_east/3752989.stm

[14]http://news.bbc.co.uk/2/hi/world/asia-pacific/1804470.stm

[15] http://news.bbc.co.uk/2/hi/south_asia/2567077.stm

[16] Honour Killings in Jordan :

http://news.bbc.co.uk/2/hi/middle_east/2802305.stm

http://news.bbc.co.uk/2/hi/middle_east/3088828.stm

http://www.indiadaily.com/breaking_news/11708.asp

மேலும் படிக்க:

http://www.tamililquran.com/sura33.html

http://www.tamililquran.com/sura24.html

http://islaam.blogdrive.com

  • C.M.Naim on Purdah


    nesa_kumar2003@yahoo.com

    Series Navigation