இஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

மலர் மன்னன்


கடந்த திண்ணை இதழில் நான் எழுதிய கட்டுரையில் இஸ்ரேல் பற்றிய பகுதிகளைப் படித்துவிட்டு, ஸ்ரீ நிவாசன் என்ற திண்ணை வாசகர், மேற்கு ஆசியாவில் பயங்கர வாதத்தை ஆரம்பித்துவைத்ததே இஸ்ரேல் தானாமே? எஸ். வி. ராஜதுரை இதுபற்றி எழுதியுள்ள கட்டுரையைப் படித்தீர்களா? யூதர்களின் இர்குன் இயக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதோடு, பிரஸ்தாப கட்டுரையையும் இணைத்திருந்தார்.

இது பற்றி முதலில் சொல்லவேண்டியது நான் இஸ்ரேலின் விசுவாசியல்ல. யூதர்களின் கண்மூடித்தனமான ஆதரவாளனும் அல்லன். சிலருக்கு சீனாவின், (வட)வியட்னாமின் செயல்களை நியாயப்படுத்திப் பேச வேண்டிவருவதுபோல் இஸ்ரேலின் கொள்கை களுக்கோ அங்குள்ள யூதர்களின் செயல்களுக்கோ கண்மூடித்தனமாக வக்காலத்து வாங்கவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. ஆனால் எஸ். வி. ராஜதுரை என்கிற பெயரின் பிரஸ்தாபம் சில பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது.

மனோகரன் என்கிற எஸ் வி ராஜதுரைக்கு இருக்கிற அபார ஆற்றலை ஓரளவு அறிவேன் எனினும் இஸ்ரேல்தான் பயங்கர வாதத்தை மேற்கு ஆசியாவில் தொடங்கி வைத்ததைப் போல் அவர் எழுதியிருப்பதைப் படித்ததும் அவருடைய சாமர்த்தியத்தைப் பார்த்துத் திகைத்தே போனேன்.

பொய்களைவிடப் பாதி உண்மைகளை எதிர்கொள்வது சங்கடமான சமாசாரம். பொய்களை உடனே தகர்த்துவிடலாம். பாதி உண்மைகளை எதிர்கொள்ளும்பொழுதோ, அது சரிதான்; ஆனால் … என்று தொடங்கவேண்டியிருக்கும். அப்படித் தொடங்குகிறபோதே கேட்கிறவர்களுக்கு அது ஒரு பலவீனம் போல் தோன்றிவிடும்!

இதைப் புரிந்துகொண்டுதானோ என்னவோ, எஸ் வி ராஜதுரை இஸ்ரேல் பற்றிய தமது கட்டுரையைப் பாதி உண்மைகளாலேயே நிரப்பிக் கொண்டு போகிறார்.

இர்குன் பற்றிப் பேசுவதானால் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயிருந்தே கதையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். யாருக்கு இருக்கும் சொல்வதற்கும் கேட்பதற்குமான பொறுமை?

திண்ணை வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை நான் நினைவுபடுத்தியாக வேண்டும். எனது நைந்துபோன உடலில் நான் இருக்கப் போவது இன்னும் சில ஆண்டுகளுக்குத்தான். அதற்குள் நான் படிக்க வேண்டியனவும் எடுத்துச் சொல்ல வேண்டியனவும், செய்ய வேண்டியனவும் நிரம்ப உள்ளன. எனவே நமக்கு நேரடியான பாதிப்பு உள்ள விஷயங்களில் கவனம் செலுத்துவதையே முக்கியம் எனக் கருதுகிறேன். எனவே இஸ்ரேல் விவகாரம் நான் பேசவேண்டிய விஷயமாகப் படவில்லை.

எதற்கும் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுகிறேன். பாலஸ்தீனம் துருக்கியர் வசமிருந்து பிரிட்டிஷார் வசம் போனது முதல் உலகப் போரின் பின் விளைவுகளுள் ஒன்று. அங்கு ஏற்கனவே வசித்த யூதர்களோடு, தமது புராதனத் தலங்களை அடையாளங்கண்டு, அங்கெல்லாமும் அவற்றையொட்டியும் தம் வாழ்விடங்களைத் தேர்ந்துகொள்ள வெளியிலிருந்தும் யூதர்கள் பலர் முற்பட்டபோது அதற்குப் பலவாறு இடையூறு செய்தவர்கள்தான் அராபியர். அதே சமயம் யூதர்களுக்குப் பாலஸ்தீனத்தில் தமக்குச் சொந்தமாக விருந்த நிலங்களை யூதர்கள் தரும் அதிக விலைக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கும் ஆசையும் அவர்களில் பலருக்கு இல்லாமல் இல்லை. அப்போது யூதர்களுக்கு நிலம் விற்காதே என்று மிரட்டும் அராபிய இயக்கங்கள் தோன்றின. யூதர்கள் குடியேற்றத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளரை வற்புறுத்தும் கோரிக்கைகளும் வலுப்பெற்றன. யூதர்களை அச்சுறுத்துவதற்காகப் பல வன்முறைத் தாக்குதல்களும் ஆரம்பமாயின. இங்கு தெருவில் ஹிந்து தெய்வங்கள் ஊர்வலம் வருகையில் மசூதியைக் கடக்க நேரிட்டால் துக்கம் கொண்டாடுகிற மாதிரி மவுனமாகச் செல்லவேண்டும் என்று வற்புறுத்துவது போல் அங்கும் யூதர்கள் ஓசை எழுப்பலாகாது என்று சொன்னார்கள். யூதர்களை அராபியர் தாக்கியபோது யூதர்கள் தற்காப்பிற்காக பதில் தாக்குதல் நடத்தினார்கள். சில சமயங்களில் அராபியரின் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து அதனை முறியடித்தார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர் இருதரப்பினரையும் சரி சமமாகவே நடத்தி வந்தனர். அதனால் யூதர்கள் பிரிட்டிஷ் ஆட்சி மீது மிகவும் அதிருப்தியடைந்தனர். யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவதிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் கண்டிப்பாக இருந்தது அவர்கள் மீது மேலும் அதிருப்தி வளரச் செய்தது. ஐரோப்பாவிலிருந்து ஜெர்மனி போன்ற விரோதம் பாராட்டிய நாடுகளிருந்து வந்த யூதர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். தற்காப்பிற்காக ஆயுதம் வைத்திருப்பது தடை செய்யப்பட்டது. அனுமதியின்றி ஆயுதம் வைத்திருப்போருக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டது. அவ்வாறு மரண தண்டனை விதிக்கப் பட்ட ஒரு யூதருக்கு மன்னிப்பு வழங்குமாறு யூதர்கள் அனைவரும் ஒருங்கே வேண்டியும் தண்டனையை ரத்து செய்ய பிரிட்டிஷ் அரசு மறுத்துவிட்டது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர் மீது யூதர்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு மிகுந்தது. யூதர்கள் மீதான அராபியரின் தாக்குதல்கள் அதிகாரப் பூர்வமான இஸ்ரேல் தேசம் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டன. பாலஸ்தீனத்தில் ஒரு யூதனின் காலடி கூட ஊன்றிவிடலாகாது என்கிற ஆவேசத்துடன் அராபியர் வன்முறையைப் பின்பற்றுகையில், தமது ஆட்சிக்கு இடையூறாக வளரும் குழப்பங்களுக்கு இடந்தரலாகாது எனக் கருதி பிரிட்டிஷ் ஆட்சியாளரும் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் இருக்கச் செய்வதில் முனைப்பாக இருந்தனர். இதெல்லாம் இரண்டாம் உலகப் போருக்கு முன் இருந்த நிலைமை. அந்தத் தருணத்திலேயே யூதர் தற்காப்பு இயக்கம் என்பதாக ஓர் அமைப்பு செயல்படத் தொடங்கிவிட்டது. அதுதான் இர்குன் இயக்கத்தின் மூல வேர். இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் யூத துவேஷத்தை முன்னிட்டு பாலஸ்தீனிய யூதர்களும் பிற பிரதேசங்களில் இருந்தோரும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் மீது வளர்ந்து வந்த விரோதத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பொது எதிரியான ஜெர்மனியை எதிர்க்க பிரிட்டனுக்குத் துணை செய்தனர். ஆனால் போருக்குப் பிறகும் பிரிட்டன் யூதர்களுக்குச் சாதகமாக இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறை, அராபியரின் வன்முறைத் தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்காக உருவெடுத்த தீவிர வாதம்தான் இர்குன். யூதர்களுக்குப் பாதகமாகவும் அராபியருக்குக் கூடுதலான சாதகமாகவும் முடிவெடுக்க வந்த பிரிட்டிஷ் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலில் அவர்கள் பேச்சு நடத்த முற்பட்டபோது இர்குன் அந்த ஹோட்டல் மீது குண்டு வீசித் தாக்கியது. அதில் பலர் இறந்தனர். இந்தச் சம்பவத்தை வைத்துத்தான் எஸ். வி. ராஜதுரை பயங்கர வாதத்தை மேற்கு ஆசியாவில் தொடங்கிவைத்தது இஸ்ரேல்தான் என்கிற தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.

நமது பாரத தேசத்தின் விடுதலைப் போராட்ட காலத்தில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவினர் தோன்றியதுபோலத்தான் பாலஸ்தீனத்திலும் பிரிட்டிஷாரிடம் அதிகாரம் இருக்கையில் யூதர்களிடையே தீவிரவாதம், மிதவாதம் என இரு பிரிவுகள் உருவாயின. தீவிரவாதம் இர்குன் என்ற இயக்கமாகப் பரிணாமம் அடைந்தது. இதைத்தான் எஸ் வி ராஜதுரை பயங்கர வாதத்தின் தோற்றுவாயாக அறிமுகம் செய்துள்ளார்.

பொதுவாக யூதர்கள் மீது அவர்கள் குடியேறிய தேசம் எதிலுமே அனுதாபம் இருந்ததில்லை. பாரதம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. யூதர்கள் போர்க் குணம் உள்ளவர்கள் அல்லர். தந்திரம் மிக்கவர்கள். அதனை வியாபாரத்தில் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள். இதனால் பிறருக்கு அவர்கள் மீது வெறுப்பு. போதாக்குறைக்கு ஏசுநதரை சிலுவையில் ஏற்றியவர்கள் என்கிற கோபம் வேறு. யூதர்கள் மகா புத்திசாலிகள்; இதனாலும் அவர்கள் பிற சமூகத்தாரின் வெறுப்புக்குள்ளாக நேர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தொடக்கத்தில் யூதர்களுக்குச் சாதகமாக இருந்ததில்லை. காலத்தின் கட்டாயம் என்கிறார்களே, அதுபோலத்தான் இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீனத்தில் உருவாயிற்று. அமெரிக்காவும் இங்கிலாந்தும் அதனை ஆதரிக்கத் தொடங்கியதும் காலத்தின் கட்டாயத்தால்தான்! எனவேதான் இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றுக்கிடையிலேயும் பல ஒளிவு மறைவுகள் நீடிக்கின்றன. இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் கையாள் என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான் உண்மை. அமெரிக்கா சவூதியையும் தனது நண்பன் என்றுதான் கூறிக் கொள்கிறது! சவூதி அராபியரின் பெட்ரோ டாலர்கள் அமெரிக்க வங்கிகளில்தான் குவிந்துள்ளன! சவூதி செல்வந்தர்களுக்கு கேளிக்கை வசதிகள் அதிகம் கிடைப்பது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்தான்!

அமெரிக்காவின் இஸ்ரேல், சவூதி உறவாடல்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான். எல்லா தேசங்களுமே தமது நலன் கருதி இவ்வாறெல்லாம் காய்களை நகர்த்துகின்றன. நாம்தான் அப்பாவிகளாக சூட்சுமம் ஏதும் அறியாதவர்களாக இருந்துகொண்டிருக்கிறோம்!

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் முன்பிருந்தே பாலஸ்தீனத்தின் இருப்பு, பாலஸ்தீனம் உள்ளிட்ட உலகம் முழுவதும் யூதர்களின் நிலைமை, இஸ்ரேலின் தோற்றுவாய், ஆரம்பம் முதலே யூதர்கள் அராபியரிடமிருந்தும் பிறரிடமிருந்தும் எதிர்கொள்ள நேர்ந்த வன்முறைத் தாக்குதல்கள் எல்லாவற்றையும் விரிவாக எழுத முற்பட்டால் அது நீண்ட நெடுங்கதையாகிவிடும். எழுதுவதற்கும் படிப்பதற்கும் பொறுமை மிக வேண்டும்.

யூதர்களும் அப்படியொன்றும் சாத்வீகர்கள் அல்லர். அவர்களுடைய ஜெஹோவா மிரட்டுகிறவரும் ஒழித்துக் கட்டு என்று உத்தரவிடுகிறவரும்தான். எனவேதான் ஒருவரை யூத தர்மப்படி ஏழு முறை அல்ல, எழாயிரம் தடவைகளுக்கும் அதிகமாகவே மன்னிக்க வேண்டும் என்று சொன்ன ஏசு யூதர்களுக்கு முரணாகத் தெரிந்தார். பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்கிற சட்டம் இருந்த சமுதாயத்தில் உங்கள் அயலானை நேசிப்பதில் என்ன ஆச்சரியம், உங்கள் விரோதிகளையும் அதேபோல நேசியுங்கள் என்ற ஏசுவின் உபதேசம் அவர்களுக்கு ஒத்துவரவில்லை. யுக தர்மப்படி நடப்பதே உசிதம் என அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் அத்தனை எதிரிகளின் மத்தியிலும் தாக்குப்பிடிக்கிறவர்களாக மட்டுமல்ல, தாக்கித் துரத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்!


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்