‘இளைஞர் விழிப்பு’

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


தமிழே வணக்கம்!

சில்வண்டே, கற்கண்டே
செங்கரும்பே வணங்குகிறேன்
தோலவிழ்ந்த மாங்கனியே -நின்
தொன்மைகளைப் போற்றுகிறேன்
சீரிளமை விழிப்பினைக்
போற்றவும் புகழவும்
செந்தமிழே உனையல்லால்
சேருமிடம் எந்தவிடம்?
ஆதலால் வணங்குகிறேன்
அருந்தமிழே போற்றுகிறேன்

தலைமை வணக்கம்
கண கபிலனாரே -நீர்
பழுத்த கனி -தமிழ்
பழுத்தகனி
விருத்தக் கவிபாடும்
விருத்தன்
கவிமன்றத்து –
நரைத்த கரிகாலன்
தமிழ்த் தாகூரார்.
உரைப்பதும் தமிழ்
உணர்வதும் தமிழ் -உங்கள்
கால்மாட்டில் கைகட்டி
கவிபாட வணங்குகிறேன்

அவையோர் வணக்கம்

ஆன்றோரே சான்றோரே
ஆர்வமுடன் தமிழ்ச்சுவைக்க
அமர்ந்திருக்கும் நல்லோரே
உடன் பாட வந்திருக்கும்
உத்தமரே வணக்கம்!

இளைஞரின் விழிப்பென்றார்
இருபாலருக்கும் பொது
வென்றே கவிதை தந்தேன்,
அணங்கின்றி சமுதாய
மேதுமில்லை; அன்னார்
அணைப்பின்றி இளைஞரினம்
விழித்ததில்லை; என்’பாடல்’,
என் ‘எழுத்து’ என்பதெல்லாம்- என்
கணையாழி தந்தசெல்வம்
காதலால் வனங்குகிறேன்

இளைஞரின் விழிப்பு

புதுவெள்ளம்; பொங்குமாக்
கடலல்ல; காலை இளம்பரிதி;
கனவுகளின் அச்சாரம்; அங்கே
பூபாளம் வாய்திறக்கும்; புள்ளினங்கள்
வான்பறக்கும்; நாளை சரித்திரத்தின்
நாளம் திறந்துவைக்கும், இரவின்
வைகறை, இளைஞரின் விழிப்பு
இளைஞரின் விழிப்பு இளமையின் விழிப்பு

இளமையின் விழிப்பிற்கு
நிறமெடுக்க; இதயத்துக்
குருதியைத் தொட்டுப்பார்த்தேன்.
உணர்ச்சிகளும் உணர்வுகளும்
உடலிற்பேச; உதவும் நிறம்
சிவப்புநிறம்; அறிவு சொல்லும்.
உறவுக்கும்;நீதிக்கும் குரல்
கொடுக்கும், அதன் உத்தமத்தை
பச்சையென்றால் என்ன தப்பு?
சமதர்ம தேரோடும் பிரெஞ்சு
மண்ணின் சமத்துவமும், சுதந்திரமும்
நீலமென்றால், நீலவண்ண வான்
வெளியில் சுண்ணம் பூசும்
நெடுமுகிலை நல்லிளைஞர்
விழிப்பு என்பேன்

இடிமுழங்க, மின்னலிட்டு
மழையாய் கொட்டும்; இதயத்தின்
தாள்நீக்கி எட்டிப்பார்க்கும்;
துடிதுடிக்கும் அடிமையென
சொல்லக்கேட்டு, துடிமுழங்கும்,
புரட்சிக் கொடிபிடிக்கும்;
தடியெடுக்கும் கூட்டத்தின்
இடுப்பொடிக்கும்; தனக்கடங்கா
தருக்கர்தலை வெட்டிச்
சாய்க்கும்; முடிவேந்தர்
நேர்நின்று எதிர்த்தபோதும்
முடிவினிலே வெற்றிகாணும்
முகடு சேரும்.

‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’,
என மொழிந்தால், பேதங்கள்
எம்மிடத்தில் கரைந்துபோமோ?
உறவுகளை சோதிடத்தால்
ஒட்டிவைத்தால் உயிர்க்காதல்
இல்வாழ்வில் துளிர்த்திடுமோ?
நிறமொழிக்கும் சட்டங்கள்
இருந்துமென்ன? நீதியிங்கு
அனைவருக்கும் பொதுவா
சொல்வீர்! சாதிச்சிறப்பிங்கே
சிலருக்கே யென்றுசொல்லும்
சாத்திரங்கள் எரித்திடாமல்
நியாயமேது?மறுப்பின்றி
தலையாட்டும் மனிதர்கூட்டம்,
மாற்றத்தைக் எதிர்கொள்ளும்
காலமேது? பருவத்தில்
பயிர் செய்தால் பதர்களேது;
சீரிளமை விழித்திருந்தால்
அநீதியேது?

நற்றமிழ்காக்க இந்தியினை
எதிர்த்தபோரும்; சொர்போன்
பல்கலையிற் தீப்பொறியாய்
வெடித்தப்போரும் பெற்றபல
வெற்றிகெல்லாம் பின்னணியில்,
உற்றவராய் உருப்படியாய்
உழைத்தவர் யார்? வெற்றி
பெற்ற மனிதர்குல
சாதனைக்கு, இளமை
விழிப்பன்றி வேறுகதை
சொல்லப் போமோ;

அண்டவெளி, அவணியெலாம்
ஆள்வதற்கு; ஆசைபல
எனக்குண்டு; அப்துல்கலாம்
கண்டபல கனவுகளை நனவாய்க்
காணும், காதலுக்கும் குறைவில்லை,
மெத்தவுண்டு; சண்டைகுணம்,
சாதிவெறி; கறுப்பு, வெள்ளை;
சாக்கடைகள், வேற்றுமைகள்
செத்தொழிய; -அதற்குண்டான
வயதினில் விழிப்புவேண்டும் -இளமை
உடன்வேண்டும், துணைக்கென்
துணைவிவேண்டும்

————————–
நாகரத்தினம் கிருஷ்ணா

Series Navigation