இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

புலவர் சீடன்


பாடசாலை மாணவப் பருவத்திலே கலை இலக்கியத்துறையில் அதி ஈடுபாடு கொண்டவராக வதிரி இரா. இராஜேஸ்கண்ணன் காணப்பட்டார். இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘தொலையும் பொக்கிஷங்கள்’ கொழும்பு மீரா பதிப்பகத்தாரால் வெளிவந்துள்ளமை பெருமைக்குரியது. லாப நஷ்டம் பார்க்கும் வியாபாரி ஆகிய நான் இவரது தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடிக்காமல் ஒவ்வொரு கதைக்கும்
மூன்று நான்கு நாள் இடைவெளி கொடுத்தே படித்து வந்திருக்கிறேன்.

நூலாசிரியரின் கதையில் வரும் வடமராட்சியின் குச்சொழுங்கைகள்> தெருக்கள்> தார்வீதிகள் ஊடாக எனது சைக்கிளில் பிரயாணம் செய்து வந்திருக்கிறேன். கதைகளில் வரும் கதைமாந்தர்களோடு நான் உரையாடியிருக்கிறேன். எமது பகுதியின் கிராமியப் பேச்சு வழக்கு அப்படியே அபாரமாக பதிவாகியிருக்கிறது. எமது பகுதி மக்களின் வாழ்வு இவரது கதையூடாக காட்சியாக வந்து போகிறது. பத்துக்
கதைகள் பங்குவமாகச் சொல்லப்படுகின்றன.

‘தொலையும் பொக்கிஷங்கள்’ என்ற சிறுகதையில் யாழ்ப்பாணத்தின் கற்பகதருவான பனைமரத்தின் முக்கியத்துவம் தனிச்செல்வமாகக் காட்டப்படுகிறது. கனடாவால் வந்த தம்பியண்ணையின் தவிப்பையும் ஆத்திரத்தையும் இக்கதையூடாகக் காணலாம். அவர் வீட்டு வளவில் இருந்த மூன்று பனைமரங்களும் இல்லாதது கண்டு ஆத்திரம் கொள்கிறார். தனது குடும்பம் அந்த மூன்று பனை மரத்தால் அடைந்த பயனை
நினைத்துப் பார்க்கிறார். பின்னர் வேதனை கொள்கிறார். வீட்டைக்கட்டி விடலாம். நமது மூதாதையர் உருவாக்கிய பனையை இழந்தததை அவரால் தாங்க முடியவில்லை. விசா முடிஞ்சாலும் பரவாயில்லை. வளவுக்குள் பனங்கொட்டை போட தம்பியண்ணை திடசங்கற்பம் கொள்கிறார். இக்கதையில் அவரின் தன்னம்பிக்கை தென்படுகிறது.

அனேகமாக இரத்த சம்பந்தமுள்ள உறவுகளைத்தான் நம்பகமானவர்கள் என்று நினைக்கிற மனோபாவம் கொண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பம் யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களோடு எவ்வாறு உறவை வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டும் கதைதான் ‘பூர்வீக பந்தம்’. மதத்தைத் கடந்து இனரீதியான உறவினை இக்கதை வெளிப்படுத்துகிறது.

சிறார்கள் எப்போதும் எதிர்பார்ப்போடு இருப்பார்கள். ‘தூவானத்தில்’ ரம்மியன்ரை அப்பா அவனோடு எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார். எப்படி எல்லாம் ரம்மியனை கொஞ்சி மகிழ்கிறார் என்பதை நினைத்து தன் தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கிறான். ரம்மியனின் நண்பன். தாயிடம் ‘அப்பா எப்ப வருவார்?’ என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தாயைத் துடிக்க வைத்திருப்பது
சோகத்திலும் சோகமாக இருக்கிறது.

மினிபஸ் பிரயாணத்தினூடாக நூலாசிரியர் ‘தொற்றாத உணர்வு’ களைக் காண்கிறார். பிச்சைச் சம்பளம் எடுக்கும் ஆச்சியை மினிபஸ்ஸில் ஏறி வருகிறாள். அவளை நடத்துனரும் ஏனைய இளவட்டங்களும் எவ்வாறெல்லாம் மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

“தம்பி முந்தி கோப்பாயிலைதானப்பு இருந்தனான் இப்ப ஆவரங்காலிலை என்ரை மூத்தவளோட இருக்கிறன் அதை மாத்தித் தரச் சொல்லி ஒருத்தரும் மாத்தித் தராதுகளாம்……..என்ன செய்வம்” என்று ஆச்சி கூறுவதும்> இந்த நாட்டிலை மானியத்தைக் கூட மனிதர் வருத்தித்தான் பெறவேண்டும் என்று ஒரு உள்ளம் துடிப்பதும் நூலாசிரியரது மனிதத் தன்மையை எடுத்துக் காட்டிவிடுகிறது.
பிரயாணத்தின்போது வித்தியாசமான மனிதர்கள் அவர்களது உரையாடல்கள் பொறுப்பற்றுக் கிடக்கிறது. ஒழுக்கம் படித்தவனுக்குமில்லை படித்துக் கொண்டு இருப்பவனுக்குமில்லை. இனி இதை எங்கே வழங்குவார்கள் என்பதே கேள்விக்குறிதான்.

எது செய்வது என்று அறியாமல் தம்மை நித்தமும் படபடப்பாக வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் குழந்தைகளுக்குரிய நிலைகளையும் அதட்டியோ மிரட்டியோ அரவணைப்பாகவோ செய்யும் பெற்றோர்கள்> மற்றும் வேலையைத் துரிதவேகத்தில் செய்து முடித்து வேலைக்குப் போகும் பெண்களை நாம் காண்கின்றோம். அவ்வாறான ஒரு பாத்திரத்தை ‘குதறப்படும் இரவுகளின்’ ஊடாகக் காண்கின்றோம்.

கோழிக் கூட்டிலிருந்து தாய்ப்பேடு குதறப்பட்டுக் கிடந்தது. சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த மாமியின் ஊகம் இது. ‘மரநாய் எண்டால் என்ன? கீரிதான் என்றால் என்ன? இந்தக் குஞ்சுகள்?’ திடீரென பத்திரிகைச் செய்தி நினைவுக்கு வருகின்றது ஓ… ‘சடலமாக மீட்கப்பட்ட பெண். இரண்டு பிள்ளைகளின் தாய்’ பத்திரிகைச் செய்தி கோழியின் சம்பவத்தை நினைவு படுத்துகின்றது. குறியீட்டுக்
கதையில் எமது அவலத்தை மிக நாசூக்காக வெளிப்படுத்துகிறார்.

‘மானக்கேடு’ ஆசிரியைக்கும் மாணவிக்கும் உள்ள இறுக்கமான உறவு தாய்மை உள்ளத்தோடு ஆசிரியை நடந்து கொள்ளும் விதம் எடுத்துக் காட்டப்படுகின்றது. நூலாசிரியரின் கதைப்போக்கில்> ஆசிரியர் சமூகத்தின் பொறுப்புணர்வு சொல்லப்படுகின்றது. தண்டனை கொடுக்கும் ஆசிரியர்கள் முற்றுமுழுதாக விலக்கப்படுகின்றார்கள். உளரீதியான கதையாக இக்கதை மனதைத் தொடுகிறது.

சுய வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தையும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ‘சங்கார தரிசனம்’ காட்டுகிறது. கடின உழைப்பால் பல பெயர்களை பெற்றுக் கொள்ளுகிறார் சுந்தரியார். தொண்டைமானாறு செல்வச் சந்நிதியானின் சூரன்போர் பார்க்க முடியாமல் தவியாய்த் தவிக்கும் சுந்தரியார் உலக நடப்பை நினைத்து சலித்துக் கொள்வது நாம் வாழும் காலத்தைக் காட்டுகின்றது.

கணவனுக்குத் தெரியாமல் இந்தியச்சாரி வாங்கிய மனைவி கணவனின் எரிச்சலுக்கு ஆட்படுகிறாள். இருவரும் வேலைக்குப் போகும்போது கனத்த நெஞ்சத்தோடு போய் திரும்புகிறார்கள். கணவன் கோபத்தில் பேசியதை நினைந்து அவள் வேதனைப்படுவது. மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வரும்போது அவளை அவதானிப்பது கதையோட்டத்தில் சொல்லப்படுகிறது.

வீட்டுக்கு வந்ததும் கட்டின தோசை தின்னாமல் மேசையில் வைத்திருப்பதைப் பார்த்துக் கோபத்தில் பாசலைப் பிரித்தபோது அவனுக்குப் பிடித்த ‘கன்ரின்’ இல் வாங்கிய கடலை ‘போளி’ இருப்பதை கணவன் காண்கிறான். முன்பு முரண்பட்டார்கள். சற்றுப் பிரிந்திருந்தார்கள். அப்பிரிவு மீண்டும் சேர்த்து வைத்தது. தான் அவளுக்காக வாங்கிய சங்கிலியை வாஞ்சையோடு சூட்டி விட்டான்
‘இதைத்தான் செய்ய நினைச்சியளாக்கும்’ எனக் கூறி கணவனின் கையை பூவால் நுள்ளியது போல கிள்ளினாள். இச் செல்லக்கிள்ளல்கள் நல்ல புரிந்துணர்வுள்ள குடும்பங்களில் சகஜமானது. அமைதியான ஓட்டமுள்ள கதை.

சிவத்தான் என்ற பாத்திரம் ஒரு மாமாவின் கதையூடாக வருகிறது. தனது சகோதரிகளின் வாழ்விற்காகத் தனக்கென ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளாது வாழும் சிவத்தான் தனது மருமகளின் திருமணத்தின் போது கூறை தாலித்தட்டு மற்றவர்களின் ஆசிக்காக எடுத்துச் செல்ல இருந்த போது தடுத்து நிறுத்தப்படுகிறான். பிள்ளை குட்டி பெற்று வாழ்பவர்கள்தான் தட்டு எடுக்க வேண்டும் என்று
சம்பிரதாயம் பார்க்கும் சம்பந்திகள் வெளியில் சம்பிரதாயத்திற்காக வைக்கப்பட்ட குத்துவிளக்கு நூர்ந்து போய்க் கிடப்பதை பார்க்கவில்லை. அறிவுலகம் என்று சொல்லப்படுகிறது ஆனால் மூடத்தனத்திற்கும் இப்போ குறைவு இல்லை. சிவத்தான் போன்று எத்தனையோ சிவத்தான்கள் அவமானப்படுத்தப்படுவதை இக்கதை எடுத்துக் காட்;டுகிறது.

‘துகிலுரிப்பு’ மற்றொரு உளரீதியான கதை. நலிந்து போனவர்களை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதற்கு கலியாணி ரீச்சரின் யூனிபோம் மாற்றல் எடுத்துக் காட்டப்படுகிறது.

‘உது உந்தக் கிழக்கு றோட்டிலை இருக்கிற பிள்ளை. இங்கத்தை ஆக்களில்லை. அவவின்ரை கிளாஸ் ரீச்சரின்ரை செல்லம். தாய் யூனிபோமுக்கு அரைவாசிக் காசுதான் தந்தவ. மிச்சம் பிறகாம் அதுகள் உப்பிடித்தான். ஆக்களைத் தெரியும்தானே? உனக்கு. இதுகளுக்கு ஏன் இதெல்லாம்? உவை வந்து இஞ்சை ஒண்டும் நியாயம் கேட்டுப் படைக்கப்போறது கிடையாது”

என்று ரீச்சர் முட்டைக் கண்ணியின் தாய்க்குக் கூறுவதும்> மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களை கல்விச் சமூகம் எவ்வாறு பார்க்கிறது. என்பதும் வெளிப்படுத்தப்படுகிறது. கலியாணி ரீச்சர் போன்றோரால் எவ்வாறு இளம் சந்ததியை உருவாக்க முடியும்? கல்வியூடாக மாற்றம் காண நினைக்கும் சிந்தனையாளர்களுக்கு அவர்களது சிந்தனைகள்கூட வெறும் கற்பனையாகத்தான் போகிறது என்பது
இக்கதையூடாக எடுத்துக் காட்டப்படுகிறது.

இவரது தொகுப்பானது நடுத்தரக் குடும்பங்களின் கதையாகவே இருக்கிறது. இவர் போகவேண்டிய இடம் இன்னும் உண்டு. நாளாந்த கூலிகளாகவும் அடிப்படை வசதிகள் அற்றும் வாழும் உழைக்கும் மக்களிடம் செல்ல வேண்டும். இனிவரும் கதைகள் அவர்களின் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் இருக்க வேண்டும். வருங்காலத்தில் மக்கள் கலைஞனாக இவர் மாறவேண்டும்.

புலவர் சீடனுக்காக தட்டச்சுச் செய்து அனுப்பியவர்:- சு. குணேஸ்வரன்

Series Navigation

புலவர் சீடன்

புலவர் சீடன்