இராசலிங்கத்தின் “தொலைதூர கனவுகள்”

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாபெற்றோரைப் பிரிவது, நண்பர்களைப் பிரிவது காதலன் அல்லது காதலியைப் பிரிவது, அனைத்துமே வலிகளை விதைக்கக்கூடியவைதான். தவிர இப்பிரிவுகளிகளில், சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே கர்த்தாக்களாகவும் கருவிகளாகவும் இருக்கமுடியும். காலம் கனிந்தால், இருதரப்பினரில் ஒருவர் எதிர்திசைநோக்கி இயங்கவும், பின்னர் இணையவும் சாத்தியத்தினை அளிக்கவல்ல, மனித உயிர்களுக்கு இடையேயான பிரிவுகள் அவை. ஆட்டை வளர்த்தேன், கோழியை வளர்த்தேன், என ஐந்தறிவு விலங்கிடம் செலுத்தும் அன்பிற்கு நேரும் இழப்பினைக்கூட காலம் நேர்செய்துவிடும். ஆனால் மண்ணைப் பிரிவதென்பது, உயிர் மெய்யைப் பிரிவதற்கு சமம். மெய்யைத் திரும்பவும் பெறுவதற்கான முயற்சியில் உயிர்தான் இறங்கவேண்டும்.

கறந்த பால் முலைக்குத் திரும்புமா? திரும்பவேண்டுமே என்பதுதான் நமது கனவு. பொழுதுசாய்ந்தால், சொந்தகூட்டுக்குத் திரும்பலாமென்கிற உடனடி நம்பிக்கைக்கானது அல்ல புலம் பெயர்தல், என்றேனும் ஒரு நாள் திரும்பலாமென்கிற தொலைதூர நம்பிக்கைக்கானது. பூமி உருண்டை என்பது உண்மையென்றால் புறப்பட்ட இடத்திற்குப் போய்த்தானே சேரவேண்டும். அந்த நம்பிக்கையில் பூத்த கனவினை நுகர்ந்தவாறே, புலம்பெயர்ந்தவன், நினைவுப்பொதிகளை சுமந்தபடி தனக்கென விதிக்கப்பட்ட தடத்தில் நடக்கவேண்டியிருக்கிறது. புலம்பெயருதல் அனைத்துமே ஒன்றா? கல்விக்காகவும், பொருளுக்காகவும், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, மற்றொரு மாநிலத்திற்கு, மற்றொரு நாட்டிற்கு, மற்றொரு கண்டத்திற்கு விரும்பியே அதாவது போகின்ற இடம் எதுவென்று அறிந்தே புலம்பெயர்கிறவர்கள் ஒருவகை. மொழி, இனம், மதத்தின் அடிப்படையில்; சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட; இன்னதிசை, இன்ன நாடு, இன்னகண்டம் என்று அறியாமல் புலம்பெயர்கிறவர்கள் மற்றொருவகை. பின்னவர்களுக்கான வலிகளும் அதிகம் வேதனைகளும் அதிகம். ஈழச் சகோதரர்களுக்கு அது கூடுதலாக இருப்பது கண்கூடு. எந்த மண்ணில் வாழ்ந்தாலும் சொந்த மண்ணே அவர்களின் முதல்வீடு-தாய்வீடு: கண் திறந்தபோது காத்திருந்த வீடு. தாலாட்டு கேட்டு உறங்கிய வீடு. உதிர உறவுகள் உலவிய வீடு. வளையும் மெட்டியும் வாய்திறந்து பேசிய வீடு. காதல் மனையாள் நாவின் துணையின்றி பார்வையும் பாங்குமாய் குசலம் விசாரித்த வீடு, வெட்கச் செம்மையும், சிறுபதட்டமும் கொண்டு அவள் சிணுங்கிய வீடு, தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்கண்ட வீடு. ஆயுளில் குறைந்தது, கால்நூற்றாண்டை கண்ட ஆரம்பகால வீட்டை மறக்க அவனென்ன உணர்வற்ற உயிரா? இயல்பாகவே ஈழத்தமிழர்கள் பொய்யற்ற இனமான உணர்வாளர்கள், மொழிப் பற்றாளர்கள், வேடதாரிகளல்லர். தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பற்றிசொல்ல என்ன இருக்கிறது. இந்திய தேசியத்தின் பெயரில், தங்கள் சொந்த இலாபங்கருதும் தலைவர்களால் இனஉணர்வை நாம் எப்போதோ அடகுவைத்தாயிற்று. மொழியா? அது சோறுபோடுமா எனக் கேள்விகேட்கும் பிரகிருதிகள் வேறு. எந்த இனத்தைக் காக்கப் பெரியார் இயக்கங்கண்டாரோ, அவர் வழிவந்த புண்ணியவான்கள் வளர்த்த வளர்த்துக்கொண்டிருக்கும் இரண்டாம்தர சினிமாவும், அரசியலும் இந்தியத் தமிழ்மண்ணை அரித்துக்கொண்டிருக்க, ஈழத்தமிழர்களோ எங்கே வாழ்ந்தாலும் எமது மொழி, எமது இனம், எமது தேசம் என்ற நினைவுடன் உழலுகிறார்கள். “நான் வைச்சு உண்டாக்கி வளர்த்த மரங்களையும், செடிகொடிகளையும், தோட்டம் துரவுகளையும் பார்த்துப் பார்த்து அழகு பொலியக் கட்டின வீட்டையும் விட்டுப்போக எனக்கு மனம் வரவில்லை. இந்த மரம் செடிகொடிகளைப் பார்த்துக்கொண்டே என் கடைசி காலத்தை அமைதியாகக் கழித்து என் சொந்த மண்ணிலேயே என் சொந்த வீட்டில் இருந்தபடியே மரணிக்க வேண்டும் என்பது என் பெரும் ஆசையாக இருந்தது(பக்கம்- 165)”. அந் நினைவின் வெளிப்பாடாகவே சக்கரவர்த்தி இராசலிங்கத்தின் ‘தொலைதூர கனவுகள்’ இருக்கிறது அல்லது இருக்கின்றன.

திரு. சக்கரவர்த்தி இராசலிங்கம், சுவிஸ்நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர். பதினேழு வயதில் கவிதை எழுத ஆரம்பித்து, அது ‘புதினம்’ பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து, பிரசித்திபெற்ற ‘சுதந்திரன்’, ‘ஈழநாடு’ என பலவற்றிலும் எழுதியிருக்கிறார். நாடகத்துறையில் மிகவும் நாட்டம் கொண்டவர்போல தெரிகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட மேடை, வானொலி நாடகங்களை எழுதி அரங்கேற்றி இருப்பது அதற்கான சாட்சி. “நாடகங்கள் கட்டுரைகள் என எழுதுவதிலிருந்த அதீத ஆர்வமும் ஈடுபாடும் ஏனோ கதைகள் எழுதுவதில் இருக்கவில்லை. நவீனங்கள் எழுத நிறைந்த கற்பனைத் திறன்வேண்டும், என்னிடம் அது மிகவும் குறைவு”, என முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, அவர் எழுத்தின் மீதான வாசிப்பு ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. எளிமையான நடை, பிறமொழி சொற்கள் கலவாத தூய தமிழ் சொற்கள், நேரான வாக்கியங்கள், ஆங்காங்கே கிண்கிணி ஒலிப்பதுபோல ஈழமண்ணுக்கே உரிய வழக்குச்சொற்கள், கதைநாயகன் முத்துவோடு நாமும் ஈழத்து மண்ணை மிதித்துவிட்டு இதய பாரத்துடன் திரும்புகிறோம்.

சொந்த மண்ணைப் பிரிந்தவர்களுக்கான மனவலிகள் மொழி, பண்பாடு, மரபு, சமயமென பலகூறுகளை உள்ளடக்கியவை. அதை இந்நூலிலும் ஆங்காங்கே ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். பொதுவாக வலிகளை சொல்ல வார்த்தை அலங்காரங்கள் உதவாது. ஒருவகையில் ஆசிரியரின் சுயகதை அல்லது அவரைச் சுற்றி நடந்த கதை என்றும் சொல்லலாம்: “மிகவும் சிறுவயதிலிருந்தே என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை கூர்ந்து அவதானிப்பதும், எனக்கும் எனக்கு நெருக்கமானவர்களுக்கும் ஏற்படும் அனுபவங்களை மனதில் அசைபோட்டு ஆய்வு செய்யும் பழக்கம் எனக்கு உண்டு(பக்கம்-14)” என்பதும், முன்பு குறிப்பிட்டதைப்போல கற்பனையில் அவருக்குள்ள பிடிப்பின்மையும், நமது முடிவிற்கு வலு சேர்க்கின்றன. இராமலிங்கமாக வருகின்றவர், இராசலிங்கமே என்றாலும், அவரது கனவுகளை நடமுறைபடுத்த அவர் விரும்பாத கற்பனையின் தயவில் இளைஞன் முத்துவாக அவதரித்து தனது ஏக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்.

நாவலெங்கும் தமிழ் சமுதாயத்தின் மீது அவருக்குள்ள அக்கறையை பல்வேறு நிலைகளில் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். விமானத்தில் கதை நாயகனோடு சுவிஸ் நாட்டவர் மூவர் விமானத்தில் பயணிக்கின்றனர். சுவிஸ் நாட்டில் அரசுமொழியாக ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ரோமானீஷ் என நான்கு மொழிகளுண்டு என்பதும், அங்குள்ள மக்கள் அரசு மொழி நான்கையும் பொதுவில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் இப்பயணிகள் மூவரும் தங்களுக்குள்ளே உரையாடுகிறபோது, ஆளுக்கொரு மொழியை உபயோகிப்பது நமக்கு மட்டுமல்ல, கதைநாயகனுக்கும் வியப்பை அளிக்கிறது. வியப்பைக் கேள்வியாக்குகிறான், அதற்கு அவர்கள், ” மூவருக்கும் சுவிஸ் நாட்டுமொழிகள் எல்லாம் தெரியுந்தான். ஆனாலும் நான் எனது தாய்மொழியான ஜெர்மன் மொழியில் பேசுகிறேன். அருகில் இருக்கும் என் நண்பர்களுக்கு நான் பேசுவது புரிகிறது. ஒருவர் தன் தாய்மொழியான இத்தாலி மொழியில் பதில் சொல்கிறார். மற்றவரோ நாங்கள் இருவரும் பேசுவதைப் புரிந்துகொண்டபோதிலும், தனது தனது தாய்மொழியான பிரெஞ்சில் பேசுகிறார். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தாய்மொழியை நேசிக்கிறோம். அம்மொழியைப் பேசுவதில் பெருமைபடுகிறோம். அதே நேரம் மற்றவர்கள் மொழிகளையும் மதிக்கின்றோம் (பக்கம் – 169), எனப் பதில்வருகிறது. இந்தியர்கள் -குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவசியம் கருத்தில்கொள்ளவேண்டிய பகுதி.

வேறொரு மண்ணிலே பிடுங்கி நடப்படும் அத்தனைச் செடிகளும் துளிர்ப்பதில்லை. ஒருசில தழைப்பதும், ஒருசில வாடினாலும் பின் துளிர்ப்பதும், ஒரு சில வீணில் மடிவதும் உண்டு. முத்து, மரியன் ஐயாத்துரை, சச்சிதானந்தன் மூவருக்கும் அடிப்படையில் பேதமென்று பெரிதாக இல்லை என்றபோதிலும் அவர்கள் ஆளுக்கொரு வாழ்க்கையை தேர்வுசெய்துகொள்கின்றனர். முத்துவின் அறிமுகம் இப்படித் தொடங்குகிறது:”ஓரளவு படித்தவன். இளமையில் அவனுக்குக் கற்பித்த ஆசான்களின் கல்வியுடன் கூடிய பல்வேறு சமுதாய சிந்தனைகளை விழுங்கி ஜீரணித்ததாலோ என்னவோ, அவனிடம் பல முற்போக்கு எண்ணங்களும், புரட்சி சிந்தனைகளும் மலர்ந்து அவனது சகமாணவர்களையும் விட சற்று வித்தியாசமாக அடையாளம் காணப்பட்டான். வெள்ளைவெளேரென்று அறிமுகமான அவன்மீது கடைசிவரையில் அழுக்குப்படாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார், ஆசிரியர். “தோட்டம் தோட்டமெண்டு கிடந்த அப்பா கசிப்புக்கொட்டிலில் சீவிதம் நடத்த”, முத்துவின் மாமா அன்னலிங்கம், “எல்லாம் முடிஞ்சுபோச்சு, இனி நீ தலையெடுத்துத்தான் ….கரைசேர்க்கவேண்டும்”, என அறிவுறுத்திய நேரமோ என்னவோ முத்துவின் ‘கொப்பரை’ ஆர்மிக்காரன் சுட்டுப்போட்டான். கள்ளுக் கொட்டிலுக்குக் கிட்ட செத்துகிடக்கிறார்…” என சேதிவருகிறது. எனவே தனது கனவுகளைத் தொலைத்துவிட்டு சுவிஸ் நாட்டில் அகதிவாழ்வைத் தேடிவந்ததாக கதை தொடங்குகிறது.

“நீ ஒரு முழு மடையனடாண்ணை. நான் உன்னைவிட ஆயிரம் மடங்கு பெரிய மடையன்”, எனப்பேசும் மரியன் ஒர் யதார்த்தமான கதைமாந்தன். மார்க்ஸ், ஏங்கல், லெலின், ஆபிரகாம் லிங்கன், காந்தி, பெரியார் என வாசித்திருக்கும் முத்துவிடம், “உன்னர மாமாவைப் பற்றி நான் புரிந்து கொண்ட அளவுக்குக் கூட நீ புரிஞ்சுகொள்ளேல்லையே” என அங்கலாய்க்கிறான், “அந்த விசர்க்கதையை விடுடாண்ணை. நான் சொல்றதைக்கேள். நான் உனக்கு சினேகிதன் மட்டுமில்லை உடன்பிறவாத சகோதரனுங்கூட” என இயல்பாய் தன்னுடைய மனதை வெளிப்படுத்தவும் செய்கிறான். முத்துவைக் காட்டிலும் நம்மை வசீகரிக்கும் பாத்திரம்.

முத்துவின் ஈழப்பயணத்தின்போது, நிச்சயமற்ற வாழ்க்கை, அகால மரணம், சொந்த நாட்டிலேயே அகதி என்கிற அவலம், எனப் பல சோதனைச்சாவடிகளை கடந்து செல்லவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது. கையறுநிலையில் வாசித்து பெருமூச்சிட மட்டுமே நம்மால் முடிகிறது. தனது நெஞ்சக்கூட்டில் பதிவுசெய்த யாழ்நாட்டை மறுவாசிப்பு செய்யும் முத்துவின் துயரங்களை நம்மாலும் புரிந்துகொள்ள முடிகிறது: “சாலையின் இருமருங்கும் தென்னஞ்சோலைகளாக, தோப்புத்தோப்பாய், தேங்காய்க்குலைகளுடனும், குரும்பைகளுடன், மடல்விரித்த பாளைகளில் வெண்மை சிரிப்புடனும், காற்றிலைசைந்த ஓலைக்கைகள் கொண்ட தென்னைமரங்கள் எங்கே? கூட்டம் கூட்டமாய் வானுயர்ந்து நின்ற பனந்தோப்புகள் எங்கே? மாமரச்சோலைகள் எங்கே? காய்த்துக் குலுங்கிய தேன் பலா மரங்கள் எங்கே? எதுவுமே இல்லாத சுடுகாடாகிக் கிடக்கிறதே இந்தச் செழுமை பிரதேசம்”(பக்கம் -355) என முத்து கதறும்போது, அதன் வலியை உணர ஈழமண்ணில் பிறந்திருக்கவேண்டும். புலம்பெயர்ந்த மண்ணிலிருந்துகொண்டு, “எலும்பு உக்க குளிரிலும் பனியிலும் இரவு பகலுமாகப் பாடுபட்டு உழைத்து குருவிசேர்ப்பதுபோல பணம்சேர்த்து குடும்பங்களுக்கு அனுப்பியபோதிலும், அதன் பயனை அனுபவிக்கும் வாய்ப்பற்ற நிலையில் அக்குடும்பங்கள் இருக்கிற சோகமும் உண்டென்று அறிகிறோம். இப்படியான காட்சிக்கிடையிலும் வேதனைக்கிடையிலும் முத்துவுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம், ஈழமண்ணில் “செயலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில் நிலையங்கள் போன்ற பல இடங்களிலும் காணப்பட்ட பெயர் பலகைகளில் காணும் அழகிய இனிய தமிழ் பெயர்கள்.(பக்கம்- 355)

பாசப்பலவீனங்களால் திருத்தமுடியாத முத்துவின் அம்மா அன்னப்பிள்ளை, இராமரின் தங்கை இரத்தினா, அவருடைய நீதிபதி நண்பர் போன்ற மனிதர்களுக்கிடையில் இராமலிங்கம், அன்னலிங்கத்தார் மாணிக்கத்தார், ஜோசப்பையா நந்தன் போன்ற நல்லமனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக “மனசாலைப்பெரியவங்க வயசாலை பெரியவங்களைவிட மேலானவங்க” என சகமனிதர்ளை வித்தியாசமான அனுகுமுறையில் மதிப்பீடுசெய்கிற அன்னலிங்கத்தார், மனதில் நிற்கிறார்.

“அப்படி குளக்கரைபக்கம் போய் உட்காருவம். நல்ல மருதமரக்காத்து இந்த சாயும்கால வெக்கைக்கு இதமாக இருக்கும்” என்ற அன்னலிங்கத்தாரின் கூற்றை இந்நூலுக்கும் சொல்லிவைக்கலாம்.

தொலைதூரக் கனவுகள் – ஆசிரியர்: சக்கரவர்த்தி இராசலிங்கம்
வெளியீடு: சந்தியா பதிப்பகம், 57A 53rd rd Street, Ashok Nagar, Chennai-600083, Tamil Nadu, India


nakrish2003@yahoo.fr

Series Navigation