இரவில் கனவில் வானவில் – (3 & 4)

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


3
சரவணப் பெருமாளுக்கு இரண்டு பையன்கள். ஒருவன் இங்கே உள்ளூரில் வங்கி அதிகாரி. அவன் மூத்தவன். அடுத்தவன் கம்பியூட்டர் பாடம் படித்து தற்போது மலேஷியாவில் இருக்கிறான். இரண்டு பேருக்குமே கல்யாணம்பேசி நிறையப்பேர் வந்தார்கள். மூத்தவன்தான் கொஞ்சநாள்ப் போகட்டும், போகட்டும் என்று ஆர்வப்படாதிருந்தான்.
கல்யாணம், குழந்தை என்று வீட்டுச் சூழலில் சிக்கிக் கொள்ளாமல் இப்படி சுதந்திரமாக இருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. கல்யாணமான ஒரே வருடத்தில் அவனது சிநேகிதர்கள் ஆளே மாறிப் போனதையும், பெண்டாட்டிதாசர்களாகி, வீட்டு நினைப்பாய்த் திரிகிறதையும் பார்க்க அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது. அது வேறுலகம். இளமையின் பொலிவில் திருமண வாழ்வில் சட்டுச் சட்டென்று ஒரே வருடத்தில் நிறைய நிறைய நிகழ்ந்து விடுகின்றன.
காதல் அவற்றில் முக்கியமான ஒன்று. அது ஒரு ஆட்டுவிக்கப் படுகிற நிலை. ஆட்டுவிக்கிற நிலையும் கூட – ஒருவர் மேல் ஒருவர் நிழலாய்க் கவிகிற நிலை. இயற்கை அவர்களை அப்போது தன் மாயவலைக்குள் இறுக்கி, நெருக்கி, சில கட்டளைகள் இட்டு விடுகிறது. மயக்கம். லகரி. பிறகு அதனின்றும் மீண்டார் இல்லை. மீளவும் முடியாது.
ஒரே வருடத்தில் குழந்தை அது இதுவென்றும் ஆகி விட்டால், அதன் சிரிப்பு, வளர்ச்சி என்று கவன எல்லைகள் அதை நோக்கிக் குவிய…. ஒரே வருடத்தில் உயிர் நண்பர்களே அந்நியமாய்ப் போகிறார்கள். வழியில் நண்பர்களைப் பார்த்தாலும் அந்தப் பழைய ஒட்டுதல், சிநேகம் பாராட்ட முடியாமல் போகிறது. கல்யாணத்துக்கு முன் வீட்டுக்கு வெளியே திரிகிற ஆண்கள், கல்யாணத்துக்குப் பின் வீடே கதியென்று ஏனோ சிக்கிக்கொண்டு விடுகிறார்கள். கனவுச்சிறை. இலட்சுமண வட்டம் அல்ல அது, ஜானகிவட்டம்!…. குழந்தைக்கு உடம்புக்கு வந்தால் அன்றைக்குப் பூராவும் இவர்கள்…. பெற்றவர்கள் தவிக்கிற தவிப்பு.
“அதுக்கென்னா பண்றது…. டேய் வாழ்க்கைல இளமை ஓர் அனுபவம்னா, முதுமைக்கும் இளமைக்கும் இடையிலான இந்தத் திருமணப் புது வாழ்க்கை ଭ அதும் ஓர் அனுபவம்தானே? அந்தந்த வயசுல அதது நடந்தாத்தானே அழகு?” என்றார் சரவணப் பெருமாள். அவன் கூறிய காரணங்கள் அவருக்கு வேடிக்கையாய் இருந்தன. சிரிப்பு வந்தது.
மனசில் இன்னும் அவனை எந்தப் பெண்ணும் சலனப்படுத்தி விடவில்லை, என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டாமவன் போல இவன் அத்தனைக்குக் கலகலப்பானவன் இல்லை. சற்று அமைதியான பிள்ளை. மூததவனுக்கே உரிய பொறுப்பு சார்ந்த அமைதி அவனுக்கு இருந்தது. சிரிப்பில் ஒரு அடக்கம். நிதானம். இளையவன் எதிலும் ஒரு வேகம் காட்டுவான். விளையாட்டில் ஆர்வம் அதிகம். சூட்டிகையான பிள்ளை. வீட்டில் அவன் இருக்கிறான் என்பது பக்கத்து வீட்டுக்கே தெரியும். சத்தத்தை நேசிக்கிற பிள்ளை. சத்தமாய் டி.வி ஓடிக் கொண்டிருக்கும். வி சேனல் அல்லது விளையாட்டு. திடீரென்று அவன் கூடப் பாடுவதோ, ஃபோர் என்று கத்துவதோ அவன் அறையிலிருந்து சத்தமாய்க் கேட்கும். உணர்ச்சிப் பிழம்பு.
கொஞ்சநேரம் மின்சாரம் இல்லாவிட்டால் கூட, தொலைபேசியில் யாருடனாவது பேச ஆரம்பித்து அதிரடிச் சிரிப்புடன் நேரம் போவது தெரியாமல் உரையாடிக் கொண்டிருப்பான்.
இரண்டு பிள்ளைகளும் இரண்டு ரகம். அம்மா இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள். குடும்பத்தில் ஒரு அத்தை. சமையலுக்கு என்று ஒரு மாமி. என்றாலும் அந்த வீட்டில் பெண்ணின் கைவளைக் குலுங்கல்களும், இளமையும் குறும்புமான க்ளுக் சிரிப்புகளுமாக அமையாதது சரவணப் பெருமாளுக்கு ஒரு குறையாய் இருந்தது. உண்மையில் மூத்தவன் பாஸ்கருக்குப் பின், அடுத்தது பெண்ணாய்ப் பிறக்க அவர் விரும்பினார். மனைவி சிவகாமிக்கும் அப்படியோர் ஆசை இருந்தது. பேரெல்லாம் கூட வைத்து – பத்மா – கனவு கண்டு கொண்டிருந்தார்கள். பிறந்தது ஆண். பத்மநாபன்.
மூத்தவன் எப்படியோ, இளையவன் இப்போதே கல்யாணத்துக்குத் தயார். அதுசார்ந்த மிதத்தல் எப்பவோ அவனுக்கு வந்தாயிற்று. அப்பா கண்ணசைக்கட்டும் அவன் தலையசைக்கத் தயாராய் இருந்தாற் போலிருந்தது. வெளியூர் வெளிநாடு என்று இருக்கிறவன் தன் ஆட்களுடன் இல்லை என்கிற தனிமையை உணர்ந்திருக்கலாம். தவிரவும் அவன் என்னதான் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் கடிதங்களோ, ஈமெய்லோ அனுப்பினாலும் அவை உப்பு சப்பில்லாதவை. காதல் கடிதங்களோவெனில் எழுதுமுன்னே கூட எத்தனை ஆர்வப்பட, சுவாரஸ்யப்பட வைத்து விடுகின்றன….
பாஸ்கர் ஒரு குமாஸ்தாவாகவே வங்கியில் வேலைக்குச் சேர்ந்தாலும், படிப்பதில் அவனுக்குத் தணியாத ஆர்வம் இருந்தது. சதா எதாவது புத்தகம் அவன் கையில் இருக்க வேண்டும். சாப்பிடும்போது கூட ஒரு கதைப்புத்தகமாவது கையில் வைத்திருப்பான். என்னவோ மேலே மேலே படிக்க அவனுக்கு ஒரு துடிப்பு. சத்தத்தை விட ஆகவேதான் அவன் மௌனத்தை அமைதியை விரும்பினான் போலும்!
வங்கித் தேர்வில் பாஸ்கர் வெகு சுலபமாக மேலேறி வர முடிந்தது. சேர்ந்த இரண்டு வருடத்திலேயே உத்தியோகம் உயர்ந்து அதிகாரி ஆகிவிட்டதை எண்ணி அவருக்கு சந்தோஷமுண்டு. எதிலும் அவனுக்கு ஒரு திட்டமிடுதல், முன்யோசனை உண்டு. அதேபோல சிக்கனமானவன் அவன்.
இளையவன் இதற்கு நேர் எதிர். வாழ்க்கை அனுபவிக்கத்தான். சிரிக்கத்தான் என்கிற சித்தாந்தம் அவனுக்கு. சம்பாதிக்க வேண்டும். அதற்கேற்ப செலவழிக்க வேண்டும். சந்தோஷம் முக்கியம். வாழ்க்கை சிறியது. கவலைகளுடன், சுமைகளுடன் அதைக் கொண்டாட முடியாது. கட்டுப்படியாகாது. லைஃப் இஸ் டூ ஷார்ட் டு பி கெப்ட் ஒரியிங்!
பாஸ்கரிடம் சமீப காலமாக ஏதோ ஓர் சலனம் ஏற்பட்டாற் போலிருநதது அவருக்கு. அது என்ன அவரால் சட்டென்று கண்டுகொள்ள முடியவில்லை. திடீரென்று தம்பியின் கேசட்டுகளில் கர்நாடக இசை மெட்டுகள் சார்ந்த சினிமாப் பாடல்கள், மெல்லிசைகள் கேட்டான். ஷேவ் பண்ணிக் கொள்கையில் கூடப் பாடினான்.
அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. சரி, இவனைக் கட்டுக்குள் இழுக்க இதைவிட சந்தர்ப்பம் அமையாது என்று பட்டது அவருக்கு. நேரடியாய் இப்போது கல்யாணம் பற்றிப் பேசினால் ஒரு வீம்புக்காவது ‘அதான் கொஞ்சநாள்ப் போவட்டும்னு சொன்னேனேப்பா?’ என்றுதான் சொல்வான். ஒரு ஞாயிறு காலையில் அவனும் அவருமாய் வீட்டில் இருக்கையில் சரவணப் பெருமாள் மெல்லப் பேச்சை ஆரம்பித்தார். “ஏம்ப்பா, தம்பி வெளிநாட்ல ஒரே தாவாத் தாவிட்டிருக்கான். காலாகாலத்துல அவனுக்கும் உனக்குமாக் கல்யாணம் பண்ணிப் பாக்கலாம்னு எனக்கிருக்குது. உன்னைவிடத் தம்பி தயாரா இருக்கான். உனக்கும் தினப்படி நாலு இடம் நல்ல இடம் வந்திட்டிருக்கு. வர்றவங்களுக்கு பதில்சொல்லி முடியல்ல. வீடுன்னா என்ன இருந்தாலும் இளம் பெண்ணோட சிரிப்பும் வாசனையும் இருந்தாதாண்டா விளக்கேத்தினா மாதிரி வீட்டுக்கு ஒரு அம்சம் வரும்…. இப்பக்கூட நீ சரின்னு சொல்லு, அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணிப்பிடலாம்…. என்ன சொல்றே?’ என்று ஆரம்பித்தார் அவர்.
வழக்கமாக இத்தனை பொறுமையுடன், அவர் பேசுவதை அவன் கேட்டுக் கொண்டிருக்க மாட்டான். ‘ஆரம்பிச்சிட்டீங்களாப்பா?’ என இடை மறிப்பான். இப்போது தலையாட்டியதே அவருக்குத் திருப்தி.
“இல்ல – உன் மனசுல யாரையாவது நினைச்சிட்டிருக்கியானா அதையாச்சும் சொல்லு பாசு….?”
ஒரு விநாடி அவரைப் பார்த்தவன், “அப்டின்னு பெரிசா ஒண்ணில்லப்பா. நம்ப நடேசய்யர் இல்ல, எங்க பேங்க்ல பெரிய டெபாசிட்டர்…. நடேசன் அன்ட் கோ முதலாளிப்பா. அவங்க கிட்ட வேலை செய்யற ஒரு பொண்ணு. கல்யாணத்துல பாத்தேன்….”
“சரி சரி. மத்ததை நான் பாத்துக்கறேன். அவ பேரென்ன?”
“தெரியலப்பா. நான் விசாரிக்கல….”
“அது சரி, நாம விசாரிச்சுக்குவம்….” என்கிறார் அப்பா. அவன் அத்தனை பிடிகொடுத்ததே அவருக்கு நல்ல விஷயமாய் இருந்தது. இருந்தாலும் எத்தனையோ பெரிய இடங்கள் வந்தும் இப்படியொரு பெண்ணைப் பற்றி அவன் பேச்செடுப்பதில் அவருக்கு சிறு வருத்தங்கூட இருந்தது. முதலில் பெண் யாரென்று பார்ப்போம். மத்தது பிறகு…. என்று தன்னைத் தேற்றிக் கொண்டார்.

4

முதலாளி கொடுத்த அதே பட்டுப்புடவையைத்தான் ஜானகி கட்டிக்கொண்டாள். ஆகவே அவளுக்கு முதலாளிவீட்டுக் கல்யாணதினமும் அதுசார்ந்த நிகழ்ச்சிகளும் அலையலையாய் மனசில் விரிந்து சுருண்டன. அப்பாவுக்குப் பெரிய இடத்திலிருந்து இவளுக்கு சம்பந்தம் தேடி வந்ததில் பெருமையாய்த்தான் இருக்கிறது. தலைகால் பாவாத தள்ளாட்டமாய் இருக்கிறது. அர்ச்சுனன் தேர் தரைதொட்டுப் போகாதாமே, அதுபோல.
பாஸ்கருக்கு அந்த வீட்டின் எளிமையான சுத்தம் பிடித்திருக்கிறது. ஜானகியின் இரண்டு தங்கைகளும் ஆர்வக் குறுகுறுப்புடன் எட்டிப் பார்ப்பதும் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொள்வதுமாய் இருந்தார்கள். தற்செயலாக அவன் அவர்களை கண்ணை நோக்கி அவதானித்தால் நத்தையாய் உள்பதுங்கினார்கள். சத்தத்தை அடக்க அவர்கள் பாடுபட்டாற் போலிருந்தது. கீச் கீச்சென்று இளமையின் குருவிச்சத்தம். கலகலப்பு…. தன் வீட்டின் இரண்டு ஆண்பிள்ளைகளாக இருந்த நிலைமைக்கும், இங்கே மூன்றுமே பெண்பிள்ளைகளாக இருக்கிறதற்கும்தான் எத்தனை வேறுபட்டதாய் இருக்கிறது சூழல்.
அந்த மாலையிலும் வாசல் தெளித்துப் பெரிய கோலத்தில் ‘நல்வரவு’ என்று எழுதியது எந்தப் பெண்ணின் கைவண்ணம் தெரியவில்லை. என்னவெல்லாம் ஜாலம் செய்கிறார்கள் பெண்கள். வேடிக்கை பண்ணிக் குதூகலிக்கிறார்கள். எதையுமே ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கொண்டாடும் பெண்மை…. அவனுக்குப் புதிராய் இருந்தது. ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் எப்போதுமே புதிர்தான். வாழ்க்கை பூராவும் அது சுவாரஸ்யமாகக் கூடவருவது இயற்கை அளித்திருக்கிற சீதனம், என்று தோன்றியது.
சரவணப் பெருமாள் விசாரித்த அளவில் அவருக்கு இந்த சம்பந்தம் அத்தனை ரசிக்கவில்லை. அவன் இந்தப் பெண்ணைத் தேர்வு செய்ததே அவருக்கு ஆச்சரியம். முள்ளு முள்ளாய் நரைத்த தாடியுடன் பஞ்சாட்சரம் வாசலுக்கு வந்து எலும்புகளாலான கைகளைக் குவித்து வாங்க வாங்க, என பல்லற்ற குழி தெரியும் வாய்நிறைய அழைத்தது என்னவோ போலிருந்தது. ம் ம், என்று தலையாட்டியபடியே உள்ளே நுழைந்தார்.
மாமனாரின் முகத்தை ஜானகி கவனிக்கவே செய்தாள். பெரிதாய் அவள் யூகங்களை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனோ அவளுக்கு ஒருவேளை இந்த சம்பந்தத்துக்கு மாமனார் மறுப்பு சொல்வார் என்று பட்டது. அப்பா தலையாட்டியதே ஆச்சரியம்…. வேறு ஜாதி சம்பந்தம். ஆனால் பணக்காரர்கள்….
சரவணப்பெருமாள் உட்கார்ந்திருக்கிற நிலையிலேயே சற்று அதிருப்தி தெரிகிறது. சற்று அந்தச் சூழலுக்குப் பொருந்தாத நாற்காலிகளில் அவர்கள் அமர்த்தப் பட்டிருந்தார்கள். அவசரத்துக்கென்று பக்கத்து வீடுகளில் இருந்து ஒன்றுக்கொன்று பொருந்தாத வண்ணங்களில் ஃபைபர் நாற்காலிகள் வரவழைப்பத்திருப்பது சட்டென்று, தெற்றிய பல்வரிசை போல எடுப்பாய் வெளித் தெரிந்தது. சிமென்ட் பூச்சு உதிர்ந்து செங்கல் தெரிகிற சுவர்போல. மடல் உதிர்ந்த வாழைப்பூ!
பெண்ணை ஒரு சம்பிரதாய அளவில் அந்த அத்தை பாடச்சொன்னாள். அதற்கெனவே சுய தயாரிப்புடன் இருந்தாள் ஜானகி. காக்கைச் சிறகினிலே…. பாரதியார் பாடலைப் பாடினாள். தலையைக் குனிந்தபடி யாரையும் பார்க்காமல் பாடினாள். குனிந்த நிலையிலேயே பாஸ்கரின் கால்கள் தெரிந்தன. ஷு கழற்றிய, சாக்ஸ் அணிந்த கால்களில் தாளலயம் தெரிந்தது. அது அவளுக்குப் பிடித்திருந்தது.
இன்னும் அவன் அவளை மறவாமல் தக்க வைத்திருந்ததும் நல்ல விஷயம். கனவுகளில் தான் அமிழ்ந்து போய்விடக் கூடாது, என ஓர் ஜாக்கிரதை உணர்வு ஏனோ படபடப்பாய் அவளுள் இருந்தது. கனவும் ஆசையும் அதிகம் கொண்ட பெண்கள், அதிகம் சோகத்தையும் சுமந்து திரிகிறதை அவள் கவனித்திருக்கிறாள்.
ஆனால், அவளைப் பார்த்த முதல் பார்வையில் சரவணப் பெருமாளிடம் காணாத நெகிழ்ச்சி இப்போது அவளது பாட்டைக் கேட்டதும் பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது. தன்மேல் புதிதாய் அவருக்குப் பரிவு ஏற்பட்டிருப்பதாகக் கொள்வதை விட, பாஸ்கர் மேல் கொண்ட நம்பிக்கை விசாலப் பட்டிருக்க வேண்டும்…. என யூகித்தாள். தன்னைக் கல்யாண மண்டபத்தில் சந்தித்த அந்த மனோகரமான சூழலுக்கும் இப்போது தன் வீட்டில், பெண் பார்க்க வந்திருக்கிற சம்பிரதாயச் சூழலுக்குமே வசதி அடிப்படையிலேயே பெரும் வித்தியாசம் இருந்தது – ஆனால் அது பாஸ்கரை பாதிக்கவில்லை. அவன் அதைச் சட்டை செய்யவில்லை, என்பதில் அவளுக்கு சிறு ஆறுதல் வந்தது. இது பட்டவர்த்தனமான நிஜம். பட்டையுரித்த மரத்தின் நேரடித்தன்மையான நிஜம். மேலே உளுத்துப் போன உத்திரம். நூலாம்படை. கூட அவர்களின் – அந்த மூன்று பெண்களின் கனவுகள். கனகாம்பரம் சூடிய பெண்கள். வாசனையற்ற கனகாம்பரம். வீட்டுப்பின்னால் தற்செயலாக தன்னைப்போல வளர்ந்த கனகாம்பரம்.
தங்கைகளுக்குத்தான் தன்னைவிட இந்தக் கல்யாணம் திகைவதில் ஆர்வம் அதிகம் இருந்தாற் போலிருந்தது.
அதெல்லாம் சும்மா, ஏய், உனக்கு இந்தக் கல்யாணத்தில் ஆர்வம் இல்லையா என்ன? ரொம்பவும்தான் பாவனை செய்கிறாய்…. என்று மனசு கேலிபேசுகிறது. நினைக்கையிலேயே தன்மேல் பூக்கூடை கவிழ்ந்தாற் போல ஒரு வாசனைத் திகைப்பு.
இந்தப் பெண்மனம்தான் ஏன் இப்படி அலையலையாக ஊசலாடித் தவிக்கிறதோ தெரியவில்லை. கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கனவு, கொஞ்சம் பயமும் கூடவே…. மருட்சி.
உள்ளறையில் அம்மா தட்டுகளில் பஜ்ஜி சொஜ்ஜி எடுத்து வைக்க ரெண்டாமவள் கொண்டுவந்து பரிமாறுகிறாள். ஜானகி இதோ இந்தப் பக்கம் பாயில் அமர்ந்திருக்கிறாள். அம்மா பழைய அவளது பட்டுப் புடவையில். ரெண்டாமவள் கீதா இன்னொரு பட்டுப்புடவை உடுத்தியிருக்கிறாள். அவளது பருவம் விசித்திரமான பருவம். தாவணி போட்டால் சின்னப்பெண் போலவும், புடவை கட்டினால் பெரிய பெண்போலவும் முகம்மாறுகிற விந்தையான பருவம். தீபாவளிக்கு எடுத்த பாவாடை சட்டையில் ஸ்ரீவித்யா. அவளுக்குத்தான் இந்தக் கல்யாணம் திகைந்து விடும் என்கிற முகமலர்ச்சி அதிகம் இருந்தது. கனவுகளில் அதிக நம்பிக்கை தோய்ந்த பருவம். பல்லாங்குழியில் அக்கா காசி-தட்டிவிட்டாற் போல.
தைரிய உரிமையுடன் ஸ்ரீவித்யா கண்ணால் மாப்பிள்ளையைப் பார்த்து ஏதேதோ பேசுகிறதும் சிரிக்கிறதும்…. பாஸ்கரும் அதை ரசித்தாற் போலத்தான் இருந்தது. இந்தக் குட்டிக்குத்தான் எத்தனை தைரியம் என்று திகைப்பாய் இருந்தது ஜானகிக்கு. பாஸ்கரைப் புதிய ஆளாகவே அவள் பாராட்டவில்லை. சைக்கிளில் நேரடியாய் மோதினாற்போல நெஞ்சை நிமிர்த்தி ஸ்ரீவித்யா அவனைப் பார்க்கிறதும் ஜாடைகள் பேசுகிறதும்…. அந்த வயசுக்கு அது நன்றாய்த்தான் இருக்கிறது. ரெட்டை ஜடை உட்பட.
பாஸ்கர் அப்பாவைப் பார்த்தான். வசீகரிக்கப் படாமலும், அதேசமயம் நிராகரிக்காமல் இருக்கிற அப்பாவை அவனுக்குப் புரிகிறது. போகப்போகச் சரியாகி விடும் என்றுதான் அப்போது அவனுக்குப் பட்டது. ஜானகிமேல் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. நடந்து கொள்ளும் பதவிசிலேயே அவள் அப்பாவை மனம் மாற்றி விடுவாள் என்று தோன்றியது.
அப்பாவிடம் ரகசியம் போல அவன் “என்னப்பா?” என்று கேட்கிறான். “உன்னிஷ்டம்டா. உனக்குப் பிடிக்கணும். அதான் முக்கியம். நீதானே அவளோடு வாழப் போறவன்….” என்கிறார் அப்பா. அதை மனசாரச் சொன்னாற் போலத்தான் இருந்தது. அத்தையிடமும் கலந்து கொண்டான். அத்தைக்கு அவளைப் பிடித்திருக்கிறது. பொண்ணு நல்லா லெட்சணமாகவே இருந்தாள் அவள் பார்வைக்கு. அடக்கம். குடும்பத்தின் மூத்த பெண் என்றாலே பொறுப்பு தெரிந்தவள் என்பதுதான் அர்த்தம். எளிமையாய் இருக்கிறாள். சரவணப் பெருமாள் என்ன எதிர்பார்க்கிறார் தெரியவில்லை. ஒருவேளை தன் பிள்ளை கல்யாணத்தை இதைவிட நல்ல சம்பந்தத்துடன் – அதற்கேற்ற தடபுடலுடன் கொண்டாட வாய்த்திருக்கலாம், என்கிறரீதியாய்க் கூட அவர் நினைத்திருக்கக் கூடும்.
அப்போதுதான் ஸ்ரீவித்யா எதிர்பாராத ஒரு போடு போட்டது. அவள் காபி எடுத்து வந்தபோது மாப்பிள்ளை அருகே குனிந்ததும்,, நேரே கண்ணருகே அவனைப் பார்த்துச் சிரித்ததும், அந்தக் கண்ணின் துறுதுறுப்பும் எல்லாருக்குமே அவரவர் கணக்கு வியூகங்களை மீறிய ஆசுவாசம் தந்தது. சில சமயம் பரபரப்பான வங்கிச் சூழலில் பூனைக்குட்டி உள்ளே ஓடி வந்து விடும். மேனேஜரின் நாற்காலி, மேஜை, கவுண்ட்டர்கள் என்று தாவி ஓடித் தெரியும். விரட்டினாலும் போகாது. அந்தத் தலைபோகிற அலுவலக மும்முரத்திலும் எல்லாருமே தம்மை மறந்து ஒருகணம் அதை ரசிப்பார்கள்…. அதைப்போல.
“எங்க வீட்டுப் பெண்ணைப் பாடச் சொன்னீங்களே? மாப்பிள்ளை பாடுவாரான்னு நாங்க தெரிஞ்சுக்க வேணாமா?” என்று விகல்பமில்லாமல் பெரிய மனுஷிபோல திடீரென்று கேட்டாள் ஸ்ரீவித்யா. எதிர்பாராத அந்தக் கேள்வி பஞ்சாட்சரத்துக்கு பயமாய் இருந்தது. என்றாலும் சரவணப் பெருமாளே சிரித்து விட்டார், எனப் பார்க்க அவருக்கு ஒரு ஆசுவாசம்.
“யாரு தெரிஞ்சுக்கணுமோ இல்லையோ, எங்க ஸ்ரீவித்யாவுக்கு இப்ப தெரிஞ்சாகணும்…” என்று காத்திருந்தாற் போல அடியெடுத்துத் தருகிறாள் கீதா. தாழி உடைந்து வெண்ணெய் வழிகிறது அறையெங்கும். மௌனம் உடைந்து உள்ளேயிருந்து கோழிக்குஞ்சு வெளிப்பட்டு இங்கும் அங்கும் அலைய ஆரம்பித்து விட்டாற் போல, ஒரு சுதந்திரக் காற்று சகஜமாகி நடமாட ஆரம்பித்து விட்டது. கலகலப்பு. மொட்டு திறந்து மலர்ந்த புதுப்பூ மணம் சிதறினாற் போல….
தாவணி கூட இன்னும் போடாத சின்னப் பெண் ஸ்ரீவித்யாவை அவர்கள் எல்லாருக்குமே பிடித்திருக்கிறது. “நான் பாடினா அத்தனை விசேஷமா இருக்காது. எங்க, நீ பாடு பார்க்கலாம்” என அவளைக் கூப்பிட்டு அருகமர்த்திக் கொண்டான் பாஸ்கர். சற்று முன் இறுக்கமாய் இருந்த அந்தச் சூழல் கரைந்தது அவனுக்குத் திருப்தி. அதற்கெல்லாம் ஸ்ரீவித்யா சளைத்தவள் அல்ல. சமீபத்தில் பிரபலமான ஒரு திரைப்படப் பாடலை நாலுவரி பாடினாள் ஸ்ரீவித்யா. எல்லாரும் அதையும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“பரவாயில்லையா?” என்று நெஞ்சு நிமிர்த்தி நேரடியாய்க் கேட்கிறாள் அவள். அந்தக் கண்ணில்தான் அங்கீகாரம் கேட்கிற அவசரம், கனவு எத்தனை அழகானது. நடிப்பும் பாவனையுமற்ற உலகம். அது ஒரு வயசு…. நான் ஏன் இப்படி ரொம்ப வயசானவன் போல நினைத்துக்கொள்கிறேன்…. பாஸ்கர் புன்னகை செய்துகொண்டான்.
“அக்கா அளவுக்கு வரலை. இட்ஸ் ஓ.கே” என்கிறார் சரவணப் பெருமாள் சிரிப்புடன். தன் பாட்டுக்கு இப்படி மறைமுகமாய்ப் பாராட்டு, அதுவும் மாமனார் வாயிலிருந்து வரும் என்று ஜானகி எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு நெஞ்சு குளிர்ந்தது. அப்பாவைப் பார்த்தாள். இந்த இடம் கூடி வந்துவிடும் என்பதைப்போல அவர் அனுமானித்து விட்டது தெரிகிறது. அதற்கேற்ற தெம்பு அவர் நாளமெங்கும் புது ரத்தமாய்ப் பாவியிருந்தது. முகத்தில் வெளிச்சம் வந்திருந்தது. இருந்த சந்தோஷத்தில் அவர் அந்தச் சூழலுக்கு சம்பந்தம் இல்லாமல், “எங்க கீதா கூட நன்னாப் பாடுவள்… குட்டிகளுக்கு இது ஏதோ பொழுது போக்கு. எல்லாம் கேள்விஞானம்தான்னு வெய்ங்கோ” என்று பேசியதை யாருமே ரசிக்கவில்லை.
அவர் தன் பேச்சைத் தானே ரசித்தபடி உள்ளே அம்மாவைப் பார்த்தார். “வாயை மூடிண்டிருங்கோ” என்கிறாற்போல உள்ளேயிருந்து அம்மா ஜாடை காட்டியது அவருக்கு ஏமாற்றமாய் இருந்தது.
“இனி கல்யாணம், அதைப் பத்திப் பேசலாம்….” என்கிறார் சரவணப் பெருமாள்.
”அஞ்சு பவுன்… அதுக்குமேல தாளாது…” என்று பஞ்சு ஆரம்பிக்குமுன், ”கல்யாணமே எங்க செலவு. நீங்க குடுத்து இங்க நிறையணும்னு இல்ல… என்னப்பா?” என்கிறான் பாஸ்கர் அப்பாவிடம்.
அப்பா ஒருவிநாடி பார்த்துவிட்டு, தலையாட்டுகிறார்.
“என் தம்பி ஒத்தன் இருக்கான் தென்திருப்பேரைல. அவன்ட்டயும் ஒரு வார்த்தை கலந்துக்கறேன். ஒருவாரத்துல எல்லா விவரமும் பேசி முடிவு பண்ணிடலாம்….” என்கிறார் பஞ்சாட்சரம் உற்சாகமாய்.
பாஸ்கர் எழுந்து கிளம்பினான் மனசில்லாமல். அந்த வீடே சிட்டுக்குருவிகளின் கூடு, என்கிறாற் போல ஒரு பிரமையில் இருந்து அவன் இன்னும் விடுபடவில்லை. சிறு படபடப்பும் மனசை அலைய விடாத கண்டிப்பும், கூடவே ஆசையும்…. ஜானகி. அவளை இன்னுங் கொஞ்சம் சந்தோஷ முகமாய்ப் பார்க்க அவனுக்கு ஆசையாய் இருந்தது. கலகலப்ப்ଡ଼’அ3ய் இரேன் பெண்ணே. அன்றைக்குக் கல்யாண மண்டபத்தில் முற்றிலும் நீயாக முழுவதுமாய் உன் வானத்தில் சிறகு விரித்து சஞ்சாரம் செய்தாயே….. மல்லாக்கு நீச்சல்போல கட்டுத் தளர்ந்து மிதந்தாயே? அந்த ஜானகியாய் இரேன்….. ரொம்ப உரிமையும் அவள் சார்ந்த நெகிழ்ச்சியுமாய் அவன், தன்னைப் பார்த்தே உள்ளூர நகைத்துக் கொண்டான்.
இவர்கள் கிளம்புவதற்குக் காத்திருந்தாற் போல உள்ளே அந்த மூன்று பெண்களின் அதிரடிச் சிரிப்பும் கும்மாளக் கொந்தளிப்பும். மூடிதிறந்த உலை!
மனசில்லாமல் காரில் ஏறி அமர்கிறான் பாஸ்கர்.

பாக்யா டாப் 1 மாதநாவல் இதழில் வெளியானது
தொ ட ர் கிறது

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்