இன்னும் எத்தனை உயிர்கள்? – தேவை ஒரு மனமாற்றம்

pl1


இன்னும் எத்தனை உயிர்கள்? – தேவை ஒரு மனமாற்றம்
 
காதல் – தமிழ் சினிமாவில் , தெருவோர டீக்கடைகளில், தமிழ்க் கவிஞர் மனதில் நன்றாக இடம் பிடித்த ஒன்று. 1930 களில் பாரதியார் கேட்ட கேள்வியைத்தான் நாங்களும் சற்று மாறுபட்ட தோரணையில். கேட்கிறோம் – கவிதையிலும் காவியத்திலும் காதலை ஏற்கும் சமூகம் ஏன் வாழ்க்கையில் காதலை வெறுத்து ஒதுக்குகிறது ? சராசரியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான காதலுக்கே இந்த கதியென்றால் சமூகத்தின் பார்வையில் மாறுப்பட்டு நிற்கும் ஓரினச் சேர்க்கை சார்ந்த இரு பெண்களுக்கு இடையேயான காதலுக்கு என்ன எதிர்காலம்?

சமீபத்தில் மலர், மற்றும் ருக்மணி என்ற இரு பெண்கள் இந்த காதலுக்காக உயிர்களை மாய்த்துக் கொண்டனர். இவர்கள் செய்த குற்றம் என்ன? வயது வந்த இரு பெண்கள் ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கின்றனர். இவர்கள் விருப்பத்திற்கு மீறி நடந்த திருமணத்தில் இருவரின் மனமும் செல்லவில்லை. இவர்கள் தனியாக இல்லை. பெங்களூரைச் சேர்ந்த ஆல்டர்னேட்டிவ் லா பாரம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி இது போன்ற பல பெண்கள் இதே நிலையில்.
 
ஆகஸ்டு 2001இல் ராகினி மற்றும் மஞ்சு என்ற கேரளாவைச் சேர்ந்த இரு பெண்கள் தற்கொலை 2002 அக்டோபர் மாதம் சத்தியில் இரண்டு பெண்கள் தற்கொலை.இவர்கள் எழுதிய கடித்ததில் இறுதி விருப்பம் – ஒன்றாய் தகனம் செய்யப்பட ஒரு வேண்டுகோள்!

நவம்பர் 2002 சுல்தான் பத்தேரியில் இரு பெண்கள் தற்கொலை, இது போன்ற செய்திகளில் பெரும்பாலும் கீழ் அல்லது நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர். மேல் அல்லது மேல் நடுத்தர வர்க்கம்
ஏன் அதிகம் தென்படுவதில்லை என்றால் இவர்களிடம் செய்திகள் பத்திரிகைக்குப் போவதற்கு முன்னர் தடுக்கக்கூடிய பலம் இருக்கிறது.
கொஞ்சம் தோண்டிப்பார்த்தோமேயானால் இங்கும் பல உயிர்கள் மாண்டிருக்கும் – காதல் செய்த ஒரே குற்ற்த்திற்காக.
இன்று இந்தியாவில் பல ஊர்களில் லெஸ்பியன் பெண்களுக்கான பாதுகாப்பு மையங்களும், குழுக்களும் இருக்கின்றன – பெங்களூரில் சங்கமா, டெல்லியில் சங்கினி, கேரளாவில்  சகாயத்ரிகா போன்றவை.
 
2006இல் கேரளாவில் வெளியான ஒரு செய்திக்குறிப்பு. பெங்களூரைச் சேர்ந்த சங்கமா நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ரயில் பயணத்தில்
பயம் மற்றும் கவலை தோய்ந்த முகத்துடன் சென்னைக்குப் பயணித்த இரண்டு பெண்களை சென்னைக்குப் பயணித்த இரு பெண்களை சந்தித்து இருக்கிறார். விசாரித்ததில் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை அந்த பெண்கள். முன்பின் சென்னைக்கு வந்தவர்களும் அல்ல. கடைசியில் தொலைபேசி எண்ணை சங்கமா அட்டையில் எழுதி , ஏதாவது தேவையென்றால் அணுகுமாறு  கொடுத்திருக்கிறார். மற்றும் என்ன நடப்பினும் தற்கொலை ஒரு வழிவகை அல்ல என்று சொல்லி இருக்கிறார். அடுத்த நாள் அந்த பெண்கள் இவர்களை அணுகி இருக்கின்றனர். இரண்டு உயிர்கள் பிழைத்தன.

சென்னையில் மற்றும் தமிழகத்தில் இது போன்றவர்களுக்கு உரிய பலம் அளிக்க , இதுவரை எந்த நிறுவனமும் இல்லை, மையங்களும் இல்லை. சமூகமும் இத்தகைய செய்திகளை காலத்தின் கோலமாக வேடிக்கை பார்த்து நகைக்க வருகிறதே தவிர இந்த உயிர்களை காப்பாற்றியிருக்க முடியுமா என்று எண்ணுவதில்லை. வயது வந்த இருவர் ஒருவரை ஒருவர் விரும்புவதும் சேர்ந்து வாழ எண்ணுவதும் தவறு இல்லை. சமூகத்தின் வெவ்வேறு க்ரூரமான பார்வைகளால் இதுவரை தங்களை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை சில நூறுகள் இருக்கும். சமூகம் எங்களைப் பார்க்கும் பார்வைகள் பலவிதம்

ஒன்று இத்தகைய உணர்ச்சிகள் உடையவர்கள் மனோதத்துவ ரீதியாக பாதிக்கப் பட்டவர்கள் என்ற தவறான கண்ணோட்டம் பரவி உள்ளது.
ஏன் மெத்தப் படித்தவர் மத்தியில் கூட அறிவியல்ரீதியாக இதை அணுகாமல் ஒரு வித அறியாமை மற்றும் பயத்துடனே அணுகும் முறை இருந்து வருகிறது. அல்லது இதெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்த அசிங்கங்கள் என்று ஒரே அடியாகக் கூறிவிடுகின்றனர். இத்தகைய பல கருத்துக்களும், பயங்களுக்கும் மீறி வித்தியாசமான் உணர்ச்சிகள் இருக்கும் இவர்கள் நம்மைப் போல மனிதர்கள், இவ்வுணர்ச்சிகள் மிகவும் இயற்கையானவை என்ற மனமாற்றம் வந்தாலொழிய இது போன்ற சமூகத்தின் பார்வையில் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு இளம் வாழ்வுகள்
பலியான வண்ணம் தான் இருக்கும்.

ஏன் பிரபல தமிழ் நாளிதழ்களில் வரும் ஓரினச்சேர்க்கை குறித்து வரும் செய்திகள் கூட இந்த மனிதாபிமான, உணர்வுக்கு மதிப்பளிக்காமல் பரபரப்புக்காக வெளிவரும், கொலை கொள்ளை போன்ற குற்றங்களைப் பற்றிய செய்திகளைப் போல் தான் வருகிறது. இப்படி ஒவ்வொரு இளம் உயிர்கள் மாய்த்துக்கொள்ளும் போது எங்களைப் போன்ற ஆயிரம் ஆயிரம் மாற்றுப் பாலுணர்ச்சி உடையவர்களின் மனம் கலங்குகிறது.
நாங்களும் மனிதர்கள் தான், மன நோயாளிகள் அல்ல , நீங்கள் பார்ப்பது போல காம வெறியாளர்களும், கொலையாளிகளும் அல்ல என்று கதறுகிறது எங்களது நெஞ்சம்.

கலாச்சாரம், மரபு, என்ற போர்வையில் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? ஆயிரம் ஆண்டுகாலமாக தளைத்துவரும் இந்திய மண்ணில் அடிப்படை மனிதத்தன்மை எங்கே போனது? இந்த சிறிய மனமாற்றம் நம்மிடையே வருவதற்கு முன் இன்னும் எத்தனை உயிர்கள் தங்களை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனக்குமுறலோடு வெளியாகும் கேள்வி தான் எழுகிறது.

கேள்விகள் மற்றும் என்றாவது ஒரு நாள் இத்தகைய மாறுதல் வரும் என்ற நம்பிக்கை தான் எங்கள் கையில். இந்த விடைகளும் மனமாற்றமும் சமூகத்தின் கையில் தான்..கொஞ்சம் எங்களையும் வாழ விடுங்களேன்!!


pl1

pl1