இன்டிஃபாடா –

This entry is part [part not set] of 8 in the series 20000716_Issue

பாலஸ்தீனீய நாடகக்குழு


இஸ்ரேலின் தணிக்கையையும், தொந்தரவுகளையெல்லாம் மீறி, ஜெருசலத்திலுள்ள பாலஸ்தீனிய கலாச்சாரக்குழு ஒன்று, தங்களின் ‘அன்சார் ‘ என்ற நாடகத்தை மேடையேற்ற வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலியச் சிறையில் பாலஸ்தீனர்கள் காட்டும் எதிர்ப்பை இந்நாடகம் தெளிவகவும் உயிர்துடிப்புள்ளவகையிலும் சித்தரிக்கிறது. பாலஸ்தீன பண்பாட்டு மற்றும் கலைக்குழுவுக்காக, அல்-மஸ்ராவால் தயாரிக்கப்பட்ட இந்நாடகம், நகரப் பாலைவனத்தில் கெட்ஸியாட் அருகிலுள்ள அன்சார் 3 சிறைப்பாசறையில் துவங்குகிறது. அன்சார் 3ல் முட்கம்பி வேலியால் சூழப்பட்ட பல கூடாரங்கள் உள்ளன இன்டிஃபாடா (பாலஸ்தீன எழுச்சி) ஆரம்பித்ததிலிருந்து, இஸ்ரேல், இந்தப் பாசறையில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர்வரை அடைத்து வைத்திருந்துள்ளது. எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமலேயே பலரும் இங்கு மாதக் கணக்கில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாடகம், துவக்கம் முதலே அரசின் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டு வந்துள்ளது. நாடகத்தின் ஒத்திகையையும், தயாரிப்பையும் மிகச் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனப் பகுதிகளில் அடிக்கடி ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நாடகம் பற்றிய விமர்சனங்கள் வெளியாவதைக் கூட இஸ்ரேல் அரசு தடை செய்துள்ளது. தேசிய உணர்வுகளைக் கொண்ட எந்தப் பாலஸ்தீன கலாச்சார விஷயத்தையும் ஒடுக்குவது என்பது இஸ்ரேலின் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகும். இன்டிஃபாடாவுக்குப் பிறகு அது மேலும் அதிகரித்துவிட்டது.

‘அன்சார், நாடகத்தை பார்த்தவுடன், இஸ்ரேலிய அரசு இந்நாடகத்தையும், இதுபோன்ற பாலஸ்தீன கலாச்சார விஷயங்களையும் ஏன் ஒடுக்க விரும்புகிறது என்று புரிந்துவிடும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடும், பாலைவனத்தில் சோர்வுடன் உலவும், கம்பிவேலிக்குப் பின்னால் திரியும் பாலஸ்தீன உருவங்கள் என்று இப்படியாக மேடை முழுவதையும் நிறைக்கிறது இந்நாடகம். சில நேரம் சிறைக்கைதிகளை, சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் உட்கார வைக்கிறது. மற்ற நேரங்களில் தங்களின் தற்காலிக கூடாரங்களின் கீழ் கூடி ஒலிபெருக்கியில் சோம்பேறித்தனமாக வந்து கொண்டிருக்கும் ஹீப்ரூ குரல்களை கேலி செய்து தங்களுக்குக் கிடைக்கும் எந்த பொருளையும் எப்படி எதிரிக்கு ஆயுதமாக மாற்றுவது என்பது குறித்து ஆலோசனை செய்கின்றனர்

சுவரில் இஸ்ரேலிய எதிர்ப்பு முழக்கங்களை எழுதியதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்ட ஒரு பாத்திரம் தன்னைப் பிடித்து வைத்திருப்பவரிடமிருந்து ஒரு பேனாவை பிடுங்குகிறார், சக கைதியின் உதவியோடு தன் குடும்பத்துக்கு கடிதம் எழுதுகிறார். இதுதான் படிப்பதிலும், எழுதுவதிலும் அவர் படித்த முதல் பாடம்.

மற்றொரு காட்சியில், பாலஸ்தீன மக்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி வெளியிடுவது ? ஒத்துழையாமையின் மூலமா அல்லது உற்பத்திக் கருவிகளை கைப்பற்றுவதன் மூலமா ? என்ற விவாதம் கைதிகளுக்கிடையே ஏற்படுகிறது. ஒருவன் விவாதிக்கிறான். ‘இன்றைக்கு நீ உயிர்பிழைப்பாயானால் நாளை தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் ‘ மற்றொருவன் மறுக்கிறான் ‘இல்லை, இவ்வளவு நாட்களாக நாம் செய்து வரும் தவறு அதுதான் ‘. இதற்குப்பின் இரண்டு நடிகர்களும் பார்வையாளர்களோடு விவாதிக்கின்றனர், 1988 ஆம் ஆண்டு அன்சாரில் ஆறு மாதங்கள் இருந்த நிடால்–அல்-கதீப் கூறுகிறார் ‘அன்சார் அனுபவம் என்பது பாலஸ்தீனர்களுக்கு ஒருவகை அடிப்படையான விஷயம். நீங்கள் அன்சாருக்குள் நுழைந்தால் நீங்கள் நிச்சயமாக மாற்றப்படுவீர்கள். இதில் சந்தேகமேயில்லை.

அன்சார் பாலஸ்தீனத்தின் மாதிரி வடிவமாக இருக்கிறது. இளைஞர், வயதானவர், படித்தவர் விவசாயி, நகரவாசி, வடக்கில் வாழ்பவர், தெற்கில் வாழ்பவர் எல்லோரையும் காணலாம். அவர்கள் அச்சிறையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் தங்கள் தொழிலைச் செய்கிறார்கள். இது கைதிகளிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. அது வாழ்க்கையின் பொருளைக் கொடுக்கிறது. பாலஸ்தீன மக்கள், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட ஏதாவது ஒரு பலனளிக்கும் காரியத்தைக் கட்டியமைக்கிறார்கள். கல்வியறிவு அற்றவர்கள் படிக்கக்கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பாலஸ்தீன சிறைவாசிகளிடம் ஒரு விதியாகவே உள்ளது. சிறைச்சாலை இன்டிஃபாடா இயக்கத்தின் பல்கலைக் கழகம்

1990 ஆம் ஆண்டு ஜஉன் முதல் ஜெருசலேத்தில் உள்ள எல்ஹகாவிடி தியேட்டரில் ஏறத்தாழ 16 முறை அரங்கேறியப் பிறகு இப்போது அமெரிக்கா வந்துள்ளது இந்த நாடகம்.

நன்றி : Revolutionary Worker

தமிழாக்கம் : அ. ஜ. கான்

இரா. விஜயகுமார்

Series Navigation

பாலஸ்தீனீய நாடகக்குழு

பாலஸ்தீனீய நாடகக்குழு