இன்குலாப் ஜிந்தாபாத் –

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

புதியமாதவி, மும்பைஇன்று (மார்ச் 23) ஒரு மாவீரனின் நினைவுநாள்.
இன்குலாப் ஜிந்தாபாத் என்ற புரட்சியின் குறியீடாக வாழ்ந்தவனின் நாள்.

அவன் வீசிய வெடிகுண்டுகளை விட அவன் முழங்கிய முழக்கங்கள் ஆளும் வர்க்கத்தை அதிகமாக அச்சப்படுத்தியது.

புரட்சி என்பது வெடிகுண்டுகளின் வழிபாடு அல்ல.
“புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனிமனிதர்க்ள்
வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல, புரட்சி
என்பதன் மூலம் வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதுதான்”

“கற்பனாவாத அகிம்சையின் சகாப்தம் முடிந்துவிட்டது. ஒருவர் வலியச் சென்று தாக்குதல் நடத்தும்போது அது வன்முறை ஆகிறது. எனவே அதனை அறநெறிப்படி நியாயப்படுத்த இயலாது. ஆனால் அது சரியான நோக்கத்தை நிறை வேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும்போது அதற்கு அடிப்படை நியாயம் கிடைத்துவிடுகிறது. எக்காரணத்திற்காகவும் வன்முறை கூடாது என்பது கற்பனாவாதாமாகும்” என்று புரட்சிக்கு அகராதி எழுதியவனின் கடைசிநாள்.

அந்த மாவீரன் பகத்சிங்கின் இறுதிமணித்துளிகள் :

சிறை அதிகாரி : உன்னுடைய இறுதி ஆசையைச் சொல், நிறைவேற்றி வைக்கிறோம்.

>நான் மேரியின் கையினால் சாப்பிட விரும்புகிறேன்< சிறை அதிகாரிகள் பகத்சிங்கின் இறுதி ஆசையைச் சொல்லி மேரியை அழைக்கின்றார்கள். அவளோ வர மறுக்கிறாள். மேரி வர மறுத்ததை அவர்கள் பகத்சிங்கிடம் சொல்கிறார்கள். "என்னிடம் நேரில் வந்து மேரியைச் சொல்லச் சொல்லுங்கள்" என்கிறான். மேரி கலங்கிய கண்களுடன் பகத்சிங்கிடன் தன் கைகளை விரித்துக் காட்டி "இந்தக் கைகளால் உங்களுக்கு நான் எப்படி சோறு கொடுப்பேன்? என்று தேம்புகிறாள் ஆம் மேரி சிறையில் பணியாற்றும் கழிவறைகளைச் சுத்திகரிக்கும் பெண். மலங்களை அள்ளி அள்ளி அவள் கைகள் முழுவதும் புண்ணாக இருந்தது. இந்தச் சீழ்பிடித்த கைகளால் எப்படி பகத்சிங்கிற்கு சோறு ஊட்டுவது என்றுதான் மேரி தயங்கினாள். அப்போது பகத்சிங் சொல்கிறான். "மேரி , இந்த தேச விடுதலைக்கு நாங்கள் பாடுபட்டது அரசியல் விடுதலை, பொருளாதர விடுதலைக்கு மட்டுமல்ல. உன்னைப் போன்ற சகோதரிகளின் மலம் அள்ளும் இழிநிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும், அதனால் தான் உன் கையால் உணவு சாப்பிட விரும்பினேன்!" என்றான். சிறை அதிகாரி சத்தார்சிங் சீக்கியர்களின் வழிபாட்டு நூலான 'குத்கா'வைக் கொடுத்து, ஒரு சிறை அதிகாரியாக அல்ல, உன் தந்தையின் ஸ்தானத்திலிருந்து சொல்கிறேன், கடைசி நாட்களில் இந்த நூலைப் படித்து கடவுளை நினைத்துக் கொள்" என்கிறார். பகத்சிங் உரக்கச் சிரித்துவிட்டு அவரிடம் சொல்கிறான்," எனக்கென்று ஒரு சரியான வழி இருக்கிறது. நான் வாழ்க்கை முழுவதும் எப்படிக் கழித்தேனோ அப்படியே மரணத்தையும் தழுவிச் கொள்வதுதான் அது. என்னைச் சிலர் நாத்திகன் என்று ஏளனம் செய்யலாம். உண்மை. ஆனால், பகத்சிங் சாகும் வேளையில் பயந்து நடுக்கத் துவங்கிவிட்டான் என்று தூற்ற மாட்டர்களல்லவா?" என்று பதில் சொல்கிறான். தூக்கிலிடும் நேரம் நெருங்குகிறது பகத்சிங் ஓர் இந்திப்பாடலைப் பாடுகிறான். "மரணத்திற்குப் பின்னும் தாய்நாட்டின் மீதான நேசம் எனது மனதில் தொடர்ந்து இருக்கும். என்னுடைய சடலம் என்னுடைய தாயகத்தின் நறுமணத்தைப் பரப்பிக்கொண்டிருக்கும்" புரட்சியின் பாடல் முடிகிறது. 1931, மார்ச் 23 இரவு 7.33 மணிக்கு பகத்சிங் அவன் தோழர்கள் சுகதேவ் வலது பக்கத்திலும் ராஜகுரு இடது பக்கத்திலும் தூக்குத்தண்டனை உறுதிச் செய்ய வந்திருக்கும் நீதிபதியை நோக்கி இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை எதிர் கொண்டார்கள் என்பதைக் காணக் கொடுத்து வைத்த நீங்கள், உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்தான்" என்கிறான். "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற முழக்கம்.. பகத்சிங் பிறந்த நாள் : 27-09-1907 அவன் பிறந்து நூறாண்டு ஆகப்போகிறது. இருபத்து நான்கு வயதில் தூக்குக்கயிற்றை மணந்தவன். அவன் இறுதியாக தன் இளைய சகோதரன் குல்தார் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், " என் பிரியமான குல்தார்! உன் கண்ணீர்க் கடிதம் கிடைத்தது. உன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொள். நாளைக் காலை முழுகுவர்த்தியிம் ஜோதி மங்குவதைப் போல நானும் விடியல் ஒளியில் கலந்துவிடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் மின்னல் ஒளியைப் போல உலகத்தில் சுடர்விடும். ஒரு கைப்பிடிக்குள் அடங்கக் கூடிய தூசிக்குச் சமமான என் உடல் அழிக்கப்படுவதால் ஏற்படும் நஷ்டம் என்ன? ..... இன்று போய் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம், எண்ணற்ற இந்தத் தேசத்து வீரர்களின் வடிவில்" இன்குலாப் ஜிந்தாபாத்!


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை