இந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

செந்தில்


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மொழி இனங்களின் தொகுதிகளாக அமைந்துள்ள மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுக்க வேண்டும் என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன

. இதற்க்காக சொல்லப்படும் காரணங்கள், மாநிலங்களின் உரிமை பிரதிநித்துவத்தை மைய அரசியலில் அதிகமாக்குதல், மாநில நிர்வாகத்தை சீர்படுத்தல், இந்தியாவின் சில மாவட்டங்களில் மிகுதியாக வசிக்கும் சிறுபாண்மையாக உள்ள பழங்குடி மக்களின் பிரதிநித்துவத்தை மேம்படுத்தல் என பல. ஆனால், இந்த விவாதங்களில் மறைந்து போகிற அல்லது மறக்கடிக்கபடும் உண்மைகள் / கேள்விகள் பல.
மாநிலங்களை வகுப்பது

/பிரிப்பது என்ற அரசியல் கோரிக்கை எல்லா மாநிலங்களுக்கும் பொருத்தமாகாது. இது தேசிய-மொழி அடிப்படையில் அமைந்த மொழிவாரி மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி, மற்றும் பொருளாதார பிரதிநித்துவத்தை பலவீனபடுத்தும் முயற்சி மட்டுமன்றி இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை காரணத்தையே சீர்குலைக்கும் செயலாகும். மொழி அடிப்படையில் எழும் முடியாட்சியோ, அரசோ, அல்லது நிர்வாக கட்டமைப்புகளோ இயல்பாகவே, இயற்கையாகவே எழும் வலுவான கட்டமைப்புகளாகும். மொழி இத்தகைய கட்டமைப்பிற்கு பலமான அடித்தளமாக அமைவதுடன், மொழி அடிப்படையிலான கட்டமைப்பு, அம்மொழி பேசும் மக்களின் பொருளாதார, பண்பாட்டு உயர்வுக்கும், வளங்களின் பங்கீட்டுக்கும், ஆக்க சக்திகளின் வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவுகிறது. உதாரணமாக, தமிழகம் என்ற ஒரு வலுவான பெரிய கட்டமைப்பின்றி தமிழ் பத்திரிக்கை துறையோ, ஊடகங்களோ, சினிமா துறையோ வளர்ந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு

மொழியாலும், மதத்தாலும், இனத்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளாக ‘ஒருமுகத்தண்மை’ அடைய முடியாத இந்திய துணைக்கண்டத்தில் மக்களை மைய அரசுடன் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்திருப்பது “தேசிய மொழி இனங்களின் கூட்டமைப்பு” என்ற அரசியல் அமைப்பு கோட்பாடேயாகும். இதை மறந்து, மொழிவாரி மாநிலங்களை மேலும் வகுப்பது, சில மொழி இனங்களின் அடையாளத்தையே சிதைக்கும் செயலாகும். மொழி அடையாளங்களும் அழிந்த நிலையில், பொருளாதார, இயற்கை, நீர் வளங்களுக்கான தேவைகள் அதிகரிக்கும் போது ஒருமுகத்தண்மையற்ற இந்தியா என்ற கூட்டமைப்பு எளிதில் சிதைந்துவிடும். இந்தியா என்ற அமைப்பு இருக்கும், ஆனால் எதிலும் ஒற்றுமை நிலவாது. இது இந்தியாவை மேலும் பலவீன படுத்தி பின் தள்ளிவிடும்.
இந்த

நோக்கில், தெலுங்கானா மாநிலம் கோரிய போராட்டம் வியப்பை அளிக்கிறது. ஆந்திரா முழுவதும் தெலுங்கு பேசும் மக்களே உள்ள நிலையில், அந்த மாநிலத்தை இரண்டாக பிரிப்பது தேவையற்றது எனலாம். அதற்கு மாற்றாக, ஆந்திர மாநிலத்தையே “தெலுங்கு நாடு” என்றோ, “தெலுங்கானா” என்றோ அழைப்பதுதான் சரியாகும். இதை விடுத்து, தெலுங்கு மொழி பேசும் மக்களை இரண்டு மாநிலங்களாக பிரிப்பது, இம்மாநிலத்தில் மைய அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் ஓங்குவதோடு, இம்மாநில மக்களின் ஒற்றுமையையும், அடையாளத்தையும் சிதைத்து பண்பாட்டு பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.

Series Navigation

செந்தில்

செந்தில்