இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

கே. செல்வப்பெருமாள்


உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின், நாட்டு மக்களின் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், வளர்ச்சி நிலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மொத்தத்தில் மனிதவளம் குறித்த ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டு வெளியிட்டு வருகிறது. சரியான வளர்ச்சி நிலையை எட்ட நாம் எங்கே செல்ல வேண்டியுள்ளது ? என்ற கேள்வியை ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் எழுப்ப இவ்வறிக்கை காலக்கண்ணாடியாக இருக்கிறது.

2005ஆம் ஆண்டுக்கான ‘மனிதவள மேம்பாட்டு அறிக்கை ‘யை ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 7, 2005 அன்று வெளியிட்டது. 177 நாடுகள் உறுப்பினராக உள்ள இவ்வமைப்பில் ஒவ்வொரு நாட்டைப் பற்றிய மதிப்பீடும், தற்போது அந்தந்த நாடுகள் வகிக்கும் இடத்தையும் பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவிற்கு 127வது இடமே கிடைத்துள்ளது. இதிலிருந்தே நம்முடைய நாட்டின் மனிதவளத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம். நமக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இலங்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இனச்சண்டைகள் நடந்து வருவதை நாம் அறிவோம். இருப்பினும் கூட மனிதவளத்தில் நம்மை விட அவர்கள் முன்னிற்கின்றனர்; இலங்கை இப்பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளது.

‘இந்தியா ஒளிர்கிறது ‘ என்று பிரச்சாரம் செய்த அத்வானி, வாஜ்பாய், மோடி வகையறாக்கள் நமக்கு பின்னால் 135வது இடத்தில் பாகிகுதானும், 139வது இடத்தில் வங்காளதேசமும் இருப்பதைக் கண்டு திருப்தியடையலாம். இது அவர்களது அரசியலுக்கு வேண்டுமானால் உதவலாம். ஆரோக்கியமான அரசியலில், மனிதவளத்தை உண்மையிலேயே மேம்படுத்த வேண்டும் என்று பாடுபடுகிற நாட்டு மக்களுக்கு இது உதவாது.

ஓங்காரமாய் ஒலிக்கும் உலகமயம்

உலகமய கொள்கைகளை அமலாக்குவதில் இந்திய நாடு வெற்றி பெற்றுள்ளதையும், மனிதவளத்தில் பின்தங்கியிருப்பதையும் ‘மனிதவள மேம்பாட்டு அறிக்கை ‘ மிகச் சரியாக சுட்டிக் காண்பித்திருக்கிறது. குறிப்பாக, “…உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணி வகிப்பதோடு, உயர் தொழில் நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் பெரும் பங்கை வகிக்கிறது. அத்தோடு, இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் காந்தமாக திகழ்கின்றனர்…” என்று அவ்வறிக்கையின் துவக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், “உலகளாவிய மனிதவள மேம்பாட்டு வளர்ச்சியில், இந்தியா மிகக்குறைந்த கவனத்தையே பெற்றுள்ளது” என மறக்காமல் குட்டியுள்ளது.

உலகமய கொள்கையால் புளங்காகிதம் அடைந்திருக்கும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள், உலக பெரு முதலாளிகளையும், பன்னாட்டு ஏகபோகங்களையும் இந்திய நாட்டில் பண முதலீடு செய்திட சுதந்திரமாக வரவேற்பதும், லாபகரமாக இயங்கும் பொதுத்துறை தொழில்களை, தேசத்தின் கனிவள சொத்தினை விற்பதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது. உலகமயக் கொள்கை உலக முதலாளித்துவ வளர்ச்சிக்கும், உள்நாட்டு பெருமுதலாளி களின் வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படக்கூடிய ஒன்றே என்பதை இடதுசாரிகள் நீண்டகாலமாக கூறி வருவதை நமது மத்திய – மாநில ஆட்சியாளர்கள் காதில் போட்டுக் கொண்டதே இல்லை. இலாபத்தில் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது, உள்நாட்டு தொழில்களை பாதிக்கக்கூடிய தொழில்களில் வெளிநாட்டு பண முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது, குறிப்பாக விவசாயம் போன்ற ஆதாரத் தொழில்களில் நவீன ரக விதை என்ற பெயரில் மான்சாண்டோ போன்ற அந்நியநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதின் மூலம் நமது விவசாயிகள் திவால் ஆவது, இதன் மூலம் மக்கள் வாழ்க்கைத்தரம் அதள, பதாளத்திற்கு செல்லும் என்று கம்யூனிகுட்டுகள் குரலெழுப்பும் போது, சிதம்பரம், மன்மோகன், வாஜ்பாய், மாறன், ஜெயா வகையறாக்களுக்கு எட்டிக்காயாக் கசக்கிறது. அவர்கள் பொருளாதாரம் வளர்ந்தால் செல்வம் தானாக சொட்டு நீர்போல் மக்களிடம் பரவும் என்று நம்புகின்றனர். இந்த மூட நம்பிக்கைக்குத் தான் மனித வள மேம்பாட்டு ஆய்வறிக்கை வேட்டு வைக்கிறது.

வருங்கால மன்னர்களின் இன்றைய நிலை

இந்திய குழந்தைகளின் இன்றைய நிலை குறித்தே! “அறிக்கை மிக முக்கியமாக சுட்டிக்காட்டியுள்ளது. குழந்தை பிறப்பு – இறப்பு விகிதம் மிக கவலையளிப்பதாக உள்ளது; மில்லினிய இலக்கில் இருந்து இந்தியா விலகியிருக்கிறது. இந்தியாவின் தெற்கத்திய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி ஓங்கியிருக்கிறது; ஆனால், 11 குழந்தைகளில் 1 குழந்தை அதன் 5 வயதை எட்டுவதற்குள் இறக்கிறது. இதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைவு, சொற்பத் தொகை அரசின் ஒதுக்கீடு, குறைந்த தொழில் நுட்பம் போன்றவைகளே! மேலும் 4 பெண் குழந்தைகளில் 1 குழந்தைக்கும், 10 ஆண் குழந்தைகளில் 1 ஒரு குழந்தைக்கும் ஆரம்பக் கல்வி கிடைப்பதில்லை. மொத்தத்தில் இந்திய குழந்தைகளில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. பொருளாதாரம் 8 சதவீத வேகத்தில் வளர்வதாக பெருமைப்படுபவர்கள், அந்த வளர்ச்சி குழந்தைகளின் வாழ்விற்கு உதவிடவில்லை என்பதை பார்க்கவே மறுக்கிறார்கள்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று ஓயாது ஒலித்து வருபவர்கள் மக்களின் வலிமை தான் நாட்டின் வளமை என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இந்திய நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர்களது வறிய நிலைக்கு தீர்வு காண்பதில் , வீடின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தான் வளமை இருக்கிறது என்பதையும் உணரவில்லை.

குழந்தை இறப்பு உண்மை நிலை!

“உலகில் குழந்தை இறப்பில் 5வது இடத்தை வகிக்கும் இந்தியாவில், ஆண்டுதோறும் 25 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.” மேலோட்டமாக படிப்பவர் களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கும்! இது சரியாக இருக்குமா என்ற கேள்விகூட எழும்! உண்மை இதுதான்!

சமீபத்தில் பணக்கார மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும் குழந்தை இறப்புச் சம்பவங்களை ‘டெக்கான் கிரானிக்கல், ஃபிரண்ட் லைன் ‘ போன்ற ஒரு சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கக்கூடிய விதர்பா மாவட்டங்களில், குறிப்பாக அமராவதி, நாசிப், தேண், நான்-தர்பர், காச்சிரோலி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஏப்ரல் – ஜூலை, 2005 மாதங்களில் மட்டும் 2675 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த புள்ளி விவரம் கூட மகாராஷ்டிர அரசு கொடுத்ததே.

சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் திரு. கிரண் பதுக்கூர் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் மேற்கண்ட குறிப்பிடப் பட்டுள்ள மூன்று மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் இறந்துள்ளன. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் எந்தவிதமான அக்கறையுமின்றி இருக்கின்றன என்று தொடுத்த வழக்கின் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தவிர 33,000 குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் வம்பி, வயதிற்கேற்ற எடையின்றி சோமாலியாவில் காணுகின்ற எலும்புக்கூடு குழந்தைகளாகவே இருக்கின்றனர். இதில் 16,000 குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருக்கின்றன. இக்குழந்தைகளின் படத்தை காணும் எந்த ஒரு மனித இதயமும் திடுக்கிடாமல் இருக்க முடியாது நம்முடைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களைத் தவிர.

மகாராஷ்டிர அரசு சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின் படியே 1085 குழந்தைகள் முதல் பிறந்தநாளை எட்டுவதற்குள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டன. 1590 குழந்தைகள் 6 வயதைக்கூட எட்டவில்லை.

நம்முடைய தமிழ் பத்திரிகை உலகம் இப்பிரச்சினை குறித்து பெரும் மவுனமே சாதிக்கிறது. பாலியல் உறவு பற்றி யாராவது உளறினால் போதும், அது குறித்து பக்கத்திற்கு பக்கம் வண்ணப்படங்களுடன் விளக்கும் பத்திரிகை உலகம், நம்முடைய இந்திய குழந்தைகளின் சுவாசத்தை நிறுத்தும் அரசு பயங்கரவாதத்தை குறித்து மவுனமே சாதிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கவலையெல்லாம் மும்பை பங்குச் சந்தை சென்செக்கு 8000 புள்ளிகள் உயர்ந்துள்ளதும், அதை கீழே விழாமல் பார்த்துக் கொள்ள காவல் இருப்பதுமே.

மகாராஷ்டிர சம்பவம் ஏதோ திடீரென்று ஒரு மாநிலத்தில் முளைத்த சம்பவமல்ல; கடந்த 5 ஆண்டுகாலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமூக ஆர்வலர்கள் இதற்கெதிராக தொடர்ந்து பல மாநிலங்களில் குரலெழுப்பியும் வருகின்றனர். ஏன் அமெரிக்க ஆதரவு பத்திரிக்கையான ‘டைம் ‘ இதழ் கூட டிசம்பர் 2004இல் இது குறித்து ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் ‘இந்தியாவில் 61,000 மில்லினிய பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் புதியதாக 11,000 பணக்காரர்கள் இப்பட்டியலில் சேர்ந்துள்ளனர். அதே சமயம் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் 30 கோடி பேர் ‘ என சுட்டிக்காட்டியுள்ளது. இதுதான் உலகமய மாக்கலின் உண்மையான வெற்றி! அந்த டைம் பத்திரிக்கை 30 கோடிப்பேரை ஏழை ஆக்காமல் சில ஆயிரம் பேர் பணக்காரர்களாக ஆக முடியாது என்ற சுரண்டல் உறவை மறைத்து, ஏழை, பணக்காரன் ஆவது தனித்தனி நிகழ்வுகள் என சித்தரிக்கிறது என்பதை பார்க்கத் தவறக் கூடாது.

மக்களை ஏழையாக்கும் பொருளாதார வளர்ச்சி கண்டு !

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ!

நாங்கள் சாகவோ!

என்ற பாரதியின் ஆவேசக் கனல் நெஞ்சத்தில் மூளாமலில்லை.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி

மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. “குறிப்பாக கிராமப்புற வேலையின்மை என்பது கடந்த காலத்தை விட தற்போது அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. விவசாய உற்பத்தி என்பது ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. அதே சமயம் விவசாய கூலியில் தேக்க நிலை நிலவுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் “வேலைவாய்ப்பற்ற” வளர்ச்சி நிலவுகிறது. 1980, 1990களில் தேசிய அளவில் ஒரு சதவீத வளர்ச்சி இருந்தால், அது 3 சதவீத வேலைவாய்ப்பை உருவாக்கியது.”

“குறிப்பாக பாலின (ஆண் – பெண்) ஏற்றத்தாழ்வு என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் மாநிலங்களுக்குள் ஏற்றத்தாழ்வு என்பது நிலவுகிறது.” என்று இந்தியாவின் இன்றைய நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005.

நாடு முழுவதிலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதை பல்வேறு ஊடகங்கள் படம் பிடித்து வருகின்றன. அதே போல் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பிழைப்பைத் தேடி விவசாயிகள் இடம் பெயர்வது என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. தமிழக விவசாயிகள் சென்னை நகரை நோக்கியும், வேறு பல ஊர்களுக்கும் புலம் பெயர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய அரசு அமலாக்கிய “கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்” – “வேலைக்கு உணவுத் திட்டம்” தமிழகத்தில் உள்ள நலிந்த விவசாயிகளை பயன்படுத்தி திட்டங்களை அமலாக்காமல், எவ்வாறு இயந்திரங்களை வைத்து அமலாக்கப்பட்டது என்பதையும் நாம் அறிவோம்! ஆட்சியாளர்களின் கவனமெல்லாம் கோடிகளை ஒதுக்கிக் கொள்வதுதானோயொழிய வறுமைக் கோட்டினை ஒழிப்பது அல்ல!

உலகமயமாக்கல் என்ற ஏகாதிபத்திய பொருளாதார கொள்கை ஏழை – எளிய – நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஏமாற்றத்தையும், விரக்தியையும், வேலையின்மையையும் மட்டுமே கொண்டு வந்துள்ளது. இந்திய ஆட்சியாளர்களாலும், நமது மக்களின் வாழ்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியவில்லை. உண்மையில் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு கோடிக்கணக்கான மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதே நிதர்சனம்.

பாலின ஏற்றத்தாழ்வு குறித்து கூறும் அறிக்கை, “ஒரு வயது முதல் ஐந்து வரை உள்ள குழந்தை இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது”

மனிதவளத்தை எவ்வாறு அளக்கிறார்கள் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அளவில் “உயிர் வாழ்தல், கல்வி, வருமானம், சுகாதாரம், சொத்து, வர்த்தகம், அறிவு” என அந்தந்த நாடுகளில் பல்வேறு அமைப்புகள் மேற்கொள்ளும் கருத்தாய்வுகளை வைத்து சர்வதேச தர அடிப்படையில்தான் இந்த மனிதவள மேம்பாட்டு அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்கிறது.

இதன்படி 127வது இடத்தில் உள்ள இந்திய மக்களின் உயிர் வாழ்தல் காலம் 64 ஆண்டுகள் மட்டுமே, அதே சமயம் சோசலிச நாடுகளான கியூபாவில் இது 87 ஆண்டுகளாக உள்ளதோடு, மனிதவள மேம்பாட்டில் 52வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் சீனாவில் 78 ஆண்டுகளாக உள்ளதோடு, மனித வளத்தில் 85வது இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் தொகையில் உலகிலேயே சோசலிச சீனா முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வியட்நாமில் 76 ஆண்டுகளாகவும், மனித வளத்தில் 108வது இடத்திலும் உள்ளது. மனிதவளத்தில் 93வது இடத்தில் உள்ள இலங்கை உயிர் வாழ்தலுக்கு 82 ஆண்டுகளாக உள்ளது.

மேற்கண்ட விவரத்தின் மூலம் இந்திய நாட்டில் மனித உயிர் வாழ்தலுக்கான உத்திரவாதம் என்பது மிக குறைந்த ஆண்டுகளாக உள்ளதை அறிய முடிகிறது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான நிலம், உணவு, வேலை ஆகியவற்றை உத்திரவாதம் செய்வதன் மூலம்தான் மனிதவளத்தை உண்மையிலேயே மேம்படுத்த முடியும். சோசலிச நாடுகளில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

நமது நாட்டில் செல்வந்தர்களை உற்பத்தி செய்வதிலும், அதில் உலக நாடுகளோடு போட்டியிடுவதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. உலக பணக்காரர்கள் குறித்து பட்டியலிடும் “போர்ப்கு” 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 5 இந்தியர்களின் சொத்து மதிப்பு 24.8 பில்லியன் டாலர்கள். (1,24,000 கோடி ரூபாய்) இது பிரிட்டனில் உள்ள 5 கோட்டீகுவரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். அவர்களது சொத்து மதிப்பு 24.2 பில்லியன் டாலர் (1,21,000 கோடி ரூபாய்).

இந்தியா 2020

ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய இந்தியா 2020 புத்தகம் இந்திய நாட்டில் மிக புகழ்பெற்றது. படித்த இளம் தலைமுறையினரிடைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. இதன் விற்பனையும் எக்கச் சக்கம். இதைத் தொடர்ந்து இந்திய அரசும் “விஷன் 2020” என்ற இலக்கை தீர்மானித்து நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. டாக்டர் எகு.பி. குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்திய நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இந்த “விஷன் 2020”. குறிப்பாக வேலையின்மை, வறுமை, எழுத்தறிவு, குழந்தை பிறப்பு – இறப்பு, ஊட்டச்சத்தின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திட்டம்.

உண்மை என்ன ? மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005 இந்திய நாடு அனைத்து விதத்திலும் முன்னேறிய நாடுகளை எட்ட வேண்டும் என்று சொன்னால் இதே வழியில் போனால் குறைந்தபட்சம் இன்னும் 100 ஆண்டுகள் ஆகும் என்று அறிவித்துள்ளது. அதாவது 2106வது ஆண்டில்தான் இந்த இலக்கை எட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசு உருவாக்கிய “விஷன் 2020”-அடைய கூறப்படும் வழி முறையை நாம் விமர்சிக்கும் போது, படித்த மேதாவிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் ஐக்கிய நாட்டு மனிதவள அறிக்கையே இவையெல்லாம் இந்த வழியில் போனால் ‘விஷன் ‘கள் எல்லாம் வெறும் கனவிற்குள் வரும் கனவாகும் என்று குட்டு வைத்துள்ளது.

உண்மையில் நம்நாட்டின் முதலாளித்துவ – நிலபிரபுத்துவ சார்பு அரசியல் கட்சிகளால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசியல் சித்தாந்தவாதிகள் வகுக்கக்கூடிய திட்டங்கள் வெறும் வெற்று ஆரவாரத்தை மட்டுமே மக்களிடம் ஏற்படுத்தும், அத்துடன் அவர்களது வர்க்க நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். உதாரணத்திற்கு, மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005 இல் எந்தவொரு நாட்டின் அடிப்படையான இயற்கை ஆதாரங்கள், எண்ணை மற்றும் கனிவளங்கள் சுரண்டப்படுவதை கடுமையாக எச்சரித்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஒரிஸா மாநில அரசு ஒரிஸாவில் உள்ள இரும்புத் தாதுவை ஆண்டுக்கு 12 மில்லியன் டன் என்ற அளவில் கொள்ளையடித்துக் கொண்டுச் செல்ல “போகுகோ” என்ற தென்கொரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பணக்கார நாடுகள் எதுவும் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாட்டின் மனித வள மேம்பாட்டு அறிக்iகையை உற்று கவனித்தால், ஏழைநாடுகளின் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக சுரண்டுவதில் பணக்கார நாடுகள் அரசியல் ஒற்றுமையுடன் இருப்பதை அந்த அறிக்கை கூறாவிட்டாலும், புள்ளி விபரங்கள் அதனையே உணர்த்துகின்றன. மக்களுக்காக பொருளாதார வளர்ச்சியே தவிர, பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் என்ற சுரண்டல் பார்வையை ஒழித்துக்கட்டவும், இந்திய நாட்டில் உண்மையாகவே மனிதவளத்தை மேம்படுத்தவும் தேவை ஆரோக்கியமான விவாதம் – மாற்றுப் பாதையுடன் கூடிய ஆரோக்கியமான அரசியல். இதுவே நமது இலட்சியமாக அமையட்டும்.

—-

ksperumal@gmail.com

Series Navigation

author

கே. செல்வப்பெருமாள்

கே. செல்வப்பெருமாள்

Similar Posts