இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1, கேள்வி: இட ஒதுக்கீடு குறித்த சட்டங்களை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற யோசனை சரியா ?
பதில் : சரியல்ல. இப்படி சேர்த்த சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. மேலும் நீதிமன்ற பரீசலனை என்பதை அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி சேர்ப்பதை குறித்த மனுக்களை ஏற்று, விசாரித்து, தீர்ப்பளிக்க உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம் என்ற கருத்தினை உச்ச நீதி மன்றம் ஏற்று, பல வழக்குகளில் உறுதி செய்துள்ளது. எனவே ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது என்பது சரியான அணுகுமுறையல்ல. அவ்வாறு சேர்த்தாலும் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியும்

2, கேள்வி : பாராளுமன்றம் ஏகமனதாக அவ்வாறு சேர்க்க முடிவு செய்தாலும் கூடவா ?
பதில் : ஆம், ஏனெனில் பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர உரிமை இருக்கிறது, சட்டம் இயற்ற உரிமை இருக்கிறது, ஆனால் இவையெல்லாம் உச்ச நீதி மன்றத்தினால் ஆய்வு செய்யப்படலாம் என்பதால் முழு முற்றான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே, அதில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது என்ற வாதம் பிழையானது.

கேள்வி: அப்படியானால் உச்ச நீதி மன்றத்தின் அதிகாரம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தினை விட விரிவானதுதானே?
பதில்: அரசியல் சட்டம் பாராளுமன்றம் உச்ச நீதி மன்றத்தினை விட அதிக அதிகாரம் கொண்டது என்றோ, பாராளுமன்றத்தினை விட உச்ச நீதி மன்றம் அதிக அதிகாரம் கொண்டது என்றோ கூறவில்லை. அதனதன் அதிகாரத்தினை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்த போதுமான வரம்பினை அது அளிக்கிறது. சட்டங்கள் செல்லதக்கதன்மை குறித்த இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. இதை அரசியல் சட்டம் வழங்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாட்டின் சட்டங்கள் போன்றவை. எனவே இந்தக் கேள்வியின் அனுமானம் தவறு

3, கேள்வி: இட ஒதுக்கீடு கொள்கை முடிவல்லவா, இதில் நீதிமன்றங்கள் தலையிடலாமா, அது சரியா.?
பதில் : கொள்கை முடிவு எப்படி நிறைவேற்றப்படுகிறது, இந்த கொள்கை முடிவினை எடுக்க அதிகாரம் எங்கிருந்து பெறப்படுகிறது, எந்த அரசியல் சட்டப் பிரிவுகள் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கின்றன. இதைப் புரிந்து கொண்டால் நீதி மன்றங்கள் தலையிடலாமா என்ற கேள்வியே அபத்தம் என்பது புரியும். கொள்கை முடிவு தனி நபர் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் போது பாதிக்கப்படுவர் நீதிமன்றத்தினை நாட முடியும். மேலும் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் அரசியல் சாசனப் பிரிவுகள் அடிப்படை உரிமைகள் குறித்த பிரிவுகளில் துணைப் பிரிவுகளாக இடம் பெற்றுள்ளன. எனவே இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய ஒன்று. ஆகையால் இதில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தவறு என்று சொல்ல முடியாது. அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் இட ஒதுக்கீடு தொடர்பானது,
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளை கட்டுப்படுத்த செய்யப்பட்டது.

4, கேள்வி: அப்படியானால் இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு செய்யலாம், பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு போன்றவைகளைக் கூட நீதிமன்றங்கள் தீர்மானிப்பது சரியாகுமா?
பதில்: ஆம், அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நெறிகள் இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்புகளை வழங்குகிறது. ஒருபுறம் தனி நபர் அடிப்படை உரிமைகள், இன்னொருபுறம் பிற்பட்டோருக்கு போதிய வாய்ப்புகள் – இந்த இரண்டிற்குமிடையே ஒரு சமச்சீரான நிலையை கொண்டுவர உச்ச நீதிமன்றம் விழைகிறது. இதில் ஒன்று இன்னொன்றினை புறந்தள்ளவோ, மறைக்கவோ கூடாது என்று அது கருதுகிறது. அந்த அடிப்படையில் அது இட ஒதுக்கீடு குறித்த சட்டங்கள், விதிகள், கொள்கைகளை பரிசீலிக்கிறது.

5,கேள்வி: பிற்பட்டோரில் முற்பட்டோர் என்ற கருத்து அரசியல் சட்டத்தில் இல்லாத போது அதை நீதிமன்றம் எப்படி வலியுறுத்த முடியும்?
பதில்: நீதிமன்றங்கள் சட்டப்பிரிவுகளை, குறிப்பாக அரசியல் சட்டப் பிரிவுகளை விளக்கும் போது அவற்றை எப்படி அர்த்தப்படுத்துகின்றன என்பது முக்கியம்.அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரை உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் எல்லைகளை தன் தீர்ப்புகள் மூலம் விரிவுபடுத்தியுள்ளது. மிக முக்கியமான உதாரணம் மேனகா காந்தி வழக்கு.அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு விளக்கம் தரும் போது அல்லது அவற்றை அர்த்தப்படுத்தும் போது உச்ச நீதிமன்றம் பல புதிய கருத்துக்களை முன் வைத்துள்ளது. உதாரணமாக தகவல் அறியும் உரிமை வெளிப்படையாக அரசியல் சட்டப் பிரிவுகளில் இல்லை.உச்ச நீதிமன்றம் அதை ஒரு உரிமையாக தன் தீர்ப்புகள் மூலம் அர்த்தப்படுத்தி, நடைமுறைப்படுத்தியுள்ளது. அதே போல் பெண்கள் உரிமைகளை பொருத்தவரை பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து விரிவான ஒரு சட்டம் இல்லாத போது விசாகா வழக்கின் மூலம் உச்சநீதி மன்றம் சில விதிகளை, கோட்பாடுகளை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக விளக்கியது. இது போல் பல உதாரணங்கள் தரலாம்.எனவே அரசியல் சட்டப் பிரிவுகளை அர்த்தப்படுத்தி, நடைமுறைப்படுத்தும் போது தேவையான கருத்துக்களை முன்வைத்து உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. அரசியல் சட்டப்பிரிவுகளை அர்த்தப்படுத்துவது அதன் பணிகளில் ஒன்று.அரசியல் சட்டத்தினை வகுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அதற்கான அதிகாரங்களைத் தந்துள்ளனர்.

6,கேள்வி: அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு எல்லையற்ற அதிகாரம் உள்ளதா?
பதில் : இல்லை, உதாரணமாக அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்ற,குறைக்க, நீக்க அதிகாரம் இல்லை. எனவே பாராளுமன்றத்தின் அதிகார வரம்பினையும் அரசியல் சட்ட ரீதியாகவே புரிந்து கொள்ள வேண்டும். பேராசிரியர் உபேந்திர பாக்ஸி கூறியதை அடியற்றிக் கூறினால் பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அதிகாரம் இருக்கிறது, அரசியல் சட்டத்தினையே மாற்ற அதிகாரம் இல்லை. பாராளுமன்றம் கொண்டு வரும் மாற்றம் சரியானதா என்பதை முடிவு செய்ய வேண்டியது உச்ச நீதி மன்றம்.

7,கேள்வி: இட ஒதுக்கீட்டிற்கு 50% உச்சவரம்பு என்பது தமிழ் நாட்டிற்குப் பொருந்தாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளதே?
பதில்:ஹிந்துவில் வெளியான செய்தி அவ்வாறுதான் கூறுகிறது.இந்த்ரா சஹானி வழக்கில் (Indra Sawhney v. Union of India, 1992 Supp (3) SCC 217) உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு சில சந்தர்ப்பங்களில் 50%க்கு அதிகமாக இருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது. அது பொது விதியல்ல, விதி விலக்கே.ஆனால் அது தமிழ் நாட்டிற்குப் பொருந்தாது.அத்தீர்ப்பு சுட்டிக்காட்டும் நிலையும், தமிழ்நாட்டின் நிலையும் வேறானவை. முஸ்லீம்களுக்கு 5%இட ஒதுக்கீடு செய்வது குறித்த வழக்கில் அவ்வாறு வழங்கப்பட்ட போது மொத்த இட ஒதுக்கீடு (46%+5%) 51% என்றானது.ஆந்திர அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 50%க்கு அதிகமாக இருக்கலாம் என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டி 51% செல்லும் என்று வாதிடப்பட்டது. அதை ஆந்திர உயர்நீதி மன்றம் ஏற்கவில்லை. மேலும் 50%க்கு அதிகமாக இருப்பது ஒரு விதிவிலக்கு, அதுவும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய விதிவிலக்கு. தமிழ் நாட்டின் நிலை வேறு. தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு பல பத்தாண்டுகளாக, 1920களிலிருந்து அமுலில் உள்ளது. அது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு பின்னர் 69% என்றானது. மேலும் தமிழ் நாட்டில் கிரீமி லேயர் கோட்பாடு நடைமுறையில் இல்லை. தமிழக அரசு கொடுத்துள்ள தகவல்களின் படி 69% இட ஒதுக்கீடு தமிழக மக்கள் தொகையில் 88% உள்ள தாழ்த்தப்பட்ட,பழங்குடி மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு தரப்படுகிறது. தமிழக மக்கள் தொகையில் 88% இன்னும் கல்வி மற்றும் சமூக ரீதியாக பின் தங்கி இருக்கிறார்களா, அதுவும் அரசு கிட்டதட்ட 80 ஆண்டுகள் இட ஒதுக்கீட்டினை அமுல் செய்த பிறகும் , இட ஒதுக்கீடு தேவைப்படும் அளவிற்கு கல்வி மற்றும் சமூக ரீதியாக பின் தங்கி இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.கல்வி மற்றும் சமூக வளர்ச்சி குறீயீடுகள்/அளவீடுகளின் படி கிடைக்கும் நிலை வேறு. இவற்றில் தமிழ் நாடு பல மாநிலங்களை விட வெகுவாக முன்னேறியுள்ளது.ஆனால் இன்னும் மக்கள் தொகையில் 88% பேர் கல்வி ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் பின் தங்கியுள்ளனர் என்பது இந்த குறியீடுகள்/ அளவீடுகள் அடிப்படையிலான நிலைக்கு முரணாக உள்ளது.

8,கேள்வி: 50% உச்சவரம்பு என்பதை உச்ச நீதிமன்றம் அண்மைக் காலமாகத்தானே கூறி வருகிறது ?
பதில் : இல்லை, 1963 ல் பாலாஜி வழக்கில் 50% உச்சவரம்பினை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.(M.R. Balaji v. State of Mysore, AIR 1963 SC 649).அதன் பின்னர் பல வழக்குகளில் இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பினைக் குறித்து கூறியிருக்கிறது. இந்த்ரா சகானி வழக்கில் 50% உச்சவரம்பினை நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன் பின் தரப்பட்டுள்ள தீர்ப்புகளிலும் இது கூறப்பட்டுள்ளது.அதே சமயம் எல்லா நீதிபதிகளும் எல்லா தீர்ப்புகளிலும் இதை வலியுறுத்தவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக தாமஸ் வழக்கில் பதவி உயர்வில் 60% இட ஒதுக்கீடு சரியே என்று நீதிபதி கிருஷ்ணய்யர் குறிப்பிட்டார். மிகப் பெரும்பான்மையான தீர்ப்புகள் இட ஒதுக்கீட்டிற்கு ஒரு உச்சவரம்பு தேவை என்பதை ஏற்கின்றன.

9, கேள்வி: பதவி உயர்வில் தலித்,பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதி மன்றத் தீர்ப்பினை குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : இது குறித்து விரிவாக பின்னர் எழுதக்கூடும். இட ஒதுக்கீட்டினை பதவி உயர்வில் உச்ச நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. அது குறித்து சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது.அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கலாம்.வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இத்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுகிறது. எனவே பொத்தாம் பொதுவாக பதவி உயர்வில் தலித்,பழங்குடியினருக்கு 22.5% என்று எல்லா நிலைகளிலும்/பதவிகளிலும் தர முடியாது.போதுமான பிரதிநித்துவம் இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.இப்படி நிபந்தனைகள் இருப்பதால் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டினை ஒரு பொது விதியாக அமுல் செய்வது கடினம். இத்தீர்ப்பினை அரசு அமுல் செய்ய வேண்டுமானால் இப்போதுள்ள விதிகளில் பல மாறுதல்களை கொண்டு வரவேண்டியிருக்கும், இது குறித்து புதிய ஆணைகளை/வழிகாட்டும் விதிகளை இட வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல.

10,கேள்வி: அரசு இத்தீர்ப்பினை ஏற்க மறுத்து அரசியல் சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முடியுமா?
பதில்: கொண்டு வரலாம். அவையும் நீதிமன்றத்தின் பரீசீலனைக்கு உட்படுத்தப்படலாம். இப்படி ஒரு விஷயத்திற்கு எத்தனை முறைதான் நீதிமன்றத்தினை அணுகுவது, எத்தனை முறைதான் அரசியல் சட்டத்தினை திருத்துவது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிட்டதட்ட 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதை ஆராய்ந்து தேவையான மாற்றங்களை கொண்டு வரலாம். அத்தகைய இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவோரின் கருத்துக்களையும், நலன்களையும் கருத்தில் கொண்டு கருத்தொற்றுமை ஏற்படுத்த அரசு முயலலாம். அதன் அடிப்படையில் சுமுகத் தீர்வு காண முடியும். அரசியல் சட்டத் திருத்தம் என்பதற்கு வரையரையே இல்லாமல் ஒரு கேலிக் கூத்தாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை. எனவே 100 திருத்தங்களைக் கூட அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் செய்ய தயங்க மாட்டா. எனவே திருத்தங்கள், வழக்குகள்,தீர்ப்புகள் என்று சக்கரம் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.


ravisrinivas@rediffmail.com

Series Navigation