இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

குழலி


இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர், இதை தற்போது அறிவுசீவிகளான ‘சோ’ ராமசாமியும், மலர்மன்னனும் மற்றும் பலரும் ஊடகத்தில் பரப்பியும் வருகின்றனர்.
ஒரு தலைமுறைக்கு 33 ஆண்டுகள், இட ஒதுக்கீடு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றது, சரியாக சொல்லப்போனால் முதல் தலைமுறையில் அதன் பலன் தெரியவில்லை, ஏனெனில் தொழிற் கல்விகளுக்கான(professional courses) (உதாரணம் பொறியியல்,மருத்துவம்,சட்டம் மற்ற கல்விகள்) அடிப்படை தகுதிகள் பெறும் அளவிற்கு கூட அந்த கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, மேலும் தொழிற்கல்விகள் படிக்க முனைந்தவர்கள் மிக மிகக்குறைவே, மேலும் அன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தொழிற்கல்வி கல்லூரிகள் இருந்தன, மேலும் SSLC, PUC முடித்தவுடன் அரசாங்கம் அளித்த கடைநிலை ஊழியர்கள், எழுத்தர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர்கள் என்று தான் அவர்களால் செல்லமுடிந்ததே தவிர பெரும் எண்ணிக்கையில் அவர்களால் முன்னேற முடியவில்லை, ஆதலால் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இட ஒதுக்கீட்டினால் பெரிய பலன் அடையவில்லை.
இரண்டாம் தலைமுறை, அதாவது எண்பதுகளின் இறுதியில் தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற்கல்லூரிகளினுள் அடியெடுத்து வைத்தனர்,
கிட்டத்தட்ட கடந்த பதினைந்து பதினாறு ஆண்டுகளாகத்தான் இடஒதுக்கீடு அதன் பலனை தந்து கொண்டிருக்கின்றது அதுவும் தமிழ்நாட்டில்தான் நல்ல பலன் கொடுத்துள்ளது, இட ஒதுக்கீட்டை அனுபவித்துள்ள இந்த தலை முறையின் சந்ததிகள் இன்னமும் கல்லூரி நிலையை எட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே… அதற்குள் தலைமுறை தலைமுறையாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சாரரே இட ஒதுக்கீட்டை பயன் படுத்துகின்றனர் என்பது எத்தனை அப்பட்டமான பொய் என்பது எளிதாக விளங்கும்.
எழுபதுகளில் தொழில்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் பயனுற்றவர்கள் மிக மிக குறைவே அவர்களின் சந்ததிகளின் எண்ணிக்கையும் விழுக்காடு அளவில் மிகக்குறைவே என்பது கண்கூடு, இருந்தாலும் இப்படி ஒரு பொய் பிரச்சாரம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகின்றது, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் தேவை ஆனால் அதன் தேவை இன்றே என்ற அளவில் இல்லை,
தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பது அப்பட்டமான பொய் பிரச்சாரம், இட ஒதுக்கீட்டை பயன்படுத்திய/பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற முதல் தலைமுறை தான் இப்போது உள்ளது.
தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்று கவலைப்படும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அதன் காரணத்தால் இட ஒதுக்கீட்டையே நிறுத்த சொல்வது வினோதமான ஒன்று, இட ஒதுக்கீட்டை எதிர்த்து கருத்து தளத்தில் பேசுவதற்கு அவர்களுக்கு நியாயங்கள் கிடைக்காததனால் பொய்யான விடயங்களை ஊடகங்களில் பரப்பியும், இடஒதுக்கீட்டை நகைச்சுவை என்ற பெயரில் நக்கல் அடித்தும் வருகின்றனர், அவர்கள் நக்கல் அடிப்பது இடஒதுக்கீட்டை மட்டும் அல்ல, அம்மக்களையும் சேர்த்துதான்.
———————————————
kuzhali140277@yahoo.com

Series Navigation