இசை விழா 2004 – I

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

லலிதா ராம்


77 வருடங்களாய் நடந்து வரும் ம்யூசிக் அகாடமி கச்சேரிகள் இந்த வருடம் நடக்குமா நடக்காதா என்று குழுப்பம் பல நாள் நீடித்து வந்தது. நிச்சயம் நடக்காது என்று பல பத்திரிகைகள் முடிவு கட்டி தெவச மந்திரங்கள் ஓதின. ஒரு கச்சேரிக்கு 2 மணி நேரமே அவகாசம் அளிக்கும் அகாடமி கச்சேரிகளில் எனக்கு அத்தனை விருப்பமில்லை. இருப்பினும், பெரம்பூரில் இருக்கும் நான், மயிலாப்பூரில் உள்ள எந்த சபாவுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் ம்யூசிக் அகாடமியைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஒவ்வொரு டிசம்பரிலும், ம்யூசிக் அகாடமியைக் கடக்கும் பொழுது, அதன் வளாகம் முழுவதும் ஜன சமுத்திரமாய், கண்கொள்ளா காட்சியாய் இருக்கும். (கூட்டம் இசைக்கா கேண்டானுக்கா என்பதெல்லாம் வேறு விஷயம்). நேற்று மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்-க்குச் செல்லும் பொழுது, டி.டி.கே சாலையும், ராதாகிருஷ்ணன் சாலையும் சேரும் இடத்தில் சிக்னல் சிகப்பாய் மாறி என் பயணத்தை சற்று நிறுத்தி வைத்தது. அந்த இடத்தில் நின்று ம்யூசிக் அகாடமியைப் பார்த்தேன். வளாகமே வெறிச்சோடி களையிழந்து காட்சியளித்தது. என்னதான் அரசியல் என்றாலும் கச்சேரி நடக்காமல் போகுமளவிற்கா என்றெண்ணியவாறே, ஒரு இனம் தெரியாத சோகவுணர்வுடன், வாகனத்தை முசிறி சுப்ரமண்ய ஐயர் சாலைக்குச் செலுத்தினேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஈ.காயத்ரி தர்மவதி ராகத்தை இழைத்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு புண்ணியவான் ஒரு கத்தை பேப்பரை விநியோகம் செய்ய ஆரம்பித்தார். ஒவ்வொரு வரிசையிலும் வலப்பக்க முனையில் அமர்ந்திருப்பவரிடம் 20-25 பேப்பரைக் கொடுத்து ‘pass ‘ செய்யச் சொன்னார். நம்மவர்கள் அதை அமைதியாகச் செய்வார்களா என்ன ? மொட மொடப்பான பேப்பர் நமது ரசிகர்களின் கையில் அகப்பட்டு சலசல வென்று கதற ஆரம்பித்துவிட்டது. இது என்னடா கச்சேரி கேட்க இடைஞ்சலாய் என்று பேப்பரைப் பார்த்தால், www.kutcheribuzz.com எல்லா வருடமும் அற்புதமாய் செய்வதுபோல், இந்த வருடமும் இசை விழாவைப் பற்றி வெளியிடும் ‘daily update ‘ பேப்பரைத்தான் இப்படி விநியோகித்திருக்கிறார்கள். சென்ற வருடம் இதை கச்சேரி ஆரம்பிக்கும் முன்பே சபை வாசலில் விநியோகம் செய்தார்கள். இந்த வருடம் என்ன் ஆயிற்றொ தெரியவில்லை.

ஏற்கெனவே அரங்கில் சுமாரான sound system, அதிலும் கடைசி வரிசைக்கு அருகில் உட்கார்ந்தால், கல்யாணியில் சுத்த மத்யமத்தைக் கலந்தாற் போல் காதில் விழும் வாகன இரைச்சல் வேறு, இதெல்லாம் போதாதென்று அரங்கினுள்ளும் தொந்தரவா என்று பற்றிக் கொண்டு வந்தது. அப்பொழுது, என் அருகில் அமர்ந்திருந்தவர் கையில் ‘sangeetha kalaanidhi for Vellore Ramabadhran ‘ என்ற கொட்டை எழுத்து வரி கண்ணில் பட்டது. ம்யூசிக் அகாடமியில் கச்சேரியில்லாமல், விருது மாத்திரம் எப்படிக் கொடுப்பார்கள், இந்த செய்தி உண்மையா பொய்யா என்றறிய கை பரபரத்தது. காயத்ரியாவது வீணையாவது தர்மவதியாவது, முதலில் பேப்பரைப் பார்ப்போம் என்று முண்டியடித்துக் கொண்டு நானும் ஒரு பிரதியை வாங்கிக் கொண்டேன். டிசம்பர் 19-ஆம் தேதி முதல் அகாடமியில் கச்சேரிகள் தொடர்ந்து, ஜனவரி 4-ஆம் தேதி வரை நடை பெறும் என்ற செய்தி எனைப் பார்த்துச் சிரித்தது.செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது என்றெல்லாம் சொல்வதற்கில்லை, ஆனால் நிச்சயம் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்தது.

வேலூர் ராமபத்ரன் ஒரு சீனியர் வித்வான். மதுரை மணி ஐயர் காலத்திலிருந்து இன்றைய இளம் வித்வான்கள் வரை அனைவருக்கும் வாசித்தவர். பாடகருக்கு இடைஞ்சல் இல்லாமல், தன்னுடைய கோபங்களையெல்லாம் மிருதங்கத்தின் மேல் காட்டாமல், சர்வலகுவாய் வாசித்து கேட்பவர் காதில் குளுமையேற்றுவதில் வல்லவர். மதுரை மணி ஐயருக்கு இவர் வாசித்த கச்சேரிகளில் இருக்கும் செளக்கியம் அலாதியானது. இந்த வருட சங்கீத கலாநிதி ஒரு பழுத்த (சீனியரான-ன்னு எத்தனை தடவை சொல்றதாம்!) ம்ருதங்க வித்வானுக்குக் கிடைத்தது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.

வேறென்ன ? தாரணி வருடம், மார்கழி மூன்றாம் நாள், சுபயோக சுபதினமான இன்று சங்கீத உலகுக்கு சந்தோஷமளிக்கக் கூடிய நல்ல செய்தியுடன் இந்தப் பதிவைத் தொடங்கியாயிற்று. இனி, நிதமும் நான் செல்லும் கச்சேரிகளைப் பற்றிய பதிவுகள் (என் சோம்பேறித்தனம் தடுக்காவிடில்) தொடரும்.

17/12/2004, Mylaopre Fine arts, 4.00 P.M

—-

சென்ற வருட டிசம்பரில் ஆசையாசயாய் எனக்கு விருப்பமான பாடகர்கள் கச்சேரிகளுக்குச் சென்றதில் மிஞ்சியது ஏமாற்றம்தான். பாதி கச்சேரிக்கு மேல் பாடகர் தொண்டையால் ரத்தானது. மீதி கச்சேரியெல்லாம் இருமல், செருமல், கமறலுடன் கலந்து வந்த சங்கீதம் அத்தனை ரசிக்கும்படியாக இல்லை. இந்த வருடமாவது, கேட்கும் முதல் கச்சேரி களைகட்டட்டும் என்று, பாடகர்கள் தொண்டையை எல்லாம் நம்பாமல், ‘வாத்தியங்களுக்குச் சளி பிடிக்காது ‘ என்ற தைரியத்தில், வீணை காயத்ரியின் கச்சேரிக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

அதே அரங்கில் 3.00 மணிக்கு பாலக்காடு ராம்பிரசாதின் கச்சேரியும் இருந்தது. சாய்ங்காலம் 3.30 மணிக்கு மேல் வீட்டில் இருப்பு கொள்ளாததால், 4.00 மணிக்கே அரங்குக்குச் சென்றுவிட்டேன். அப்பொழுது ‘ஸ்ரீ சுக்கிர பகவந்தம் ‘ என்று கண்ட அடை தாளத்தில் பொழிந்து ரசிகர்களை (3.00 மணி கச்சேரி, அதுவும் வாரயிறுதி இல்லாத நாளில், எவ்வளவு பேர் இருந்து விடப்போகிறார்கள் ?) கொண்டிருந்தார் ராம்பிரசாத். ‘உனக்கு இந்த வருடம் சுக்கிரதிசைதான், நீ கேட்கப் போகும் கச்சேரியெல்லாம் அற்புதமாய் அமையப்போகிறது ‘ என்று உணர்த்தும் வகையில் அப்பாடல் அமைந்ததாய் ஒரு மனப்பிராந்தி. ‘பிராந்தி ‘ என்றால் சிறிது நேரத்தில் தெளிந்துதானே போகும் ? ராம்பிரசாத் கல்யாணியை ஆலாபனை செய்ய ஆரம்பித்ததும் என் மனப்பிராந்தி எல்லாம் தெளிந்தது. கல்யாணியை பாட ஆரம்பித்த ராம்பிரசாதுக்கு அப்படி என்ன அவசரமோ தெரியவில்லை, புள்ளி வைத்து, கோடு போட்டு, இழை இழையாய் இழைத்து, வர்ணம் பூசு, காவி மொழுகி விஸ்தாரமாய் வளர்க்க வேண்டிய மார்கழிக் கோலத்தை, அவசர அவசரமாய் கார்டூனில் 4-5 கோடுகளில் காட்டுவது போல பாடிக் கொண்டிருந்தார். உச்சஸ்தாயியில் பாடும் பொழுதெல்லாம் ஒருவித சிரமத்துடன் பாடிய உணர்வு ஏற்பட்டது. அவர் modulaton-க்காக volume-ஐக் குறைத்துப் பாடுகிறாரா அல்லது அவரது குரலே உச்சஸ்தாயி ரிஷபத்துக்கு மேல் அப்படித்தானா என்று தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனமுட்டும் பிருகா மழை பொழிய ப்ரம்ம ப்ரயத்தனம் செய்தார், தொண்டை கேட்டால்தானே. வெண்கல கலசத்தில் வெள்ளி நாணயங்களை இட்டு கலகலவெனச் சத்தம் எழுப்பினால் விழும் ஓசை போலிருக்க வேண்டிய பிருகா எல்லாம் தேசல் தேசலாய் விழுந்து வாட்டியது. கொஞ்சம் கொஞ்சமாய் கல்யாணியிலிருந்து விலகி என் மனம் அரங்கைப் பார்க்க ஆரம்பித்தது. 53 வருஷமாய் இருந்து வரும் இந்த சபைக்கு 7-8 வருடமாய் நான் சென்று வருகிறேன். இத்தனை வருஷத்தில் ஒரு மாறுதலும் இல்லை. (ரோட்டில் போகும் வாகன இரைச்ச்லைத் தடுக்கவாவது ஏதாவது செய்யலாம், எந்த மஹானுபாவராவது டொனேஷன் கூடிய சீக்கிரம் கொடுக்க வேண்டிக்கொள்வோம்). மத்தியான கச்சேரிகளில் சைகரியம் என்னவெனில் கைகளை வீசி வீசி தாளம் போடலாம், ஜனவர் 1-ஆம் தேதி யேசுதாஸ் கச்சேரியில் கையைத் தூக்கினாலே யார் கண்ணிலாவது குத்தும், அந்த அளவிற்கு கூட்டம் அம்மும். அரங்கெங்கும் co-sposnsor-ஆன RMKV புடவைகளின் பேனர் தொங்குகிறது. மேடைமேல் பரிதாபமாய் 53-ஆம் வருட கலை நிகழ்ச்சியை என்கிற (பழைய) பேனர் தொங்குகிறது. பழைய பேனர் என்றால் முற்றிலும் பழசுஎன்று சொல்ல முடியாது. பேனர் துணி பழையது, அதில் எழுதப்பட்ட எழுத்துக்களில் 95% எழுத்துக்கள் பழையது, 53-இல் இருக்கும் ‘3 ‘ மாத்திரம் புத்தம் புதிய காப்பியய், மற்ற எழுத்துக்களைவிடத் தெளிவாய், ‘நான் போன வருஷ பேனர் ‘ என்று அறிவித்தவண்ணம் இளிக்கிறது. இவ்வாறு நாம் சுற்றுச் சுழலில் திளைத்திருக்கையில், இன்னும் ஆலாபனையைத் தொடர்ந்தால் கெட்டது குடி என்றி நினைத்தாரோ என்னமோ, சட்டென்று திகஷதரின் ‘கமலாம்பா பஜரே ‘ கீர்த்தனையை எடுத்துக் கொண்டார்.

இரண்டு களை ஆதி தாளத்தில் கீர்த்தனை வெகு ஜோராய் ஆரம்பித்தது, பல்லவியில் பல சங்கதிகள் பாடி ஒவ்வொரு முறையும் ‘பஜரே ‘ என்னும் பொழுது மிருதங்க வித்வான் ‘கும்பகோணம் ராமகிருஷ்ணன் ‘ என்று நினைக்கிறேன், தவறெனில் மன்னித்தருளவும்) கொடுத்த flourish வெகு அற்புதம். கீர்த்தனையை அழகாகப் பாடிவிட்டு ‘நித்ய கல்யாணீம் காத்யாயனீம் ‘ என்ற வரியை நிரவலுக்கு எடுத்துக் கொண்டார் ராம்பிரசாத். தார ஸ்தாயியில் அமைந்த வரியை எடுத்துக் கொண்டு அந்த ஸ்தாயியிலேயே பாடிக் கொண்டிருந்தார், கீழே வருவார் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ‘வருவேனா பார் ‘ என்று கல்பனை ஸ்வரங்களில் இறங்கி விட்டார். 2-3 ரவுண்டு முதல் காலத்தில் பாடிவிட்டு இரண்டாம் காலத்துக்குத் தாவினார். நன்றாகப் போய் கொண்டிருந்த ஸ்வரப்ரஸ்தாரம் யாரும் எதிர்பாராத வண்ணம் முடிந்தும்விட்டது. அதனைத் தொடர்ந்து வந்த தனி ஆவர்த்தனத்தில் மிருதங்கக்காரரும் கடவித்வானும் விறுவிறுப்பாக வாசித்தார்கள். ராம்ப்ரசாத் நிரவல் பாடும்பொழுது, ‘நித்ய கல்யாணீம் ‘ சமத்தில் ஆரம்பிக்கிறதா அல்லது இடத்தில் ஆரம்பிக்கிறதா என்பது குழப்பமாகவே இருந்தது, தனி ஆவர்த்தனத்தில் அந்த குழப்பமெல்லாம் இல்லாம் இல்லை. நிறைய scope இருக்கும் இரண்டு களை ஆதி தாளத்தில் செளக்கியமாக வாசித்தனர். தனி ஆவர்த்தனம் முடிந்ததும் கொஞ்சம் துக்கடாவாவது பாடுவார் என்று பார்த்தால், ‘கா வா வா ‘ மட்டும் பாடிவிட்டு மங்களம் கூடப் பாடாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார்.

அவசரத்தை தவிர்த்து, கச்சேரிக்கு முன்னால், என்னென்ன பாடலாம் என்றெல்லாம் நன்காராய்ந்து, நல்ல கலவையில் ஒரு list தயாரித்து வைத்துக் கொண்டால் இவரது கச்சேரி நிச்சயம் சோபிக்கும். அடுத்த சீஸன் பார்க்கலாம்!

Mylapore Fine Arts, 17/12/2004, 6.00 PM

—-

சபா கேண்டானில் நெய் வழியும் அசோகா அல்வாவை (ஏதோ பளபளப்பாய் பிசுபிசு வென்று இருந்தது, அதை நெய் என்று நினைத்துக் கொள்வதில்தான் என்ன முழிகிவிடப் போகிறது) ஒரு பிடி பிடித்துவிட்டு, கச்சேரி ஆரம்பிக்க அரை மணி இருந்ததால், அங்கிருந்த ஸ்டால்களில் மேய்ந்தேன். சமுத்ரா என்றொரு பத்திரிகை ஸ்டால், (பெரும்பாலும்) போன வருஷம் இருந்த அதே புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். காசெட் ஸ்டல்களில், எம்.எஸ்-இன் ஒலிநாடாக்களுக்காக தனி டேபிள். 3-4 வருடங்களாய் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது. டிசம்பரில் நடக்கும் பல நூறு கச்சேரிகளில், பிரபல கலைஞர்களின் ஒரு கச்சேரியாவது ஒலிநாடாவாகவோ, சி.டி-யாகவோ வெளிவருகிறது. டி.எம்.கிருஷ்ணா, சஞ்சய், உன்னிகிருஷ்ணன், அருணா சாய்ராம் போன்றோரின் ‘live concert cassettes/CDs ‘-ஐப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. போன தலைமுறை பாடகர்கள் பாடிய விதத்தைப் பற்றி கேள்விப்படதான் முடிகிறதே தவிர, அவர்கள் எப்படி பாடினார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு சில ரெக்கார்டிங்குகளே நமக்கு கிடைக்கிறது. ஜி.என்.பி 10 நிமிடத்தில் பாடிய வாசுதேவயனி ரெக்கார்ட், அந்த காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது. ஆனால், அவர் கச்சேரியில் எத்தனையோ முறை அந்த பாடலைப் பாடியிருக்கிறார் என்பதை கேள்விப்படத்தான் முடிகிறதே தவிர அப்பாடலைல் கேட்க முடிவதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்! சரியாக ஆறு மணிக்கு ‘டாண் ‘ என்று ராகமாலிகை வர்ணத்துடன் வீணை காயத்ரியின் கச்சேரி ஆரம்பமானது. ‘மணிரங்கு ‘ – பிரபலமாகாத அழகிய ராகம். மத்யமாவதியின் நெருங்கின உறவினன்(ள் ?), அதை 2-நிமிடத்தில் ஒரு sketch காட்டிவிட்டு, ‘பரதேவதே ‘ என்ற பாபநாசம் சிவனின் கீர்த்தனையை வாசித்தார். கச்சேரிகளில் ‘களை கட்டுதல் ‘ என்று ஒன்று இருக்கிறது. ‘களை கட்டுதல் ‘ என்றால் என்னவென்று கேட்டால், அதை வர்ணிப்பது கடினம். ஆனால் ஒரு கச்சேரியை எப்படி களை கட்ட வைப்பது என்று கேட்டால், அதற்கான விடை ரொம்ப சுலபம். தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளில் ஒன்றை வாசித்தால் போதும், கச்சேரி நிச்சயம் களை கட்டிவிடும். விறுவிறுப்பு என்பது வேறு வேகம் என்பது வேறு. ஒரு கச்சேரி களை கட்ட வேகம் தேவையில்லை, விறுவிறுப்பே தேவ. காயத்ரி, பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான ‘சாதின்சனே ‘ என்ற ஆரபி ராகக் கிருதியைக் விறுவிறுப்பாக வாசித்தார்.

தர்மவதி ஒரு இனம் தெரியாத சோகம் கலந்த ராகம். அதை sub-main-ஆக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். முதலில் நிறுத்தி நிதானமாக இழத்து, குழைத்து ஆலாபனை செய்தும், பிறகு மின்னல் வேகத்தில் சில பிரயோகங்கள் வாசித்தும் ராக செளந்தர்யத்தை அழகாக வெளீப்படுத்தினார். ஆலாபனையைத் தொடர்ந்து தீக்ஷதரின் ‘பரந்தாமவதி ‘ என்ற பாடலை எடுத்துக் கொண்டார். தீக்ஷதர் ஒரு வைணிகர். அவர் அமைத்த கிருதியை வீணையில் கேட்க எப்படியிருக்கும் என்று சொல்லவா வேண்டும் ? கீர்த்தனையும் அதைத் தொடர்ந்து வந்த கல்பனை ஸ்வரங்களும், ஒரு இனிய மாலைப் பொழுதில் மழை விட்டு, லேசான தூறல் மட்டும் இருக்கும் வேளையில், குளிரும் வெய்யிலும் கலந்து எழுப்பும் ஒரு ஏகாந்த உணர்வை ஏற்படுத்தின.

ஒரு mood-ஐ உருவாக்கினால் போதுமா ? அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் ? மேற்கூறிய உணர்வை வெளிப்படுத்த ரீதிகைளையை விட எந்த ராகம் பொருந்தும் ? அந்த ரக்தி ராகத்தை இழைத்து இழைத்து, ‘ஜனனி நினுவினா ‘-வை உருவாக்கியிருக்கிறார் சுப்பராய சாஸ்திரி. அந்தப் பாடலை அதி-விளம்ப காலத்தில் கேட்கக் கேட்கத் திகட்டா வண்ணம் வாசித்து ரசிகர்களை பரவசமடையச் செய்தார். கச்சேறி களை கட்டி, mood-உம் உருவாக்கியாகிவிட்டது, பிறகென்ன ? main-ஐ எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே ?

இந்திய இசையின் தனிச்சிறப்பே கமகங்கள்தான். குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டுவது போல, ஸ்வரங்களை அசைக்கும் பொழுது பிறக்கும் இனிய நாதங்களே இந்த கமகங்கள். கமகங்களை வெளிப்படுத்த வீணையைவிட சிறந்த வாத்தியம் ஏதுமில்லை. கமகம் என்பதை விளக்க தோடியின் காந்தாரம் ஒன்றே போதும். வீணையும் சுகம், தோடியும் சுகம், கமகமும் சுகம். மூன்றும் கலந்தால் ? புலிக்குப் பூனையா பிறக்கும் ?

காயத்ரி வாசித்த தோடி ஆலாபனையை குடந்தை நாகேஸ்வரன் கோயிலில் கொலுவிருக்கும் பெண்களுக்கிணையாகச் சொல்லலாம். அந்த சிற்பங்களில் இருக்கும் நுணுக்கமெல்லாம் தோடியில் கலந்தளித்தார். ஆலாபனை, நிரவல், ஸ்வரம் போல தானம் என்றொரு ஐட்டம் உண்டு. ‘ஆ- நன் – தம் ‘ என்ற ஒலிகளைப் பிரதானமாகக் கொண்டு வரும் இந்த semi-rhythamic-syllables, நமது இசையின் மற்றொரு தனிச்சிறப்பு. இன்றைய நிலையில், ராகம் விஸ்தாரமாகப் பலர் பாடுகிறார்கள். பலர் நிரடலான தாள அமைப்பில் பல்லவி பாடுகிறார்கள். பலர் அற்புதமாய் ஸ்வரம் பாடுகிறார்கள். ஆனால் இந்த தானம் மாத்திரம் பிரதானமாக அவர்களுக்கு ஏனோ படுவதில்லை. தானம் is at its best when you play it with a stringed instrument, in particular, the veeNaa. தோடி ஆலாபனைக்குப் பின் விஸ்தாரமான தானம் அரங்கை நிரப்பியது. தூறலாய் ஆரம்பித்து, வெள்ளப் பெருக்காய் விரிவடைந்து, தோடி, பூர்வி கல்யாணி, காபி, சாரமதி, கானடா என்று ராகமாலிகையாய் மலர்ந்து ரசிகர்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது அந்தத் தானம். தானத்தை தொடர்ந்து கீர்த்தனை ஆரம்பமாகியது. தோடியில் எவ்வளவோ கீர்த்தனைகள் இருக்கின்றன. தியாகராஜர் மாத்திரம் 30-க்கு மேல் தோடியில் பாடலமைத்துள்ளார். இதையெல்லாம் மீறி ஏதோ ஒரு அபூர்வ தோடி கிருதியை எடுத்துக் கொண்டார். அபூர்வம் என்பதற்காக அழகிலாமல் போய்விடவில்லை. இரண்டு களை ஆதி தாளத்தில், 3/4 இடம் எடுப்பில் அமைந்த பாடல் நன்றாகவே இருந்தது.

கச்சேரி முழுவதும் பக்கபலமாய் வாசித்து வந்த மாதிரிமங்கலம் ஸ்வாமிநாதன், தனி ஆவர்த்தனத்துக்கு வாய்ப்பு வந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் போலும். என்ன கோபமோ தெரியவிலை, வேகமாய் வாசிக்கிறேன் பேர்வழியென்று அடித்து நொறுக்கிவிட்டார். மிருதங்கம் வாயிருந்தால்தான் அழுமா என்ன ? வாயில்லாமலே அழுததை நேற்று காண/கேட்க முடிந்தது. இது வரையில் பெண் கட வித்வானைக் கண்டதில்லை. நேற்று சுகன்யா ராம்கோபால்தான் நன் பார்த்த முதல் பெண் கட வித்வான். மிருதங்கக்காஅரைப் பார்த்து வேகத்தில் மோகம் கொள்ளாமல் ஒளக்கியமான காலப்பிரமாணத்தில் அழகாக வாசித்தார். தனி ஆவர்த்தன்ம் சிறிது நேரம் கண்ட கதியில் மாறி பின்பு சதுஸ்ரத்துக்கு வந்து முத்தாய்ப்புடன் இனிதே முடிந்தது.

தனி ஆவர்த்தனம் முடிந்தவுடன் ஒருவர் மைக்கைப் பிடித்தார். இதென்னாடா இது வம்பு ? இத்தனை வருஷமா கசேரிக்கு நடுவில் பேசும் பழக்கமெல்லாம் இல்லையே, இந்த சபையும் கெட்டதா ?, என்று நினைத்துக்கொணேன். ‘கச்சேரிக்கு நடுவில் பேசுவதற்கு மன்னிக்கவும் ‘, என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவுடன், அரை மணியாவது பேசப் போகிறார் என்று நினைத்தேன். பேசியவர் ரத்தினச் சுருக்கமாய், ஈ.காயத்ரி எம்.எஸ்-இன் நினவாய் வருடா வருடம் போட்டி நடத்த 10,000 ரூபாய் கொடுத்ததை மாத்திரம் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார். கச்சேரியின் கடைசி அரை மணி நேரத்தில் எம்.எஸ் ஹிட்ஸ்களைக் கொண்டு ஒரு மினி-கச்சேரி நடத்தினார் காயத்ரி. ‘ப்ரூஹி முகுந்தேதி ‘, ‘காற்றினிலே வரும் கீதம் ‘, மாலைப் பொழுதினிலே, ‘வடவரையை மத்தாக்கி ‘, ‘எந்த மாத்ரமு ‘, ‘பாவயாமி கோபால பாலம் ‘ என்று அவர் வாசித்த ஒவ்வொரு பாட்டிற்கும் ஏகப்பட்ட அப்ளாஸ். அவர் குறையொன்றுமில்லை வாசித்த பொழுது, ரசிகர்கள் மனதில் குறையொன்றுமிருந்திருக்காது என்பது நிச்சயம்.

**

ramchi412@gmail.com

Series Navigation

லலிதா ராம்

லலிதா ராம்