ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கவர்னர் பதவியை காரணம் காட்டி ஒரு கேலிக்கூத்து மீண்டும் அரங்கேறியுள்ளது. இதில் எந்தத்தரப்பும் நியாமாக நடந்து கொள்ளவில்லை. உள்துறை அமைச்சர் கூறியிருப்பவை எத்தகைய மனோபாவம் அவருக்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. பதவி விலகிய கவர்னர் தன் தரப்பு வாதத்தை ஒரு அறிக்கையாகக்

கொடுத்திருக்கத் தேவையில்லை. தேவையெனில் வேறொரு சந்தர்ப்பத்தில், உ-ம் சுயசரிதை எழுதும் போது, தன் நிலைப்பாட்டினை தெளிவாக்கியிருக்கலாம். ஏனெனில் இங்கு நடத்தப்படுவது எந்த தார்மீக விழுமியங்களும் இல்லாத அரசியல் என்று எல்லோருக்கும் தெரியும். இ.ஆ.ப வில் உள்ளவர்கள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும், இது போன்ற அரசியல் விவகாரங்களில் அல்ல. இது போல் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் நடந்து கொள்ள ஆரம்பித்தால் அதற்கு முடிவே இராது. ஏனெனில் அதிகாரிகள் அரசியல் கட்சி விவகாரங்கள், அரசியல் ரீதியான நியமனங்கள் குறித்தவற்றிலிருந்து விலகி நின்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிர்வாகத்தை செம்மையாக நடத்தவே உதவ வேண்டும். தலைமைச் செயலாளர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். நாளை திமுக ஆட்சிக்கு வந்தாலும் அவரது பொறுப்பு ஒன்றுதான். ஆளுனராக யார் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அவரது பணி ஒன்றுதான். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள், உரிய பதவிகள் தரப்படாமல் சிறிது காலம் பணியின்றி காத்திருக்க வைக்கப்பட்டார்கள். இறையன்பு உட்பட பலர் ஆட்சி மாறிய பின் எப்படி நடத்தப்பட்டார்கள். அமைச்சரவையில் எத்தனை முறை மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கான காரணங்களை இப்போதைய அதிமுக அரசு விளக்கியதுண்டா. அப்படியிருக்கும் போது இந்த ஒரு விஷயத்தில் மட்டும் உரையாடலை வெளியிடுவதில் எதற்கு இத்தனை அக்கறை. பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள், இடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் இவர்களிடம் கலந்தாலோசித்தா அவர்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. பத்திரிகைகளில் வெளியான ஹேஷ்யங்கள், ஊகங்கள் அனைத்திற்கும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதா. பதவி நீக்கம் குறித்து எனக்கு தகவல் தருகிறீர்களா அல்லது கலந்தாலோசிக்கிறீர்களா என்று கேட்கும் தைரியம் அமைச்சர்களுக்கு உண்டா.

உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு இருந்தாலும் கூட இந்த உரையாடலை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கவனத்திற்கு அதை கொண்டு செல்ல முடியாதா. ராஜீய காரணங்கள் காரணமாக சிலவற்றை பகிரங்கமாக வெளியிட முடியாது, எனினும் இந்த உரையாடலை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம், இது இவ்வழக்கிற்கு முக்கியமானது என்று நீதிபதிகள் மட்டும் அறியும் வண்னம் அதை அவர்கள் முன் வைத்திருக்க முடியாதா. இங்கு நோக்கம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்வைத்து ஒரு அரசியல் விளையாட்டு நடத்துவது. கவர்னரை நியமிப்பதும், மாற்றுவதும் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவின் பேரில் நடப்பது. மாநில அரசுகளின் விருப்பு,வெறுப்பிற்கு அங்கு இடமில்லை. பர்னாலா இங்கு பொறுப்பேற்கும் முன்னர் அவர் குறித்து ஜெயலலிதா கருத்து தெரிவிப்பதை தவிர்த்திருக்கலாம். அதுதான் அரசியல் நாகரிகம். ஏனெனில் அவரை நியமிப்பவர் குடியரசுத் தலைவர். மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் அவர் அதை செய்தாலும் அப்பதவிக்கு மதிப்பளித்தாவது இப்படிப் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும். 1991ல் திமுக அரசை கலைக்க வேண்டும் என்று பெரு முயற்சி மேற்கொண்டது யார். இதே பர்னலா 1991 திமுக அரசை கலைக்க உதவும் அறிக்கை தர மறுத்தவர். அப்போது காங்கிரசும், அதிமுகவும் அரசியல் ரீதியாக ஒரே நிலைப்பாட்டில் இந்த விஷயத்தில் இருந்தன. காலங்கள் மாறின, காட்சியும் மாறியது, மாறாதது கவர்னர் பதவி குறித்த அணுகுமுறை.

கவர்னர் என்பவர் மத்திய அரசின் கைப்பொம்மை என்று கருதும் படி செய்ததில் காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. 356 வது பிரிவின் படி மாநில அரசுகளை கலைக்கும் உத்தியை பல முறை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது. 1959 ல் கேரள அரசைக் கலைக்க இதை பயன்படுத்திய போது காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி தான் பிரதமராக பதவியேற்ற பின் கவர்னர் என்பவர் மத்திய அரசின் எடுபிடி, அரசுகளை கலைக்க உதவுபவர் என்ற ரீதியிலேயே நடந்து கொண்டார். 1980களில் ஆந்திராவில் என்.டி.ராமாராவ் தலைமையிலான அரசு சட்டபையில் பெரும்பான்மை பெற்றிருந்த போதும் கவர்னர் உதவியுடன் அது முதலில் நீக்கபட்டது, ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றது. கவர்னர்களாக கட்சிக்கார்களை நியமிப்பது அதிகரித்தும், இது போன்றவற்றிற்கும் தொடர்பு உண்டு. கவர்னர் மாளிகை என்பது அரசியல் சதிக்கான இடம் என்று கருதும் வகையில் பல கவர்னர்கள் நடந்து கொண்டனர். பலருக்கு கவர்னர் பதவி என்பது கட்சித்தலைமை தரும் நன்கொடை என்றாகிவிட்டது. மாநில அரசியலில் தொடர்ந்து செயல் பட முடியாதவர்கள், முதுமை காரணமாக தீவீர அரசியலில் ஈடுபட முடியாதவர்கள், ஆட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்ட அதிகாரிகள் – இது போன்றவர்களுக்கு தரப்படும் அங்கீகாரமாக அதை மாற்றியது காங்கிரஸ்தான். இந்திரா காந்தி காலத்தில் தொடங்கிய இந்த போக்கினை பின்னர் வந்த அரசுகள் , ஒரிரு விதிவிலக்குகள் தவிர, ஒரு எழுதப்படாத விதியாகவே மாற்றியுள்ளன. பாஜக கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட பலர் ஹிந்த்துவ கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அல்லது பாஜக விற்கு வேண்டியவர்கள் அல்லது முன்னாள் அரசியல் தலைவர்கள். பாஜக கூட்டணி அரசாவது இதில் ஒரு வித்தியாசமான அணுகு முறையினை கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர்களும் இந்திரா விட்டுச் சென்ற பாரம்பரியத்தினையே இதில் கடைப்பிடித்தனர். மதன் லால் குரானா தில்லி அரசியலில் முக்கியமானவர். அவரை ஏன் கவர்னாராக நியமித்தார்கள், இப்போது ஷிண்டே ஏன் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார், ஏன் சென்னா ரெட்டி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர்களெல்லாம் மாநில அல்லது பிரதேச அரசியலிலிருந்து தற்காலிக ஒய்வு பெற உதவவே, உட்கட்சி பிரச்சினைகளுக்கு விடை காணவே கவர்னர் பதவி பயன்படுத்துள்ளது. இதற்கு மாறாக கவர்னர் பதவியில் அரசியல் வாதிகளை நியமிக்க மாட்டோம், நிர்வாகத்திறமை உடைய ஒய்வு பெற்ற அதிகாரிகள், பல்துறை நிபுணர்களை நியமிப்போம், கவர்னர் பதவியை அரசியல் சதுரங்கத்தில் ஒரு காய் போல் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை ஏன் இரண்டு முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் எடுக்க வில்லை. காரணம் ஒன்றுதான் கவர்னர் பதவியை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதில் நிலவும் சொல்லப்படாத கருத்தொற்றுமைதான். இப்படி நியமிக்கப்பட்ட கவர்னர்கள் இப்பதவிக்கு புகழ்த் தேடித்தரவில்லை. மாறாக கவர்னர் என்பவர் இன்னொரு அரசியல்வாதி என்று கருதும் வண்ணமே செயல்பட்டனர். ரொமேஷ் பண்டாரி போன்றோர் நடந்து கொண்ட விதம் கவர்னர் பதிவியின் மீதிருந்த மரியாதை வெகுவாக குறையவே உதவியது. 2002 ல் உபியில் பாஜக-பி.எஸ்.பி கூட்டணி அரசு பெரும்பானமை இழந்துவிட்டது, கவர்னர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது எல்.கே.அத்வானி கவர்னர் செயல்பட்டது சரியான விதத்தில் என்றார்.

சர்க்காரியா கமிஷன், மற்றும் அரசியல் சட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிஷன் National Commission to Review the Working of the Constitution NCRWC, இவை

இரண்டும் கவர்னர்கள் நியமனம், மாற்றுவது, நீக்கம் குறித்து கொடுத்துள்ள பரிந்துரைகள் இன்று வரை

அமுல் செய்யப்படவில்லை.அரசியல் சட்டத்தினை மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிஷன் 2002 ல்

தன் அறிக்கையை சமர்பித்தது. அதை அமைத்த தேசிய ஜனநயகக் கூட்டணி அரசே அப்பரிந்துரைகளை

அமுல் செய்வதில் போதிய அக்கறை காட்டவில்லை. ஏனெனில் மத்தியில் ஆட்சி தங்கள் வசம் இருந்தால்

மாநில அரசுகளை ‘கையாள ‘ கவர்னரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணமே காரணம். மாநில

அரசுகள் எப்படி நினைத்தால் பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகளை கலைக்க அதிகாரம்

வேண்டும் என்று நினைக்கின்றனவோ அது போல் மத்தியில் ஆட்சி அமைத்துவிட்டால் கவர்னர் என்ற

பதவி மூலம் மாநில அரசுகளுக்கு தொந்தரவு தரலாம், கவர்னரை ஆட்சியை கலைக்க பயன்படுத்திக்

கொள்ளலாம் என்ற எண்ணமே இரண்டு பெரிய கட்சிகளிடத்தும் இருக்கிறது. திமுகவும் இந்த விஷயத்தில் ஒரு விதிவிலக்கல்ல. கவர்னர் என்பவர் ஒரு ஒட்டுத்தாடி, தேவையில்லாத போது தூக்கி எறிந்துவிட வேண்டும், தேவையான போது பொருத்தமான தாடி போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் கூறப்படாத கொள்கை. ஆட்டுத்தாடி போன்ற வார்த்தைகள் ஏமாற்று வார்த்தைகள்.

சர்க்காரியா கமிஷன் கவர்னராக ஒருவரை நியமிக்க வேண்டுமென்றால் அவருக்கு என்னென்ன தகுதிகள்

இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளது.#. இந்தத் தகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் இன்றுள்ள பல கவர்னர்கள், இப்போது நியமிக்கப்பட்டுள்ள சிலர் உட்பட, நியமிக்கப்படிருக்கவே கூடாது.அது போல் தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்தாலொழிய கவர்னரை பதவிக்காலத்திற்கு முன் நீக்க அல்லது மாற்றக் கூடாது என்றும் சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது. மேலும் NCRWC கவர்னர்களை நியமிக்கும் போது மாநில முதல்வர்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், சர்க்காரியா கமிஷன் நியமனத் தகுதிகள்

குறித்து குறிப்பிட்டுள்ளப்பட்டுள்ளவை பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதன் இறுதி அறிக்கை

கவர்னரின் அதிகாரம், நியமனம் குறித்தும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. ## விரிவஞ்சி அவற்றை இங்கு குறிப்பிடவில்லை. இன்னும் ஒரு கமிஷன் இவற்றை மீண்டும் எடுத்துரைத்து வேறு சில பரிந்துரைகளை தந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுமா என்பது கேள்விக் குறி. ஏனெனில் இங்கு அதிகாரப் பகிர்வு, மாநிலங்களை கலந்தாலோசித்து கவர்னரை நியமிப்பது போன்றவற்றில் பல கட்சிகளுக்கு நம்பிக்கை கிடையாது. எனவே இந்த அறிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அவற்றிற்கு உண்மையான அக்கறை கிடையாது. ஆகையால் இப்போதுள்ள நடைமுறையில் மாற்றம் வேறெங்கிருந்தாவதுதான் கொண்டுவரப்படவேண்டும்.

பொம்மை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு முக்கியமானது, அதையும் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு உச்ச நீதி மன்றம் கவர்னர்கள் நியமனம்,

மாற்றம், அவர்களது அதிகாரங்கள், கவர்னர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை வகுத்து கொடுத்து, அதைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டாலொழிய இது போன்ற கேலிக்கூத்துக்கள் தொடரும். அப்படி ஒரு நிலை ஏற்படும் முன் இது போன்ற கேலிக்கூத்துக்கள் இன்னும் எத்தனை முறை அரங்கேறுமோ.

அரசியல்வாதிகள் அல்லாதோரை கவர்னர்களாக நியமித்தாலும் அவர்களது செயல்பாடுகள் சர்ச்சைக்கப்பாற்பட்டவைகளாக இருப்பதில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே தகுதி, நியமனம் என்பது குறித்த ஒரு சர்ச்சையாக இதைக் குறுக்க முடியாது. எனவேதான் கவர்னர்கள் பின்பற்ற வேண்டிய

விதிகள், அவர்களது அதிகாரங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றம் தன் கருத்தினை வெளிப்படுத்த வேண்டும்

என்று கருதுகிறேன்.

#He should be eminent in some walk of life; he should be a person from outside the State; he should be a detached figure and not too intimately connected with the local politics of the State; and he should be one who has not taken too great a part in politics generally, and particularly in the recent past.

## http://lawmin.nic.in/ncrwc/finalreport.htm

k.ravisrinivas@gmail.com

Series Navigation