ஆர்.வி என்ற நிர்வாகி

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

பாஸ்கர்


ஆர்.வெங்கட்ராமன் (ஆர்.வி) ஒரு உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரராகவும், நேர்மையான அரசியல் வாதியாகவும்,மிகச் சிறந்த நிர்வாகியாகவும்,தேசியவாதியாகவும் திகழ்ந்தார்.1942ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
இந்தியா அரசியல் சாசனத்தை வகுத்த அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1967ம் ஆண்டு காமராஜ் அவர்கள் மந்திரி சபையில் தொழில் துறை,மின்சாரம் என்று பல துறைகளின் அமைச்சராக பதவி ஏற்றார்.அவருடைய முன் முயற்சியில் தான் இன்றுள்ள கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் உருவாகின.
சிறு மற்றும் மத்திய தொழில்கள் தொடங்குபவர்களுக்கு பெரிய அளவில் ஊக்கமளித்தார்.இந்த மாதிரி தொழில்கள் வேலை வாய்ப்பை பெருக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.தமிழ்நாட்டில் பொதுத் துறை வளர்ச்சிக்கு வித்திட்டார்.குறிப்பாக BHEL,நெய்வேலியில் NLC போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் இருப்பதற்கு இவர் முன் முயற்சி தான் காரணம்.TVS நிறுவனத்தை சென்னையில் தொழில் தொடங்க வைத்ததில் இவர் பங்கு நிச்சயம் உண்டு.
இவருடைய அனுபவத்தையும்,நிர்வாகத் திறமையையும் நன்கு பயன் படுத்திக் கொண்ட காமராஜை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆர்.வி.திட்டக் குழு உறுப்பினராக 1967ம் ஆண்டிலிருந்து 1971ம் ஆண்டு வரை பணியாற்றினார்.மீண்டும் 1977ம் ஆண்டிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1980ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.அந்த நேரத்தில் தான் முதல் முறையாக உலக வங்கியிடம் இந்தியா நிதி உதவி பெற்றது.
பின்பு ராணுவ அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார்.அணு குண்டு சோதனை செய்ய இந்தியா 1983ம் ஆண்டு தயாராக இருந்ததாகவும்,அதனை ஆர்.வி. தானே அதற்கான வசதிகளை மேற்பார்வை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமை ஏவுகணைகள் பிரிவிற்கு மாற்றி அதற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார்.
1984 ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.இவர் நேரு-இந்திரா குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ம் ஆண்டு இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.இவர் 4 பிரதமர்களுடன் வேலை செய்ய நேரிட்டது.இவர் ஜனாதிபதியாக இருந்தபோது தான் மத்தியில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது.வி.பி.சிங்கை ஆட்சி செய்ய அழைத்து ஒரு நல்ல முன் மாதிரி ஏற்படுத்தினார்.ஆட்சி மாற்றத்தால் மாநில ஆளுநர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வி.பி.சிங் நினைத்த போது,ஜனாதிபதியே ஆளுநர்களை ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு கடிதம் எழுதுவது நன்று என்ற நல்ல யோசனையை தெரிவித்தார்.இவர் ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் தான் பொபஃர்ஸ் ஊழல்,இலங்கைப் பிரச்சனை,ராஜீவ் காந்தி கொலை,மண்டல் கமிசன் பரிந்துரை போன்ற முக்கிய நிகழ்வுகள் நடேந்தேறின.1991ம் ஆண்டு போது தேர்தலில் எந்த கட்சிக்கும் பெருன்பான்மை கிடைக்காத நேரத்தில்,எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து “தேசிய அரசு” அமைக்கலாம் என்ற யோசனையை முன் வைத்தார்.இந்த நிகழ்வுகளை எல்லாம் முன்வைத்து “My Presidential Years” என்ற புத்தகத்தை எழுதினார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சில யோசனைகளை முன் வைத்தார்.குறிப்பாக,மத்தியில் இரண்டு கட்சி ஆட்சி முறை இருக்க வேண்டும் என்றும்,சிறிய கட்சிகள் குழப்பம் ஏற்படுத்துவதை இது தவிர்க்கும் என்றும் கூறினார்.மேலும் ஒரு அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் போது,அடுத்து யாரை பிரதமராக பரிந்துரைகிறோம் என்பதையும் தீர்மானம் கொண்டு வரும் கட்சி தெரிவிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.கிருஷ்ணசாமி அசொசியட்ஸ் ஆர்.வி.யைப் பற்றி ஒரு ஆவணப் படம் (Documentary) எடுத்து வெளியிட்டது.அது தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.இதில் “சில மாநில அரசுகள்” கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தப் பட்டதை பற்றிய கேள்விகளுக்கு,தான் இந்தியா அரசியல் சாசனப்படி நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

98 ஆண்டுகள் வாழ்ந்து முக்கிய பொறுப்புக்களில் இருந்த ஆர்.வி ஒரு தொண்டு மனப்பான்மையுடன் கூடிய கண்ணியமான வாழ்கையை வாழ்ந்து மறைந்துள்ளார்.இன்றுள்ள மற்றும் எதிர்கால அரசியல் வாதிகள் இவரிடமிருந்து கற்க நிறைய விஷயங்கள் உள்ளன.வரலாற்று ஆசிரியர்கள் சென்ற நூற்றாண்டின் இந்திய அரசியலை ஆராயும் போது ஆர்.வி க்கு நிச்சயம் சரித்தரித்தில் ஒரு உன்னதமான இடம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


tlbhaskar@gmail.com

Series Navigation

பாஸ்கர்

பாஸ்கர்