ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

க.துரையரசன்


“தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்” (தமிழ் நிலம் – 14.10.1952)

என்று பாரதிதாசனாலேயே பாராட்டப்பட்டவர் தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார். இவருக்கு 16.12.1999-இல் நூற்றாண்டு விழா தமிழக அரசால் நடத்தப்பட்டது. நூற்றாண்டு விழா கண்ட நாயகரின் வாழ்வும் பணியும் குறித்து விளக்கியுரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தோற்றம் : இவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் திரு.சீனிவாச நாயக்கருக்கும் திருமதி.தாயார் அம்மாளுக்கும் மூன்றாவது மகனாராக 16-12-1900-இல் பிறந்தார். இவரது தந்தையாரும் மூத்த சகோதரரும் சித்த மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினர். இவர்தம் இளைய சகோதரர் சீனி.கோவிந்தராசனாரும் இவரும் தமிழ்ப் பணியில் நாட்டம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.

இளமையும் கல்வியும் : இவர்தம் இளைய சகோதரர் திரு.சீனி.கோவிந்த ராசனாரின் தமிழ்ப்பணி நாட்டம் கண்ட இவருக்கும் தமிழ் மொழியின் மீதும் இலக்கியங்களின் மீதும் ஆர்வம் தலைப்பட்டது. கோவிந்தராசனாரிடம் தமிழ் பயிலத் தொடங்கிய இவர் பின்னர் திருமயிலை மகாவித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களிடமும் சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ச.த.சற்குணம் அவர்களிடமும் கல்வி பயின்றார். இவர் நடுத்தரப் பள்ளி ஆசிரியர் பயிற்சியும், எழும்பூர் நுண்கலைப் பள்ளியில் சித்திரமும் பயின்றார். தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளிலும் போதிய அறிவுத் திறம் பெற்று விளங்கினார். இவர் தம் பதினாறாம் அகவை முதல் தமிழ் நூல்களைச் சுவைத்துப் படிக்கும் திறம் பெற்றிருந்த இவர் ‘செந்தமிழ்’ முதலிய உயர்ந்த தமிழ் வெளியீடுகளை விடாது படித்துத் தம் புலமையைப் பெருக்கிக் கொண்டார்.

பணி : வறுமையில் வாடிய தம் குடும்பத்தைக் காக்கும் பொருட்டு மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றினார். அப்பணியினின்றும் விலகி ‘திராவிடன்’ என்ற இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார். அப்பணியையும் புறந்தள்ளிய இவர் நடுத்தரப் பள்ளி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். இப்பணியில் இருக்கும் போதுதான் தமிழ்ப்பணி ஆற்றுவதற்குரிய வாய்ப்பும் வசதியும் இவருக்கும் பல்கிப் பெருகின எனலாம்.

பண்பு நலன்கள் : வறியராகப் பிறந்த இவர் பண்பு நலன்களில் வளனாராக விளங்கியதை அறிய முடிகிறது. இவர் அடக்கமும், எளிமையும், மனித நேயப் பற்றும் உடையவர். எப்பொழுதும் தூய, ஒழுங்கான சாதாரண உடையையே அணியும் பழக்கம் உடைய இவர் ஆடம்பர வாழ்க்கையைக் கிஞ்சிற்றும் விரும்பாதவர். பணக்காரர்கள் உள்ள இடங்களுக்கு அழைப்பு இல்லாமல் ஒரு போதும் செல்லவே மாட்டாராம் இவர்.

அறிஞர்களின் மதிப்பீடு : இவ்வறிஞரைப் பற்றிய சில அறிஞர் பெருமக்களின் கருத்துகளை இங்குச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். “இவர், செய்வனத் திருந்தச் செய்யும் பண்பினர் ; எளிய வாழ்வு மேற்கொண்டு அமைதியாக இருந்து உயரிய தொண்டாற்றும் இயல்பினர்” என்று மு.வரதராசனார் பாராட்டுகிறார். (மறைந்து போன தமிழ் நூல்கள், பக்கம் V)

இவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர் என்றும் நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னே போல் போற்றுபவர் என்றும் ஆண்டில் இளையவராயினும் ஆராய்ச்சித் துறையில் முதிர்ந்தவர் என்றும் சுவாமி விபுலானந்தர் இவரது பண்பு நலன்களையும் ஆய்வு நுட்பத்தையும் எடுத்தியம்பியுள்ளார். (கிறித்தவமும் தமிழும், முகவுரை, பக்கம் 9)

திரு.வி.க, இவரைச் சீர்திருத்தக்காரர் ; ஆராய்ச்சியாளர் ; காய்தல் உவத்தல் அகற்றி எதையும் நோக்குபவர் என்று குறிப்பிடுகிறார். (இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், பக்கம் xiv)

இவரின் தேடல், உழைப்பு, இலக்கிய நோக்கு, விமர்சனப் போக்கு, புலப்பாட்டுத் திறன் யாவராலும் போற்றுதற்குரியன. கலைகள் பற்றிய ஆய்வு நூல் அளித்தவர்களில் இவர் முன்னோடி. இலக்கிய ஆராய்ச்சி, கல்வெட்டாராய்ச்சி, நாணயவியல் முதலிய துறைகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முத்திரை பதித்த முதல் வரிசை ஆய்வாளர். இவரின் நூல்கள் அனைத்தும் சீனியாய், கற்கண்டாய் காலமெல்லாம் இனிப்பவை என்று டாக்டர் ச.மெய்யப்பன் இவரது பணியைப் போற்றுகின்றார். (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், பக்கங்கள் V-Vi)

ஒரு தனியார் பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியராக இருந்து மறைந்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி வரலாற்றுக்கும் தமிழியலுக்கும் அளித்த ஆய்வுப் பங்களிப்புகளுக்கு நிகரான ஒன்றை இதுவரை எந்தப் பல்கலைக்கழகமும் நிகழ்த்தியது இல்லை என்று சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் அறுதியிட்டுக் கூறியுள்ளார். (தினமணி-14.12.1998) தனி ஒரு மனிதன் நிகழ்த்திய ஆய்வுகளை இன்று வரை ஒரு பல்கலைக் கழகம் கூட நிகழ்த்தவில்லை என்பதன் மூலம் இவ்வறிஞர்தம் ஆய்வுப் பணியின் ஆழமும் அகலமும் நன்கு புலப்படும்.

பிறர் சிந்தியாத விதத்திலும், பிறர் கூறாதவகையிலும் உண்மைகளைத் தலைச் சுமைந்து, தமிழ் மக்களுக்கு ஒட்பம் (Wisdom) வழங்குவனவாக இவரது நூல்கள் அமைந்துள்ளன என்று இவ்வறிஞரின் மாணவரான ஊ.ஜெயராமன் குறிப்பிடுவதன் வழி (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – பக்கம் xvii) இவரது நூல்களின் தனித்தன்மையை விளங்கிக் கொள்ளலாம்.

கடும் உழைப்பாளி : சிறந்த வரலாற்றாசிரியர் ; நடுநிலை பிறழாத ஆராய்ச்சியாளர் ; தொல்பொருள் ஆய்வாளர் ; மொழியியல் அறிஞர் ; சமயப் பேரறிஞர் ; கலையியல் வல்லுநர் ; இலக்கியத் திறனாய்வாளர் ; தலை சிறந்த பண்பாளர் என்று இவரின் பண்பு நலன்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் டாக்டர் ம.சத்தியமூர்த்தி அவர்கள். (தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள் – பக்கம் 55)

இவை அனைத்திற்கும் மேலாக,

“தமிழுக்குத் தொண்டர் யார்க்கும்
தலைத் தொண்டன் ; அடிமை அல்லன்
. . . . . . .. . . . . . . .. . . . . . . . . . .
கொள்கையில் அசைக் கொணாத
இமயமும் தோற்கும் அண்ணல் . . . .
(தமிழ் நிலம் – 14.10.1952)

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டுவது இவரது சீரிய தமிழ்ப் பணிக்குச் சூட்டப்பட்ட வைரக் கீரிடம் ஆகும்.

இவர்களேயன்றி, இப்பெருமகனாரின் ஆராய்ச்சித் திறன், எழுத்துத் திறன், உழைப்புத் திறன் ஆகியவற்றைப் பாராட்டியப் பெருமக்களுள் குறிப்பிடத் தக்கவர்களாக பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், டாக்டர் இராசமாணிக்கனார், ஒளவை டி.கே.சண்முகம், கி.வா.ஜகன்னாதன், கவிஞர் முடியரசன், டாக்டர். மு.ஆரோக்கியசாமி, ந.சஞ்சீவி, மீ.பா.சோமசுந்தரம், அழ.வள்ளியப்பா ஆகியோரைச் சுட்டலாம்.

அறிஞர் பெருமக்களுடன் தொடர்பு : சதாசிவப் பண்டாரத்தார், அ.சிதம்பரநாதன், தெ.பொ.மீ., கா.வெள்ளைவாரணம், சாமி.வேலாயுதம், விபுலானந்த சுவாமிகள், பெரியார் ஈ.வெ.ரா., மறைமலையடிகள், ஜீவபந்து, ஸ்ரீபால், யாழ்ப்பாணம் இராஜ.அரியரத்தினம், குல.சபாநாதன், செக்கோஸ்லாவியா நாட்டவர் கமில் சுவலபில் போன்ற தம் சமகால அறிஞர் பெருமக்களோடு மயிலை சீனி.வேங்கடசாமி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

பட்டங்களும் பரிசுகளும் : இவ்வறிஞருக்கு மணிவிழாக் கொண்டாடுவது எனச் சான்றோர்கள் முடிவு செய்தனர். அதன் பொருட்டுச் செந்தமிழ்ச் செல்வியில் மணிவிழா வேண்டுகோள் (சிலம்பு 36, பரல் 4, பக்கம் 177, டிசம்பர் 1960) ஒன்று வெளியிடப்பட்டது. 17.3.1961-இல் சென்னையில் உள்ள கோகலே மண்டபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மாண்புமிகு எஸ்.கணபதியாபிள்ளை அவர்கள் தலைமையில் இவருக்கு மணிவிழா சிறப்பாக நடைபெற்றது. மணிவிழா மலரைப் பேராசிரியர் மயிலை சிவமுத்து வெளியிட்டார். இவ்வறிஞரின் மணிவிழாச் சிறப்புகளை ‘மணிவிழா மாண்பு’ என்று தலைப்பிட்டுப் படங்களுடன் ‘செந்தமிழ்ச் செல்வி’ வெளியிட்டது. (சிலம்பு 35, பரல் 8, பக்கங்கள் 340-347, ஏப்ரல் 1961)

இம் மணிவிழாவில்தான் உயர்நீதி மன்ற நடுவர் மாண்புமிகு எஸ்.கணபதியா பிள்ளை அவர்களால் வழங்கப்பட்ட ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தைச் சீனி.வேங்கடசாமி தம் வாழ்நாளில் கிடைக்கப் பெற்ற முதல் பட்டமாக உவகையுடன் ஏற்றுக் கொண்டார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டமும் 4000 வெள்ளிப் பொற்காசுகளும் அன்றைய தமிழக ஆளுநர் மாண்புமிகு பிரபுதாஸ் பட்வாரி அவர்களால் இவருக்கு 29.3.1980-இல் வழங்கப்பட்டது. இவரது உடல்நிலை காரணமாக இவரால் நேரில் சென்று இப்பட்டத்தைப் பெற முடியவில்லை. ஆதலால், இவர் தம் பேத்தி அழகம்மை இப்பட்டத்தைப் பெற்று வந்தார். (சிலம்பு 54, பரல் 8, பக்கங்கள் 409-410, ஏப்ரல்’ 1980) இதே நாளில் ஒளவை.சு.துரைசாமி பிள்ளைக்கும் இப்பட்டம் வழங்கப் பட்டது. இவர் நேரில் சென்று இப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆசிரியர் குழுவிலும் இருந்து பணியாற்றி வந்தார். அக்கழக நூலாசிரியருள் இவர் மிகச் சிறந்து விளங்கினார். எனவே கழகத்தின் 1008-வது வெளியீட்டு விழாவின் போது இவருக்குக் கேடயம் அளித்துப் பாராட்டப்பட்டது. (சிலம்பு 54, பரல் 9, பக்கங்கள் 431-432, மே’ 80)

தமிழ்ப்பணி : தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், கலை, பண்பாடு, சொல்லாய்வு, மொழியாய்வு, தமிழக வரலாறு, கல்வெட்டு என்று பல துறைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள இவ்வறிஞரின் தமிழ்ப்பணி பிறரின் தமிழ்ப் பணியினின்று மேம்பட்டும் உயர்ந்தும் நிற்கிறது. தமிழில் எதையோ எழுதினோம் – வெளியிட்டோம் என்றில்லாமல் கிடைத்தற்கு அரிய செய்திகளை எல்லாம் இவர் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் ஆய்ந்தும் வெளியிட்டுள்ளார்.

இனி, அவரது நூல்களின் தனித்துவம் குறித்து ஆராயலாம். இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாறும், தமிழக வரலாறும் மிகுதியும் இருள் சூழ்ந்த நிலையிலேயே இருந்தமையை அனைவரும் அறிவர். அவ்வேளையில் இவர் எழுதிய நூல்கள் அத்துறைகளுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்ததோடன்றி புதிய, அரிய கருத்துகளின் கொள்கலன்களாகவும் அமைந்திருந்தன. இவரது நூல்களில் பெரும்பான்மையும் பல துறைகளில் முதல் முயற்சியாக அமைந்துள்ளமையைக் காண முடிகிறது.

நிகழ் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறே முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவது என்பது மிகக் கடுமையாகும். இக்கடும் பணியைப் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்’ என்ற நூலில் காண முடிகிறது. முறையான தமிழ் இலக்கிய வரலாற்றைப் பிறர் எழுதுவதற்கு முன்னோடியாக இந்நூல் அமைந்துள்ளதைப் பெருமையுடன் நினைத்துப் பார்க்க முடிகிறது.

ஒரு நாள் ஓரிடத்தில் பார்த்துவிட்டு வந்த புத்தகம் மறுநாள் தேடிச் செல்லும்போது அங்கு இருக்காது. மீண்டும் அப்புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எளிதன்று. அவ்வாறிருக்கையில் இவர் ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற ஒரு நூல் எழுதி வெளியிட்டதை எண்ணிப் பார்க்கும் போது வியப்பே மேலிடுகிறது. அந்நூலை இவர் எழுதுவதற்கு ஒரு துயரச் சம்பவமே காரணமாக இருந்தது. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவ்விரண்டு குழந்தைகளும் எதிர்பாராத விதமாக இறந்து போயினர். அவ்விழப்பையும், சோகத்தையும் மறக்கும் வகையில் பல புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தார் இவர். யாப்பருங்கல விருத்தி என்ற நூலைப் படிக்கும் பொழுது அதில் காட்டப்பட்டிருந்த பல மேற்கோள் நூல்கள் மறைந்து போயிருந்ததை உணர்ந்தார். தம் வளர்ப்புக் குழந்தைகளின் மறைவு குறித்து வருத்திக் கொண்டிருந்த இவர் தமிழ்க் குழந்தைகளின் மறைவு (மறைந்து போன தமிழ் நூல்கள்) குறித்து எவரும் வருந்தவில்லையே என்று உணர்வுப் பூர்வமாகச் சிந்தித்ததன் விளைவே இந்நூலாகும். பெயரளவிலும், ஒரு சில பாடல் மற்றும் நூற்பா அளவிலும் காணப்படும் நூல்களைப் பற்றிய வரலாற்றுத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் இல்லையெனில் பல தமிழ் நூல்களின் பெயர்கள் கூட நமக்குத் தெரியாமலும் புரியாமலும் போகும் அவல நிலை ஏற்பட்டிருக்கும்.

கலைகள் பற்றிய ஆய்வு நூல் எழுதியவர்களுள் இவர் முன்னோடியாக விளங்குகிறார். கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் என்ற பெருமை இவரது ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்ற நூலுக்கு உண்டு. தமிழர், தம் பழஞ்சிறப்புகளை எல்லாம் மறந்து போனதை எண்ணி வேதனை மிகுதியுடன் இந்நூலைப் படைத்தளித்தார் இவர். கவின் கலைகள் குறித்து இவர் எழுதிய மற்றொரு நூல் ‘நுண்கலைகள்’ என்பதாகும். இவை இரண்டும் தமிழர்களின் கலை நுட்பத்தை எடுத்தியம்பும் அரிய நூல்களாகும். பழங்காலத்துக் கொங்கு நாட்டின் முழு வரலாற்றை முதன் முறையாக இவர் ‘கொங்கு நாட்டு வரலாறு’ என்று எழுதியுள்ளார். சங்கச் செய்யுள்களிலே ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற துளு நாடு பற்றிய செய்திகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டித் தொகுத்து முறையாக வகைப்படுத்தி ‘துளு நாட்டு வரலாறு’ என்ற நூலை எழுதியுள்ளார்.

பல்லவர்கள் வரலாற்றைக் கூறும் வகையில் ‘மகேந்திர வர்மன்’, ‘நரசிம்ம வர்மன்’, ‘மூன்றாம் நந்தி வர்மன்’ ஆகிய இவரது நூல்கள் அமைந்துள்ளன. தௌ¢ளாற்றெறிந்த நந்திவர்மன் பற்றித் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமை ‘மூன்றாம் நந்தி வர்மன்’ என்ற நூலுக்கு உண்டு. இவ்வரசனைப் பற்றிய சான்றுகள் முழுமையாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின்கண் அமைந்துள்ள இன்றியமையாப் பாடங்கள் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. தமிழர்களின் பழைய வரலாற்றை அறிய விரும்புபவர்களுக்குப் ‘பழங்காலத் தமிழர் வாணிகம்’, ‘சாசனச் செய்யுள் மஞ்சரி’ ஆகிய நூல்கள் நல்ல துணையாக நிற்கின்றன.

இவர் சமயப் பொறை உணர்வு மிக்கவர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களை வெளியிடக் கூடியவர் என்பதும் ஆய்வு நேர்மை உடையவர் என்பதும் சமய வரிசையில் இவர் எழுதிய நூல்களின் வழி வெளிப்படும். அவற்றுள் ‘பௌத்தமும் தமிழும்’ என்ற நூல் பௌத்தர்களின் சமயம், தமிழ்த் தொண்டு ஆகியன பற்றி எடுத்துரைக்கும் முறையான முதல் நூல் ஆகும்.

சமண சமயத்துக்கு எதிரான கருத்துக்கள் பிற சமயத்தாரால் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன. அதனால், தமிழர்கள் அச்சமயத்தின் மேல் வெறுப்புணர்வு கொள்ளத் தலைப்பட்டனர். ஆனால் அச்சமயத்தினர் தமிழுக்கு ஆற்றிய பணியானது பிற சமயத்தினர் தமிழுக்கு ஆற்றிய பணிகளைக் காட்டிலும் மேம்பட்டது என்பதை நன்கு உணர்ந்த இப்பெருமகனார், சமண சமயத்தின் தமிழ்ப் பணிகளை வெளிப்படுத்தி வரலாற்றை நிலைப்படுத்த முயன்றதன் விளைவே ‘சமணமும் தமிழும்’ என்ற இவரது நூல் ஆகும். சமயங்களின் தமிழ்ப் பணி குறித்த வரிசையில் மேலும் ‘கிறித்தவமும் தமிழும்’, ‘சமயங்கள் வளர்த்த தமிழ்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மகாபலிபுரத்து ஜைன சிற்பம், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், பௌத்தக் கதைகள், புத்தர் ஜாதகக் கதைகள், இசைவாணர் கதைகள் ஆகிய நூல்களின் வழி இப்பெருமகனாரின் பல் சமயப் பொறை உணர்வு வெளிப்படுகிறது. தமிழக வரலாற்றைத் தௌ¤வுறுத்தும் நோக்கில் இவர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், சேரன் செங்குட்டுவன், பாண்டியர் வரலாற்றில் ஓர் அரிய புதிய செய்தி ஆகிய நூல்கள் அமைந்துள்ளன. சிறந்த சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாக அஞ்சிறைத் தும்பி என்ற நூல் அமைந்துள்ளது. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள், சாசனச் செய்யுள் மஞ்சரி ஆகியவை அரிய கல்வெட்டு ஆராய்ச்சி நூல்களாகும்.

இதழ்களின் வழி தமிழ்ப்பணி : தம் அரிய தேடலாலும் கடும் முயற்சியாலும், நுண்மாண் நுழை புலத்தாலும் கண்டறிந்த ஆய்வு முடிவுகளின் கருத்துப் பெட்டகங்களாக இவரது நூல்கள் மட்டுமின்றி இவர் எழுதிய கட்டுரைகளும் அமைந்துள்ளன.

நண்பன், கல்வி, சௌபாக்கியம், திராவிடன், குடியரசு, செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், கலைக்கதிர், திருக்கோயில், ஈழகேசரி போன்ற இதழ்களில் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து நோக்குமிடத்து இவர் ஆய்வுப் பணியை முழுநேரப் பணியாக மேற்கொண்டதையும் அவ்வாய்வுப் பணிக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் தமிழ்ப் பணி ஆற்றிய இவரது தன்னலமற்ற சீரிய தியாக உயர்வும் புலப்படும். தமிழில் மறைந்து போனதும் மறந்து போனதுமான மிகுந்த செய்திகளை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ள இவரது தலை சிறந்தத் தமிழ்ப் பணியானது இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முன்னோடி வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இத்தகு அரும்பெரும் தொண்டாற்றிய இப்பெருமகனார் தம் இறுதிக் காலத்தில் மிகுந்த துன்பத்திற்கும், நோய்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி 8-5-1980-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இன்று கிடைத்தல் அரிதாகி விட்டன. எனவே அந்நூல்களை எல்லாம் மறுபதிப்பாக வெளியிட வேண்டும். மேலும் இவர் எழுதிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து நூல் வடிவில் வெளியிட வேண்டும். இவை இரண்டுமே தமிழ் வளர்த்த இவ்வறிஞர் பெருமகனாருக்குத் தமிழ் ஆர்வலர்களும், சான்றோர்களும், தமிழுலகமும் செலுத்தும் நூற்றாண்டு விழா காணிக்கையும் நன்றியறிதலுமாக இருக்க முடியும் என்று பலரும் நூற்றாண்டு விழா நேரத்தில் பேசினர். இதனைச் செவிமடுத்துத் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கின. அதன் பயனாக இவரது நூல்களும் கட்டுரைகளும் சீரிய முறையில் வெளிவந்து கொண்டு உள்ளன.
—————————————————————-
க.துரையரசன்.முதுநிலைதமிழ் விரிவுரையாளர்,
அரசு கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம்.

darasan2005@yahoo.com

Series Navigation

முனைவர் க.துரையரசன்

முனைவர் க.துரையரசன்