ஆதி பர்வம்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

புதுவை ஞானம்


( பல முறை கெஞ்சிக் கூத்தாடி பெற்ற ஒரு புத்தகம்- பாரதம். முதல் 25-ஆம் பக்கம் வரை கிழிந்து போய் விட்டது 399 பக்கம் தாண்டியும் கிழிந்து விட்டது. யார் எழுதியது? யார் பிரசுரித்தது ? எந்த ஆண்டு வெளி வந்தது ? ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த மொழி நடையும் அந்தக் காலத்தில் அதனை வாய்விட்டு ராகம் போட்டு ஒருவர் படிக்க மொத்த கிராமமும் எப்படி வாய் பிளந்து ரசித்துக் கேட்டிருக்கும் என்பதையும் கற்பனை செய்து துயரத்தோடு உங்களுடன் சில பக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். )

ஆதி பர்வம்
——————-
கய்யியிலாழியெடுத்தருள் கண்ணனை
மய்யுலாமழை வண்ணனைப் பாண்டவர்
உய்ய வந்து தயஞ்செய்த பாநுவை
வய்யமுண்ட செவ்வாயனை வாழ்த்துவாம்.
——————————
கேளுங்கள் ஓ. . . சவுனகாதி முனிவர்களே!
சந்திரகுல சிகாமணியாகிய ஜெநமேஜய மகாராரஜனை வைசம்பாயனர் பார்த்து ஓ. .,. . அரசனே! இந்த ஸ்ரீமகாபாரதம் – ஆதி பர்வம் – சபா பர்வம் – ஆரண்ய பர்வம் – விராட பர்வம் – உத்தியோக பர்வம் – பீஷ்மபர்வம் – துரோண பர்வம் – கர்ந பர்வம் – சல்லிய பர்வம் – சவுத்திக பர்வம் – ஸ்ரீபர்வம் – சாந்தி பர்வம்- அநுசரசநிக பர்வம் – அஸ்வமேத பர்வம் – ஆசிரம வாச பர்வம் _ மவுசலபர்வம் _ மஹா பிரஸ்தானிக பர்வம் _சொர்க்காரோகண பர்வம் ஆகிய பதினெட்டு பர்வமாக இருக்கும் இரி திறத்தார் சேனைகளும் 18 அக்குரோணி, ஒரு அக்குரோணிக்குத் தொகை என்னவெனில் தேர் ஒன்று, யானை ஒன்று,குதிரை மூன்று, காலாள் ஐந்து இது ஒரு பந்தி இப்படி மூன்று கொண்டது( தேர் 3,யானை 3, குதிரை 9, காலாள் 15)சேனாமுகம்.இப்படி சேனாமுகம் மூன்று கொண்டது குமுதம்,இப்படிகுமுதம் மூன்று கொண்டது கணகம், கனகம் மூன்று கொண்டது வாகினி , வாகினி மூன்று கொண்டது புலுதம், புலுதம் மூன்று கொண்டது சமுத்திரம், சமுத்திரம் மூன்று கொண்டது சமாக்கியம், சமாக்கியம் மூன்று கொண்டது அக்குரோணி.

இப்படி பாண்டவர் ஏழு அக்குரோணியும் சுயோதனன் முதலானோர் பதினெட்டு அக்குரோணியும் உடைத்தாகி இரு திறத்தாரும் போர் செய்தது பதினெட்டு நாள். இந்தப் பத்னெட்டு நாளில் பத்து நாள் வரைக்கும் காங்கேயன், ஐந்து நாள் வரைக்கும் துரோணாச்சாரி, இரண்டு நாள் வரைக்கும் கர்நன், மற்ற ஒரு நாள் உதயாதி பதினந்து நாழிகை வரைக்கும் சல்லியன்,மற்ற பதினைந்து நாழிகை வரைக்கும் சுயோதனன் சேனாதிபதிகளாயிருந்தார்கள். இவர்களைப் பாண்டவர்கள் வெற்றி பெற்று உலக முழுதையும் கைக்கொண்டு அரசு செலுத்திப் பரம பதம் போய்ச் சேர்ந்தார்கள். இது கால கதி. இந்த காலகதி விளங்க அந்த ஸ்ரீ மகாபாரதத்தை யாவருமுணர கிரந்தமாகச் செய்து வெளிப்படுத்தினவர் என் குருவாகிய வேத வியாசர் அவர் பிறப்பை முன்னங்கூறுகிறேன் .

வேத வியாசர் உற்பவ சருக்கக் கதை.

கடல் சூழ்ந்த நெடிய உலகத்தில் நீர் வளம் குடிவளம் நிலவளம் பெற்று விளங்குகின்ற நாடெவற்ரிலும் சிறப்புற்றிருக்கின்றது சோதி நாடு.அந்தச் சோதி நாட்டிலிருந்து உலக முழுதும் தன்னை வணங்கச் செங்கோல் நடாத்தி வருகிறவன் இரவி குல திலகனான வசுவென்பவன். அவ்வசு மந்திரி முதலானவர்கள் தன்னைச் சூழ்ந்து வர வெளிப்பட்டுக் காட்டுக்குச் சென்று வேடையாடி இளைப்பாற முனிவர்கள் தவஞ்செய்கிற பெரிய சோலையில் வந்தான். அச்சோலையில் தவஞ்செய்து கொண்டிருக்கிற முனிவர்களைப் பார்த்துத் தவத்துக்கு மிஞ்சின பொருள் யாதொன்றுமில்லை ஆதலால், நாம் தவந்செய்ய வேண்டுமென்று கருதி மந்திரி முதலானவர்களை அழைத்து ஓ! மந்திரிமார்களே! இதுவரை நான் அரசு செய்து வந்தது போல் யாவர்க்கும் ஒரு குறைவும் வராமல் அரசு செலுத்துங்கள் என்று கூறி தனது முத்திரை மோதிரத்தைக் கொடுத்து விட்டான். மந்திரி முதலானவர்கள் அரசன் முகக்குறியைக் கண்டு தடுத்துப் பேசச் சக்தி இல்லாதவர்களாய் , அரசன் கட்டளைப்படி சோதி நாட்டில் வந்து யாதொரு குறைவும் வராமல் அரசு செலுத்தி வந்தார்கள்.


Series Navigation