ஆணாதிக்கம்

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்துவிட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கத்தின் படி அது உண்மைதான் என்று என்னால் குத்துமதிப்பாக கூற முடியும். இறந்து போன அந்த மனிதருடன் எப்படி நான் விவாதம் செய்து உறுதி செய்து கொள்வது. விவாதத்திற்குரிய அந்த உருவம் மிகுந்த சிரமத்தின் பேரில் முயற்சி செய்து கொண்டிருந்தது. அதன் முயற்சி என்னை பயமுறுத்துவதற்காக என்பது இறுதியில் தான் எனக்குத் தெரிய வந்தது. அது தனது வாயை 180 டிகிரிக்கு கோணலாக்கி வக்கனை காட்டியது. பின் தன் விழிகளை வௌ¤யே கொண்டு வந்து காட்டி மிரட்டியது. பின் தனது நாக்கை ஒரு மீட்டர் அளவிற்கு வெளியே கொண்டு வந்து என்னைப் பார்த்தது. நான் ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தோன்றியதோ என்னவோ அது வெறுத்துப் போய்விட்டது. என்மேல் அந்த உருவத்துக்கு கடும் கோபம் வந்து விட்டது போல. என்னை ஏதோ ஒரு மொழியில் திட்டிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டது. பயந்துபோன நான் அதைத் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தி தயவு செய்து என்னை விட்டு போய் விடாதே என்று கெஞ்சினேன். எனக்கு இன்னும் சிறிது சந்தோசம் தேவையாய் இருக்கிறது. தயவு செய்து என்னை விட்டு போய்விடாதே என்று கெஞ்சினேன். அது முறைத்து பார்த்து விட்டு தமிழில் பேசியது. நான் ஒரு பேய். நான் உன்னை பயம் கொள்ளச்செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நீ என்னை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய். என்கிற செய்திகளை வரிசையாய் சொன்னது. நான் அந்தப் பேயிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

நான் அதனிடம் இவ்வாறு கூறினேன்.

‘தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ முதலிலேயே என்னிடம் இந்த விஷயத்தை கூறியிருக்க வேண்டும், ஏனென்றால்….. ஏனென்றால் ………..இதைவிட பயங்கரமான சில செயல்பாடுகளை எல்லாம் நான் தினசரி சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நிகழ்வுகளோடு ஒப்பிடுகையில் நீ ஒரு சின்ன குழந்தை. உன்னைப் பார்த்து நான் ரசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் உன்னிடம் பயமுறுத்தக்கூடிய அளவுக்கு ஒன்மே இல்லை. பயமுறுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீ விரும்பினால் நீ ஒரு பெண்ணை சந்திக்க வேண்டும். அவள் வேறு யாரும் அல்ல. என் மனைவிதான் அவள். அவளை மட்டும் நீ சந்திப்பாயேயானால் நீ புரிந்து கொள்வாய். நீ ஒன்றுமேயில்லை என்பதை. அவளோடு ஒப்பிடுகையில் நீ ஒரு குழந்தை.”

அந்த பேயின் கண்களில் நான் கண்ணீரைக் கண்டேன். அது பரிதாபமாக நடந்துசென்றதை பார்த்த போது பாரதி ராஜா படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பின்னணி இசை ஒலித்தது. ஆம் அந்த இசையை கேட்டு தான் பயந்துபோய் விழித்துக் கொண்டேன். அதிர்ந்து போன நான் அப்பொதே கடவுளிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

“கடவுளே அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதானால் 3000 வாட்ஸ் மின்சாரத்தை என்மேல் பாய்ச்சு நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அறிவுகெட்டத்தனமாக இது போன்ற அதிர்ச்சிகளை மட்டும் கொடுக்காதே” என்று.

……………………………………

உணர்ச்சி வசப்பட்டு அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டேன். அவர் எனது வக்கீல் தனசேகரன். அவர் எதார்த்தமாக கூறிய அந்த வார்த்தைகளை கேட்ட போது எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி தோன்றிவிட்டதை போன்றதொரு எண்ணம் ஏற்பட்டது. அவர் கூறினார் உங்களுக்கு என்னால் டைவர்ஸ் வாங்கித்தர முடியும் என்று. ஆபத்பாண்டவன் என்று எழுதி அதன் அருகில் ஈக்வல் டூ என்று போட்டால், நான் யோசிக்காமல் அதன் பக்கத்தில் எழுதிவிடுவேன் திரு. தனசேகரனின் பெயரை. அவர் என்னைக் காக்க வந்த மெசையா என்றே கருத வேண்டியிருந்தது. அவருக்காகத்தான் நான் இவ்வளவு நாளும் காத்துக் கொண்டிருந்னோ என்னவோ. அவர் என்னை கடைந்தேற்றுவார் என்ற நம்பிக்கை ஔ¤ எனக்குள் தோன்றி விட்டது. அவர் கூறினார்.
“நான் கொடுக்கும் வௌ¢ளைக் காகிதத்தில் உங்கள் மனைவியின் கையெழுத்தை எழுதி வாங்கி வந்துவிட்டீர்களேயானால் அது போதும் உங்கள் டைவர்சுக்கு”

என்வாழ்வின் பொற்காலம் தொடங்கப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா. என் மனைவி ஒருவாரத்திற்கு அவளது அம்மா வீட்டிற்கு சென்றிருப்பதை போல் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஆனால் இந்த இடைப்பட்ட காலங்களில் என்னைப் பாதுகாப்பதற்குரிய தற்காப்பு விஷயங்களை குறித்து விவாதித்துவிட்டு (சுமார் 4 மணி நேரம்) சென்றேன்.

ஏன் இவ்வளவு சலிப்படைந்தேன். அவள் வாயை திறந்தால் மூடுவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் எடுத்துக் கொள்கிறாள். அவ்வளவு நீண்டதொரு உரையை கேட்கும் தர்மசங்கடமான நிலைமை நிச்சயமாக ஒரு தண்டனைதான் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. குற்றம் குறை கண்டுபிடிப்பதில் அவள் கைதேர்ந்தவள். இவ்வளவு நுணுக்கமாக குறை கண்டுபிடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். எனது அலுவலக எம்.டி. கூட திருவோடு ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும், குறை கண்டுபிடித்தல் என்ற விஷயத்தில். அவருடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு வேகமும் விவேகமும் என் மனைவியிடம் உண்டு.

திருமணமான புதிதில் அவளை எனது இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு இந்த உலகத்தையே சுற்றினேன் ( நின்ற இடத்திலேயே ஒரு முழு சுற்று ). ஆனால் இப்பொழுது அவ்வாறு நான் செய்ய வேண்டுமேயானால் நான் எனது கைகளை இழக்க வேண்டி வரும் அல்லது ஏதேனும் மிகப்பெரிய விபத்துக்கு உள்ளாகக் கூடும். அந்த எடை பார்க்கும் மிஷினில் அன்று நான் பார்த்தேன். அவள் ஏறி நின்றது தான் தாமதம், அந்த முள் மின்னல் வேகத்தில் சுற்றி எண் 90 ஐக் காட்டியது. நான் பயப்படுவதெல்லாம் இதற்குத்தான். அவள் இப்பொழுதெல்லாம் கோபம் அதிகமானால் தனது கைகளை முறுக்கி காண்பிக்கிறாள். அன்று நான் டிஸ்கவரி சேனில் இந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. 90 கிலோ எடையுள்ள கரடி தனது வலிமையான கைகளால் ஒரு மனிதனை தாக்கும் போது அவனது தாடை எலும்புகள் நொறுங்கிவிடுமாம். என் தாடை எலும்புகள் நொறுங்கிப்போனால் நான் எப்படி வெள்ளைப்பனியாரம் சாப்பிடுவது என்றுதான் எனக்குப் புரியவில்லை.

கணவனை எந்த இந்திய மனைவியும் கைநீட்டி அடிப்பதில்லை என்று யாராவது கூறினால் தயவு செய்து நம்பிவிடாதீர்கள். அதோடு என்னைப்பொறுத்த வரை இது நகைச்சுவையான விஷயமும் இல்லை. அவள் அடுத்த ஜென்மத்தில் ஒரு குத்துச்சண்டை வீரனாகத்தான் பிறப்பாள் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமே இல்லை. அதற்கு இந்த ஜென்மத்திலேயே தனது பயிற்சியை ஆரம்பித்துவிட்டாள். ஆனால் நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் என்றுதான் தெரியவில்லை. அவளது பயிற்சிக்குரிய பொருளாக கடவுள் என்னைத் தேர்தெடுத்ததில் கடுமையான உள்நோக்கம் இருந்திருக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால் இந்தய விஷயத்தில் நிச்சயமாக நேர்மை இல்லை. போன ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு இந்த ஜென்மத்தில் கொடுமைகளை அனுபவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அவர் மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால் இதுகுறித்து வழக்கு தொடரலாம்.

அழகு தேவதையாக மனைவி இருக்க குரங்கு போன்ற மற்றொரு பெண்ணை தேடும் அல்ப்பத்தனமான ஆண்களின் வரிசையில் என்னை நிச்சயமாக சேர்க்க முடியாது. ஏனெனில் நான் ரசித்தது நடிகை நயன்தாராவை. எப்படி முடியும் ரசிக்காமல் இருக்க. நானும் மனதளவில் நேர்மையாக இருக்க எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன். ரசிக்காமல் இருக்க முடியவில்லை. என்மனைவி என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் (சண்டையிட்டுக்கொண்டிருக்கும்) வேலையில் என்முகத்தில் ஒளி வீசுகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்தான். அவர் இயல்பாக என்னை ஆக்கிரமித்துவிட்டார். இந்த கொடூரமான ஒப்புதலுக்காக மன்னிக்கக் கூடிய அளவுக்கு மனம் உடையவர்களுக்கு மன்னிப்பதற்குரிய வாய்ப்புகள் தாராளாமாக அளிக்கப்படுகிறது. சுருக்கமாக மன்னித்து விடுங்கள்…..

இவை எல்லாவற்றையும் விட ஒரு மறைக்கப்பட்ட விஷயத்தை இப்பொழுது உடைகக் வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருங்கள் இருமுறை எச்சிலை விழுங்கிக் கொள்கிறேன். எனது தொண்டை வறண்டுவிட்டது. அவர் ஒரு (அதாவது என் மனைவி)….. அவர் ஒரு…… (என் கால்கள் நடுங்குவதால் நான் ஒரு தொடைநடுங்கி என்ற முடிவுக்கு யாரும் வந்து விட வேண்டாம்)…. அவர் ஒரு…..
முற்போக்கு எழுத்தாளர்.

அவரது மொழியாற்றலை பார்த்து மயங்கித்தான் அவரை மணந்து கொண்டேன். அவரால் அழகான காதல் மொழிகளை மட்டுமே பேச முடியும் என்று நான் நம்பயிது, எனக்கு கடவுளால் விரிக்கப்பட்ட வலை என்று இப்பொழுதுதான் தெரிகிறது. அதில் சிரித்துக் கொண்டே போய் விழுந்துவிட்டேன் என்பதை பற்றி நினைத்துப் பார்க்கும் பொழுது. கடவுளே உம்மை கொலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அந்த குழுவில் நானும் ஒரு ஆளாக இருப்பேன் என்பதை இப்பொழுதே பதிவு செய்ய விரும்புகிறேன். திருமணத்திற்கு முன் என் தந்தையின் பேரின் முதல் எழுத்தை இனிஷியலாக போட்டுக் கொண்டேன். ஆனால் இப்பொழுது எனது வாய்ப்புகள் பறிக்கப்பட்டு விட்டன. எனது மகனின் பெயருக்கு முன்னாள் எனது மனைவியின் முதல் எழுத்துதான் இனிஷியலாக உள்ளது. குறைந்த பட்சம் இரண்டாவது எழுத்தாக எனது இனிஷியலை சேர்க்க கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை கண்ணீரும் , கம்பளையுமாக தெரிவித்துக்கொள்கிறேன். அவர் கேட்கிறார்.

“ஏன் இந்த ஆணாதிக்க சமூகம் திருமணத்திற்கு பிறகு மனைவியின் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக சேர்த்துக் கொள்ளக் கூடாது”

நல்ல வேளை நயன்தாரா மட்டும் இல்லையென்றால் யார் என் கண்ணீரை துடைத்திருப்பார்கள் அன்று ஏற்பட்ட கனவில். மன்னிக்கும் குணமுடையோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பொதுவாக எல்லா ஆண்களுக்கும் ஏற்படும் ஆசைதான் எனக்கும் ஏற்பட்டது. என் மனைவிக்கு ஆசையாக (வெகு நாட்களுக்குப் பிறகு சமாதான முயற்சியாக) ஒரு சேலை என்னால் வாங்கிக் கொடுக்கப்பட்டது. அதில் ஆணாதிக்கம் ஒளிந்திருக்கும் என்பதை நான் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவில்லை. சுமாராக 90 கிலோ எடை கொண்ட அவரது உடல் எடைக்கு ஆண்கள் அணியும் சட்டை, பேண்ட் அவ்வளவு நன்றாக இல்லை என்பதை என்னால் நினைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. அதைப்பற்றி விவாதிப்பதற்கு எல்லாம் ஒரு முரட்டுத் துணிச்சல் வேண்டும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அன்றிலிருந்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் தெரு முக்கு கடையைச் சேர்ந்த ஆடை தைக்கும் தொழிலாளி. அவர் நினைத்திருக்கலாம் தான் ஒரு கூடாரம் தைக்கும் தொழிலாளி இல்லை என்று. ஆனால் வருமானம் என்று வந்துவிட்டால் இந்தியத் தொழிலாளர்கள் எதற்கும் துணிந்து விடுகிறார்கள்.

எனக்கு கடவுள் நம்பிக்கையில் கடுமையான குளறுபடிகள் இருப்பினும், ஒரு விஷயத்தை கண்டிப்பாக நம்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அவர்தான் சக்தி வாய்ந்த சனி பகவான். பிரபலமான அந்த ஜோஸியர்தான் இந்த நம்பிக்கைக்கு காரணம். பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் அவர் தோன்றுவார். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் சனி பகவான் பீடிப்பார் என்ற அவரது நீண்ட உரையைக் கேட்டு குழம்பிப் (நியாயமாக பயந்து) போன நான், என் வாயில் அமர்ந்திருக்கும் சனிபகவான் குறித்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். அவர் என் நாவின் மூலமாக இவ்வாறு பேசிவிட்டார்.

அது வீட்டு வேலை செய்வதைப் பற்றியதாக இருந்தது. என்னால் பேசப்பட்டது இதுதான்.

“இந்தியப் பெண்களுக்கு வீட்டு வேலை செய்வது என்பது ஆகச் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கிறது. உனது (என் மனைவியை ரொமான்சாக பார்த்து) உடல் எடை குறைய முயற்சி செய்து பார்க்கலாமே”

ஆம், அந்த என் கடைசி ரொமான்ஸ் பார்வை குறித்து இன்றும் என்னால் நினைவு கூற முடியும். ஆனால் எனக்கு என்னவோ அந்த துணிகளை துவைப்பதுதான் மிகுந்த சிரமமாக உள்ளது. எனது உடல் எடை ஏற்கனவே குறைந்துதான் இருக்கிறது என்பதை என் மனைவியிடம் நான் எப்படி நிரூபிப்பது என்று எனக்கு புரியவே இல்லை. நடிகை நயன்தாரா நன்றாக மீன் உணவு சமைப்பார் என்று ஒரு பேட்டியில் கூறியதை நினைத்துப் பார்க்கையில் என்னால் என் கனவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் என் மனைவிக்கு மீன் உணவு சமைக்கும் பொழுதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன் என்று நயனுக்கு எழுதிய கடிதத்தை அவர் படித்திருப்பாரா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சிறப்பான கண்டுபிடிப்பை உலகுக்கு எடுத்துரைக்க ஆசைப்படுகிறேன். சப்பாத்தி மாவு பிசையும் போது நமது ஆர்ம்ஸ்கள் முறுக்கேறும் என்பதை ஜிம்முக்கு செல்லும் இளைஞர்களுக்கு கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது சேலையை அடித்து துவைப்பதை விட கடுமையான உடற்பயிற்சி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் நான் மறைமுகமாக ரகசியமாக, யாருக்கும் தெரியாமல் பெருமை கொள்ளத்தக்க ஒரு விஷயமும் உண்டு, அவரது கழுத்தில் பல்வேறு அணிகலன்களுக்கு மத்தியில், என்னால் ஒரு காலத்தில் அணிவிக்கப்பட்ட திருமாங்கல்யமும் இருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது பெருமிதத்தில் கண்கள் கலங்கி விடுகின்றன. இந்தியப் பெண்கள் அணிகலன்கள் மீது வைத்திருக்கும் ஆசையை நான் ஆதரிக்கிறேன். சவரனுக்கு 12 ஆயிரம் ரூபாய் செலவானால்தான் என்ன?. மனைவிக்கு ஒருசவரனில் நகை வாங்கிக் கொடுக்காதவன் மனிதனே இல்லை. ஒரு வேளை அந்த அணிகலன் திருமாங்கல்யமாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகள் எப்பொழுதும் நம்பிக்கையை தருகின்றன என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.

ஒருமுறை அவரால் எழுதப்பட்ட கவிதை ஒன்று எனக்கு படித்துப் பார்க்க கொடுக்கப்பட்டது. அதை அவரே விரும்பி கொடுத்தார் என்பதை அவரது இன்முகம் உணர்த்தியது. நான் மதிக்கப்படுவது என்றாவது ஒருநாள் நடக்கும் விஷயம். எனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் இவ்வாறு சொல்லிக் கொள்ளலாம். நான் நீந்திக்கொண்டிருந்தேன் மகிழ்ச்சிக் கடலில். ஆனால் என்னுடைய ஒருமணி நேர முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்காமல் பொய்விடுமோ என்கிற பயம் என்னை கவ்விக் கொண்டது.

அந்த ஒருபக்க கவிதை இவ்வளவு கடினமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த கடவுளுக்கு எனக்கு சோதனை அளிப்பதே வேலையாக போய்விட்டது. இருப்பினும் நான் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.

“கடவுளே எனக்கு புரிய வைத்துவிடு, தயவு செய்து என்னைக் காப்பாற்று”

என்னை காப்பாற்ற அவரால் முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு நான் எப்படி கொடுப்பது. அவர் வழக்கமாக என்ன செய்வார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். கைவிட்டுவிடுவார், ஆனால் இந்த முறை அவரை சபிக்கத் தோன்றவில்லை. காரணம் அவராலும் இக்கவிதையை புரிந்து கொண்டிருக்க முடியாது.

2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கொட்டிய வியர்வையை துடைத்தப்படி அமர்ந்தேன். எது நடக்கக் கூடாது என்று பயந்து நடுங்குவேனோ அதுதான் வழக்கமாக நடக்கும். விதிப்படி அவ்வாறே நடந்தது. கவிதையை பற்றிய கருத்து கணிப்பு கேட்கப்பட்டது. நன்றாக இருக்கிறது என்று கூறினால் எங்கு அதைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்துவிடுவாரோ என்கிற பயத்தில், சுமாராக இருப்பதாக கூறிவிட்டேன். ஆனால் இந்த ஆணாதிக்க உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கோபம் எனக்கே வந்துவிட்டது. அவர்கள் பெண்களின் கலை உணர்ச்சியை, அறிவு மேம்பாட்டை மதிப்பதே இல்லை. அவர்கள் சுயநலவாதிகள். அவர்கள் ஆக்கிரமிப்புவாதிகள்…

ஆனால் ஒன்றின் மீது எனக்கு அபார நம்பிக்கை வந்துவிட்டது. ஏழரை நாட்டு சனி என்பதெல்லாம் உண்மையில்லை, பொய், ஏமாற்றுவேலை என்று என் முன்வந்து யாரும் கூறிவிடாதீர்கள், சனிபகவான் வாழ்க.

எவ்வளவுதான் வாழ்க்கையில் எதிர்வினைகள் இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாச்சார விதிமட்டும் கடைபிடிக்கப்படாமல் இருந்திருக்குமேயானால் குடும்ப அமைப்பு என்கிற ஒன்று சிதைந்தே போயிருக்கும். அடிமனதில் ஒரு பயம் இருந்த கொண்டுதானிருக்கிறது பிரிந்து விடக்கூடாது என்பதில். இதற்கு காரணம் கலாச்சாரம் இல்லை என்று கூறிவிட முடியாது.

ஆனால் என் மனைவியை ஏமாற்றி கையெழுத்து வாங்கிய விவாகரத்து காகிதத்தை கிளித்தெறிய நினைத்ததற்கு மற்றொரு குரூரமான காரணமும் உண்டு. எனக்கு மாமியார், மருமகள் சண்டையில் என்றுமே அபார நம்பிக்கை உண்டு. எனது மகனுக்கும் என்றாவது ஒருநாள் திருமணம் நடக்கும். இரு பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சண்டையிடப்போவதை நான் பார்க்கத்தான் போகிறேன். என் மனைவி அன்று ஒரு பெண்ணாதிக்கத்தை எஎதிர்ர்த்து போராடப் போகிறார். அதில் தன் சொந்த ஆதிக்கத்திற்கான இவ்வளவு நாள் நியாயமற்ற போராட்டம் அப்பட்டமாக வௌ¤ப்படப்போகிறது. அன்று ஆணாதிக்கம் என்பது ஒரு சாக்காக பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது யாராலும் கவனிக்கப்படாமல் நிரூபணமாகப் போகிறது. அன்று எல்லோருக்கும் இயல்பாக உள்ள ஆதிக்க மணப்பான்மை உணரப்படப்போகிறது. என்ன இருந்தாலும் என் மனைவி எனக்கு அழகுதான். அதில் எவ்வித சந்தேகமும் எனக்கில்லை.

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்