ஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

பாவண்ணன்


எங்கள் ஊரில் ஆடிக் கொண்டிருந்த குண்டு ஆட்டத்துக்கு ‘வச்சா ‘ என்று பெயர். பெரிய வட்டமிட்டு, ஆட்டத்தில் பங்கு கொள்கிற பிள்ளைகள் எல்லாரும் ஆளுக்கு இரண்டோ மூன்றோ குண்டுகளை அதில் வைக்க வேண்டும். ஆட்டத்துக்கு ஆறுபேர் என்றால், ஆளுக்கு மூன்று என்கிற கணக்கில் வட்டத்துக்குள் 18 குண்டுகள் இருக்க வேண்டும். தொலைவில் ஒரு குறிப்பிட்ட எல்லையிலிருந்து ஆளுக்கொரு குண்டை வட்டத்தை நோக்கி வீச வேண்டும். வட்டத்துக்கு நெருக்கமாக விழும் குண்டுக்குச் சொந்தக் காரன் முதலில் ஆடலாம். வட்டத்துக்குள் உள்ள குண்டுகளை அவன் அடித்து வட்டத்தை விட்டு வெளியே தள்ளத் தள்ள ஆடுபவனுக்கு அக்குண்டுகள் சொந்தமாகும். அவனது குண்டு வேறொருவனால் அடிக்கப்பட்டு விட்டால் ஜெயித்த குண்டுகள் அனைத்தும் அடித்தவனுக்குச் சொந்தமாகி விடும்.

என் இளமைக் காலத்தில் பிரபலமாக ஆடப்பட்டுக் கொண்டிருந்த இந்த ஆட்டத்தில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்தவன் நான். ஒரு நாளும் என் விரல்களால் இலக்கை நோக்கிக் குண்டைச் செலுத்த முடிந்ததில்லை. துல்லியமாகக் குறி பார்க்கும் தருணத்தில்தான் என் விரல்கள் வளையும், நடுங்கும், திசைமாறிப் போகும். நான் தோற்றபடி இருந்ததைப் போலவே, ஜெயித்தபடியே இருந்தவன் பரசுராமன். குள்ளன். ஆனால் கெட்டிக்காரன். செல்லப்பன், ஜெயபாலன், அன்பழகன், கஜேந்திரன் என இன்னும் பல பேர் இருந்தார்கள். சமயம் கிட்டும் போதெல்லாம் குண்டுக்கும் விரலுக்கும் கூடி வர வேண்டிய நுட்பங்கள் பற்றிச் சொல்லித் தருவார்கள். தோற்பவன் என்கிற இளக்காரம் எதுவுமின்றி, பக்குவமாக செய்முறை பற்றி எடுத்துச் சொல்கிற அவர்களுடைய பெருந்தன்மையை நினைத்து மனசுக்குள் மகிழ்ச்சி கொள்வேன். நட்பின் அடையாளமாக அதை எண்ணிப் பூரிப்படைவேன்.

வல்லவர்களான சில குண்டடித் தோழர்கள் எங்களை விட வயதில் மூத்த அண்ணன்மார்களுடன் ஆடுவார்கள். அண்ணன்மார்களின் ஆட்சேபணைகளையும் மீறி என்னையும் அணியில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ள அனுமதி வாங்கித் தருவார்கள். அது என்னைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய சலுகை. வில்போல வளைந்து கொடுக்கிற அவர்கள் ஆட்காட்டி விரலின் முன்னால் என் வணங்காமுடி போல நிமிர்ந்து நிற்கும் என் ஆட்காட்டி விரலைப் பார்க்க அருவருப்பாக இருக்கும். ஐந்து ஜாண் தொலைவில் இருக்கிற குண்டைக் குறி பார்த்து வீழ்த்தத் தெரியாத இந்த விரலை ஒடித்துப் போட்டால் என்ன என்று ஆத்திரம் குமுறிக் கொண்டு எழும். ஆட்டங்களில் நிகழும் தொடர் தோல்விகளால் இந்த ஜென்மம் எடுத்ததே வீண் என்று மனம் நொந்து சோர்ந்து போவேன். அப்போதெல்லாம் நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளே இதமாக இருக்கும்.

பெரியவர்களுடனான ஆட்டம் ஒன்றில் ஒருநாள் என்னையும் சேர்த்து விட்டான் பரசுராமன். வச்சாவில் நாற்பது குண்டுகளுக்கும் மேல் இருந்தன. திடாரென ஆட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த தமிழரசி அக்கா ஜெயிப்பவனுக்கு ஒரு மாம்பழம் தருவதாக அறிவித்து விட்டாள். தன் சாமர்த்தியமால் எல்லாரையும் வீழ்த்தி விட்டான் பரசுராமன். 39 குண்டுகள் அவன் வசமாகி விட்டன. ஜலங் ஜலங் என்ற அவனது கால்சட்டைப் பை ஆடிக் கொண்டிருந்தது. அவனும் நானும் மட்டுமே எஞ்சினோம். இன்னும் ஒரே குண்டு பாக்கி. அவனுடைய இலக்கில் அது தப்பி விட்டதால் நான் ஆட வேண்டியிருந்தது. ஏஆடுடா ஆடுஏ என்ற அவன் ஊக்கப்படுத்தினாலும் அவன் இதழ்களில் ஓடி மின்னிய சிரிப்பையும் கிண்டலையும் என்னால் படிக்க முடிந்தது. அப்போதே என் மனம் உடைந்துவிட்டது. ‘நானும் ஒரு ஜன்மமா ? ‘ என்று என்னையே பழித்துக் கொண்டேன். வேண்டாவெறுப்பாக வச்சாவில் இருந்த குண்டை இலக்காக்கி அடித்தேன். என் குளறுபடிகளையும் மீறி வச்சாவில் குண்டை விடுவித்துக் கொண்டு வெளியே வந்தது என் குண்டு. ஆட்ட விதியின்படி அடுத்து மிஞ்சியிருந்த ஆள் என்கிற வகையில் அவன் குண்டை அடிக்க வேண்டியது என் கடமையாயிற்று. ஏறத்தாழ இருபதடி தொலைவில் அவன் குண்டு கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது. அவநம்பிக்கையுடன் நான் குறிபார்த்து அடித்த குண்டு மிகச் சரியாக முதன்முறையாக அவன் குண்டை அடித்துத் தள்ளியது. நம்ப முடியாத சந்தோஷத்தில் என் முகத்தில் சிரிப்பு படர ஆனந்தத்துடன் தமிழரசி அக்காவைப் பார்த்தேன். எதிர்பாராத கணத்தில் என்னை நோக்கி முன்னேறிய பரசுராமன் சட்டென என் கன்னத்தில் அறைந்தான். ‘திருட்டு ஆட்டமா ஆடறே ? இங்க இருக்கற குண்ட எடுத்து இங்க மாத்தி வச்சி அடிக்கறியா ? ஆடத் தெரிஞ்சா ஆடு. இல்ல, ஓடிப் போயிடு ‘ என்று மிரட்டினான். சட்டென திரும்பி தமிழரசி அக்காவின் கையில் இருந்த மாம்பழத்தைப் பிடுங்கித் தரையில் வீசி காலால் மிதித்துத் துவைத்துக் கூழாக்கினான். அதன் மீது எச்சில் துப்பினான். அதற்கப்புறமும் ஒரு கட்டுக்கு வராமல், அவன் முகமும் தசையும் துடித்துக் கொண்டிருந்தன.

அந்த அவமானத்தோடு என் குண்டு விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகி வந்த பரசுராமன் நண்பனென்றும் பாராமல் என் கன்னத்தில் அறையும் அளவுக்கு முரடனாக்கியது எது என்று பல இரவுகள் யோசித்தபடி இருந்தேன். விடை கிடைக்கவில்லை. தோல்வியின் ஆத்திரமாக இருக்கலாம் என்று நானே விடையைக் கற்பித்துக் கெண்டேன். பல ஆண்டுகள் கழிந்த பிறகு, தற்செயலாகப் படிக்க நேர்ந்த கு.அழகிரிசாமி எழுதிய ‘இரண்டு பெண்கள் ‘ கதையைப் படித்த போது அந்தப் புதிரின் விடை விளங்கியது. என் கேள்விக்குப் பதிலைச் சுட்டிக் காட்டிய கதையை அதற்கப்புறம் மறக்க இயலவில்லை.

கதையில் இடம்பெறும் இளைஞன் வாடகைக்கு ஒண்டிக் குடித்தனம் நடத்துகிறான். திருமணம் ஆகாத இளைஞன். யாரிடமும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் நாட்கள் நகர்கின்றன. இளைஞன் வீட்டுக்குப் பிரபல பத்திரிகையில் பணிபுரியும் நண்பர் ஒருவர் வருகிறார். திடுமென எதிர்வீட்டுக்காரர் அறிமுகமாகிறார். அவர் வீட்டுச் சிறுவனும் இளம்பெண்ணும் அறிமுகமாகிறார்கள். புத்தகங்கள் முதல் உணவுகள் வரை கைமாறுகின்றன. ஒருநாள் மகள் எழுதும் கதைகளைப் பிரசுரிக்க முயற்சி செய்யும்படி பிரதிகளைக் கொண்டு வந்து தருகிறார் பெண்ணின் அப்பா. இளைஞனின் சிபாரிசால் கதைகள் பிரசுரமாகின்றன. அந்தப் பெண் சற்றே ஒல்லி, சற்றே கருப்பு. சற்றே குறைவான அழகு. இருவரும் பேசுவதைப் பற்றியோ, ஒன்றாக வீட்டை விட்டுச் செல்வதைப் பற்றியோ, திரும்புவதைப் பற்றியோ , ஒரே குடையில் இருவரும் திரும்புவதைப் பற்றியோ கூட யாருக்கும் எந்தப் புகாரும் இல்லை . சகஜமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அதே தெருவில் உள்ள வேறொரு வீட்டில் உள்ள அழகான பெண்ணின் தந்தையாருக்கு அவசரமாகத் தட்டச்சு இயந்திரம் தேவைப்படுகிறது. தானே சுமந்து போய்க் கொடுத்து விட்டு மறுநாளும் தானே போய் வாங்கி வருகிறான் இளைஞன். அந்த வீட்டில் வசிக்கும் அழகான பெண்ணுடன் பேசும் வாய்ப்பும் நேர்கிறது. திரும்பியதும் வீட்டுக்குச் சொந்தக்காரர் கடுமையான தாக்குதலை நிகழ்த்துகிறார். அவனது நடத்தையைக் குற்றம் சாட்டி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்கிறார். அவருடன் மற்ற தெருக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து கொள்கிறார்கள். சற்றே நிறம் மங்கிய பெண்ணும் திட்டுகிறாள். மனவருத்தத்துடன் வெளியேறி நண்பரிடம் தஞ்சம் புகுகிறான் அவன். தெருக்காரர்களின் கோபத்துக்குக் காரணம் புரியவில்லை அவனுக்கு. நண்பர் தெளிவாகச் சொல்லிப் புரிய வைக்கிறார்.

அழகின்பால் எல்லாருக்கும் அளவு கடந்த நட்டம் இருக்கிறது. அதே சமயத்தில் அழகை நெருங்க முடியாத தயக்கமும் இருக்கிறது. பலாட்டத்துடன் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்து விடுகிறவர்கள் நெருங்கி விடுபவர்கள் மீது கடும் கோபம் கொள்கிறார்கள். அவர்களது இயலாமையே ஆத்திரமாக வெடிக்கிறது. அடைய இயலாதவன் அடைபவனைக் கண்டு பொங்கி எழுகிறான்.

இப்படி, தெளிவாக உரித்துச் சொன்னதில் கதையின் சூட்சுமம் சற்றே குலைந்து போனாலும் அழகிரிசாமியின் முக்கியமான கதைகளில் இது ஒன்றாகும். மனித உறவில் புரிந்து கொள்ள முடியாத புள்ளியில் நிலைகொள்கிற கதை. எவ்வளவு வெளிச்சத்தை வீசினாலும் துல்லியமாக பார்க்க முடியாத ஒரு புள்ளி, மனம். அதன் புதிர்களை அவிழ்க்க முயன்ற மானுட முயற்சிகளே இலக்கியமும் தத்துவமும்.

அடைய முடியாத ஆசை என்பது மானுட வரலாற்றைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது. அழகு மட்டுமல்ல, மண், பெண், உயிர் என எல்லாமே இதிலே அடங்கும். சீதையின் அழகில் மனம் பறிகொடுத்த மாமன்னன் ராவணன் அவளைக் கடத்தி வந்து நெருங்கவும் முடியாமல் விடவும் முடியாமல் காலமெல்லாம் அவஸ்தைப்பட்டு போரில் இறங்கி உயிர் துறந்தான். மணிமேகலையின் அழகில் மயங்கிய உதயணன் அவளைத் துரத்திக் கொண்டே அலைந்தான். இந்தத் துரத்தலுக்கு அஞ்சித்தான் காரைக்கால் அம்மையாரும் ஒளவையாரும் அழகைத் துறந்து முதுமையை வேண்டிப் பெற்றுக் கொண்டார்கள் போலும்.

*

மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர் கு.அழகிரிசாமி. கரிசல்காட்டுக்காரர். நாற்பதுகளை ஒட்டிய வயதில்லேயே மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. அவர் மறைவுக்குப்

பிறகே அவருக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப் பட்டது. விருதளிக்கப்பட்ட அன்பளிப்பு

என்னும் சிறுகதைத் தொகுப்பில் ‘இரண்டு பெண்கள் ‘ சிறுகதை இடம் பெற்றுள்ளது.

Series Navigation