அவள் / நதி தேடும் கரை

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

முகுந்தராஜ் முனிசாமி


முதல் தேதி சம்பளக்காரனின் சந்தோஷமவள்.
சில நேரங்களில் சந்தோஷமாகவும்,
சில நேரங்களில் சங்கீதமாகவும்,
பல நேரங்களில்,
அடுத்த தவணைக்காய்
இங்கே என் இதய முலையில உட்கார்ந்திருப்பவள்.

என்னை கடந்து போகும் எவளாவது
என் கவனம் சிதறடிக்கையில்,
ஒரு முயல் குட்டியாய்
முலையிலிருந்து ஓடி வருவாள்.
*ஹே, பார்த்தாயா ?*
என்னைப் போலவே அவள் என்பாள்.
உன்னைப் போல வேறொருவர்
இல்லையடி பெண்ணே.
மலர்கள் எல்லாம் மணம் வீசும்தான்.
(ஆனால்) எனக்கான (சு)வாசம் நீ தானே.
என்றிவளை உட்காரச் சொல்லிவிட்டு
வேறிடம் நகர்ந்து போவேன்.

எதிர்படும் கணங்களில்
இயல்பாய் பழகுகையில்
சற்றும் உணரா சந்தர்ப்ப பொழுதுகளில்,
சற்றேறக்குறைய
இவளுக்கு தோழியாய் பொருந்துவாளோ அவள் ?
சஞ்சலம் கொண்டே சற்று நிதானிக்கையில்…
பூக்கள் பார்க்க வருபவனை பார்த்து
பறிக்க வருகிறானோ ?
பதறி ஓடியவர் பலர்.
கலை முதல் கயல் வரை.

எல்லா பிம்பங்களையும் பொருத்திப் பார்த்து,
எதுவும் உனக்கேற்ற மாதிரியில்லை என்றே,
துடைத்து அழித்து,
இன்னும் கூட
தேடிக் கொண்டிருக்கிறேன் பெண்ணே
உனக்கான தோழியை.

எனை அழிக்கும் புகை
உள்ளிருக்கும் உனை தொடாமல் செய்ய
வேறேதும் வழியிருக்கிறதா
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

எப்படி இருப்பாள்,
உனக்குள்ளே குச்சு வீடு கட்டி
குடியிருக்கும் அவள் ?
+சிம்ரனா, சிநேகாவா+ சீண்டிப் பார்க்கும் சிநேகிதர்கள்.

எப்படி சொல்வேனடா ?

எப்பொழுது உள் நுழைந்தாள் ?
எனக்கு சரியாக ஞாபகமில்லை.
பரண் மேல் இருக்கும் பழைய பெட்டியில்,
என் ஆசானொருவர் தேர்வு அடைகாத்து முட்டையிட்ட,
உடைந்துவிட தயாராக இருக்கும்,
பழுத்த வெள்ளைத்தாளில் தான்
கிறுக்கியதாய் ஞாபகம்.
அதில் தேதியிட்டிருப்பேன் இல்லையா ?
இரு பார்க்கிறேன்.
அடடா, முடிவாகச் சொல்ல முடியவில்லையே ?
அந்த தேதிக்கு முன்பா, பின்பா ?
இந்த தேதிகளே இப்படித்தான்.
காஷமீர் எல்லைக்கோட்டில்
இந்தியப்பகுதி எங்கிருந்து தொடங்குகிறது
எவரால்தான் சொல்ல முடியும் ?
சரி, சமாதான கோட்டைப்போல்
நான் கிறுக்கிய நாளிலிருந்தே தொடங்குவோம்.

சூரியனுக்கே பாதம் சுடும் ஒரு கோடை.
சுட்ட பழமாய் மா பழுத்திருக்க,
சுற்றமெல்லாம் அதை அறுத்து,
கூடைகளை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
சோம்பேறியாய் நான் மட்டும்
ஒரு கிளையில் படுத்திருந்தேன்.
அந்த குயில தோப்பு வழியாய்
ஒரு கிளி சைக்கிள் இறக்கை கட்டி பறந்துபோனது.
கடைக்காரர் பெண் என்றே ஞாபகம்.

உனக்கான முதல் வித்து, அதுவென்றே ஞாபகம்.
இப்படி பார்ப்பவரிடமெல்லாம்,
உரம் எடுத்துப் போட்டு
விழுதுவிட்ட ஆலமரமாய்
விளைந்துவிட்டாய் என்னுள்.

இரண்டாய் போன வாழ்க்கை.
இயல்பு ஒன்றாய்,
எதிர்பார்ப்பு ஒன்றாய்.
எதுவரினும் ஏற்றுக்கொள்வேன்.
அதுவரை இந்தக்கனவுகள் பரமசுகம்.

அதிகாலைப் பொழுதில்
அநியாயமாய் என் தூக்கம் கலைப்பவள் நீ.
இப்படி முத்தச் சேவல் கூவித்தான்
நம் பொழுது விடியுமெனில்,
நான் இன்னும் கொஞ்ச நேரம்
தூங்குவதாய் நடிக்கிறேனே ?
நான் கண் விழிக்கும் வரை
சேவல் கூவாதா என்ன ?

உலக அவசரத்தின்
ஒரு துளியும் அறியா, சிறு குழந்தையாய்
மொத்தம் முடி நீ தூங்குகையில்,
முகம் மட்டும் போர்வை விலக்கி,
ஜன்னலுக்கு உள்ளேயும், வெளியேயும் செவ்வானம்,
ஆயிரம் ஒற்றுமைகள்,
கவிதைகளாய் எழுதிவிட மாட்டேனா என்ன ?

கூவிய சேவல் குடிக்க தேநீர் கொடுக்க,
குறைந்த இனிப்புக்காய் நான் கொஞ்சம் தயங்க,
+நிஜமாகவா ?+, நீ வாங்கி அருந்த,
இப்போது தேனல்லவா கலந்துவிட்டாய்,
இன்னுமா கசக்கும் தேநீர் ?

கவிதை முடித்து
நான் காபி கலந்து வர,
கண் விழிக்காமலே இன்னும் நீ இருக்க,
காற்று உன் கேசம் கலைக்கிறதே,
கவனமாய் மீண்டும் நான் போர்த்திவிட
காபி ஆறிப்போனது.
இத்தனை கவிதைகள் எனக்கு கிடைக்கும்போது
நான் அத்தனை காபி கூட போடமாட்டேனா என்ன ?

அலுவலக அவசரங்கள், நம்
அன்றாடங்களை ஆக்கிரமிக்கும்
அந்த வேளையிலும்,
அழகியலின் தூவலை
அடிக்கடி நமக்குள்
விதைத்துப் போவாய் நீ.

இந்தியப் பெண்கள் சேலைகளால் முடியும்,
முடாமலே விட்டுப் போகும்
அந்த பரபரப்பு பிரதேசத்தில்,
நான் உன்னை கடக்கும் சமயலறை கணங்களில்,
ஒரு சிறு குறும்புக்கு,
நீ கொடுக்கும் சப்தம்,
சிணுங்கலா, சலிப்பா ?

காலைப்பொழுதில்
வாணலிக்கும், வானொலிக்கும் நடந்த யுத்தத்தில்,
உன் விரல் அல்லவா
ஆப்கன் அப்பாவியைப் போல் மாட்டிக்கொண்டது.
இப்படித்தான் நீ சமைப்பாய் என்றால்
நான் பட்டினி இருந்துவிட்டுப் போகிறேனே.

அலுவலக அழுத்தம் தாங்கமுடியாமல்
ஆசுவாசப் படுத்திக்கொள்ள வெளியே வருகிறேன்,
*ஆரக்கிள் வேலை செய்ய மாட்டேங்குதுடா*
நேற்றிரவு சொன்ன ஞாபகம் வருகிறது.
அவசரமாய் அழைக்கிறேன் உன்னை,
ஹலோ கூட சொல்லாமல்
*திருட்டு தம் அடிக்கிறயா, கீழே போடு* என்கிறாய்.
என உடலின் எந்த பாகத்தில்
உன் கண்ணை வைத்திருக்கிறாய், சொல்லிவிடேன்.

(உன்னை) சீண்டிப் பார்ப்தற்காக
சிறு சிறு பொய்கள் சொல்கிறேன்.
நைட்டி போட்ட பத்ரகாளியாய்
தலையனை சூலம் கையில் ஏந்துகிறாய்.
அடுத்த சில நிமிடங்ளில்
அந்த அறை முழுவதும்
பாரதிராஜாவின் வெண்ணாடை தேவதைகள்
பஞ்சு உருவத்தில பறந்து கொண்டிருக்கிறார்கள்.

*நித்தம் நித்தம் என்னை நினைத்துக் கொண்டிருப்பாயா ?*
எனக் கேட்டுவிட்டு
என் மெளனம் கண்டு முறைக்கிறாய்.
கேள்வியே தவறாக இருக்கையில்
பதில் எங்கு சொல்வது ?
மறந்தால் அல்லவா நினைக்க வேண்டும்.

நூலறுந்த பட்டமாய்
எனக்குள் நான் அறுந்து போகிற போது,
எத்தனை முறை கொத்தினாலும்
பறவையின் மீது
புன்னகை பூக்களை மட்டுமே சொரியும்
மரமாய் நீ.

ஒவ்வொரு முறையும் வேதனைக்கடலில்
முழ்கி நான் வரும் போது,
அந்த உப்பு நீரைக் கழுவும்
உற்சாக மருந்து எதுவும்
மறைத்து வைத்திருக்கிறாயா,
உன் முந்தானைக்குள் ?

அந்த இமைபரப்பின்
கரு வளையத்துக்குள்
என் காதல் மாட்டிக்கொண்டதாய்
நான் கதறும் போது,
கள்ள சிரிப்பொன்று உதிர்த்து
கவனியாமல் போகின்றாய்.

இயற்கை வலி உன்னை
இம்சிக்கும் நாட்களில்
பூத்து, மறுநாள் வதங்கிய மல்லிகையாய்
என் மடியில் தஞ்சம் அடைகையில்,
இவ்வளவு பெரிய குழந்தையை துவட்டும்
இயற்கை மேல் கோபமாய் வருகிறது.

பக்கத்து மாநிலங்கள் பதவிசாய் திருட,
மின்சாரம் இல்லாமல் போன
சாயங்கால தமிழகம்.
ஒற்றை மெழுகுவர்த்தியை ஓடியாடி தேடுகின்றாய்.
இரண்டு கண்களில் வைத்துக்கொண்டு
எங்கு தான் தேடுவாயோ.

எந்த உரிமைக்காக
எல்லோரும் போராடுகின்றனர் ?
எனக்கானதை எல்லாமே எடுத்துக் கொள்ளேன்,
நான் *பன்னீரா* கவே
இருந்து விட்டுப் போகிறேன்.

கல்யான நாள் பார்த்து
கடுப்படிக்கும் வேலைகள்.
நீ காத்திருப்பாய்
கவனம் இருக்கத்தான் செய்கிறது.
கதவு திறந்தவுடன்
கடுகாய் வெடிப்பாயோ,
கலக்கத்துடன் நுழைகிறேன்.
*இன்னைக்கு இல்லேன்னா என்ன,
எல்லா நாளும் நமது தானே*
இதமான சிரிப்பால் இதயம் தழுவுகிறாய்.
கண்டிப்பாய் நீ சராசரியில்லை.

பரிசு என்ன வேண்டும் ?
பல நாள் கேட்டிருக்கிறேன்.
அந்த ஒற்றை ருபாயைத் தவிர வேறேதும்
உருப்படியாய் கேட்கத் தெரியாதா உனக்கு ?

புரிதலும், அறிதலும்
உன் புன்னகை ஒன்று மட்டுமே.
இன்னும் எவ்வளவு காலம்தான் ஆகும்
உன்னை முழுதாய் புரிந்துகொள்ள ?

கைக்கு எட்டும் தூரத்தில்
நமக்குள் களவாட பொருள் இருந்தும்,
உன் கைவிரல் கடிக்கும் மகிழ்ச்சி
எந்த கன்னக்கோல் தந்துவிடும் ?

இரண்டாய் போன வாழ்க்கை.
இயல்பு ஒன்றாய்,
எதிர்பார்ப்பு ஒன்றாய்.
அதுவரை இந்தக் கனவுகள் பரமசுகம்.

**

Series Navigation

முகுந்தராஜ் முனிசாமி

முகுந்தராஜ் முனிசாமி