அவள் நடந்த பாதையிலே – சாருஸ்ரீ அவர்களின் ‘நான் நடந்த பாதையிலே’

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

புதியமாதவி, மும்பை


“சதமானம் பவதி சதாயுஷ் புருஷ
சதஸ்தேந்த்ரிய ஆயுஷ் வேதேந்திரியே, ப்ரதி திஷ்டதி”

பெண்கள் வேதமந்திரங்களை உச்சரித்தல் கூடாது என்ற கூற்றில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்,
ஆயினும் நான் பல பத்திரிகைகளுக்காகப் பேட்டி எடுத்த அனைத்து வி.ஐ.பி.களையும் மனதார வாழ்த்த
இதை விட சிறப்பாக வேறு வார்த்தைகள் எனக்கு கிடைக்கவில்லை”- என்று தன்னுரையில் சொல்லி
தான் மும்பையில்சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும் அவர்கள் சமூகப்பார்வை குறித்தும்
தன் பார்வையில் பதிவு செய்திருக்கும் நூல் சாருஸ்ரீ அவர்களின் ‘நான் நடந்த பாதையிலே’.

40 நாட்களுக்குள் எழுதி அச்சாகி வெளியிடப்பட்ட நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. நூலின் முதல்பாதி
அவருடைய அக வாழ்வின் பதிவாகவும் மறுபாதி அவரின் சரிபாதியாக வாழ்ந்த திரு. ஸ்ரீனிவாசனின்
மறைவுக்குப் பின் அவர் பத்திரிகை துறையில் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது.
குடும்பம், குழந்தைகள், கணவர், உறவுகள் என்ற வட்டத்திற்குள் மட்டுமே சுற்றி வருகின்ற பெண்ணாகவே வாழ்ந்த சாருஸ்ரீ தன் கணவரின் மறைவுக்குப் பின் தன்னில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிப்பிடும்போது எந்த ஒரு பெண்ணுக்கும் வாழ்க்கை கணவனுடன் முடிந்து விடுவதில்லை என்பதை நுணுக்கமாகபதிவு செய்துள்ளது.
“இதுவரை காலை எப்படி ஆரம்பித்தது, இரவு எப்படி முடிந்தது என்று கூடத் தெரியாமல் குடும்பம், குழந்தைகள்,உரவுகள் என்று அதிலேயே அமிழ்ந்து கிடந்தேன். இனி அந்தக் கூட்டை விட்டு மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்தேன். என் குழந்தைகள் கண்ணம்மா, கார்த்திக் இருவரும் என் நேரடி கண்காணிப்பை எதிர்பார்த்து இருக்கும் வயதைத் தாண்டி விட்டார்கள். மனசு நொந்த இந்த வேளையில் எனக்கு வலுவான ஒரு பிடிப்பு தேவைப்பட்டது. சாரதா என்ற குடும்பத் தலைவி ஒரு எழுத்தாளராக மலர்ந்த தருணம் இதுதான். ஸ்ரீ- யின் சுட்டெரித்த சாம்பலிருந்து ‘பீனிக்ஸ்’ பறவையாக எழுந்துவிட்டேன்… நான் குடும்பம் என்ற வட்டத்தை விட்டு முழுமையாக வெளி வந்துவிட்டேன். என்னால் குடும்பத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க முடிந்தது”

எழுதியவரைக்கும் தன் மனதில் பட்டதை பதிவு செய்ய அவர் தயங்கவில்லை. விசுவின் ‘அரட்டை அரங்கம்’ அப்போது மும்பையில் நடந்தேறிய நிகழ்வையும் அதன் பின் விசுவின் பத்திரிகை நேர்காணலையும் தயக்கமின்றி அவர் எழுதினார். அதை அப்படியே இந்நூலிலும்பதிவு செய்துள்ளார். “விசு, அவர் ஆட்கள், அவர்களுடைய மும்பை ஒருங்கிணைப்பாளர்கள் எல்லாம் காட்டிய பந்தா
இருக்கிறதே! அப்பப்பா, தாங்க முடியாது! .. கொஞ்சம் கூட ரசிக்க முடியாத பட்டிமன்றம், தற்கு லட்சக் கணக்கில் செலவு, வயிறு எரிகிறது” என்று விவரிக்கிறார்.

மும்பையில் சில பெரிய இடத்து தழிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் தொகுப்புரை இருக்கும். இதைப் பற்றி தன் கருத்தை மிகத் தெளிவாகவே முன்வைக்கிறார் சாருஸ்ரீ. “தொகுப்புரையை நல்ல தமிழ் தெரிந்த யாரிடமாவது கொடுக்கலாமே! எதற்கு ஆங்கிலத்தில் தொகுப்புரை அளிக்க வேண்டும்? நான் ஆங்கிலத்துக்கு விரோதி அல்ல. எந்த இடத்தில் ஆங்கிலம் வேண்டுமோ
அங்கு மட்டும் வைத்டால் போதுமே! மணக்க மணக்க சாம்பார் வைத்துவிட்டு, அதில் முந்திரிப் பருப்பைத் தாளிக்கலாமா? சாம்பாருக்குக் கருவேப்பிலையும் பெருங்காயமும் தாளித்தால் போதுமே!” என்று எளிய முறையில் விளக்குவார்.

பிரபலங்கள் பலரைச் சந்தித்து எழுதியவர். ஒரு காலத்தில் ஆந்திராவின் முதல் பெண்மணியாக இருந்து சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்ட என்.டி.ஆர்.லெட்சுமி பார்வதியைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி எழுதும்போது “புழுதிப் படிந்த சிலை, சிதைந்த சிற்பம் என்றெல்லாம் திருமதி என்.டி. ஆரைக் கற்பனை செய்து கொண்டு உள்ளே ச்ன்ற எனக்கு, அவரது ‘சிக்’ கென்ற உடை, படிப்புக் களையுடன் கூடிய தோற்றம், அறிவார்ந்த உரையாடல், எல்லாம் ஆச்சரியத்தைத் தந்தது” என்று எழுதுகிறார்.

மும்பை செம்பூர் சாகார் நகர் மைதானப் பந்தலில் விடியும் வரை சாக்கியார் கூத்து நடத்தும் திரு ராஜனைப் பற்றிய அவருடைய நேர்காணல் அழிந்து கொண்டிருக்கும் சாக்கியார் கூத்து கலையைப் பற்றிய ஓர் அழியாதப் பதிவு.

அவருடைய சமயக்கொள்கைகள், வைதீகப் பற்று, சடங்கு சம்பிரதாயங்கள் மீது அவருக்கிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை இவை எல்லாம் எனக்கும் என் கொள்கை என் பாதைக்கும் நேர் எதிரானவை. ஆனால் மனிதர்களை மதிக்கும் மாண்பு, மன்னிக்கும் குணம், விட்டுக்கொடுக்கும் இயல்பு, அன்புடன் அரவணைக்கும் தாய்மையுள்ளம் இவற்றில் எல்லாம் அவருக்கு நிகர் அவரேதான்.
அதனால் தானே என்னவோ அவருடைய பத்திரிகை அனுபவங்களில் ஏற்பட்ட எந்தக் கசப்பான நிகழ்வுகளையும் அவர் பதிவு செய்யவில்லையோ என்று எண்ண தோன்றுகிறது. அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கும் மும்பை – கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவைக்கு வாழ்த்துகள்.

நூல்: நான் நடந்த பாதையிலே…
ஆசிரியர் : சாராதா ஸ்ரீனிவாசன்
முகவரி : WIB, 083, Wellington Estates,
DLF, Phase 5,
Gurgaon, Haryana 122 002
teL: 0124- 4364263

அவருடைய பிற நூல்கள்:

>ஜனனி : இரு குறுநாவல்களின் தொகுப்பு

>சிந்தனைச் சிதறல்கள் : பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

Series Navigation