அவர்கள் வரவில்லை

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

சந்திரவதனா


காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன.

‘அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே… ‘

பாதையில் ஒரு தமிழன் பாசமாய்க் கேட்டான்.

‘…ம்ம்ம்… ‘

காலைப் பரபரப்பில் பாணைக் கடிக்கவே மறந்தேன் என்றால் நம்புவானா…! பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுக்காய் அழுதேன் என்றால் நம்புவானா…! கற்தரையில் எம்மவர் நித்திரை கொள்வதை ஊர்க்கடிதம் சொன்னதில் தொடங்கி இந்திய வல்லூறுகள் எம்மவரை உயிர் வதம் செய்வதில் தொடர்ந்து… செம்மணிப் புதைகுழியில் எம் பெண்மணிகள் புதைந்தது வரை… சத்தியமாக நான் சித்திரைக்குப் பொங்கவில்லை என்றால் நம்புவானா…!

2002இல் பாதை திறந்த பின் எல்லோரும் மனசு பொங்க பானைகளிலும் பொங்கிய போது கூட நான் பொங்கவில்லை என்றால் இவன் நம்புவானா…!

பொங்கினேன்தான். ஒரேயொரு தரம். அது 1987இல். அதுதான் முதலும் கடைசியுமாய் நான் யேர்மனியில் பொங்கியது.

அப்போது ஜேர்மனிக்கு வந்து பதினொரு மாதங்கள்தான் ஓடியிருந்தன. ஜேர்மனியில் தமிழர்களே அதிகமில்லாத காலகட்டமது. இப்படி ஏதாவது தினங்களில்தான் ஆங்காங்கு இருக்கும் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள். தமிழ்க் குடும்பங்கள் குறைவாயும் தமிழ் இளைஞர்கள் கூடுதலாயும் இருந்ததால் ஏதாவது ஒரு குடும்பத்தோடு ஒரு ஏழெட்டுப் பெடியள் கூடுவார்கள். அப்படித்தான் எங்கள் வீட்டுக்கும் சித்திரைப் பொங்கலைச் சாட்டிக் கொண்டு எனது கணவரோடு அகதி முகாம்களில் இருந்த ஏழெட்டுப் பேர் எட்டுத் திக்குகளிலும் இருந்து வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் வரப்போவதாக தொலைபேசியில் அழைத்துச் சொன்ன போதே ‘பொங்கோணுமெண்டால் எங்கையாவது, சர்க்கரையும், தேங்காயும், பயறும் வேண்டிக் கொண்டு வாங்கோ ‘ என்று எனது கணவர் சொல்லி விட்டார்.

நாங்கள் வாழும் நகரில் அப்போது எங்களை விட்டால் மருந்துக்குக் கூட வேறு தமிழ்வாசம் இல்லை. தமிழ்க்கடை – அப்படியும் எதுவும் இல்லை. தேங்காய் – அதைப் பார்த்தும் 11 மாதங்களாகி விட்டன. எனது பிள்ளைகளின் நிறைவேறாத ஆசைகளிகளின் வரிசையில் சம்பலும், பிட்டும் முதல் பத்துக்குள் இடம் பிடித்திருந்தன. பாவம் பிள்ளைகள் என்று நினைத்து ஒருதரம், ஒரு பக்கற் தேங்காய்ப்பூ வாங்கி அதையும் அரைக்க அம்மியோ, இடிக்க உரலோ இல்லாமல், கையால் பிசைந்து கொடுக்க, ‘இது சம்பலில்லை அம்மா.. ‘ என்று அவர்கள் கண்களில் நீர் முட்டி நிற்க… எத்தனை தரம் ‘திரும்பிப் போய் விடுவோமா…! ‘ என்று மனசு சஞ்சலப் பட்டிருக்கிறது.

பொங்கலுக்கு வந்த நண்பர்கள் பயறு, சர்க்கரை, தேங்காய்.. என்று எல்லாம் கொண்டு வந்தார்கள். அவைகளைப் பார்த்ததும் இன்னுமே ஜேர்மனியுடன் ஒட்ட முடியாமல் வரண்ட மனசோடு வாழ்ந்த எனது மனத்திலும், என் பிள்ளைகளின் முகங்களிலும் மெதுவான குதூகலக்களை எட்டிப் பார்த்தது.

விடிய என்னை விட வேளைக்கே பிள்ளைகள் எழும்பி விட்டார்கள். ஊரில் போலத் தொங்கி விளையாட முடியாவிட்டாலும், பொங்கிக் களிக்கலாம் என்பதில் கொஞ்சம் பிரகாசமாய் இருந்தார்கள்.

சாணத்தால் மெழுகிக் கல்லு வைத்துப் பொங்க முற்றத்துக்கு எங்கே போவது! அதுதான் மின்சார அடுப்பை மினுக்கி, பொங்கல் ஆயத்தங்களைத் தொடங்கினோம். உடைக்கப் போகும் தேங்காயிலிருந்து கிடைக்கப் போகும் இளநீருக்காக எனது பிள்ளைகள் ஆளுக்கொரு கிளாஸை ஏந்திக் கொண்டு நின்றார்கள். காற்றுப் போல இருக்கும் தேங்காயிலிருந்து வரப்போகும் இளநீரை எப்படி மூவருக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற யோசனையில் நான் இருந்தேன்.

வந்தவர்களில் ஒருவர் ‘அக்கா நான் தேங்காயை உடைச்சுத் திருவித் தாறன் ‘ என்று சொல்லி சுத்தியலால் அடித்து உடைத்தார். உள்ளே தேங்காய் இருக்கவில்லை. காய்ந்து கறுத்துப் போன ஏதோ ஒன்று இருந்தது. இளநீர் வராத தேங்காயின் உள்ளீட்டைப் பார்த்த எனது பிள்ளைகளின் முகத்தில் தெரிந்த அந்த ஏமாற்றம்… அது என்றைக்குமே எனக்கு மறக்காது.

இனி என்ன செய்வது…! ஓடிப் போய் இன்னொரு தேங்காய் வாங்கிக் கொண்டு வர பக்கத்தில் என்ன இரத்தினத்தின் கடையா இருக்கிறது! பேசாமல் பசுப்பாலை விட்டுப் பொங்கினோம். வாழையிலையோ, வெற்றிலை, பாக்கோ இல்லை. சூரியன் கூட எந்தத் திசையில் உதிக்கிறது என்று தெரியவில்லை. அதனால் படையலுமில்லை. காகம் அதைக் கண்டும் 11மாதங்களாகி விட்டன. ஒரு நண்பன் யன்னலைத் திறந்து ‘கா… கா… ‘ என்று சும்மா விளையாட்டுக்குக் கத்தி விட்டு ஒரு பிடி பொங்கலை வெளியில் எறிந்தான். ‘ஏய் பொலிஸ் கண்டால் பிறகு ஃபைன் கட்டுவாய். ‘ இன்னொருவன் கத்தினான்.

எல்லோரும் கூடியிருந்து சாப்பிட்டோம். எல்லா வெறுமைகளையும் மீறிய ஒரு குதூகலம். அன்றைய அந்தக் குதூகலம்… அது இரண்டு மணி நேரமாவது நீடித்திருக்குமா..! தெரியவில்லை. ஊரிலிருந்து கடிதம் தேடி வந்தது.

‘சித்திரைப் பொங்கலன்று பார்த்துக் கடிதம் வந்திருக்கு. வாழ்த்து அனுப்பியிருக்கினம் போலை. ‘ நண்பர்கள் என்னைச் சந்தோசிக்க வைத்தார்கள். எனக்கு ஊர்க்கடிதம் கண்டதில் சந்தோசப் படபடப்பு. அவசரமாய் பிரித்தேன்.

வந்த கடிதம் ஊரிலிருக்கும் வீட்டிலிருந்து வந்திருந்தால் நிலைமையில் பெரியளவான மாற்றம் ஏற்பட்டிருக்காது. வந்ததோ களத்திலிருந்து. தம்பிதான் எழுதியிருந்தான். அவன் அதை மை தோய்த்து எழுதவில்லை. அன்பைத் தோய்த்து எழுதியிருந்தான். உணர்வுகளை வரிகளாக்கியிருந்தான். ஆயுதந் தூக்கிய அவனுக்குள்ளா இத்தனை ஈரம்! வாசிக்கும் போதே கண்கள் குளமாகி விட்டன. அதற்கு மேல் என்னால் முடியவில்லை. எங்கோ கல்லிலும் முள்ளிலும் எங்கள் உடன் பிறப்புக்களின் காலடிகள் நோக, இங்கு எமக்குப் பொங்கல் தேவையோ என்று மனசு விம்மியது.

அதன் பின் எத்தனையோ தைப்பொங்கல்களும், சித்திரைப் பொங்கல்களும் வந்து வந்து போய் விட்டன. என் மனசில் மட்டும் பொங்கும் எண்ணம் வரவேயில்லை. ‘எமது சகோதரர்கள் எல்லோருமே எம்மிடம் திரும்பி வரவேண்டும் ‘ என்ற மந்திரம் மட்டும் எனக்குள் மீண்டும் மீண்டுமாய் உச்சரிக்கப் பட்டது.

2000 இல் ஆனையிறவு மீட்கப் பட்ட போது அனேகமானோர் கூடிக் களித்தார்கள். அப்போதும் என்னால் முடியவில்லை. போர்க்களத்திலே வீழ்ந்தும், குருதி வெள்ளத்திலே சாய்ந்தும் போனவர்களின் தியாகமும் அவர்கள் ஈன்றவர்கள் மனதை பற்றி நிற்கும் சோகமும் என்னையும் தொற்றிக் கொண்டன. திரும்பி வராத சகோதரர்களை எண்ணி மனசு அழுதது.

2002இல் ஏ9 பாதை திறந்த போதும் பொங்கும் எண்ணம் வரவில்லை. வன்னி எப்படி இருக்கிறது ? போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது ? நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம் ? என்று பார்க்கவேண்டும், உதவவேண்டும் என்ற ஆசைதான் எழுந்தது. போனேன். அப்போதுதான் போரின் உக்கிரம், ஆறாத வடுக்களாய் மனிதர்கள் மேல் பதிந்திருப்பதைக் கண்டேன்.

எத்தனை இல்லங்கள்! அத்தனைக்குள்ளும்… அங்கவீனர்களாய்.. பார்வையிழந்தவர்களாய்.. உறவை இழந்தவர்களாய்… மனநோயாளிகளாய்…. யேர்மனி திரும்பியபின்னும் அந்த நினைவுகள் மனசைத் திருகின. பொங்கும் எண்ணம் வரவேயில்லை.

ஆனால் வேறொரு எண்ணம் வந்தது. எனக்குத் தெரிந்த நம்பிக்கையான குடும்பங்களிடம் பணம் அனுப்பினேன். ‘ஏதாவது இல்லங்களுக்குப் போய் அங்கு பொங்கி அந்த உறவுகளோடு களிக்கும் படி ‘ சொன்னேன். அதன் தொடராய் இம்முறையும் அந்தக் குடும்பம் வன்னியில் உள்ள ஏதாவதொரு இல்லத்தில் பொங்கியிருக்கும். அங்கு சில உள்ளங்களும் சந்தோசங்களில் பொங்கியிருக்கும். அந்த நினைப்பே எனக்குப் போதுமாயிருந்தது.

இதையெல்லாம் சொன்னால் இவன் நம்புவானா.. ? என் வீட்டில் பாலும், சர்க்கரையும், பயறும் மணக்க நான் பொங்கவில்லை. ஆனால் என் தாயகத்தில் பொங்கல் மணத்திருக்கும் என்ற நினைப்பில் என் மனசு பொங்கியது என்றால் இவன் நம்புவானா ?

அதனால்தான் கூசாமல் பொய் சொன்னேன்.

‘ஓம் தம்பி பொங்கியாச்சு. ‘

என் பொய்யில் முகம் மலர்ந்து முன்னேறிப் போறவனும் மூக்கைத்தான் தேய்க்கிறான் கண்களையும் கசக்குகிறான் அழகிய மலர்களின் நுண்ணிய மகரந்தக்களுக்கு இவன் மூக்கும் பலிதானோ…!

சந்திரவதனா

ஜேர்மனி

10.4.2005

—-

chandraselvakumaran@gmail.com

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா