அறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


பாபா ஒரு சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றல் மிக்கவர்; சிறந்த நிர்வாகி; எளிய, ஆடம்பரமற்ற வாழ்க்கையை நடத்தியவர். இந்திய அணு ஆற்றல் திட்டங்களின் முன்னோடியாகவும் அவற்றை வடிவமைத்துச் செயல்படுத்திய செயல் வீரராகவும் பாபா நினைவுகூரப்படுகிறார். இன்று இந்தியாவில் இருக்கும் பல அணு உலைகள், அணு ஆற்றல் நிலையங்கள் ஆகியன அவர் முயற்சியால் தோன்றியவையே. இத்தகைய ஆறிவும் ஆற்றலும் மிக்க அவர், ஓர் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள விமானத்தில் வெளிநாடு சென்றபோது விபத்தில் சிக்கி 1966 ஜனவரி 24ஆம் நாளன்று இந்திய அறிவியலுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பை ஏற்படுத்திவிட்டு மறைந்துபோனார்.

பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் மும்பையில் பெரும் பணக்காரப் பார்சிக் குடும்பத்தில் தோன்றினார். தொடக்கக் கல்வி கற்கும்போதே அறிவியல் பாடங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதே அளவு ஆர்வத்தை ஓவியம், இசை, கவிதை ஆகியவற்றிலும் அவர் காட்டிவந்தார். மும்பை எல்ஃபின்ஸ்டன் கல்லூரி, ராயல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பாபா, மேற்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் சென்றார். அங்கு 1930இல் பொறியல் பட்டமும், 1934இல் முனைவர் பட்டமும் பெற்றார். அப்போது உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களான நெயில்ஸ் போர், ஃபெர்மி, பாலி ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. அண்டவெளிக் கதிர்கள் (Cosmic rays) மற்றும் மெசன்ஸ் எனும் துகள்கள் பற்றிய தமது ஆய்வுகள் வழியே பாபா அறிவியல் உலகினரால் இனங்காணப்பட்டார்.

1940இல் தாயகம் திரும்பிய பாபா பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் துறைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 1945ஆம் ஆண்டு டாட்டா அடிப்படை ஆய்வு மைய நிறுவனத்தை உருவாக்கி அதன் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். அணு ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து நிதி உதவிகளையும் இந்திய அரசிடம் இருந்து அவரால் பெற முடிந்தது. இதற்குக் காரணம் அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கும், பாபாவுக்கும் இருந்த நெருங்கிய நட்பே ஆகும். இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முதல் தலைவராக 1948இல் பாபா பொறுப்பேற்றார். அவரது திறமையான வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பினால், இந்திய அறிவியலார் அணு ஆற்றல் துறையில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு உழைத்தனர். இதன் விளைவாக ஆசியாவின் முதல் அணு உலையான அப்சரா மும்பையில் உள்ள டிராம்பேயில் 1956இல் இயக்கப்பெற்றது.

பாபா திருமணம் செய்துகொள்ளாமலே அறிவியல் பணியில் தம் வாழ்வை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். அணு ஆற்றலை அமைதிப்பணிக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால் அணு ஆற்றலை அமைதிப் பணிக்குப் பயன்படுத்துவது பற்றிய முதலாவது ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்குத் தலமை ஏற்கும் வாய்ப்பு 1955ஆம் ஆண்டு அவருக்குத் தரப்பட்டது.

இந்திய அறிவியல் அறிஞர்களான கே.எஸ். கிருஷ்ணன், சத்தியேந்திர போஸ், விக்ரம் சாராபாய், பீர்பல் சஹானி, எஸ்.கே.மித்ரா போன்றோருடன் ஒப்பிடத்தக்கவர் பாபா அவர்கள். அவரது நினைவைப் போற்றும் வகையில் டிராம்பேயில் உள்ள அணு ஆற்றல் நிறுவனம் பாபா அணு ஆய்வு மையம் என்றும், டாட்டா அடிப்படை ஆய்வு மைய நிறுவனம் பாபா அடிப்படை ஆய்வு நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இத்தகு சிறப்பும், மேன்மையும் கொண்ட பாபா அவர்கள் விதியின் கொடுமையால் விபத்தில் சிக்கி உயிரிழந்தது இந்தியர்களின் தவக்குறைவேயாகும்.

***

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

E Mail:rqgha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர