அறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்? நான் யார்?

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாகி.பி. 2050. இராமநாதன் புதுச்சேரிக்கு முதன் முறையாக வந்திருந்தார். அவரது முன்னோர்கள் காலத்து வீடு. தாத்தாவின் ஆசைப்படி, கடந்த ஐந்து வருடங்களாக பிரான்சில் இருந்தபடி முயற்சித்து, வீட்டின் ஒரு பகுதியை வாங்கியிருந்தார். இரண்டு நாட்கள் அலைந்து வாங்கி போட்டிருந்த வரவேற்பறைக்கான தளவாடங்கள் இன்றுகாலையில்தான் வந்திறங்கின. அதற்கான இடங்களில் அவற்றை ஒழுங்குபடுத்திவிட்டு கடை ஊழியர்கள் புறப்பட்டுப் போயிருந்தனர். ஒரு மாதகாலம் புதுச்சேரியில் தங்குவதற்கு இதெல்லாம் தேவையா என நினைத்தார். தாத்தாவுக்காக அவற்றைச் செய்யலாம் போலிருந்தது. தாத்தாவும் பிரான்சிலிருந்து பயணித்து வரவேற்பறையில் எங்கேனும் அமர்ந்து நடப்பதனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கலாம். “சந்தோஷமா தாத்தா?” அரூபத் தாத்தாவிடம் கேட்கவும் செய்தார். தாத்தாவின் ஆசைகளை பேரன் பூர்த்திசெய்யப் புறப்பட்டது குறித்த கசப்புகள் ரேவா’வுக்கு நிறையவே இருந்தன. ரேவா இராமநாதனுடைய மனைவி. பூர்வீகம் சுவிட்சர்லாந்து என்றாலும், பாரீஸ் பல்கலைகழகத்தின் மானுடவியல் துறை ஏற்பாடு செய்திருந்த கரத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ளவந்தவள், இராமநாதனிடம் காதல் கொண்டு, பாரீஸிலிலேயே தங்கிவிட்டாள். அவளுக்கு இந்தியர்களின் அறிவு பிடிக்கும், இந்திய உணவுப் பிடிக்கும், ஆனால் அவைகளெல்லாம் இந்திய எல்லைக்கு வெளியில் கிடைக்கவேண்டும். ஐம்பது வயது இராமநாதன் பார்த்த இந்தியாவுக்கும், பத்துவயது இராமநாதன் கேட்டிருந்த இந்தியாவும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. தாத்தா தமிழ்நாடு, புதுச்சேரியென்று அறிமுகப்படுத்திய முகங்கள், தெரிவித்த அடையாளங்கள், காட்சிபடுத்திய வாழ்நெறிகள் வேறு. அவர்காலத்தில் இங்கே ‘நெல் விளைந்திருக்கிறது’, ‘கரும்பு பயிரிட்டிருக்கிறார்கள்’, ‘கர்நாடக அரசு தயவில் காவிரியில் எப்போதாவது தண்ணீர் வரும்’, ‘தெருச் சந்திகளிலும் ஊர் முக்குகளிலும் கட்சிக்கொடிகள் பறக்கும்’, ‘டீக்டைகளில் விலாப்புடைக்க அரசியல் அல்லது சினிமா பேசுவார்கள்’. இராமநாதன் பார்க்கும் தமிழ்நாடு ‘நல்கயல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை’. நவீன தமிழர் முகங்களில் பாலைநிலத்து வழிபாட்டு தெய்வங்களுக்குரிய உக்கிரமும் பழுதில்லாமல் இருக்கிறது.

“நான் நினைக்கிற இந்தியா இன்றில்லை, எனக்குத் தெரியும்”, என பலமுறை தாத்தா சொன்ன ஞாபகம். “உன் தகப்பன் அந்த மண்ணை மிதிக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். நீ அப்படிச்சொல்லக்கூடாது எனது அந்திமச் சடங்கை அங்கேதான் நடத்தணும்”, என்று தாத்தா இட்ட கட்டளையையும் மறக்கவில்லை. மேற்கத்திய தினசரிகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சி பெட்டியிலும், இந்தியாவை மையமாகக் கொண்ட துணுக்குச் செய்திகளுக்குக்கூட அவர் மகிழ்ந்ததும், இந்திய வளர்ச்சியோடு, அவர் பெருமிதமும் இணையாக வளர்ந்ததும் இராமநாதன் கவனத்திலிருக்கிறது. இராமநாதன் மானுடவியல் மாத்திரமல்ல பொருளாதார புள்ளி விவரங்களையும் விரல் நுணியில் வைத்திருப்பவர். மொனாகோவில் ஆரம்பித்து, அமெரிக்காவரை உலகத்து நாடுகளில் பொருளாதார சாதகத்தை, துல்லியமாக சொல்வார். பெய்ஜிங் நகரவாசியின் சராசாரி தினசரி வருமானம். பிரான்சு அரசாங்கம், தங்கள் பிரஜைகளிடம் கேட்கவிருக்கிற தேசிய வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், போர்பஸ் பட்டியலில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் லட்சுமி மிட்டலென்கிற இந்தியருக்கு எத்தனையாவது இடம், சனி கிரகத்தின் அதிபருக்கும் பாரதப் பிரஜைகளுக்கும் வேதகாலதொடக்கமுள்ள கோபதாபங்கள் அவ்வளவையும், 1.360777110கி.கி எடைகொண்ட மூளையில் அதற்கான நரம்பணுவில்(Neuron) அதனதனிடத்தில் பத்திரமாக வைத்திருக்கிறார். அந்த நரம்பணுக்களிலிருந்து இது போன்ற தகவல்களை எப்போது மீட்டெடுப்பது, அவற்றை சீரமைத்து சேமிக்கவென்று திரும்பவும் அங்கே எப்போது அனுப்பிவைப்பதென்கிற கால அட்டவணைகளெல்லாங்கூட அவரிடம் தெளிவாக இருக்கின்றன. இன்றைய இந்தியாவின் பின்னே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட அபரிதமான பொருளாதார வளர்ச்சியும், தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றமும் காரணமென்றாலும், 2007ம் ஆண்டு தொடக்கம் மக்கள் தொகையை சீராக வைத்திருப்பதும், வறுமைகோட்டின் கீழிருந்த சுமார் 220 மில்லியன் இந்தியர்கள் இருபத்திரண்டாம் நூற்றாண்டில் என்னவானார்கள் என்பதும் ஆச்சரியம். தங்கள் மக்கத்தொகையில் ஒருபிரிவினரை ஏழைகள் என்பதை எல்லா நாடுகளுமே ஏற்றுக்கொண்டிருக்க இந்தியாவில் அப்படி ஒருவரும் இல்லையென்பது இராமநாதனுக்குப் புரியாதபுதிர்.

தெருக்கதவை தட்டும் சத்தம் கேட்டது. அழைப்பு மணியை அடித்திருக்கலாம். எதற்காக கதவைத் தட்டவேண்டும் யோசித்தபோது, மீண்டும் கதவைப் பலமாகத் தட்டினார்கள். எழுந்து சென்று கதவைத் திறந்தார். சூட்டும் டையுமாக வாலிபன் ஒருவனும் அவன் பின்னே இரண்டு தொழிலாளர்களும் நின்றிருந்தார்கள்; இளைஞனைப் பார்க்க அரசு அதிகாரிபோல இருந்தான். அவன் வலது கையில் கோப்புகள் அடங்கிய பெட்டி. இவரது பதிலுக்காக அவன் காத்திருக்கவில்லை. தொழிலாளர்களைப் பார்த்து, “நீங்கள் ஆரம்பிக்கலாம்”, என்றான். அவனது உத்தரவுக்காக காத்திருந்தவர்கள்போல வெளியிற் சென்றவர்கள் சில நொடிகளுக்குப்பிறகு, சிமெண்ட், மணல், செங்கற்கற்கள் என்று, இராமநாதன் பார்த்திருக்க வரவேற்பு அறையுள் கொண்டுவந்து வைத்தார்கள். தாத்தா காலத்து இந்தியாவில் அரசியல் தாதாக்களும் பிரசித்தமென்று சொல்லி இருக்கிறார், ஒருவேளை இளைஞன் அவர்களிலொருவனோ என்ற சந்தேகம். அவர்கள் பொல்லாதவர்களென தாத்தாசொல்லியிருந்தார். மிகுந்த எச்சரிக்கையுடன், “நீங்கள் சரியான முகவரிக்கு வந்திருக்கிறீர்களா?, என்று கேட்டார். இளைஞன் பதிலுக்கு, “நீங்கள் பிரான்சிலிருந்துதானே வந்திருக்கிறீர்கள், இரண்டு நாட்களுக்கு முன்னர்தானே இந்த வீட்டை வாங்கினீர்கள், வீட்டு எண்.450தானே?” என்று மூன்று கேள்விகளையும் தொடர்ந்து கேட்டு நிறுத்தினான். மொத்தகேள்விகளுக்கும் இராமநாதன் “ஆமாம்”, என்று ஒரு சொல்லில் பதில் சொல்ல வேண்டியிருந்தது. “அப்படியெனில் எங்களைத் தடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமுமில்லை”, என்றான்.

– நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்” -இராமநாதன் .

– நீங்கள் இந்தியாவந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன. உங்கள் அக்கம் பக்கத்தில் அல்லது வேறு யாரேனும் சன்னலைத் திறந்து வைத்து பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் திறந்து வைத்திருந்தீர்கள். சன்னல்கள் மானுடத்திற்கு எதிரானவை, வலிமையான பாரதத்திற்கு கூடாதவை”

– நான் பிரெஞ்சு பிரஜை, என்னை உங்கள் சட்டம் கட்டுபடுத்தாது”.

– நீங்கள் இந்தியா வருவதற்கு அனுமதிகேட்ட விண்ணப்பத்தைக் கவனித்திருக்கமாட்டீர்களென நினைக்கிறேன். அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்பது விதி”

– சரி என்ன செய்யப்போகிறீர்கள்?

– உங்கள் வீட்டு சன்னலை கற்கள்வைத்து அடைக்கப்போகிறோம். இது மேலிடத்து உத்தரவு.

– மேலிடமென்றால் எப்படி? வீட்டுக்கு மேலே இருக்கிறவர்களா? அவர்களாக இருக்க முடியாது. என்னிடம் நன்றாகப் பழகினார்கள்.

– சன்னல்களை திறந்து வைப்பது கி.பி. 2025ம் ஆண்டிலிருந்து இங்கே கடுமையானக் குற்றமென்று உங்களுக்குத் தெரியாதா? நான் மேலிடமென்று சொல்வது, உங்களுக்குமேலே குடியிருப்பவரென்றோ, நகரசபை ஆனையரென்றோ, மாவட்ட ஆட்சியரென்றோ, உள்ளாட்சிதுறை அமைச்சரென்றோ, முதல் அமைச்சரென்றோ, ஏன் நாட்டின் பிரதமர் கூட அல்ல அவர் எல்லாவற்றுக்கும் மேலே.

– பெரிய அண்ணன் என்று சொல்வார்களே அப்படிச் சொல்லலாமா?

– அது ஒருவகையில் சரிவரும், ஆனாலும் நாங்கள் மேலிடம் என்று சொல்லியே பழகியிருக்கிறோம். நீங்களும் இந்த மண்ணில் இருக்குவரை அப்படித்தான் சொல்லவேண்டுமென அரசு எதிர்பார்க்கும்.

இராமநாதன் பார்த்துக்கொண்டிருக்க வேலைகள் மடமடவென நடந்தன, சன்னல் முற்றிலுமாக அடைக்கப்பட அங்கே இருள் சூழ்ந்தது. இளைஞன் கையிலிருந்த கோப்பைப் பிரித்து அதிலிருந்து இரண்டு தாள்களை எடுத்தான்.

– இது நடந்துமுடிந்த வேலைக்கான கட்டணத் தாள். இத்தொகையை நீங்கள் பிரான்சுக்குத் திரும்புவதற்கு முன்பு அரசாங்க கருவூலத்திற் செலுத்த வேண்டும், கட்டத் தவறினால் பிரன்சுக்குத் திரும்பமுடியாது.

கையொப்பமிட்டு முடிந்ததும், இவரிடம் ஒரு நகலைக் கொடுத்துவிட்டு இளைஞனும், தொழிலாளர்களும் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் மறைந்ததும், இருந்தவிடத்திலிருந்து நகராமல் அவர்கள் அடைத்துவிட்டுச் சென்ற சன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார். புதிதாக தரையில் போட்டிருந்த விரிப்பில் ஆங்காங்கே சிமெண்ட்டும் மண்ணுமாய் சிந்திக்கிடந்தன. முகம் தெரியாத அந்த மேலிடத்து மனிதனிடம் முதன் முறையாக கோபப்பட்டார், பத்துத் தலையும் இருபதுகைகளும் கொண்ட முப்பரிமாண அரக்கனாக அவனை நிறுத்தி கைக்கு அகப்பட்டதையெல்லாம் அவன் முகத்தில் எறிந்தார்.

* * * *

மாலை மூன்றுமணிக்கு நேருவீதியில் தாத்தா குறிப்பிட்டிருந்த காபி ஹவுஸை இராமநாதன் தேடிச் சென்றார். காலியாக இருந்த மேசையைத் தேடி அமர்ந்ததும், முதியவர் ஒருவர் எதிரில் உட்கார்ந்தார்.

– என்ன சோகமா இருக்கறீங்க? வீட்டு சன்னலை அடைச்சிட்டாங்களா?”

இராமநாதன் கிழவரைப்பார்த்தார். மனிதர் உண்மையிலேயே அக்கறையுடன் கேட்கிறாரா அல்லது நம்மை வேவுபார்ப்பதற்கென்று, அனுப்பப்பட்ட மேலிடத்து தந்திரமா? என யோசித்தார். பெரியவர் மேல் நம்பிக்கை வந்தது.

– ஏன் எதனாலே கேட்கறீங்க?

– சன்னல் அடைக்கப்பட்ட மனிதத்திற்கென ஒரு முகம் இருக்கிறது. உங்களைப் பார்த்ததும் புரிந்துகொண்டேன். எங்கள் முகம் அதற்குப் பழகிக்கொண்டது. உங்கள் முகத்தில் அதிர்ச்சியின் கருநிழல் படிந்திருப்பதைப் பார்க்கிறேன்.

– சாதாரணமாகவே வீட்டுக்குள் இருப்பது இங்கே கடினம். சன்னலையும் அடைத்துவைத்துக்கொண்டு இரு என்றால் எப்படி,. உங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துவதில்லையா?

– மெதுவாய்ப் பேசுங்கள். மனக்குமுறலாவது வெண்டைக்காயாவது. 1947ப் பிறகு சுதந்திரம் என்ற சொல் இங்கே கசந்துவிட்டது. சுபிட்ஷம் சாமி சுபிட்ஷம் அதுதான் வேண்டும். சுபிட்ஷம் சும்மா வருமா சொல்லுங்கள். எங்கள் சுதந்திரம் ஏழைகளை தேர்தல் நாளில் மட்டுமே எஜமானர்களாக நடத்த உதவியது. சுதந்திரம் என்றபேரில் கவிதையும், கட்டுரையும், பாட்டும் கூத்தும் இதைத்தானே கண்டோம். பணம் காய்ச்சும் மரத்தைப் பார்க்கலையே. வயிற்றுக்கு சோறுபார்க்கலையே சென்ற நூற்றாண்டுவரை வேறு சிலமக்களின் சன்னலை அடைத்துவைத்திருந்தோம். அம்மக்களின் வதைகள் எப்படி இருந்திருக்குமென புரிந்துகொள்ள நம்மைப் போன்ற மேல்தட்டு மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டுமில்லையா? இப்போது நம்வீட்டுச் சன்னல்களை அடைக்கிறார்கள்.

– உங்களுக்கு இதெல்லாம் சரி, நியாயம்.

– உயிர் வாழ்க்கையின் ரகசியம், நெருக்கடிகளை சமாளிப்பதில்தானே இருக்கிறது. நியாயமா இல்லையா என்பதை பிழைத்தெழுந்தால் யோசிக்கலாம்.

– பிரச்சினைக்கு வரேன். ஏற்கனவே மேற்கத்திய நாடுகள்போல இந்தியாவிலே கதவை அடைக்க பழகியாச்சு, இப்போது சன்னலையும் அடைப்பதென்பது மேலிடத்து உத்தரவு என்கிறீர்கள்.

– எந்தவொரு செயல்பாட்டுக்கும் பின்புலத்தில் காரணம் இருக்கவேண்டும். இல்லையென்று சொல்ல முடியுமா என்ன?

– நீங்க எதையோ மறைக்கறீங்க, மேலிடத்துத் தகவல்கள் உங்களுக்கும் தெரியுமென்று சொல்லுங்கள்.

– அப்படியும் சொல்லலாம். இல்லையென்றும் மறுக்கலாம். கேவல ஞானம்னு ஒன்றிருக்கிறது, ஒன்றைப் பற்றிய முழுமையான அறிவு, பக்குவம் பெற்ற ஆன்மாக்களுக்கு மட்டுமே கிட்டும். நாளைக்கு உங்களுக்குகூட அவ்வாறான கேவல ஞானம் வாய்க்கும்பொழுது உண்மைகள் புரியவரும்.

இருவரும் பிறகு பேசவில்லை. சில நொடிகள் மௌனம் காக்கவேண்டும் என்பதுபோல அமைதியாக இருந்தார்கள். இராமநாதன் பணியாளரை அழைத்து, இரண்டு பீர்கள் கொண்டுவருமாறு, கட்டளையிட்டார். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. நுரையுடன் வந்தபீரை குடித்து தாகசாந்தி செய்துகொண்டார்கள். காத்திருந்தவர்போல பெரியவர்தான் முதலில் வாய்திறந்து பேசினார்.

– சன்னல் அடைக்கபட்டால் என்ன செய்வீர்கள், பொழுதுபோக வேண்டுமில்லையா? நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதால் வெளியிற் சென்று வரலாமென்று தோன்றும். எங்கள் மக்கள் என்ன செய்வார்கள் சொல்லுங்கள். இனித் தொலைகாட்சிபெட்டிகள் முன்னமர்ந்து தொடர்கள் பார்க்கமாட்டேன், என்று அலுத்துப்போயிருந்த மக்களை வழிக்குக் கொண்டுவர மேலிடத்துக்குத் தெரிந்த வழிமுறைகளிலொன்று சன்னற்கதவுகளை அடைத்தல். ஹோலோ-சிஸ்டத்தில் (Holo-System) அவர்கள் செய்துள்ள முதலீடுகளை எடுக்கவேண்டாமா? முதலாளிகளென்றால் அப்படித்தான். இலாபநோக்கில்லாத முதலீடென்று ஒன்று உண்டா என்ன?

பெரியவர் அத்தனை சீக்கிரம் உரையாடலை முடித்துக்கொள்வார் என்று தோன்றவில்லை. இராமநாதன் அங்கிருந்து புறப்பட நினைத்தார்.

– மிஸ்டர்….

– இராமநாதன்

– மிஸ்டர் இராமநாதன்! உங்களுக்கு நேரமிருக்குமானா எட்டுமணிக்குமேலே உங்க வீட்டுவாசலில் நில்லுங்கள். நான் வந்து ஓரிடம் உங்களை அழைத்துபோவேன். காட்சி அறிவு மூலம் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகளும் சில இருக்கின்றன, தெரிவிக்கிறேன்.

– அப்படி சுதந்திரமா போகலாமா, நீங்கள் சொல்லிக்கொள்கிற மேலிடம் அதை அனுமதிக்குதா?

– ‘நான் எங்கே இருக்கிறேன்’? என்பது நீங்கள் இருக்கிற ஐரோப்பிய சிந்தனை. அத்துடன், ‘நான் யார்’ என்ற கேள்வியையும் இணைத்துக் கேட்பது தமிழர்கள் தத்துவ அமைப்பென(1) சொல்கிறார்கள். எங்கள் மேலிடம் இரண்டாவதை மழுங்கச்செய்துவிட்டது. வயிற்றுக்குச் சோறும், புலன்களோடு பொருள்களையும் தொடர்புபடுத்தினால் மனித உயிர்களைச் சுலபமாக அடிமைப்படுத்தலாமென நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை.

கிழவர் புறப்பட்டுப்போய்விட்டார். இராமநாதன் தெருவில் இறங்கி நடந்தார். வீதிகளில் வாகனங்கள், மனிதர்கள் என்றில்லை, நாய், பூனை என்ற நடமாட்டங்கள்கூட இல்லை. தாத்தா காரியம் முடிந்ததும் வீட்டை விற்றுவிடலாம். ரேவாவை தொலைபேசியில் பிடித்து இரண்டொரு நாட்களில் பிரான்சுக்கு வந்துவிடுவேன் என்றார். வீட்டுக்குள் நுழைந்ததும், கற்கள் வைத்து அடைக்கபட்ட சன்னலைப் பார்க்க எரிச்சல் கூடியது. முதல் வேலையாக வந்த விலைக்கு விற்றுத் தொலைத்துவிட்டு பிரான்சுக்குப் போய்ச்சேரவேண்டும், என்று நினைத்தார்.

எட்டுமணி என்ற பெரியவர் ஏழு ஐம்பதுக்கே ஒரு காப்ஸ்யூல் போலிருந்த வாகனத்தில் வந்து நின்றார்.

பரவாயில்லையே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களுக்குத் தேவையான வாகனம் போல இருக்கிறதே?

– மெதில் ஆல்கஹாலை ஹைட்ரஜனா மாற்றக்கூடிய எரிமம்(Fuel cell) இதிலே இருக்கு, அதுலேதான் இது இயங்குது. மாதத்திற்கு இவ்வளவு என ஒரு கட்டணம் இருக்கிறது அதைசெலுத்தி சந்தாதாரர் ஆகலாம். உங்களுக்கு மைக்ரோ சிப்புள்ள அட்டையொன்றை கொடுப்பார்கள். அதை உபயோகப்படுத்தி எங்கு வேண்டுமானாலும், இவ்வாகனங்களை எடுக்கலாம், நிறுத்தி விட்டுப் போகலாம். இதிலுள்ள மற்றொரு வசதி நிலம், நீர், ஆகாயம் எங்கும் உபயோகிக்கலாம். இரண்டு போரிலிருந்து இருபதுபேர்கள் பயணிக்கக்கூடிய •பேன்விங்குகள் (Fanwing) இருக்கின்றன. உட்காருங்கள்.

சிவ்வென்று மேலேழுந்த •பேன்விங் அடுத்த ஐந்து நொடிகளில் ஒரு கேலக்ஸியில் இறங்கியதாக இராமநாதன் நினைத்தார். எங்கும் இருள் சூழ்ந்திருந்தது, ‘நாமிருப்பதொன்றும் பாதாள உலகமில்லையே?’ இராமநாதன் பெரியவரைக்கேட்டார்.

– ஒரு காலத்தில் வைகையென்ற ஆறொன்று ஓடிய இடம். ஆற்றில் நீர்வரத்து குறைய ஆரம்பித்தவுடன் மணலுக்காக தோண்ட ஆறம்பித்தார்கள், கொள்ளையில் கிடைத்ததை அரசியல் தர்மப்படி ஆளுங்கட்சி எதிர்கட்சி என்றபேதமின்றி பங்கிட்டுக்கொண்டார்கள். நாடு சுதந்திரமாக இருந்தபோது தொடங்கியது, இன்றைக்கு மேலிடத்தின் நிர்வாகத்திலும் நடக்கிறது. அன்றைக்குப் பலன் ஒரு சிலருக்கும் மட்டும்போனது இப்போது எல்லோருக்கும் என்றானது வேறென்ன வேண்டும்.

குழிபறிப்பதும், கிளைகளை வெட்டுவதும், மரங்களை அறுப்பதுமான காரியங்களில் ராட்சத எந்திரங்கள் ஈடுபட்டிருந்தன. குவியல் குவியலாய் மணல்கள் பெரிய பெரிய கன்வேயர் பெல்ட்டுகளில் முடிவற்ற திசைக்காய்ப் போய்க்கொண்டிருந்தன. அவற்றை இயக்கவும், பிறசெயல்களுக்கு துணைசெய்யவும் மனிதர்கள்.

– மணற்கொள்ளையைவிடுங்கள், சுற்றியிருந்த செடி கொடிகள், மரங்கள், பறவைகள் விலங்குகள் அவ்வளவையும் அல்லவா அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இயற்கையை துவம்சம் செய்ய எப்படி இவர்களால் முடிகிறது.

– மிஸ்டர் ராமநாதன் நீங்கள் பார்க்கின்ற எவரும் மனிதர்களில்லை. அவர்கள் அன்றாய்டுகள் (Android) ‘தேவர் அனையர் கயவர்’ என வள்ளுவர் சொல்வார், அந்த இனத்தை எந்திரங்களென்றும் சொல்லலாம், அதாவது மனித எந்திரங்கள். இறந்தவர்களை இப்போதெல்லாம் எரிப்பதுமில்லை புதைப்பதுமில்லை. மேலிடம் மறுசுழற்சிமுறையில் (recycling) அவர்களை செயல்படவைக்கிறது. அடிமைகளாவது திடீரென்று ஒரு நாள் கொடிபிடிப்பார்கள், கோஷம் போடுவார்கள். இவர்களிடம் அந்தப் பிரச்சினைகளில்லை.

– நீங்கள் சொல்கிற மேலிடம் அதி புத்திசாலிகளால் கட்டமைக்கப்பட்டதென்று சொல்லுங்கள். ஆனாலும் எனக்கொரு சந்தேகம்.

– என்னது?

– இந்தியா எத்தனையோ இக்கட்டிலிருந்து மீண்டுவந்ததென தாத்தா அடிக்கடி சொல்வார், இப்போதுள்ள நிலைமையிலிருந்து மீள்வது எப்படி? கலகக் குரலுக்கென்று ஓரிருவர் வேண்டாமா?

– மீளுமென்றுதான் நினைக்கிறேன். உங்கள் தாத்தா பெருமைப்படுகிற இந்தியாவுக்கு வீழ்ச்சியில்லையென்றுதான் சொல்லவேண்டும். முக்கியமாக இங்கு உங்களை அழைத்துவந்த நோக்கமே ஒருவரை அறிமுகப்படுத்தவேண்டுமென்றுதான். அவரை பார்க்காதவரை நான் கூட எல்லாம் முடிந்ததென்றுதான் நினைத்தேன். அதோ அந்த கும்பலில் எந்திர மனிதர்களை தள்ளிநின்று வேலை வாங்குகின்ற ஒருவரை பார்க்கிறீர்கள் அல்லவா, அவர்தான் நான் குறிப்பிட்ட அந்த ‘அவர்’

யார் அவர்?

கடவுள்.

—————————————————————-
1. தமிழர் அறிவு கோட்பாடு- முனைவர் க. நாராயணன்-மாரி பதிப்பகம்,புதுச்சேரி-605008

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா