அறிவியலாளர்கள் அரிசியின் மரபணு குறிப்பேட்டை விவரிக்கிறார்கள்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue


அரிசியின் மரபணுவான டி என் ஏ குறிப்பேட்டை இரண்டு ஆராய்ச்சியாளர்கள் குழு முடித்திருக்கிறது. அரிசி உலகத்தின் மனித மக்கள் தொகையில் பாதி நம்பியிருக்கும் ஒரு முக்கியமான தானியம்.

இவ்வாறு மரபணு ஆராய்ச்சி செய்வதன் மூலம், உயர்ந்த ரக, உறுதியான, அதிகம் விளையும் அரிசி ரகங்களை வெகு வேகமாக உருவாக்க முடியும். வெகு வேகமாக வளர்ந்து வரும் உலக மக்கள் தொகைக்கு உணவு கொடுக்க இப்படிப்பட்ட ஆராய்ச்சி மிக முக்கியம்.

அரிசி பற்றிய இந்த மரபணு விவரணை, மற்ற புற்களான சோளம், கோதுமை போன்றவைகளை ஆராய்ச்சி செய்வதற்கும் அதிகமாக உதவும்.

ஆராய்ச்சியில் அரிசி தாவரத்துக்கு இருக்கும் மரபணு ஜீன்கள், மனிதனுக்கு இருக்கும் மரபணு ஜீன்களை விட அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு சுமார் 30-40000 ஜீன்களே உண்டு. அரிசிக்கு சுமார் 50-60000 ஜீன்கள் இருக்கின்றன.

ஆனால், அரிசி மரபணுவில், மற்ற தாவரங்களில் இருக்கும் ஜீன் அமைப்புக்களைப் போலவே, ஏராளமான நகல்கள் அதனுள்ளே மடிந்து மடிந்து இருக்கின்றன. சுமார் நான்கில் மூன்று பங்கு ஜீன்கள் திரும்பத்திரும்ப வருகின்றன.

தாவரங்கள் இப்படி தங்களது ஜீன்களை அடிக்கடி நகலெடுத்துக்கொண்டே இருப்பது, பரிணாமத்தில் நடக்கும் மாற்றங்களைத் தாங்குவதற்காக என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

சீனாவின் பெய்ஜிங் ஜெனோமிக்ஸ் இன்ஸ்டிட்யூட் , வாஷிங்டன் பல்கலைக்கழக ஜினோமிக் மையம் ஆகியவை சுமார் 11 சீன கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்திகா (indica) என்ற முக்கியமான அரிசி வகையை இவ்வாறு மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உள்ளன.

இரண்டாவது குழு, ஸின்ஜென்டா என்ற ஸ்விட்சர்லாந்து கம்பெனி, ஜப்பானிகா என்ற ஜப்பானிய அரிசி வகையை இவ்வாறு ஆராய்ந்துள்ளது.

இந்த இரண்டு அரிசி வகைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் சுமார் 1 சதவீதம் அல்லது 1/2 சதவீதம். இது மனிதர்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தைவிட சுமார் 10 மடங்கு அதிகம்.

(Oryza sativa )ஒரிசா சாடிவா என்று அறிவியல் புத்தகங்களில் குறிப்பிடப்படும் அரிசி தாவரம், இவ்வாறு மரபணு முழுவதும் கண்டுபிடிக்கப்படும் தாவரங்களில் இரண்டாவது. முதலாவது தாவரம் Arabidopsis thaliana என்று அழைக்கப்படும் கடுகுச் செடி.

ஆனால், அரிசியே முதலாவது உணவு தான்யம்.

தனியார் நிறுவனமான செலரா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தடாலடி முறையால் (Shotgun technique) மனித ஜீனோம் மரபணு படிக்கப்பட்டிருக்கிறது. அதே முறையை உபயோகப்படுத்தியே இந்த இரண்டு குழுக்களும் அரிசியின் மரபணுவைப் படித்திருக்கின்றன.

ஸின்ஜெண்டா நிறுவனம், செலரா நிறுவனம் போலவே, ஜப்பானிகா அரிசியின் மரபணு அறிவுக்கு முழு உரிமை கொண்டாடுகிறது. அந்த ஒப்பந்தத்துடனேயே அதன் விவரணத்தை ‘ஸயன்ஸ் ‘ பத்திரிக்கைக்கும் அளித்திருக்கிறது.

அரிசி பற்றிய புள்ளிவிவரங்கள்

அரிசி என்பது ஒரு புல்

சுமார் 60 செமீட்டரிலிருந்து 180 செமீ வரை வளரும்

இதில் வரும் விதைகளை முதன்மையான உணவாக உலகத்தின் பாதி மக்கள் தொகை கொண்டிருக்கிறது.

உலக அரிசி விதை உற்பத்தி சுமார் 6000 லட்சம் டன்கள்

சீனாவும் இந்தியாவும் இணைந்து சுமார் இதில் 50 சதவீத உற்பத்தியைச் செய்கின்றன

Series Navigation

செய்தி

செய்தி