பாவண்ணன்
இருபத்தைந்து பதிப்புகள் வெளிவந்து உலகமெங்கும் உள்ள புத்தக ஆர்வலர்களால் படிக்கப்பட்ட பிரெஞ்சு மொழியில் வெளியான இரவு என்னும் சுயசரிதை நூல் தமிழில் ரவி இளங்கோவனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது பகுதிகளில் 125 பக்கங்களுக்கு நீளும் இந்நுால் வாசிப்பவர்களின் நெஞ்சில் ஏராளமான கேள்விகளை எழுப்புகின்றது. சகமனிதனை மாற்று இனத்தவன் என்கிற காரணத்துக்காக ஒரு மனிதனால் வெறுக்க முடியுமா ? ஒரு பூச்சியை துடிக்கத்துடிக்கச் சித்திரவதைக்குள்ளாக்கி நசுக்கிச் சாகடிப்பதைப்போல மனிதனை மனிதன் கொல்லமுடியுமா ? மனிதரை வழிநடத்துவது அறமா அல்லது அதிகாரமா ? அதிகாரம் கைவரப்பெற்றதும் ஒரு மனிதனுக்குள் பொங்குகிற கொலைவெறிக்கு ஊற்றுக்கண் எது ? இப்படி கிளைத்துக்கிளைத்து நீளும் கேள்விகளுக்கு முடிவே இல்லை. பல நுாற்றாண்டுகளாக உருவாக்கிப் பேணிப் பின்பற்றிவந்த மதிப்பீடுகளையும் அடையாளங்களையும் ஒரேகணத்தில் துாக்கியெறிந்த அதிகார ஆவலையும் வெறியாட்டங்களையும் ஜெர்மனி என்னும் தேசம் வெளிப்படுத்திய காலகட்டம் மனிதகுல வரலாற்றில் அழிக்கமுடியாத ஒரு கரும்புள்ளி. அப்பாவி யூதர்களைச் சிறைப்பிடித்து, மரணத்தை நோக்கி அவர்களை அணுஅணுவாக விரட்டியடித்து விளையாட்டைப்போல ரசித்த நாஜிகளின் நடவடிக்கைகள் இதயமற்றவர்களின் செய்கைகளாகவே இருந்தன.
அதிகார வர்க்கத்தின் வதைமுகாம்களும் சிறைச்சாலைகளும் உலகெங்கும் ஒரேமுகத்தைக் கொண்டவையாகவே உள்ளன. மரணபயத்தை மனிதர்களிடையே நிரப்புவதற்காக அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் மிருகத்தனம் மிக்கதாக இருந்தன. அந்தமான் சிறைச்சாலை, பகல்பூர் சிறைச்சாலை, சைபீரிய முகாம்கள், இலங்கை வதைமுகாம்கள் அனைத்துமே ஆஸ்விட்ச் வதைமுகாமுக்கு முன்மாதிரியாகவும் தொடர்ச்சங்கிலிக் கண்ணியாகவும் விளங்குபவை. இந்த முகாம்களும் சிறைச்சாலைகளும் அகப்பட்டு நசுங்கிய மனிதர்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறார்களே தவிர காலம் காலமாக அங்கே நடந்தேறும் காட்சிகள் ஒன்றே. மரணத்தை நோக்கித் தள்ளும் மனிதாபிமானமேயற்ற அச்செய்கைகள் முடிவேயின்றி மீண்டும்மீண்டும் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. அப்படியென்றால் இந்த வாழ்க்கைக்கு என்னதான் பொருள் ? ஒருவனைக் கொல்வதுதான் இன்னொருவன் வாழ்வதன் பொருளா ?
1944ல் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம். நாஜிகளின் கைகள் ஓங்கியிருந்த நேரம். ஒவ்வொரு வீதியிலும் யூதக் குடும்பங்களைத் தனிமைப்படுத்தி, வெளியேற்றி, ஆடுமாடுகளை விரட்டிச் செல்வதைப்போல அடித்து விரட்டியபடி அழைத்துச் சென்றார்கள் நாஜிகள். எண்பதயாரித்துக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட அக்கும்பலில் அச்சத்தால் தன் தந்தையின் கையைப் பற்றியபடி ஓட்டமாக ஓடி வந்தவன் இளஞ்சிறுவனான எலீ வீஸல். ( அவர்தான் இந்த நுாலின் ஆசிரியர் ) இரவுபகல் பாராமல் ஓடவைத்தபடியும் நடக்கவைத்தபடியும் இருக்கிறார்கள். இடையில் ஊரும்பேரும் தெரியாத இடங்களில் சில நாள்கள் தங்கல். கால்நடைகளைப்போல அடைக்கப்பட்ட ரயிலில் பயணம். உழைப்பு முகாம்கள். அவ்வப்போது கொஞ்சம் சூப். ஓர் உலர்ந்த ரொட்டி. நினைத்த நேரங்களில் கணக்கெடுப்பு. துாக்குதண்டனை. தகன உலைக்குள் தள்ளுதல். பனிச்சேற்றில் சிக்கி உப்பிப் பருத்து அழுகும்வண்ணம் பிணங்களை விசிறிவிட்டுச் செல்லுதல். இப்படியாக அவர்கள் அங்கங்கே தங்கவைத்தபடியும் ஓடவைத்தபடியும் அழைத்துச் செல்லும் பயணத்தின் உத்தேசம் எந்த ஊரைநோக்கியுமல்ல, மரணத்தை நோக்கி என்பதுதான் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
நாஜிகளின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளைப் படிக்கவே மனம் கூசுகிறது. ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லையை நோக்கி வேகமாக ஓடவைக்கிறார்கள். பலமின்றிப் பின் தங்குகிறவர்கள் நோயாளிகளாகக் கருதப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பலம் நிறைந்தவர்களுக்கு மட்டுமே சூப்பும் ரொட்டியும் வழங்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உணவின்றி ஒதுக்கப்படுகிறார்கள். உணவின்மையாலும் கடுங்குளிராலும் அங்கேயே சிறுகச்சிறுக மரணம் அவர்களைத் தழுவுகிறது. கடுமையான உழைப்பு, பயணம், ஓட்டம் என்கிற சூத்திரத்தின் அடிப்படையில் பலம் குறைந்தவர்கள் மெல்லமெல்ல பலம் குறைந்தவர்களாக மாற்றப்பட்டு மரணத்தைநோக்கித் தள்ளப்படுகிறார்கள். நுாறு பேர்களால் அடைக்கப்பட்ட ஒரு வண்டிப் பயணத்தில் ஒரு வாரத்தின் முடிவில் எஞ்சுபவர்கள் வெறும் பன்னிரண்டு பேர்கள் மட்டுமே. பழத்தோல்களைப்போல வழியெங்கும் பிணங்களை வீசிக்கொண்டே செல்கிறார்கள். அல்லது அழுக்குக் குப்பைகளை ஒதுங்கிவிட்டு நடப்பதைப்போல ஒதுக்கிவிட்டுச் செல்கிறார்கள். மகன் தந்தையைவிட்டு ஓடுகிறான். சகோதரன் மற்றொரு சகோதரனைவிட்டு ஓடுகிறான். உயிராசை வேகம் பாசப்பிணைப்பையும் அன்பின் ஈரத்தையும் துல்லியமாகத் துடைத்தெறிந்துவிடுகிறது.
சிறுவனான வீஸல் தன் தந்தையோடும் மற்றவர்களோடும் பிர்கெனா, ஆஸ்விட்ச், புனா, புச்சன்வால்ட் என்ற நான் கு முகாம்களில் மாற்றிமாற்றி அடைக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வளர்ந்தபிறகு எழுதிய சிறுகுறிப்புகளே இந்தச் சுயசரிதை நுால். தந்தையின் மரணத்தைப்பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பதைபதைப்புடன் படிக்கவேண்டியிருக்கிறது. தனக்குக் கிடைத்த ஒரேஒரு கோப்பை சூப்பை இறுதி மூச்சைவிட்டுக்கொண்டிருக்கும் தந்தைக்குக் கொடுப்பதா அல்லது மறுநாள் உயிர்வாழத் தேவையான வலிமைக்காக தானே அருந்துவதா என்று அவன் மனம் தத்தளிக்கிறது. நோயின் தீவிரத்தால் துடிக்கும் தன் தந்தைக்குத் தரும் ஒவ்வொரு துளி தண்ணீரும் விஷமாக மாறிவிடும் என்றறிந்தும் உடல் எரிச்சலால் தவிக்கும் தந்தைக்கு அவனுடைய கைகள் தண்ணீரை அருந்த வைக்கின்றன. எல்லாத் தருணங்களிலும் மனத்தில் நிகழ்ந்த போராட்டம் அதே உக்கிரத்துடன் எழுத்திலும் பதிவாகியுள்ளது.
கட்டளை, கீழ்ப்படிதல் என்ற இரண்டுக்கு மட்டுமே இடமிருக்கும் முகாம்களின் சித்திரங்களை வீஸலின் வரிகள் வழியாக நம்மால் எளிதாக உணர முடிகிறது. ஐயோ இப்படி நடந்திருக்கிறது பாருங்கள் என்று பத்துப் பேரிடமாவது சொல்லிச்சொல்லி ஆற்றிக்கொண்டால் மட்டுமே ஒரு வாசகனால் தன் மனத்திலெழும் ஆவேசத்தைத் தணித்துக்கொள்ள முடியும்.
மனிதனாக இருப்பதையே அவமானமாக உணர்கிற பலநுாறு தருணங்கள் இந்த உலகில் நடந்திருப்பதை இந்த நுால் சுட்டிக்காட்டியபடி உள்ளது. அன்பே கடவுள் என்று நம்பும் நம் மனம் அந்த அன்பின் மீது காறி உமிழ்ந்து வன்மத்துடன் மிதிக்கும் ஆணவம் திரண்டெழும் காட்சியை நம்பமுடியாமல் நம்பவேண்டியிருக்கிறது.
நூலின் முற்பகுதியில் கப்பாலா என்னும் பைபிள் மறைபொருளைப்பற்றிய குறிப்பொன்று இடம்பெறுகிறது. சிறுவனான வீஸலுக்கு இந்த மறைபொருளின் விளக்கத்தை அறியும் ஆசையெழுகிறது. வழிபாட்டுத்தலத்தில் வாழ்ந்துவரும் கோயில்கார மோசெயிடம் அதைச் சொல்லித்தர யாரேனும் கிடைப்பார்களா என்று கேட்கிறான். சந்திக்கும்போதெல்லாம் இருவரும் இதைப்பற்றியே பேசுகிறார்கள். மறைபொருளின் ரகசியத்தை அறிவது அவனது ஆழ்ந்த வேட்கையாக உருவாகி வளர்கிறது. காலமோ அச்சிறுவனுக்கு அவன் ஒருபோதும் அறிய விரும்பாத கொடுமைகளை அறிய வைக்கிறது. தன் வயதையொத்த சிறுவர்கள் துாக்கிலிடப்பட்டு தொங்குவதை அவன் கண்கள் பார்க்கின்றன. எரியும் கொள்ளியில் விறகுக்கட்டைகளைச் செருகுவதைப்போல பால்பேதமின்றி இறந்த உடல்கள் தகன உலைக்குள் வீசியெறியப்படுவதையும் அவன் கண்கள் காணநேரிடுகின்றன. வெட்டியெறியப்பட்ட மரக்கட்டைகளைப்போல வீழ்ந்து கிடக்கிற பிணக்குவியலை மிதித்தபடி அவன் கால்கள் நடக்கவேண்டியிருக்கின்றன. பக்கவாட்டிலும் பின்புறத்திலும் ஓடிவரும் ஆயிரக்கணக்கானவர்களுடன் ஓடவோ நடக்கவோ உரையாடவோ முடியாதவர்களின் மரண ஓலங்களை அவன் காதுகள் கேட்கின்றன. அவன் அறிய விரும்பிய மறைபொருளின் ரகசியம் இதுதானா என்ற நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம்.
இந்த உலகப்போரின் மூலம் மானுடனின் மனம் எவ்வளவு கொடிய விலங்கு வாழும் குகை என்பதை இந்த வரலாற்றில் இன்னொரு முறை எழுதிக்காட்டி மறைந்திருக்கிறது வாழ்க்கை. வாழ்ந்து பெற்ற கசப்பான அனுபவத்தை பல ஆண்டுகள் மெளனத்துக்குப் பிறகு பதிவு செய்திருக்கிறார் எலி வீஸல். சமாதானத்துக்காக 1986 ஆம் ஆண்டில் நோபெல் பரிசைப் பெற்ற இவருடைய எழுத்துகள் பல பகுதிகளாக வந்திருந்தாலும் முகாம் அனுபவத்தின் அடிப்படையில் சிறுவனுடைய கண்ணோட்டத்தில் இவர் எழுதிய முதல் சுயசரிதை நூல் பலவிதங்களிலும் முக்கியமான ஒரு ஆவணமாக புத்தக உலகில் இடம்பெற்றுவிட்டது.
மிகச்சிறப்பான முறையில் இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிற ரவிஇளங்கோவன் வாசகர்களின் பாராட்டுக்குரியவர். வலிக்கும் இதயத்துடன் இவர் எழுதியிருக்கும் சிறப்பு முன்னுரையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் வாக்கியங்களை அவர் கையாண்டுள்ள விதம் நெருக்கமாக உணரச்செய்கிறது. யுனைடெட் ரைட்டர்ஸ் அழகான முறையில் இந்த நூலை அச்சிட்டிருக்கிறார்கள். முகாம்கால அனுபவங்களின் அடிப்படையில் பலவேறு ஓவியர்களால் தீட்டப்பட்ட 41 சித்திரங்கள் இந்த நூலின் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
(இரவு- எலீ வீஸல். தமிழில்: ரவி இளங்கோவன். யுனைட்டெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, சென்னை- 86. விலை ரூ 70)
- கடிதம் ஜூலை 22 , 2004
- மீள்பிறக்கும் உயிர்வளக் கழிவு, எருவாயு எருக்களில் எடுக்கும் எரிசக்தி [Energy from Renewable Biomass & Biogas Fuels]
- தங்கம் மனோரமா – மணிப்பூரில் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்
- தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்
- ஊழலின் சந்நிதியில் 100 நரபலிகள்
- கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!
- கர்ணனின் மனைவி யார் ?
- மெய்மையின் மயக்கம்-9
- வாழ்வின் புன்னகை இந்தக் கதைகள்
- அறிய விரும்பிய ரகசியம்(எலீ வீசலின் ‘இரவு ‘ -நூல் அறிமுகம்)
- கொடிகள் அறுபடும் காலம்( உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை ‘-நாவல் அறிமுகம்)
- அழகும் அதிகாரமும் (காதல் தேவதை-மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்)
- நூறு வருடம் லேட்
- சோமரட்ண திசநாயக்காவின் ‘சின்ன தேவதை ‘ திரைப்படம்
- பூச்சிகளின் காதல்
- உயிர்மை ஓராண்டு நிறைவு விழா – உயிர்மை.காம் துவக்க விழா – ஜூலை 31 , 2004
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் ஆண்டுவிழாப் போட்டிகள்
- தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- கடிதம் ஜூலை 22,2004
- கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?
- தேர்தல், காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற
- கடிதம் ஜூலை 22, 2004 – தமிழ் சங்க பேரவை
- கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி : 24-07-04
- கடிதம் ஜூலை 22, 2004 : வஹாபி இயக்கமும் வர்னாஷிரம லோகஸ்டுகளும்
- கடிதம் ஜூலை 22, 2004
- ஆட்டோகிராஃப் ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி ‘
- வள்ளுவர் தந்த புதுக்கவிதை (அதி:111)– இன்பத்தின் இன்பம்(3)
- டாக்ஸி டிரைவர்
- அன்புள்ள ஆண்டவனுக்கு
- பொய்யன் நான் பொய்யனேனே!
- பதியப்படாத பதிவுகள்
- அன்புடன் இதயம் – 24 – எழுதக் கூடாத கடிதம்
- ஒரு தமிழனின் பிரார்த்தனை
- பெரிய புராணம்
- கொட்டு
- வேடத்தைக் கிழிப்போம்-3 (தொடர் கவிதை)
- எப்போதும் சூாியனாய்
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- சுயதரிசனம் (26.01.004)
- தோற்கிறேன் தான்!
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 29
- கவிதைகள்
- கவிதைகள்
- தீயே நீ தீபம் ஆகமாட்டாய்…
- கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004
- இனிப்பானது
- சத்தியின் கவிக்கட்டு 16-நன்றாய்ப் பார்த்துவிடு
- வதங்கள்
- தீக்கொழுந்தாக….
- 16-ஜூலை-04
- சின்னபுள்ள….
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-4
- அறிவியல் தொழில்நுட்பம்:எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை!