அருந்ததி ராய்

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

செல்வன்


அருந்ததி ராய் ஒரு செக்யூலர் எழுத்தாளர்.பல விஷயங்களில் இடதுசாரி நிலையை எடுப்பவர்.இந்தியா அணுகுண்டு வெடித்ததை கண்டித்து எழுதிய கட்டுரைகளின் .
மூலம் மேற்கத்திய நாடுகளில் நல்ல புகழை அடைந்தார்.அந்த கட்டுரை மகா அபத்தமாக இருந்தது என்பதையும் அதில் இருந்த ஒரே நல்ல அம்சம் அருமையான ஆங்கிலம்,அழகான நடை என்பதையும் தவிர்த்தால் அதில் வேறு ஒன்றும் இல்லை.

அருந்ததியின் எழுத்து நடை குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று.அடுத்தவரை கிண்டல் செய்வது அவருக்கு கைவந்த கலை.ஆனால் அதை நகைச்சுவையாய் செய்தால் நமக்கு சிரிப்பு வரும்.மிகவும் ஆங்காரமாய் கிண்டல் செய்வார்.சில சமயங்களில் அதை படித்தால் எரிச்சலையும் தாண்டி ஒரு சிரிப்பு வரும்.உதாரணத்துக்கு இந்தியா அணுகுண்டு வெடித்ததை “இனி நமக்கு நல்ல பலம் கிடைத்தது” என ஜார்ஜ் பெர்ணான்டஸ் சொன்னதை வயகராவுடன் ஒப்பிட்டு எழுதினார்.நிஜமாகவே அது நல்ல நகைச்சுவை தான்,பாகிஸ்தான் அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளில் வந்திருந்தால் நன்றாக சிரித்து ரசித்திருப்பேன்.அதே மனப்பான்மையுடன் ஒரு இந்தியர் எழுதும்போது சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்தியாவில் இருந்து எழுதி வெளிநாடுகளில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் மிக குறைவு.அணுகுண்டு வெடித்தபோது மேற்கத்திய உலகம் முழுவதும் இந்தியாவுக்கு எதிராக திரும்பியது.அனைத்து வெளிநாட்டு மீடியாக்களும் இந்தியாவை கண்டித்து எழுதின.அமெரிக்கா இந்தியாவை அணுகுண்டு வைத்திருக்கிறாய் என கண்டித்தது மாதிரியான ஜோக் உலகில் வேறு எதுவும் கிடையாது.அமெரிக்க மீடியாக்களுடன் அமெரிக்க அணுக்குடை பாதுகாப்பின் கீழிருக்கும் ஐரோப்பிய நாடுகளும்,ஆஸ்திரேலியா,ஜப்பான் ஆகியவையும் சேர்ந்து கண்டனம் தெரிவித்தபோது நமது அம்மையாரும் சந்தில் சிந்துபாடி பெயரை தட்டிக்கொண்டு போய்விட்டார்.

அந்த கட்டுரையில் அவரே சொல்வது போல் “அணுகுண்டு வைத்திருப்பதற்காக இந்தியா சொல்லும் பாதுகாப்பு காரணங்கள் உண்மையானவை” – இருந்தபோதிலும் நான் இந்தியா அணுகுண்டு வெடிப்பதை எதிர்ப்பேன் ஏனெனில்

1.இந்தியாவில் மக்களுக்கு சோறில்லை.இந்த லட்சணத்தில் குண்டு ஒரு கேடா?
2.அணுகுண்டு மேற்கத்திய கண்டுபிடிப்பு.அது நமக்கு எதற்கு?
3.அணுகுண்டு வெடித்தால் லட்சக்கணக்கானோர் சாவார்கள்.

இந்த மூடத்தனமான வாதங்களையே கட்டுரை முழுக்க திரும்பி திரும்பி வைக்கிறார்.அணுகுண்டு நம்மீது விழுந்தாலும் லட்சக்கணக்கானோர் சாவார்கள்.ஏழை,பணக்காரன்,இடதுசாரி,வலதுசாரி எல்லாரும் தான் சாவார்கள்.நாம் குண்டு வைத்திருக்காவிட்டால் நம் மீது குண்டு விழாது என உறுதியாக சொல்ல முடியுமா?முடியாது.அணுயுத்தம் ஆபத்தானது தான்.ஆனால் நாம் ஒன்றும் அணுகுண்டை கண்டுபிடிக்கவில்லையே?சீனாக்காரன் அணுகுண்டு வைத்திருக்கிறான்.பாகிஸ்தான் வைத்திருந்தது(ஆனால் வெளியே சொல்லவில்லை).பெரியண்னன் வைத்திருக்கிறார்.இவர்கள் அனைவருக்கும் நம்மீது ஒரு கோபம் இருந்துகொண்டே இருந்தது.ரஷ்யா இருந்தவரை நமக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது.அதன்பின் வேறு வழி கிடையாது.

அருந்ததிக்கும் இதெல்லாம் தெரியும்.அவரே அதை ஒத்துக்கொள்கிறார்.இருந்தாலும் “நீ ஏன் அணுகுண்டு வெடித்தாய்?அது என்ன வயாக்ராவா” என அபத்தமாக கேட்கும்போது அவர் மீது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை.அப்போது அருந்ததியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அமெரிக்கர்களும் அருந்ததியை அதன்பின் கண்டுகொள்ளவில்லை.அவர்களுக்கு தேவையானால் பின்லேடனை கூட அவர்கள் கொண்டாடுவார்கள்.அந்த கதிதான் அருந்ததிக்கும் நேர்ந்தது.

உலகம் முழுக்க அணுஆயுதம் வைத்திருக்கும்போது நாம் மட்டும் வைத்திருக்க கூடாது என்பது தான் இந்த அம்மையாரின் கொள்கை.இவர்களின் பேச்சை கேட்டால் அரசு நடத்த முடியாது.சன்யாசி மடம் தான் நடத்த முடியும்.நல்லவேளை இவர்களுக்கு மக்களிடையே பரந்த செல்வாக்கு இல்லை.நாம் தப்பினோம்.

அன்னியர் ஆக்கிரம்ப்பை சமாளிக்க அணுகுண்டு அவசியம்,அதை விட வலிமையான ஆயுதம் இருந்தாலும் அவசியம்.கலாம் சொன்னதுபோல் வலிமையான இந்தியாவே நல்லரசாக இருக்க முடியும்.அதை செய்ய ஆயுத பலம் அவசியம்.

இந்தியா பலவீனப்பட உட்பகை போதும்.வெளிப்பகை தேவை இல்லை.இந்திய எதிரிகளான தீவிரவாதிகள் செய்வது இந்த உட்பகை வகையைத்தான்.இவர்கள் மக்களுக்கு ஆதரவாக போர் புரிகிறேன் என்று சொல்லிக்கொண்டு அந்த மக்களுக்கே ஆப்பு வைப்பவர்கள்.

இரும்புக்கரம் கொண்டு தீவிரவாதிகளை ஒடுக்கும் அதே நேரத்தில் மக்கள் மீது வன்முறையை பயன்படுத்தாது இருப்பதும் அவசியம்.

நர்மதா அணை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அடுத்ததாக போராடினார் நம் அம்மையார்.சரி ஆதிவாசிகளுக்கு நல்லது செய்கிறார் என ஆதரிக்க வேண்டிய விஷயம் தான்.ஆனால் அவரே தடுக்கப்பட்ட வனப்பகுதியில் மாளிகை கட்டி குடியிருந்தது
வெளியே வந்தபோது நமக்கு சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இந்தியா நிலப்பிரபுக்களின் நாடு என சாடுகிறார்.ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் இவரே வனப்பகுதியில் நிலம் வைத்துக்கொண்டு அதை சொன்னால் இவரையும் சேர்த்து இவரே திட்டிக்கொள்கிறார் எனத்தான் தோன்றுகிறது.

நக்சலைட்டுகள்,மாவோ தீவிரவாதிகள் மீது இவருக்கு தாள முடியாத பாசம்.”அவர்கள் சாதி கொடுமைக்கு எதிராகவும்,மேற்கத்திய ஏகாதிபத்த்யத்துக்கு எதிராகவும் போரிடுகின்றனர் – அவர்களுக்கு ஆதரவாக போரிட நான் கடமைப்பட்டுள்ளேன்” என்கிறார்.

சாதி கொடுமை,மேற்கத்திய ஏகாதிபத்த்யம் ஆகியவற்றை எதிர்த்து அனைவரும் போராட வேண்டியதுதான்.ஜனநாயக நாட்டில் அதற்கென போர் முறைகள் இருக்கின்றன.அந்த முறையில் போரிடும் கம்யூனிஸ்ட்,தலித் இயக்கங்கள் பல உள்ளன.இப்படி ஜனநாயக முறையில் எதிர்ப்பை காட்டுவதை விடுத்து நக்சல் பாதையே நமது பாதை என்று போகின்றவர்களுக்கு நக்சலைட்டுகளுக்கும்,மாவோ தீவிரவாதிகளுக்கும் என்ன மரியாதை தருவோமோ அதே மரியாதை தான் தர முடியும்.சில வட்டாரங்களில் இதற்காகவே அருந்ததிக்கு ஆதரவு உண்டு.பின்னே இருக்காதா?

காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்கிறார்.செய்ய வேண்டியதுதான்.அதற்காக இவர் ஆதரவு தெரிவிக்கும் JKLF காஷ்மீரில் பண்டிட்களை கொலை செய்த இயக்கம்.மதுக்கடைகள்,சினிமா தியேட்டர்கள்,அழகு நிலையங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தி உரிமையாளர்களை கொலை செய்து ஒழுக்கத்தை நிலைநாட்டிய இயக்கம்.பண்டிட் பெண்களை படுகொலை செய்து தொடைகளை வெட்டி தொங்க வைத்த இயக்கம்.இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி என்றால் எரிச்சல் வருவதை தவிர்க்க இயலவில்லை.

அருந்ததி வாதத்தில் சரக்கில்லை என்று அமெரிக்காவில் தெரிந்துகொண்டு அவரை யாரும் கண்டுகொள்வதில்லை.அங்கே அடிக்கடி போய் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுப்பார்.சீந்த ஆளில்லை.இந்தியாவிலும் அதே நிலைதான் அம்மையாருக்கு.

பல நல்ல நோக்கங்களுக்காக அருந்ததி குரல் கொடுக்கிறார் என்பதை குறிப்பிடாமல் இந்த கட்டுரையை முடிக்க இயலாது.ஆதிவாசிகள் நலன்,ஏகாதிபத்திய எதிர்ப்பு,உலகமயமாக்கல் எதிர்ப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறார்,சில சுயமுரண்களுடன்.காலப்போக்கில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இவர் மாறினால் இவர் கொள்கை நீர்த்துப்போகுமா அல்லது மேலும் பலம் பெறுமா என்பதை இப்போதே கணிக்க இயலவில்லை.

கட்டுரைகளுக்கு இவர் வைக்கும் தலைப்புகள் கவிதை நயமாக இருக்கும்.எழுத்து நடையும் அபாரமாக இருக்கும்.ஆங்கிலத்தில் மிக நல்ல புலமை கொண்டவர்.இவரது இரண்டாவது புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்(சில கட்டுரைத்தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்)

அருந்ததி மக்கள் செல்வாக்கை பெற இயலாது.அதை அவர் விரும்பவும் இல்லை என நினைக்கிறேன்.அவர் அறிவுஜீவிகளுக்காகவே இப்போது எழுதுகிறார் என தோன்றுகிறது.அந்த வட்டத்தில் எவ்வளவு radical ஆக இருக்கிறோமோ அத்தனைகத்தனை மதிப்பு அதிகம்.ஆனால் ஒரு எல்லை தாண்டினால் அவர்களே கை விட்டு விடுவார்கள்.

அருந்ததி விஷயத்தில் அது சீக்கிரம் நடக்கும் என தோன்றுகிறது.

தன் அபாரமான ஆங்கில அறிவை,எழுத்து நடையை நல்ல வழியில் செலவு செய்தால்,தீவிரவாத ஆதரவு நிலையை கைவிட்டால் நல்ல புகழை அடைய இவருக்கு வாய்ப்பிருக்கிறது.நாட்கள் செல்ல செல்ல சிலர் extreme viewpoints கைவிடுவர்.அருந்ததி விஷயத்தில் அது நடக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

www.holyox.blogspot.com
http://groups.google.com/group/muththamiz?hl=en

Series Navigation

செல்வன்

செல்வன்