அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

எச்.பீர்முஹம்மது


நம் பார்வையிலிருந்து காட்சிகள் மறையும் வரையிலான உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். கண்ணாடி

பிரதிபலிக்கும் ஒளி தரையை தொட்டு எழும்பி நகர் முழுவதும் பரவி கிடக்கும் தத்ரூபம்.பேரீத்த பழங்களை

விட நிரம்பி வழியும் மனித தலைகள். நான் பயணம் செய்த விமானம் அதன் இயல்பான நிலையில் இருந்து

கீழிறங்கிய போது அபுதாபி நகரம் பறவை பார்வையாக வெளிப்பட்டது. வித்தியாசமான சூழலில் நுழைந்தது

மாதிரியான உணர்வு எனக்கு ஏற்பட்டது. இம்மாதிரியான அம்சங்களோடு நகர்ந்து கொண்டிருக்கிறது ஐக்கிய

அரபு எமிரேட். இதன் வரலாற்று பின்னணி நீண்ட நெடியது. அதனைப் பற்றி பின்னர் விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.

மத்திய கிழக்கின் வர்த்தக மையமாக, வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பு களமாக விளங்கும் ஐக்கிய

அரபு எமிரேட்டில் அதன் அதிபர் சுல்தான் அல் -நஹ்யானின் மரணம் வளைகுடா நாடுகளுக்கு சிறு இடைவெளியை

உருவாக்கி விட்டிருக்கிறது.நவம்பர் 2ஆம் தேதி மாலை அரபு தொலைகாட்சிகளில் இவரின் மரணச்செய்தி ஓடிக்

கொண்டிருந்தபோது அரபுலகமே நிசப்தத்தில் ஆழ்ந்தது.அவரின் இழப்பு திருப்பியளிக்கமுடியாததாக இருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்டின் நிறுவனராக கருதப்படும் செய்யது-பின் – சுல்தான் அல்-நஹ்யான் 1918ல்

எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் பிறந்தார். வழக்கமான பால்யகால செயல்பாடுகளுக்கு பிறகு 1946ல்

அரச பிரதிநிதியாக பதவியேற்றார். இதன் பிறகு பிரான்சு, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்

செய்தார். அந்நாடுகளின் வளர்ச்சி நிலைபாடு, பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை இவரின்

மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய நாட்டையும் அது மாதிரியான நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. 1966 ல் அபுதாபி மன்னராக பொறுப்பேற்றார். அறுபதுகளுக்கு முன்பு

வரை வளைகுடா பகுதியில் முகாமிட்டிருந்த பிரிட்டன் படைகள் 1971ஆம் ஆண்டு இறுதியில் முழுவதுமாக விலகி

கொண்டன.1971என்பது வளைகுடா வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். அந்த வருடம் தான் பஹ்ரைன் ஈரானின்

பிடியில் இருந்து சுதந்திரம் பெற்றது.மிக முக்கிய நிகழ்வாக பிரதேச வேறுபாடுகளுடன், தனித்தனியான மாகாணங்களாக

செயல்பட்டு கொண்டிருந்த அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மன், உம்முல் குவைன், புஜைரா போன்றவை ஒருங்கிணைந்து

ஐக்கிய அரபு எமிரேட் என்ற ஒருங்கிணைந்த அரசாக தங்களை அறிவித்து கொண்டன. இதனோடு கூடுதலாக

ராஸல்-கைமார்க் பின்னர் இணைந்து கொண்டது. இதன் தலைவராக அல்-நஹ்யான் பொறுப்பேற்று கொண்டார். இந்த

அரசுகள் தங்களுக்குள் கூடி பின் வரும் நான்கு செயல்திட்டங்களை அறிவித்து கொண்டன.

1. வலுவான கல்வி கற்ற சமூகத்தை உருவாக்குதல்

2.அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்சினையை தீர்த்தல்

3.அரபுலகத்துடன் வலுவான உறவு.

4. அணிசேரா நிலைப்பாட்டை கடைபிடித்தல்.

இதன் மூலம் சர்வதேச களத்தில் சக்திவாய்ந்த, வளர்ந்த நாடாக தங்களை மாற்றுவது.

மேற்கண்ட செயல்திட்டங்களை அடிப்படையாக வைத்து நஹ்யான் தன்னுடைய செயல்பார்வையை அமைத்து

கொண்டார்.

1957 ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த மகத்தான அக்டோபர் புரட்சியானது மலையாளிகள் இங்கு

நுழைவதற்கான களத்தை அமைத்து கொடுத்தது. 1970க்கு பிறகே அவர்களின் வருகை அதிகரித்தது.வெளிநாட்டினரை

வேலைக்கு அமர்த்தி அவர்களின் உழைப்பை சுரண்டுவது என்பதை தங்கள் வளர்ச்சிக்கான முன்னோட்டமாக

கருதினார்கள்.ஐக்கிய அரபு எமிரேட் அதன் கதவுகளை தாராளமாகவே திறந்து விட்டது.தங்களிடையேயான அறிவு மற்றும் உழைப்பின் போதாமை இதற்கான காரணமாக சொல்லப்பட்டது.

வளைகுடா நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தர், சவூதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்

ஆகியவை இணைந்து 1981 ல் வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு குழு(gulf co-operation council) என்ற அமைப்பை ஏற்படுத்தி கொண்டன.இந்த அமைப்பின் முதல் கூட்டம் ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகர் அபுதாபியில் நடைபெற்றது. தங்களுக்கிடையே பல திட்ட செயல்பாடுகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது, வர்த்தக உறவை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற விஷயங்கள் இதில் பரிமாறப்பட்டன. இந்த அமைப்பு உருவானதில் சுல்தான் – அல்- நஹ்யானின் பங்கு மிக முக்கியமானது.இந்த கூட்டுகுழுவின் உருவாக்கத்திற்கு பிறகு வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டது.அதற்கான சாத்தியபாடாக கேரளாவில் நடந்த புரட்சியும் ஒத்திசைவாக இயங்கியது.

சுல்தான் அல்-நஹ்யான் மரபார்ந்த, அடிப்படைவாத கருத்தியலிலிருந்து விலகியே இருந்தார். குறிப்பாக

சமூக,பொருளாதார, அரசியல் தளங்களில் பெண்களின் பங்களிப்பு குறித்து அதிகமாகவே யோசித்தார்.இஸ்லாமிய

பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவை முக்கியம். இதனை ஓரளவு செயல்படுத்தியும் காட்டினார்.

இஸ்லாமிய சதுரசுவர்களுக்கு அப்பாலும் சில விஷயங்களை அவரால் செய்ய முடிந்தது. லெளகீக உலகின் விஞ்ஞான

தொழில்நுட்ப மாறுதல்களை உள்வாங்கியதன் மூலம் உலக அரங்கின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. மன்னராட்சி முறை

இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான ஒன்றாக இருந்தாலும் அமெரிக்கா வளைகுடா விஷயத்தில் தனக்கு சாதகமான

ஒன்றாகவே கருதுகிறது. ஈராக்கின் தகர்வை தொடர்ந்து அமெரிக்கா வளைகுடா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில்

கொண்டு வந்து விட்டது. அநேக நாடுகளில் அமெரிக்க ராணுவ மையங்கள் காணப்படுகின்றன.சுல்தான் -அல்- நஹ்யான்

அரபு நாடுகள் சுதந்திரமான பொருளாதார தளத்தில் , தனித்தியங்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கு

மற்றவர்கள் ஒத்துழைக்காமல் போனதால் அவர்கள் மீது மனஸ்தாபம் அவருக்கிருந்தது. சொந்த நாட்டினரை நாட்டின்

வளர்ச்சிக்கான செயல்பாட்டில் ஈடுபடுத்த உருவாக்க முடியாமல் போனது அவரின் சறுக்கலே. எமிரேட்டின் மக்கள்

தொகை அங்கிருக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை விட குறைவு என்பது பலகீனமான விஷயமே. மேற்கண்ட

பலகீனங்களின் எல்லையை மீறி அவரின் மரணம் வளைகுடா நாடுகளுக்கு சின்ன இடைவெளியை உருவாக்கி விட்டு

சென்றிருக்கிறது.

peer8@rediffmail.com

Series Navigation

author

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது

Similar Posts