அன்பைத் தேடி

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

தேவமைந்தன்



திருமணத்துக்கு உடைகளெடுக்கக் கிளம்பியவர்களுடன் நானும் புறப்பட்டேன். ஊரிலேயே பழமை வாய்ந்த பட்டுத் துணிக்கடையில் துணிவாங்கிவிட்டு அதன் எதிரில் உள்ள இந்தியன் உணவகத்தில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் வீடு திரும்புவது எங்கள் ஊர்ப் பழக்கம். அநேகமாக எல்லா ஊர்களிலும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

உள்ளே மாடியில் ஏ.சி’யின் தண்மையில் பட்டுச் சேலைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த உறவினர்களிடமிருந்த என் கவனம், அந்தக் கடையில் பணி புரியும் இளைஞன் ஒருவனின் செயலால் திசை திரும்பிற்று. அவன் கவனம் வேலையில் இல்லை. இரண்டு முறை நழுவி, கடைக்கு வெளியே செல்லுவதும் உடனே திரும்புவதுமாக அவன் இருந்ததைக் கண்டேன். மூன்றாவது முறை அவன் பின்னால் சென்று ஏன் அவன் அவ்வாறு செய்கிறான் என்று பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தேன். வெளியே யாராவது பெண் இருந்து, அவள் அவனுக்குக் காதலியாக இருந்தால், ‘எம்(டன்) மகன்’ நாசர் பாணியில் அவனைத் திட்டியாவது பொறுப்புள்ளவனாக மாற்ற வேண்டும் என்று ஒரு ‘வேட்கை’யும் என் ‘சித்த’த்தில் எழுந்தது.

மூன்றாவது முறையாக அவன் நழுவுவதைப் பார்த்தேன். அவனோ பிறரோ என்னைக் கவனிக்காதவாறு வெகு இயல்பாக அவனைப் பின்தொடர்ந்தேன்.

கடைக்கு வெளியே பிளாட்பாரத்தில் தெருவோரமாக இருந்தது ஒரு டிரான்ஸ்பார்மர். அதன் பின் பகுதி மூடியின் கீழ்ப்பகுதி திறந்திருந்தது. தாறுமாறாக ஒயர்கள் இருந்தன. அதை மிகவும் நெருங்கி நின்றிருந்தது பெண்குழந்தை ஒன்று. மூன்று வயதுதான் இருக்கும். அதன் அருகே சென்ற அந்த இளைஞன், ” என்ன பாப்பா? எவ்வளவு சொன்னாலும் இந்தண்டை வரமாட்டேன்’கிறீயே! உன் அம்மா அப்பா எங்கே?…ஏன் இப்படி அடம் புடிச்சுக்கிணு இங்கேயே நிக்கிற! அம்மா அப்பா வார வரைக்கும் இந்தக் கடை வாசல்ல’யாவது வந்து நின்னுக்கோ.. அந்த இடத்துல நிக்காதே!” என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். அது மசியவில்லை. ஒட்டாரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது.

“என்ன தம்பி! கடை வேலையை விட்டுட்டு இந்தக் குழந்தை கிட்ட மல்லுக் கட்டிக்கிட்டு இருக்கிறயே! குழந்தை மாதிரியா இருக்கு? மூஞ்சி’லே என்ன உக்கிரம் பார்!” என்று நான் சொன்னதுதான் தாமதம். கண் கலங்கியவாறே அந்த இளைஞன் சொன்னான். “இல்ல முஸ்சியே![பிரஞ்சுத்தமிழில் ‘ஐயா’ என்று பொருள்] காலை’லயே ரெழிக்காரனுவோ[மின்துறையினர்] வந்தாங்க! எதுவோ ‘அராத்து’ நேத்து ராத்திரி அந்த டிரான்ஸ்பார்மர்’ல சிலுவிசம்[சில்மிஷம்] பண்ணிருக்கா’மா..பாவிப் பய.. அதனால ரெழிக்கு நாங்க போய்வர்றவரை கொன்சம் பாத்துக்கோ’ன்னுட்டுப் பூட்டானுவோ.. மொதலாளிகிட்ட சொல்லிட்டு வந்து பாக்கிறேன்.. இந்தப்புள்ள வந்து அத ஒட்டிக்கினு ஒட்டாரமா நிக்குது..”

“மனநலம் இல்லாத புள்ளயா இருக்கும் போல இருக்கு!..” என்று இழுத்தேன்.

“இல்ல முஸ்சியே.. இந்தப் புள்ளையோட ஆத்தா இந்தப் பக்கமா இருக்கிறவோ..சைக்கிள் ரிக்ஷாக்காரன் பொஞ்சாதி.. இந்தப்புள்ளைய இப்படிப் பொறுப்பில்லாம வுட்டுட்டு எங்கினாச்சியும் சண்டைவாங்கிக்கிணு இருப்பா..மத்த நேரம்’னா வுட்டிறலாம்..இந்தப் புள்ளை இப்படி ரிஸ்க் எடுத்துகிட்டு இருக்கிறப்போ, உள்ள வேலை’லே கவனமே செல்லல்லே…” என்றான்.

“ஏம்ப்பா..இப்படிப் பேசிக்கிட்டு இருக்காம அந்தப் பிள்ளையே ‘சட்’டுனு தூக்கி, இந்தாண்ட விட்டுறலாமே!” என்றான். சாந்தமாகப் பேசிக்கொண்டிருந்தவன் எரிச்சல் காட்டத் தொடங்கினான். “நீங்களே அப்படிச் செஞ்சு பாருங்க புரியும்!” என்றான்.

“அப்படியா!” என்று அவனைப் பார்த்து இளக்காரமாக சொன்னவன், கராத்தே பாணியில் சுழன்று சென்று, அந்தப் பிள்ளையைத் தூக்கி, கடைவாசலில் விட்டேன். ஒரே ஒரு கணம். அந்தப் பிள்ளை என்னைவிட வேகமாக இயங்கியது. பழைய இடத்தை விடவும் அந்த டிரான்ஸ்பார்மருக்கு இன்னும் நெருக்கமாகச் சென்று கையை நீட்டி அந்த சிதைந்த ஒயர்களைத் தொடவும் போனது. பயங்கரம் என் நெஞ்சில் உறைத்துக் கனத்தது.

மறுகணம். எங்கிருந்தோ வந்த ரிக்ஷாக்காரனின் மனைவி, அவளிருந்த கோலத்துக்கு மிகவும் பொருத்தமான ஆங்காரத்தோடு, அந்தக் குழந்தையின் முடியைப் பிடித்துத் தூக்கி, இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“சித்த அந்தாண்டை இந்தாண்டை போகவுடுறியா நாயே! இப்ப பாரு இந்த அண்ணாத்தைகளையும் செம டென்ஷனாக்கி வுட்டுட்டேயே!” என்று சொல்லியவாறே எங்களை நன்றியுடன் ‘நோக்கி’விட்டுச் சென்றாள். அந்த இளைஞனை அன்புடன் பார்த்துச் சொன்னேன்:”உண்மையிலே ஒனக்குத்தான்’பா நன்றி சொல்லணும்!..”

அவன் குறும்பாக என்னைப் பார்த்துச் சொன்னான். “இல்ல முஸ்சியே! வேல மெனக்கிட்டு என்னெ ஃபாலோ பண்ணி இங்க வந்து எனக்குக் கம்பெனி குடுத்தீங்களே! நீங்களும் நன்றிக்குரியவர்தான்..” சொல்லிவிட்டு வேகமாக தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.

நான் கடைக்குள் சென்றபோது இன்னும் உறவினர் பட்டுச்சேலை தொடர்பாக ‘சீரியஸ் டிஸ்கஷ’னில் இருப்பதைக் கவனித்து, அவர்கள் பார்வையில் படும்படியாக அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்து சாய்ந்து கொண்டேன்.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

அன்பைத் தேடி…

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அன்பைத் தேடி அலைவதனால்

உன்னுள் அன்பும்,

அடக்கமும், பாசமும், பண்பும்

இன்பமும், இனிமையும்

இனிதாய் வந்து தங்கும்

அதிகாரம் தேடி,

சதிகாரனாகி

சாதிக்கப் போவது என்ன ?

விதியே என்று நீயும்,,

வீணாகத் தனிமைப் படுத்தப் படுவாய்

வீதியோரத்தில்…

அன்பைக் கொடுத்து விடு

அறிவைத் தந்து, பிறரை

ஆதரிக்கக் கற்று விடு

விதியை வென்று நீ

விண்ணை எட்டிடலாம்.

பிறரைச் சாடி

வதை மொழி பேசுவதால்

மிஞ்சுவதெல்லாம் உனக்கு..

பேயனென்ற பேச்சுத் தான்

நாயே என்றுன்னை

நாலுபேர் தள்ளி வைத்தால்

நீ போய் தனிமையில்

மெளனியாய் அஞ்ஞாதவாசம் தானே!

வேண்டாம்..வேண்டாம்

விட்டு விடு விவாதிப்பதை..

ஏற்றிடு பிறர் கருத்தை..

அது உனக்குச் சாதகமில்லை

என்றாலும்

சார்ந்து விடு அவர் பக்கம்

சாதிக்கலாம் நீ நிறையவே!

pushpa_christy@yahoo.com

Series Navigation