அன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு – பரிசுக்குரிய கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

ஜாபர் அலி, தண்டபாணி பொன்னுரங்கம்,சோ. சுப்புராஜ், கார்த்திக் பிரபு


அன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு – பரிசுக்குரிய கவிதைகள்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் நடத்திய இயல்கவிதைப் போட்டியில் நடுவர் “திசைகள்” மாலன் தெரிவு செய்த பரிசுக்குரிய கவிதைகள்:

*

முதல் பரிசுக்குரிய கவிதை

“வெளிப்படு”
==========

மதம்
ஒரு நடைவண்டி

கற்பவனுக்கு வரம்
கற்றவனுக்கோ சாபம்

சாப விமோசனம்
சர்வ நிவாரணம்

ஓட்டை உடைத்தல்
விதையின் கடமை
கூட்டைச் சிதைத்தல்
குளவியின் உரிமை

அது
நன்றி கொல்லல் அன்று
நன்று கொள்ளல்

மீண்டும் பிற.

– ஜாபர் அலி
துபாய்

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*


இரண்டாம் பரிசுக்குரிய கவிதை

“நலம் நலமறிய ஆவல்”
====================

கடுதாசி போட்டுபுட்டு
கடத்தெருவுக்கு போறப்பலாம்
தபால்காரன பாத்துபுட்டா
தலையாட்டி கேட்டுக்குவேன்,
என் அம்மாகிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கான்னு…

சைக்கிள் மணி சத்தம் கேட்டா
சட்டுனு எழுந்து ஒடிவருவேன்
தபால் வந்திருக்குமோன்னு
தட்டுத் தடுமாறி ஒடிவந்தா
பொடவக் காரன் வந்திருப்பான்
என் நெனப்புல மண்ணள்ளிப்போட…

காத்திருந்து காத்திருந்து
கடுதாசி கெடைக்கிறப்போ
சேத்துவச்ச சந்தோசமெல்லாம் மூஞ்சில தெரியும்,
அன்னிக்கி மட்டும் தபால்காரன் ஆண்டவனா தெரிவான்!

ஆசப்பட்ட கடுதாசி வந்துடுச்சி
அதுவரைக்கும் இருந்த பசியும் மறந்துபோச்சி
கொண்டாந்த தபால்கார மாமாவுக்கு
கபாலி கட மசால் வட பரிசா போச்சி!

கடுதாசிய கையில வாங்குறப்போ
என் அம்மா கைபுடிச்ச ஞாபகம் வருது
அத நெஞ்சோட அணச்சிகிட்டு நடக்குறப்போ
என்ன கட்டிபுடிச்சி அழுதது கண்ணுல தெரியுது…

அவசரமா ஒரு தடவ
ஆசையா ஒரு தடவ
காலையில ஒரு தடவ
தூங்குறப்போ ஒரு தடவ
திருப்பி திருப்பி படிச்சிட்டு
கண்ண கொஞ்சம் கசக்கிட்டு
பேனா எடுத்து எழுதுறப்போ
பாசம் ஊருது நெஞ்சுக்குள்ள
அத பேனா வரையுது பேப்பருல…

அம்மாவோட ஆஸ்த்துமா,
அப்பாவோட B.P.,
அக்காவோட கல்யாணம்,
தம்பியோட காலேஜி,
லக்ஷ்மி போட்ட கன்னுக்குட்டி,
பைரவன் கடிச்சி வெச்ச பால்காரன் பையன்,
தோட்டத்துல நட்டுவெச்ச ரோஜா செடி,
தண்ணி வராத கார்ப்பரேஷன் கொழா,
‘அடடா மறந்துட்டனே’ன்னு
பக்கத்து வீட்டு பாட்டி சொகம்,
ஒன்னொன்னா விசாரிச்சிட்டு
பக்கம் தீந்ததுக்கு அப்புறம்
நெடுக்க திருப்பி எழுதிடுவேன்
எனக்கு ப்ரமோஷன் கெடச்ச விஷயத்த…

பாத்து பாத்து பக்குவமா
எழுத்து அழியாம மடிச்சிபுட்டு
சமச்சி வெச்ச சாதத்துல
ஒரு பருக்க எடுத்து ஒட்டிவெப்பேன்

என்னதான் அவசரமா
ஆபீஸுக்கு கெளம்பினாலும்
அன்னிக்கி மட்டும் மறக்கமாடேன்
அம்மாவுக்கு எழுதின கடுதாசிய…

மாடவீதி வரைக்கும் நடந்து வந்து
போஸ்ட் பாக்ஸ்ல போட்டுபுட்டு
தலையில ரெண்டு சைடுல ரெண்டு
தட்டு தட்டுவேன்…
அக்கறையா தட்டினதுக்கு
துறுபிடிச்ச பெட்டி நைஸா
கையில ஒட்டி அனுப்பிடுவான்
இரும்பு பிசுக்க..
அத தட்டிவிட்டு கெளம்பிடுவேன்
காத்துகெடக்க..!

இன்னிக்கி,
தபால் போட்ற ஆள் இல்ல
தபால் தலையில பசையும் இல்ல
போஸ்ட் ஆபீஸ்ல கியூ இல்ல
போஸ்ட்மேன் தலையில மயிருமில்ல…

எலக்ட்ரானிக்கா பேசிக்கிறோம்
எதுக மோன மறந்துபோச்சு
எழுதிப் பாத்து நாளும் ஆச்சு
அட பேனா பென்சில் மறந்து போச்சு!

இமெயிலு இன்டர்நெட்டு
வாய்ஸ் மெயிலுக்கெல்லாம் வாக்கப்பட்டு
இன்பர்மேஷன் டெக்னாலஜி இனிமையா தெரியுது…
இன்னிக்கொன்னு நாளிக்கொன்னுன்னு புதுமையா போகுது…

உண்ம ஒண்ண சொல்லனும்
உரிமைய கொஞ்சம் எடுத்துக்குறேன்,
தப்பிருந்தா மன்னிச்சிடுங்க
தப்பா ஏதும் சொல்லிப்புட்டா…

இமெயிலு அனுப்பிட்டு
இந்தப்பக்கம் திறும்புறதுக்குள்ள
பதில் வந்து சேந்துறுது – அதுல
‘காத்திருக்குற சொகம்’
செதில் செதிலா போயிறுது…

பாசத்த காணல
தமிழ் சுவாசத்த காணல
பேனா புடிச்சி எழுதுறப்போ
கண்ணீர்பட்டு காஞ்சி போன தடயத்த காணல…

வேகமா பேசிக்கிறோம்
வேடிக்க காணல
கீபோர்ட தட்டி தட்டி
கிறுக்கு மட்டுந்தான் புடிக்கல!

புதுசு புதுசுன்னு பூரிச்சிப்போறோம்
பழசோட வாசனைய பதப்படுதாம…
எதுக்கு எதுக்குன்னு தெரியல
அட ஏண்டா இன்னும் புரியல?

நலம் நலமறிய ஆவல்,
இது பழைமையின் அறைகூவல்!

– தண்டபாணி பொன்னுரங்கம்
சென்னை

(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*


ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 1

“பறக்கும் கம்பளம்”
================

சிறுவயதில் பள்ளிக்குப் போக – நான்
அடம் பிடிக்கும் போதெல்லாம்
அம்மா சொல்வாள் அடிக்கடி
“ஒழுங்காய் பள்ளிக்குப் போய்
நல்லபடியாய் படித்து முடித்தால்
உனக்கு நான்
பறக்கும் கம்பளம் ஒன்று வாங்கி
பரிசளிக்கிறேன்… ” என்று.

ஆச்சரியத்தில் கண்கள் விரிய
ஆகட்டுமென்று ஓடியிருக்கிறேன்
ஆகாயம் பார்த்தபடி பள்ளிக்கு;
கதைகளில் கேட்டதுண்டு
சினிமாக்களில் பார்த்ததுண்டு – ஆயினும்
பார்த்ததில்லை நிஜத்தில்
பறக்கும் கம்பளத்தை…

ஏறி உட்கார்ந்ததும் விர்ரென்று
மனதில் நினைக்கும் இடத்திற்கு
பறந்து போய் இறக்கி விடுமாம்;
எத்தனை சந்தோஷம் அது!
நினைக்கும் போதே பறக்கிற உணர்வில்
நெஞ்செல்லாம் இனித்திருக்கும் அப்போது!

கனவுகளில் மிதந்தபடி
காத்திருந்தேன் பறக்கும் கம்பளம்
கைவசமாகும் நாளுக்காக.
அப்புறம் தான் புரிந்தது…
அறிவு வளர விவரம் புரிய
அம்மா சொன்னது பொய்யென்று!

அவள் சொன்ன அனேகம் பொய்களில்
இதுவும் ஒன்றென்று விட்டுவிட முடியாமல்
திணறித் திரிந்தேன் சில நாட்களுக்கு;
ஏன் இப்படி ஏமாற்றினாள்?

எல்லாப் பெற்றோர்களும்
சைக்கிளோ உடைகளோ
தின்பண்டங்களோ – அல்லது
சாத்தியமான வேறொன்றோ
வாங்கித் தருவதாய்ச் சொல்லித்தான்
படிக்க வைப்பார்கள் பிள்ளைகளை;
இவள் மட்டும் ஏன்
இல்லாத ஒன்றிற்கு ஆசை காட்டினாள்?

யோசித்தபோது புரிந்தது;
சைக்கிளோ வேறெதுவோ
வாங்கித்தர வசதியில்லை அவளுக்கு
இல்லாத ஒன்றை இரையாய்ப் பிடித்து
இழுத்து வந்திருக்கிறாள் இவ்வளவு தூரம்
பாவம் அம்மா என்று
பரிதாப பட்டேன் அவளுக்காக…

அவளிடமே இது பற்றி
ஒரு முறை கேட்டபோது
“வாக்குத் தந்தபடி எப்போதோ
வாங்கித் தந்து விட்டேன்
பறக்கும் கம்பளத்தை உனக்கு;
எதுவென்று புரியவில்லையா?
காலம் உணர்த்தும் மகனே
காத்திரு அதுவரை” என்றூ
நழுவிப்போனாள் சிரித்தபடி…

அப்போதும் புரியவில்லை;
அறிவு கொஞ்சம் கம்மி தானெனக்கு.
ஒவ்வொரு நாடாய்ப் பறந்து
உலகம் சுற்றும் போது
உண்மை புரிந்த தெனக்கு; அவள்
பரிசளித்த பறக்கும் கம்பளம்
பத்திரமாய் இருக்கிறது என்னிடம்
கல்வி என்னும் பேறுருவில்….

ஆசை ஆசையாய் அம்மா
பரிசளித்த பறக்கும் கம்பளத்தில்
ஒரே ஒருமுறை கூட அவளை
உட்கார்த்தி அழகு பார்க்கும்
பாக்கியந்தான் இல்லாமலானது – எனது
வாழ்வின் இன்னொரு அவலம்!

– சோ. சுப்புராஜ்
துபாய்

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 2

பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும் சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை.

– கார்த்திக் பிரபு
சென்னை

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation