அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

புகாரி


அம்மா வந்தாள்

உலகின்
அத்தனை அன்பையும்
ஒன்று குவித்து
தன் பாச உதடுகளால்
என் நெற்றியில் முத்தமிட்டாள்

பொட்டிற்கு என்பது
உபரிப் பணி
அவளின் முத்தத்திற்கு என்பதே
என் நெற்றியின் தலையாயப் பணி

மங்கலாய் எரியும்
தெருவிளக்குகளில்
ஒளிந்து பிடித்து விளையாடியவள்

கணினிப் பெருநகரில்
கைநிறைந்த சம்பளத்தில்
மூக்குக் கண்ணாடி வழியே
மொத்த உலகத்தையும்
அலசிக்கொண்டிருக்கிறேன்

ஆம்
இந்தக் கிராமிய நிலா
இன்று பட்டணத்து வானில்

நுனிநாக்கில் ‘டமில் ‘ பேசும்
சென்னைத் தமிழ் இளசுகளும்
மூக்கின்மேல் விரல்வைக்கும்
ஓர் இடத்தில்

நாட்டுக்கு ஒரு கிளையும்
ஆளுக்கு ஒரு கணினியும்
என் நிறுவனத்தின் பெருமை

இணையத்தில் நுழைந்து
நிமிடத்தில் பொருள் குவிக்கும்
நுட்பங்கள் அடர்ந்தது
எங்கள் பணி

எட்டுமணி நேர
அலுவலக இறுக்கம்
பல்லவன் வந்து முகமூடி கிழிக்க
நான் என்னிடம் மீள்வேன்

எண்ணெய் வழிய இறுக்கிப் பின்னிய
இரட்டை சடைப் பின்னலுடன்
எங்களூர் மண்ணில்
மணிக்கணக்காய் ஓடியாடியபோது

பக்கத்து வீட்டுப்
பட்டணத்து அக்காவின்
அலங்கரித்த முகமும்
ஆங்கிலம் பேசும் அழகும்
எப்போது நாமும்
இப்படி வளர்ந்து
வாளிப்பாய் நிற்போம் என்று
கண்களுக்குள் கனவுகளை
இறக்குமதி செய்யும்

0

இன்று
எல்லாம்தான் இருக்கிறது

அடுத்த மாதம் நான்
அமெரிக்கா போக
வேலையும் விசாவும் தயார்

ஆம்
இருந்தது இல்லாமல்
போனதைத் தவிர
மற்ற எல்லாம்தான்
இருக்கிறது

மனிதர்களைத்
தனிமைப் படுத்தும்
விஞ்ஞான வளர்ச்சி

இரத்த பந்தங்களை
ஊருக்கு ஒன்றாய்த்
தூக்கி எறிந்து விளையாடும்
வேலை வாய்ப்பு

வெறுமையை
நிரந்தரப் படுத்தும்
இயந்திரங்கள்

அம்மா
அடுத்த முத்தமுடன்
உன் முந்தானையில்
என் கண்துடைக்க
நீ எப்போது வருவாய்

அடுத்தவாரமே
உன் மடிதேடி வருவேன் நான்

எனக்குக் கணினி வேண்டாம்
உன் மடிதான் வேண்டும்

அமெரிக்கா வேண்டாம்
அப்பாதான் வேண்டும்

நீயே ஒத்துக்கொள்ளாத
இந்த உண்மையை
நான்
எங்கே போய்ச் சொல்ல

*

அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி