‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

ஆ. இரா. வேங்கடாசலபதி


‘சொ. விருத்தாசலம் (1906 – 1948) புதுமைப்பித்தன் என்ற பெயரிலும் பிற புனைபெயர்களிலும் எழுதி, ஏற்கனவே பிற பதிப்பகத்தாரால் வெளியிடப்படாத படைப்புகளைக் கொண்ட தொகுப்பை வெளியிட ‘ 1995ஆம் ஆண்டில் புதுமைப்பித்தனின் மனைவி திருமதி கமலா விருத்தாசலம் அவர்களிடம் அனுமதி வாங்கினோம். ‘சுமார் 100 பக்கங்கள் வரும் ‘ என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தோம். இன்று 350 பக்கங்களுக்கு மேற்பட்ட பெருநூலாக அது உருவெடுத்துவிட்டது. இதை அவர் கண்ணாரக் காண்பதற்குப் பதிலாக அவருடைய நினைவுக்குக் காணிக்கையாகத் தமிழ்ச் சமூகத்திற்குக் கையளிக்கின்றோம்.

நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமைப்பித்தனின் இடம் அவர் மறைந்த ஐம்பதாண்டுகளில் மேலும் உறுதிப்படவே செய்துள்ளது. அவர் காலத்துப் படைப்பாளர்கள் பலரைக் காலமும் தமிழ்ச் சமூகமும் புறந்தள்ளி விட்டிருக்க, புதுமைப்பித்தனோ உயிர்ப்போடும் புதியதொரு பொருத்தப்பாட்டோடும் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறார். ‘வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவரோ ஒருவருக்கு ‘ எழுதுவதாகக் கூறிய புதுமைப்பித்தனுக்கு ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாசகர்கள் தவறாமல் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தம் காலத்துச் சமூகத்தை மிகக் கூர்மையாகத் தம் எழுத்தில் உள் வாங்கியிருந்த புதுமைப்பித்தனின் படைப்புகள், இக்காலத்திற்கும் பொருள் தருவனவாக நிற்கின்றன. கடந்த ஐம்பதாண்டுக் காலக் கருத்தியல் போராட்டங்களிலும், பண்பாட்டு அரசியலிலும் புதுமைப்பித்தனின் பெயர் முக்கிய இடம்பெற்றுள்ளது. தலித் இலக்கிய விமர்சகர்களின் மறு ஆய்வுக்குப் பிறகும் அவருடைய இடம் வலுப்பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

புதுமைப்பித்தனின் படைப்புகள் தமிழ் வாசகருக்கும் படைப்பாளர்களுக்கும் ஒரே சமயத்தில் சவாலாக விளங்கிக்கொண்டிருக்கின்றன. காலத்தின் கழிவில் சலுகைகளை எதிர்பார்த்துக் கெஞ்சும் நிலையில் அவை இல்லை. தம் காலத் தமிழ் வாழ்க்கையின் பல பரிமாணங்களை யும் அனுபவங்களையும் புதுமைப்பித்தன் கையாண்டிருக்கிறார். எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் புதுமைப்பித்தனின் கூரிய விமரிசனப் பார்வையை நீக்கிவிட்டு அவரைப் பார்க்க முடியாது. இதனை அவர் வெளிப்படுத்த கைக்கொண்ட மொழி, படிப்பினாலும் பயிற்சியினாலும் உள்ளார்ந்த மேதைமையினாலும் உருவானது. இந்த நடை அவருடைய கடிதங்களில் மேலும் கூர்மைபெற்றிருப்பதை வாசகர்கள் மூச்சுத் திணற லோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு படைப்பினூடும் காலமும் சூழலும் ஊடாடி நிற்கின்றன. அவருடைய கதைகள் வெளிக்காட்டும் அல்லது பொதிந்து வைத்திருக்கும் பண்பாட்டு அறிவு மலைப்பைத் தருவது. அவருடைய கேலியும் குத்தலும் புனிதங்களைக் குலைத்து, சாரங்களின் அடிமடியைப் பிடிக்கின்றன. ணிக்ஷீsணீtக்ஷ் என்ற சொல் முதல் கிரஷாம்ஸ் விதி வரை, தனிப் பாடல்கள், கம்பன், சுலோசன முதலியார் பாலத்து வரலாறு, சென்னை மின்சார ரயிலின் வேகம், நகர்மயமாக்கத்தின் விரிவு, ஐரிஷ் விடுதலைப் போராட் டம், உலக முதலாளியத்தின் உள்முரண்பாடுகள், ‘நூற்றொகை விளக்கம், ‘ சிருங்கார ரசம் கொண்ட பாடல் வரிகள் எனப் புதுமைப்பித்தனின் எழுத்துகள் பெரும் விரிவு பெற்றுக் கிளைத்து நிற்கின்றன.

இத்தகையதொரு படைப்பு ஆளுமையை மேலும் உணர்ந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் தேவை. கதைகளைத் தவிர கட்டுரைகள், கடிதங்கள் மூலம் அறிய வரும் புதுமைப்பித்தனும் ஈர்ப்பு உடையவராகத்தான் விளங்குகிறார். ரகுநாதனின் ‘புதுமைப்பித்தன் வரலாறு ‘ மூலமும், பிற தகவல், கடிதத் துணுக்குகளின் ஊடாகவும் தெரியவரும் புதுமைப்பித்தனை மேலும் அறியும் நாட்டமும் வாசகர்களுக்குத் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் இலக்கிய முக்கியத்துவமும், மேற்சொன்ன நாட்டமும் புதுமைப்பித்தனின் தொகுக்கப்பெறாத படைப்புகளைக் கண்டறிய வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. (புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலேயே மீ.ப.சோமுவின் கவிதைகளைப் பற்றி அவர் எழுதிய கடிதம் வெளியிடப்படுவதற்குரியதாகக் கருதப்பட்டது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்.)

புதுமைப்பித்தன் மறைவையொட்டிய சில ஆண்டுகளில், சிதறிக் கிடந்த பல படைப்புகளை ‘ஸ்டார் பிரசு ‘ரத்தின் வழியே தொ.மு.சி. ரகுநாதன் வெளியிட ஏற்பாடு செய்தார். இடையிடையே தமக்குப் புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்களையும் வெளியிட்டு வந்தார். நவீனத் தமிழ் எழுத்தாளர் ஒருவரைப் பற்றிய இலக்கிய முறையிலான வாழ்க்கை வரலாறு ரகுநாதனின் மூலம் புதுமைப்பித்தனுக்கே முதலில் அமைந்தது (1951) என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தி.(அவ்வரலாற்றின் பின்னிணைப்பில், புதுமைப்பித்தன் எழுதிய நூல்களோடு ‘வெளிவரக்கூடி யவை ‘, ‘அச்சில் வந்து புத்தக உருப்பெறாதவை ‘, ‘சினிமாக் கதை ‘, ‘எழுத்துப் பிரதிகள் ‘ என்றும் ஒரு பட்டியலை ரகுநாதன் கொடுத்திருந்தார்.)

மீ.ப.சோமுவுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய சில கடிதங்களைக் ‘கலைமகள் ‘ 1951இல் வெளியிட்டது. இதற்குப் பிறகு, தமிழ்ச் சிறுபத்திரி கைகளின் வேகமான 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் தொடக்கத்திலும் ‘வைகை ‘யும் ‘கொல்லிப்பாவை ‘யும் தொகுக்கப்படாத சில படைப்புகளை வெளியிட்டன. இந்தக் காலக்கட்டத்தில் எம். வேதசகாய குமாரின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.

சி. மோகன் முயற்சியில் ‘அதிகாரம் யாருக்கு ‘ நேர்த்தியான பதிப்பாக (1987) வெளிவந்தது. கையெழுத்துப்படியாக இருந்த ‘ஸ்டாலினுக்குத் தெரியும் ‘ (1991) மற்றும் ‘பாஸிஸ்ட் ஜடாமுனி ‘யின் மறுபதிப்பு (1993) ஐந்திணைப் பதிப்பக வெளியீடாக வந்தன. ‘மூனாவருணா சலமே ‘ பாடலின் ஒரு வடிவத்தைப் ‘பறை ‘யில் வெளியிட்ட வெ. மு. பொதிய வெற்பன் ‘கப்சிப் தர்பார் ‘ (1994 ) நூலையும் வெளியிட்டார். புதுமைப்பித்தன் தம் மனைவிக்கு எழுதிய கடிதங்களை இளையபாரதி தொகுத்து வெளியிட்டிருக்கிறார் ( ‘கண்மணி கமலாவுக்கு . . . ‘, 1994). ‘வேர்கள் ‘ (1996) இதழில் ‘ரசமட்டம் ‘ கட்டுரைகள், ‘மணிக்கொடி ‘ மதிப்புரைகள் சிலவற்றைக் கி. அ. சச்சிதானந்தம் அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் பல விவாதங்கள்.

புதுமைப்பித்தன் தழுவி எழுதியிருக்கிறாரா என்ற கேள்வி கடுமையான கருத்து மோதலுக்கு வழிசெய்தது. மீண்டும் மீண்டும் கிளம்பும் பூதமாகவும் தழுவல் விவகாரம் ஆகிவிட்டது. தலித் இலக்கிய விமரிசனம் புதுமைப்பித்தனின் (சாதிய) பாத்திரச் சித்திரி<ப்பு, மொழி முதலா னவை பற்றிய கேள்விகளையும் விவாதங்களையும் தூண்டிவிட்டுள்ளன. இவ்விவாதங்களினூடே புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புகளைத் தேடவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது; கிடைக்கின்ற பதிப்புகளின் போதாமையும் கடுமையாகவே உறைத்துள்ளது.

இந்தப் பின்னணியில், இந்நூலைத் தமிழ்ச் சமூகத்தின் முன் வைக்கின்றோம். புதுமைப்பித்தனின் அச்சேறிய முதல் படைப்பு தொட்டு கையெழுத்துப் படியாக உள்ள எழுத்துகள் வரை, முற்றுப் பெறாத நாவல், ஐந்து கதைகள், பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வாய் மொழியாக இதுவரை உலவிவந்த கவிதையுடன் சில வசைப்பாடல்கள், பல தன்மைத்தான கட்டுரைகள், கூர்மையான விமர்சனப் பாங்கில் அமைந்த மதி<ப்புரைகள், நெருக்கமானவர்களுக்கு நட்புரிமையில் எழுதிய கடிதங்கள், 'தழுவலா - மொழிபெயர்ப்பா ' பற்றிய சூடான விவாதம், 'கல்கி 'யின் இலக்கியத் திருட்டுகளை அம்பலப்படுத்திய 'ரசமட்டம் ' விவாதம் எனப் பன்முகத்தன்மை கொண்ட தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.

இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள படைப்புகள் பலவகையாக அமைந்திருக்கின்றன. பொருத்தம் கருதி நாவல், கதை, கவிதை, கட்டுரை, மதிப்புரை, கடிதம், விவாதம், பிற என வகைப்படுத்திப் பதிப்பித்திருக்கிறேன். அரிய புகைப்படங்கள் சில நூல் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்குள்ளும் காலவரிசை பின்பற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படைப்புக்கும் சான்று மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அச்சில் வெளிவந்துவிட்ட படைப்பானால், அது வெளிவந்த தகவலோடு, எந்தப் பெயரில் புதுமைப்பித்தன் அதை எழுதினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். புதுமைப்பித்தனின் ‘தழுவல் ‘ விவாதத்தினால் இந்தத் தகவலின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுவிட்டதை வாசகர்கள் நினைவில் கொள்வார்கள். மூலபாடங்களில் கூடுமானவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சந்தி, ஒருமை பன்மை, நிறுத்தற் குறியீடுகள் முதலானவற்றில் புதுமைப்பித்தனின் பயன்பாடுகள் பேணப்பட்டுள்ளன. கையெழுத்துப் பிரதியிலிருந்து பாடங்களைக் கொண்டபோது திரு. ரகுநாதன், திரு. மீ.ப.சோமு, திரு.சி.சு.மணி முதலானவர்களோடு கலந்துபேசி முடிவெடுத்திருக்கிறேன். இதழ்களிலிருந்து கொள்ளப்பட்ட படைப்புகளில் மட்டும் அச்சுப்பிழை என்று மிகத் தெளிவாகத் தெரிந்தவை மாற்றப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் என்ற முறையில் தெளிவுகருதி ஒரு சில இடங்களில் இடையில் சேர்த்தவை பகர அடைப்புக்குறிக்குள் ‘ள ன ‘ காட்டப்பட்டுள்ளன. மூலம் சிதைந்திருந்தாலோ, தெளிவற்றிருந்தாலோ ‘. . . ‘ எனப் புள்ளியிட்டுக் காட்டியுள்ளேன்.

விளக்கக் குறிப்புகள் பொருத்தம் நோக்கிப் படைப்பின் தொடக்கத்திலோ, கடைசியிலோ கொடுக்கப்பட்டுள்ளன. ரகுநாதனுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்களை மூலக் கையெழுத்துப்படிகளுடன் ஒப்பு நோக்கித் திருத்தமான பாடங்களை முடிவு செய்திருப்பினும், ரகுநாதன் அவர்கள் தொடர்ச்சியாக விளக்கங்களோடு தொகுத்துக் கொடுத்த முறையிலேயே அவை வெளியிடப்பட்டுள்ளன. அவர் மூலம் கிடைக்கப் பெற்ற படைப்புகளுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகள் ‘தொ.மு.சி. ‘ என்ற சுட்டோடு வழங்கப்பட்டுள்ளன. பிற குறிப்புகள் பதிப்பாசிரியர் எழுதியவை. படிப்பவர்களின் வாசக அனுபவத்திற்குக் குறுக்கீடாக இல்லாமல், அதே சமயத்தில் சூழல் பற்றிய தெளிவும் அற்றுப்போய் விடாத வகையில் மிகக்குறைவாகவே குறிப்புகளை அமைத்துள்ளேன்.

விவாதங்களைப் பொறுத்தவரை, புதுமைப்பித்தன் எழுதியவற்றை மட்டுமல்லாமல், அவரோடு விவாதித்த பிறருடைய கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறேன். விவாதப் போக்கை அவதானிப்பதற்காக, அக்கட்டுரைகள் வெளிவந்த வரிசையிலேயே நிரல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கருத்துமோதல்களில் புதுமைப்பித்தனின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வாய்ப்பேற்படுகிறது; அவர் காலத்து இலக்கியப் போக்குகளை ஆராய்வதற்கும் உதவுகிறது.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு, வ. உ. சி.யைப் பற்றிய என் ஆய்வுக்காக ‘காந்தி ‘ இதழ்களை மறைமலையடிகள் நூல்நிலையத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது ‘குலாப்ஜான் காதல் ‘ கண்ணில் பட்டது. அதுதான் புதுமைப்பித்தனின் அச்சேறிய முதல் படைப்பு என்ற ரகுநாதனின் ‘புதுமைப்பித்தன் வரலா ‘ற்றுக் குறிப்பு நினைவுக்குவர, அதனைப் படி யெடுத்து வைத்தேன். இப்படித் தொடங்கி, பழைய இதழ்களைப் புரட்டும் போதெல்லாம் புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிய குறிப்புகளை இடைப்பிறவரலாகச் சேர்த்துவந்தேன். புதுமைப்பித்தன் பிறருடைய நூலுக்கு எழுதிய ஒரே அணிந்துரை (கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் ‘நீலமாளிகை ‘) பேராசிரியர் செ. போத்திரெட்டி மூலம் கிடைத்தது. ‘ஊழிய ‘னிலிருந்து சில படைப்புகள் கிடைத்தன. தமிழில் தேவநாகரி எழுத்தைப் புகுத்தும் இந்தி வெறியர் முயற்சியைக் கண்டித்துப் புதுமைப்பித்தன் கையெழுத்திட்ட கூட்டறிக்கையைக் கண்ணுற்றதும் _ சிறுபத்திரிகையாளர்கள் காட்ட விரும்பிய புதுமைப்பித்தன் பிம்பத்திற்கு மாற்று என்பதால் ஏற்பட்ட உற்சாகத்தோடு _ படியெடுத்தேன்.

1994இன் தொடக்கம். ‘காலச்சுவடு ‘வை மீண்டும் வெளியிட வேண்டும் எனக் கண்ணன் திட்டமிட்டுக் கொண்டிருந்த காலம். புதியவற்றை வெளியிட வேண்டும் என்ற கண்ணனின் ஆர்வத்திற்குப் புதுமைப்பித்தன் பற்றிய புதிய செய்திகள் ஈர்ப்புடையனவாக இருந்தன. இந்நூற் தொகுப்புக்கான பொருண்மை அடிப்படையும் இயங்குவிசையும் கண்ணனுடையவை. என் ஆர்வத்திற்கும் விரைவுக்கும் ஈடுகொடுக்கும் ஒருவரோடு இணைந்து செயல்பட்டது எனக்குப் புதிய அனுபவம்.

புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புகளைக் ‘காலச்சுவ ‘டில் வெளியிடத் தொடங்கியதும் பல்வேறு முனைகளிலிருந்து புதிய செய்திகள் _ முக்கியமாகத் திரு. ராஜமார்த்தாண்டன், முனைவர் எம். வேதசகாயகுமார் மூலமாக _ கிடைக்கத் தொடங்கின. இரண்டு இதழ்களில் அவற்றை வெளியிட்டதுமே, ஒரு நூலுக்கான விஷயம் உள்ளதென்பது புலப்பட்டு விட்டது. திருமதி தினகரி சொக்கலிங்கம் அவர்களிடம் சட்டரீதியாக ஒப்புதல் பெற்று, நூலாக்கத்தை நோக்கி முயற்சிகளைத் தொடர்ந்தோம்.

இரண்டு நிலைகளில் எங்கள் முயற்சிகளை வகுத்துக்கொண்டோம். புதுமைப்பித்தனின் சமகாலத்தவரை அணுகி, அவர்கள்வழிப் புதிய வற்றைப் பெறுவது; புதுமைப்பித்தனின் சமகால இதழ்களைப் பார்த்து, அவற்றிலிருந்து தொகுக்கப்பெறாத படைப்புகளைத் தேடியெடுப்பது.

புதுமைப்பித்தன் என்றதுமே திரு. தொ.மு.சி. ரகுநாதன் அவர்களை முன்னே அணுகியது இயல்பானதாயிற்று. எங்கள்மீது பெரும் நம்பிக்கை வைத்துத் தம் கைவயமிருந்த கையெழுத்துப் படிகளையெல்லாம் கொடுத்துப் படியெடுத்துக்கொள்ள அவர் அனுமதியளித்தார். இதில் இடம்பெறும் முற்றுப்பெறாத நாவலும், தமக்கும், குப்பண்ண ராவ், முல்லை முத்தையா, எஸ். சிதம்பரம், கே. டி. தேவர், இராஜ அரியரத்தினம் ஆகியோருக்கும் எழுதப்பட்ட கடிதங்களும் அவர் கொடுத்துதவியவற் றில் அடங்கும். இரண்டு பாடல்களைத் தம் நினைவிலிருந்தும் அவர் எடுத்துக் கூறினார். மேலும், இவற்றுக்கெல்லாம் விரிவான குறிப்புகளையும் எழுதி உதவினார். அவை இந்நூற் பதிப்பில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெறும் பல புகைப்படங்களும் அவர் கொடுத்துதவியவை. வெளிவரவுள்ள ‘புதுமைப்பித்தன் கதைகள் : சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் ‘ என்ற தமது பெருநூலின் கையெழுத்துப்படியைப் படித்துப் பார்க்கவும் அனுமதி நல்கினார். மேலும், ஐயமேற்பட்டபொழுதெல்லாம் அவரிடம் கலந்துபேசித் தெளிவு பெற்றோம். எம் முயற்சிகளினூடே, பல காலமாகத் தொலைந்துவிட்ட தாகத் திரு. ரகுநாதனே எண்ணியிருந்த ‘அன்னை இட்ட தீ ‘ குறிப்பேடுகள் நல்லூழாகக் கிடைத்ததையும் குறிப்பிடவேண்டும்.

திரு. மீ. ப. சோமசுந்தரம் அவர்கள் தமக்குப் புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள் பலவற்றைப் பிரதிசெய்துகொள்ள அனுமதியளித்ததோடு பல செய்திகளையும் பகிர்ந்துகொண்டார். அவற்றைத் தழுவி, சில விளக்கக் குறிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் அன்பர்கள் பெரிதும் அறிந்திராத ஒரு பகுதி இக்கடிதங்கள்வழிப் புலப்படுவது இந்நூலின் சிறப்புக் கூறுகளில் ஒன்று.

இத்தொகுப்பின் கணிசமான பகுதி மதிப்புரைகளாகும். புதுமைப்பித்தனின் ஆளுமை அழுத்தமாக வெளிப்படும் இடம் இது. ‘தினமணி ‘யில் வெளிவந்த இவற்றைத் திரட்டி கவனமாகவும் திருத்தமாகவும் படியெடுத்துக் கொடுத்தவர் திரு. ராஜமார்த்தாண்டன். ‘ரசமட்டம் ‘ கட்டுரைகள் சிலவற்றையும் அவர் கண்டெடுத்தார். நூலாக்கம் செய்யும் முடிவை எடுப்பதற்கு இவரது உறுதியான ஒத்துழைப்பு துணை செய்தது. இவ்விடத்தில் ‘தினமணி ‘க்கும் நன்றியைப் பதிவுசெய்வது பொருத்தமானது.

புதுமைப்பித்தன் தொடர்பாகப் பலகாலம் ஆய்வுசெய்துவந்த முனைவர் எம். வேதசகாயகுமார் தம்மிடமுள்ள சில படைப்புகளைக் கொடுத்துதவினார்.

திரு. கி. அ. சச்சிதானந்தம் கல்கத்தா தேசிய நூலகத்திலுள்ள ‘தினமணி ‘ இதழ்களிலிருந்து படியெடுத்து வைத்திருந்த ‘ரசமட்டம் ‘ கட்டுரைகளைக் கொடுத்துதவி, ‘புதுமைப்பித்தன் _ கல்கி ‘ விவாதப்பகுதி முழுமைபெற துணை நின்றார். மேலும், தம்மிடமுள்ள ‘மணிக்கொடி ‘ இதழ்களையும் பார்வையிட அனுமதித்தார்.

‘முல்லை ‘ பி. எல். முத்தையா அவர்கள் தாம் 1944இல் தொகுத்து வெளியிட்ட ‘புரட்சிக் கவிஞர் ‘ நூலைக் காட்டியதோடு, தள்ளாமையிலும் சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். இதன் தொடர்பில் அவர்தம் மைந்தர் திரு. மு. பழனி கொடுத்த ஒத்துழைப்பு மிகப் பெரியது.

பழம் இதழ்களைத் தேடுவதென்பது பெரும்பாடாய் இருந்தது. கடந்த பதினைந்தாண்டு ஆய்வு வாழ்க்கையில், ஒவ்வொரு ஆய்வுத் திட்டத்திற்கும் மீண்டும் மீண்டும் அதே இடர்களை எதிர்கொள்வது வழக்கமாகிவிட்டது. எந்த ஓர் இதழையும் முழு வரிசையாகப் பார்ப்ப தென்பது முயற்கொம்புதான். ‘மணிக்கொடி ‘யை மட்டுமே முழுவதுமாகப் பார்த்த திருப்தி இருக்கிறது. இதன் முழுவரிசை எட்டு வெவ்வேறு இடங்களில் சிதறி இருக்கின்றது என்பதை நினைத்தால் பிரச்சனையின் தீவிரம் ஒருவாறு புலப்படலாம். ‘ஊழியன் ‘, ‘காந்தி ‘, ‘சந்திரோதயம் ‘ ஆகிய இதழ்களை முழுமையாகக் கண்டெடுக்க முடியவில்லை என்ற வருத்தத்தைத் ‘தினசரி ‘ துப்புரவாக ஒரு ஏடுகூடக் கிடைக்கவில்லையே என்பதை நினைத்துத்தான் போக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த அளவிலேனும் இதழ்கள் பார்க்கக் கிடைக்கின்றன என்றால் கீழ்க்காணும் நிறுவனங்களுக்குத் தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டுள்ளது: மறைமலையடிகள் நூல் நிலையம், உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தமிழ்நாடு ஆவணக் காப்பகம். மறைமலையடிகள் நூல்நிலையம் என்றதும் அதன் நூலகர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களைத் தனியே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். உ. வே. சாமிநாதையர் நூலகத்தின் பாதுகாவலருக் கும், ஊழியர்களுக்கும் நன்றி உரியது. ஆவணக் காப்பகத்தைப் பயன்படுத்த அனுமதி நல்கிய ஆணையாளர்க்கும், துணைபுரிந்த நூலக ஊழியர்களுக்கும் நன்றி பல. நன்றியைப் புலப்படுத்துவதற்கு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் திரு. ப. சங்கரலிங்கம் இல்லை என்று எண்ணும்போது துயரம் மேலிடுகிறது. அவர் தந்து வந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வருபவர் இன்றைய இயக்குநர் திரு. சு. தியடோர் பாஸ்கரன்.

இரண்டு அரிய நூலகங்கள் தனிமனிதரின் முயற்சியால் மட்டுமே துலங்கு வதை இங்குக் குறிப்பிட வேண்டும். புதுக்கோட்டை மீனாட்சி நூல் நிலையம் திரு. பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் திருமதி. டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் தம்மிடமுள்ள நூல்களையும் இதழ்களையும் முழுச்சுதந்திரத்தோடு பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தனர்.

சிற்றிதழ்களின் அரிய கருவூலத்தை உருவாக்கிவரும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களின் உதவிக்கு நன்றி.

குழித்தலை கா. சு. நினைவு நூல்நிலையம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் பழம் இதழ்களைப் பார்வையிட அனுமதி வழங்கினர்.

‘முல்லை ‘யின் இதழ்கள் பல பார்க்கக் கிடைத்தது சென்னை வண்ணாரப்பேட்டை ‘தமிழ் இளைஞர் கழக ‘த்தில். அதன் பொறுப்பாளர் திரு. கோ. சுந்தரேசன் முழு ஒத்துழைப்பு நல்கினார்.

தம்மிடம் உள்ள ‘சிவாஜி ‘ இதழ்களைப் பார்வையிடக் கொடுத்தவர் திரு. டி. என். ராமச்சந்திரன் அவர்கள்.

ஆய்வு என்பது தனியே செய்யப்படுவதல்ல; கூட்டு முயற்சியினாலும் பகிர்ந்துகொள்வதினாலுமே வினைப்பாடுகள் சிறப்பெய்தும் என்பதைத் தொடர்ந்து காட்டிவருபவர்கள் என் நண்பர்களும் ஆய்வுத் தோழர்களுமாகிய முனைவர் வீ. அரசு, முனைவர் பழ. அதியமான், முனைவர் பா. மதிவாணன் ஆகியோர். வ. ரா., டி. எஸ். சொக்கலிங்கம், ரகுநாதன் ஆகியோர் பற்றிய ஆய்வினூடே பெற்றுக்கொண்ட புதுமைப்பித்தன் காலம் பற்றிய இவர்களுடைய அறிவையும் உழைப்பையும் எந்தத் தடையுமில்லாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை இங்குப் பதிவது என் கடன்.

சமகாலத்துச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டு, இத்தேட்டத்திற்கு உதவியவர்கள் திரு. வல்லிக்கண்ணன், திரு. சிட்டி ஆகியோர்.

திரு. சோ. சிவபாதசுந்தரம் அவர்களுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய கடிதத்தைப் பெற்றுத் தந்தவர் திரு. சுப்ரபாரதி மணியன்.

தமிழும் தேவநாகரியும் பற்றிப் புதுமைப்பித்தன் கையெழுத்திட்ட கூட்டறிக்கையின் ஆங்கில மூலத்தை ‘இந்து ‘ நாளிதழிலிருந்து படியெடுத்துக் கொடுத்தவர் ‘ஃபிரண்ட்லைன் ‘ சிறப்பு நிருபர் திரு. எஸ். விஸ்வநாதன்.

‘ரசமட்டம் ‘ கட்டுரைகளைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டு உதவியவர் கவிஞர் பூவண்ணன் (முனைவர் வே. தா. கோபாலகிருஷ்ணன்).

இன்னது என்று சுட்ட முடியாமல் இம்முயற்சிக்குப் பல வகையிலும் துணைநின்றவர்கள் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் தொ. பரமசிவன் ஆகியோர்.

தேடுதல் முயற்சிகளில் துணைநின்றவர்கள் முனைவர் அ.கா.பெருமாள், முனைவர் நா. இராமச்சந்திரன், முனைவர் தே. வேலப்பன், திரு ‘வெளி ‘ ரெங்கராஜன், திரு. குமரி சு. நீலகண்டன், திரு. ஆ. திருநீலகண்டன், திரு. ல. கி. ராமானுஜம் ஆகியோர்.

1930ஆம் ஆண்டையொட்டி, பாளையங்கோட்டையில் நண்பர்களுடன் புதுமைப்பித்தன் எடுத்துக்கொண்ட படத்தைக் கொடுத்தவர் அப்படத்திலுள்ள ராமகிருஷ்ணப் பிள்ளையின் மகன் பேராசிரியர் ஆர். சேதுராமலிங்கம்.

பதிப்புப் பணியில் உதவிய அன்பர்கள் பலர்.

பல பெரும் குழப்பங்களைத் தீர்த்து வைத்தவர் திரு. சி. சு. மணி.

குழப்பமான கையெழுத்துப் படிகளை ஒழுங்குசெய்தும், கணினியில் ஏற்றியும், ஒப்புநோக்கியும் மெய்ப்பு வேலையில் பெருஞ்சுமையை இயல்பாக ஏற்றுக்கொண்டவர் திரு. எம். சிவசுப்பிரமணியன் (எம். எஸ்.).

திரு. சி. மோகன் பதிப்பு ஆலோசனைகளை வழங்கி உதவினார். மெய்ப்புப் பார்ப்பதில் தளவாய் சுந்தரம் உதவினார்.

‘காலச்சுவடு ‘ திருமதி கே. ஆர். மைதிலி, செல்வி சி. லீலா, திரு. அ. குமார் ஆகியோரின் ஒத்துழைப்பு பெரிது.

அரைக்கால் சட்டை அணிந்த பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்த போது புதுமைப்பித்தனை எனக்கு அறிமுகப்படுத்தியோர் ‘முகம் ‘ மாமணியும், புலவர் த. கோவேந்தனும் ஆவர். தாம் பொறுப்பேற்று நடத்திவந்த சென்னை கருணாநிதி நகர் இலக்கிய வட்டத்தின் 1982 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் ரகுநாதனை அழைத்து உரையாற்ற வைத்து, புதுமைப்பித்தன் பற்றிய ஆர்வத்தை ஆழமாக ஊன்றியவர் மாமணி அவர்கள் என்பதை நெகிழ்வுடன் நினைவுகூர்கின்றேன்.

இத்தொகுப்பை இந்த அளவுக்குக் கொண்டுவருவதற்கு _ முகந் தெரிந்தவர், முகந்தெரியாதவர் எனப் _ பலரைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. இதில் தம் பெயரைச் சுதந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியவர் திரு. சுந்தர ராமசாமி.

இத்தொகுப்பை வெளியிடப் புதுமைப்பித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம் அவர்களும், அவர்தம் கணவர் திரு. ஹெச். சொக்கலிங்கம் அவர்களும் அனுமதி வழங்கினர்.

இவர்கள் அனைவரின் சிறிதும் பெரிதுமான _ ஆனால் இன்றியமையாத _ உதவிகளின் மூலம் இந்நூல் வெளியீடு இயல்வதாயிற்று என்பதை ஆழ்ந்த நன்றியுணர்வுடன் புலப்படுத்திக் கொள்கிறேன்.

மூன்றாண்டுகளுக்கு முன்பே விளம்பரப்படுத்தப்பட்ட இத்தொகுப்பை இவ்வளவு காலத் தாழ்வாக வெளியிடுவதற்குரிய பின்னணியை விளக்க வேண்டும்.

புதுமைப்பித்தனின் படைப்புகள் தொகுக்கப்படாமல் இந்த 350 பக்கங்களுக்கு மேலும் சிதறியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முயற்சி திருவினையாக்கிக் கொண்டேதானிருக்கும். முன்பே தேடு தலைத் தொடங்கி இருந்தால் மேலும் அதிகமாகப் படைப்புகள் கிடைத் திருக்கலாம் என்ற வாதத்திற்கு அரணாக இதைச் சொல்லவில்லை. சில படைப்புகள், முக்கியமாகக் கடிதங்கள் _ அதிலும் புதுமைப்பித்தன் எழுதியவை போன்ற கடிதங்கள்! _ அவற்றை வரப்பெற்றவர்களிடமிருந்து பெறுவதற்குக் காலத்தின் செலவு இன்றியமையாததாயிருக் கிறது. முதுமை, கடிதங்களில் குறிப்பிடப்பட்ட அந்தரங்கச் செய்தி களுக்கு உரியவர்களின் மறைவு முதலானவையே கடிதங்களை இப்போது வெளியிட்டுவிடலாம் என்ற மனநிலையை உரியவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன.

தேடுதல் முயற்சியின் வெற்றிகளை இந்த நூலின் பருமையில் காணலாம். ஆனால் தோல்விகளும் பதிவு செய்யப்பட வேண்டியனவே _ அடுத்துத் தொடரவேண்டிய முயற்சிகளுக்குக் கைகாட்டியாக.

புதுமைப்பித்தனின் சமகாலத்தவர்களில் பலரிடம் இந்நூலுக்குப் பயன்படும் ஆவணங்கள் எவையும் இல்லை. நாங்கள் தொடர்புகொண்ட வர்களில் முக்கியமானவர்கள் : திரு. அ. கி. ஜெயராமன், திரு. அ. கி. கோபாலன், (மறைந்த) திரு. எஸ். எஸ். மாரிசாமி, திரு. கி. பக்ஷிராஜன், (மறைந்த) திரு. ஏ. எஸ். ஏ. சாமி, நீதிபதி மகராஜனின் மனைவி திருமதி செல்லம்மா. அவ்வாறே டி. கே. சி.யின் பேரரும் தீபனின் மகனுமாகிய திரு. தீப. நடராஜன் அவர்களோடும் தொடர்பு கொண்டோம்.

கு. அழகிரிசாமியின் மனைவி திருமதி சீதாலட்சுமி, மகன் திரு. அ. இராமச்சந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். புதுமைப்பித் தனுக்கும் கு. அழகிரிசாமிக்கும் இருந்த நெருக்கத்தைக் காட்டும் எழுத்துப் பூர்வமான சான்றுகள் கிடைக்காததில் ஏற்பட்ட வருத்தம் கொஞ்சமல்ல. ‘நான் கண்ட எழுத்தாளர்கள் ‘ நூலில் அவர் மேற்கோள் காட்டும் கடிதப் பகுதிகளைச் சேர்த்துக் கொண்டதோடு அமைதி காண வேண்டியதாயிற்று.

புதுமைப்பித்தன் படித்த நெல்லை இந்துக் கல்லூரியின் மலர்களைத் தேடினோம் _ அவருடைய முதிரா இளமைப் பருவத்து எழுத்துகள் கிடைக்காதா என்ற நப்பாசையில். அவர் மாணவராக இருந்த காலத்தில் கல்லூரி மலர்கள் வெளியானதாகத் தெரியவில்லை. 1943_44ஆம் ஆண்டு மலரில் (தொகுதி 5) கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தில் ‘கதை பிறந்த கதை ‘ என்ற தலைப்பில் அ. சீனிவாசராகவன் தலைமையில் புதுமைப்பித்தன் உரையாற்றிய தகவல் மட்டும் கிடைத்தது.

புதுமைப்பித்தனின் திரைக்கதைகளைப் பெறுவதில் முழுத்தோல்வியே கிடைத்தது. ‘காமவல்லி ‘, ‘ராஜமுக்தி ‘ திரைப்படப் பிரதிகள் பார்க்கக் கிடைக்கவில்லை. பூனா திரைப்பட ஆவணக்காப்பகத்தில் செய்த முயற்சிகளும் பயன் தரவில்லை. இதன் தொடர்பில் திரு. அஷிஷ் இராஜத்யக்ஷா செய்த உதவிகள் நன்றிக்குரியன. ‘அவ்வையார் ‘ திரைக் கதை இல்லை என்ற தகவலை ஜெமினி எஸ். எஸ். வாசனின் மகன், ‘ஆனந்த விகடன் ‘ ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்பிரமணியன்,

‘அவ்வையார் ‘ படத்துக்காகப் பலரிடமிருந்தும் என் தந்தையார் வசனம் எழுதி வாங்கியிருந்தார் என்பது நான் அறிவேன். . . ஆனால், அந்த சமயத்தில் யாருடைய பிரதிகளும் எடுத்துப் பாதுகாக்கப்படவில்லை. பின்னர் நான் ஜெமினி ஸ்டூடியோவுக்குப் பொறுப்பேற்ற சமயத்திலும் ஸ்டூடியோ நூலகத்தில் எந்தப் பிரதிகளும் காணப்படவில்லை

என்று உறுதி செய்தார் (திரு. சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதம், சென்னை, 23 செப்டம்பர் 1997). 1952 முதல் 1966 வரை ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றிய திரு. அசோகமித்திரன்,

. . . என் அறை கோஹினூர் என்ற கட்டிடத்தில் இருந்தது. அங்குதான் நிறையப் பழைய புத்தகங்களும் பலர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய திரைக்கதைகளும் இருந்தன. நான் பார்த்தபோதே அநேகமாக எல்லாத் திரைக்கதைகளுமே தனித் தனித் தாள்களாக இருந்தன. புதுமைப்பித்தன் எழுதிய பகுதி ஒளவையும் ஒரு தமிழ்ப்புலவரும்; ஒளவையும் தமிழ்ச் சங்கமும்; ஒளவையும் கம்பனும். ஆனால் திரைப்படத்தில் இவை அனைத்தும் வேறு வடிவத்தில் இருந்தன. அதாவது புதுமைப்பித்தன் எழுதியது பயன்படுத்தப்படவில்லை. . . அடுத்த ஆண்டே, அதாவது 1953இல் அவை அனைத்தும் (புத்தகங்கள், காகிதங்கள் அனைத் தும்) ‘ஆனந்த விகட ‘னில் சேர்ப்பிக்கப்பட்டன. பழைய நூல்கள் அங்கு இருக்கக்கூடும். ஆனால் ஸ்டூடியோ சம்பந்தப்பட்ட காகிதங்கள் இருப்பது சந்தேகமே. அந்த நாள் சக ஊழியர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள்

என்று எனக்கு எழுதிய கடிதத்தில் (சென்னை, 4 ஆகஸ்டு 1998) தெரிவித்திருக்கிறார்.

புதுமைப்பித்தன்ன ‘சூறாவளி ‘யில் இரண்டாவது உலகப்போர் வருமுன் வாராவாரம் ஐந்து மாதங்களுக்கு மேல் எழுதிய ‘அங்கே ‘ என்கிற ஐரோப்பிய, அரசியல் அரங்கக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன

என்ற க. நா. சு.வின் குறிப்பைக் ( ‘புதுமைப்பித்தன் படைப்புகள் ஐ ‘, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1988, முன்னுரை, ப. ஜ்ஜ்ஸ்வீ) கொண்டு ‘சூறாவளி ‘யைப் பார்த்ததில் ‘அங்கே ‘ தொடர்கட்டுரை வரிசை எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாமலேயே வெளிவந்துள்ளது தெரிந்தது. கட்டுரையின் நடையும் புதுமைப்பித்தனுடையதாகத் தென்படவில்லை. இதனை ரகுநாதன் அவர்களும் உறுதி செய்தார். எனவே இக்கட்டுரைகளை இந்நூலில் சேர்த்துக்கொள்ளவில்லை.

புதுமைப்பித்தன் காலத்து ‘ஊழியன் ‘, ‘காந்தி ‘ இதழ்கள் முழுமை யாகக் கிடைக்கவில்லை. இவற்றில் தொகுக்கப்படாத படைப்புகள் சில வேனும் இருக்கும் என்பது உறுதி. ‘வசந்தா ‘ தொடர்கதையின் ஒரு இயல் மட்டுமே இப்போது கிடைத்துள்ளது. ‘ஊழிய ‘னும் ‘காந்தி ‘யும் முழுமை யாகக் கிடைக்குமானால் புதுமைப்பித்தனின் தொடக்கக்கால எழுத்துகள் பற்றிய முழுப் பார்வை கிடைக்கும். எடுத்துக்காட்டாக, இப்போது கிடைக்கின்ற தொடக்கக்காலக் கட்டுரைகள், டி. கே. சி.யின் தாக் கத்தைக் காட்டுகின்றன.

‘தினசரி ‘யின் ஒரு பக்கம் கூடக் கிடைக்காதது பேரிழப்பு. கொள்கைப் போராட்டத்தின் விளைவாகத் ‘தினமணி ‘யிலிருந்து டி. எஸ். சொக்கலிங்கத்தின் தலைமையில் விலகியபின் தொடங்கிய ‘தினசரி ‘யில் ஏறத்தாழ ஓராண்டு (1944) புதுமைப்பித்தன் நிறையவே எழுதியிருப்பார். அவை கிடைக்கப்பெற்றால் புதுமைப்பித்தனின் இதழிய எழுத்தைப் பற்ற= இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள முடியும். ‘இரவல் விசிறி மடிப்பு ‘ என்ற பெயரில் அவர் எழுதிய ஏ.எஸ்.ஏ. சாமியின் ‘பில்கணீயம் ‘ நாடக மதிப்புரை, ஆ. முத்துசிவனின் ‘அசோகவன ‘த்திற்கு எழுதிய மதிப்புரை ஆகியன பற்றிய செவிவழிச் செய்திகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்பெறவில்லை. (அண்மையில் மறைந்த திரு. ஏ. எஸ். ஏ. சாமி அவர்களிடம் தொடர்பு கொண்டபோது, அவரிடமும் அந்த மதிப்புரை இல்லையெனக் கையை விரித்துவிட்டார்.)

1936_1943ஆம் காலப்பகுதியில் வெளிவந்த ‘தினமணி ‘ இதழ்கள் பார்வையிடப்பட்டனவெனினும், ‘தினமணி ‘ அலுவலகக் கோப்புகளில் சில இதழ்கள் இல்லை. கிடைக்கப்பெறாத இதழ்களிலும் புதுமைப்பித்தனின் எழுத்துகள் இருக்கலாம். அவற்றையும் தேடவேண்டும்.

‘சந்திரோதயம் ‘ முழு வரிசை கிடைக்கவில்லை. ‘தமிழ்மணி ‘ பொங்கல் மலர் (1944) மட்டுமே பார்க்கக் கிடைத்தது. ‘ஈழகேசரி ‘ ஆண்டு மடலில் கண்டெடுத்த கட்டுரைபோல், வேறு இதழ்களிலும் புதுமைப்பித்தன் எழுதியிருக்கலாம்

புதுமைப்பித்தன் அன்பர்கள் இவ்விடுபடல்களைக் குறித்துக்கொண்டு, இவை நிரப்பப்படுவதற்கான அறிகுறி தென்பட்டால்கூட, அதைத் தெரிவித்து உதவவேண்டும்.

தொகுக்கப்படாத படைப்புகளைத் தேடும்போது தொகுக்கப்பட்டவை எவை என்பதைக் கணக்கிட்டுப் பட்டியலிட வேண்டியிருந்தது. இதனைச் செய்வதற்கும்கூட இன்று புத்தகச் சந்தையில் கிடைக்கும் புதுமைப்பித்தன் நூற்பதிப்புகள் போதமாட்டா என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

‘அன்னை இட்ட தீ ‘யை வெளியிடும் முயற்சி இதுவரையான புதுமைப்பித்தன் பதிப்புகளைப் பற்றிய ஆய்வாக விரிந்துவிட்டது. முழுமையை நோக்கிச் செல்லும்போதுதான் பகுதிகளே நிரப்பப்பெறும் என்பதை உணர்ந்து இவ்வேலையிலும் ஈடுபட வேண்டியதாயிற்று. இதன் முதற் கட்டமாகப் புதுமைப்பித்தனின் படைப்புகளின் காலவரிசைப் பட்டியலைத் தயாரித்துக் கொண்டு வந்தேன். இருபதுக்கும் குறைவான கதைகளுக்கே காலக் கணக்கைக் கண்டறிய இயலவில்லை. புதுமைப்பித்தன் ஆவணக்காப்பகம் அமைத்துவிடலாம் என்று எண்ணுமளவிற்கு ஆவணங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் புதுமைப் பித்தனின் மொத்தப் படைப்புகளை வெளியிடும் உரிமையைக் காலச்சுவடு பதிப்பகம் பெற்றுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். விரைவில் அவை செம்பதிப்பாக வரும்.

***

திருநெல்வேலி

ஆ. இரா. வேங்கடாசலபதி

அக்டோபர் 1998

Series Navigation

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி