அந்தப் பையனும் ஜோதியும் நானும்

This entry is part 45 of 49 in the series 19991203_Issue

வண்ணதாசன்



ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று தெரியும். தெற்கு கடற்கரை ரஸ்தாவில் பெரிய அட்டைப்பெட்டிகளில் மின்பல்புகளை ஏற்றிக் கொண்டுவந்த கை வண்டியை நிறுத்திவிட்டு என்னோடு ஒரு பழக்கீற்று சாப்பிட்ட அற்புத முண்டாசுக்காரனுக்கு நல்ல தர்பூசனிப்பழங்கள் எந்த ஊரில் கிடைக்கும் என்பது தெரிந்திருந்தது. எரிச்சுடையார் கோவில் பிரகாரத்தில் நிற்கிற மரத்து நெல்லிக்காய்கள் போல வேறெங்கும் கிடையாது என்று அம்மா சொல்வாள். இப்படி ஒவ்வொருக்கும் ஒன்று தெரிந்திருக்கிறது என்றாலும் எனக்குக் கொலுசு எங்கே கிடைக்கும் என்று சத்தியமாக தெரியவில்லை.

மேலும், யோசிக்கவும் அக்கறைப்படவும் உலகத்தில் ஆயிரம் விஷயங்கள் இருக்க, நான் கொலுசு பற்றியே ஒரு பத்து நாட்களுக்கும் அதிகமாக யோசித்துத் திரிகிறேன் எனில் கிறுக்குத்தவிர வேறென்ன. மனதின் ஒரு பகுதியை இப்படிப்பட்ட கிறுக்குத்தனத்திற்கென்றே ஒதுக்கிவைக்கவும் வேண்டியதிருக்கிறது.

முந்திரிக்காடுகளின் வழியே நடந்து, விலங்குகளின் தடங்களை முற்றிலும் இழந்துவிடாத பாறை வெடிப்புகளில் திரவப் பளிங்காகக் குளிர்ந்து பொங்குகிற அருவியின் வீசலில் சுழித்து இறங்கின ஓடையின் தடத்தில், ஒதுங்கிக் கிடந்த பருத்த சிவப்புக் கற்களைப் போன்ற குன்றிமணி விதைகளின் புதைவை, முன்தினம் போலவே மறுநாளும் மறுநாளும் தேடி அலைந்தது கிறுக்குத்தனமே. மூங்கில் கீற்றுக்காய் பாய்போல நெருக்கித் தைத்து, அதன்மேல் சிதைந்த கல்மண்டபங்களை ஒட்டிய தெப்பக்குளத்தில் படகு ஒன்று அலைந்து கொண்டிருக்க, படகின் இரண்டு குறுக்குப் பலகைகளில் ஒன்றில் உதிர்ந்து கிடக்கிற நாகலிங்கப்பூவின், அழைக்கிற வசீகரத்தை வரைந்திருந்த படத்தை பார்த்த கையோடு அதை வரைந்தவன் யார் என்று சுதீந்திரம் சன்னதித்தெருவைத் தேடிப்போனது ஒரு கிறுக்கு. உயர்நிலைப் பள்ளிக் கூடத்து மைதானத்துப் புல்வெளியிலிருந்து, மறுநாள் தான் இருக்கமாட்டேன் என்பதை எந்தவகையிலும் , முன்னுணர்த்தாமல், மிடறு மிடறாகப் பியர் அருந்தியும், தாஸ் தாஸ் என்று மட்டுமே அவன் மரியாதையுடன் அழைக்கிற ஜேசுதாஸின் கர்நாடக சங்கீதக் குரலை அடியொற்றிப் பாடியும், ரஸ்ஸலின் சுயசரிதைப் புத்தகத்தை அன்றைய தினத்தின் மீதான கையெழுத்துடன், எனக்கு விட்டு விட்டும் வலிந்து வலிந்து மாத்திரைகளால் மீளாது தூங்கிவிட்ட தினம் வரை, என்னுடன் பிரியாதிருந்த, நான் சந்தா என்று அழைக்கிற சந்திரபோஸின் இழப்பினைத் தாங்காது அலைந்தது இன்னொன்று. பல்கலைக் கழக வளாகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய ஒரு கருத்தரங்கின் பார்வையாளனாகப் போன சமயம், வாசிக்கப்பட்ட எத்தனையோ பேப்பர்களில், மூளைசாராமல் அனுபவம் சார்ந்தும் வாழ்வு சார்ந்தும் மனிதர்கள் சார்ந்தும் தயாரிக்கப்பட்டிருந்த ஒரு நல்ல கட்டுரையை வாசித்த ஜோதி என்ற பெண்ணுக்காக நான் கொலுசு வாங்க அலைவது அந்த கிறுக்குத்தனத்தில் எல்லாம் சமீபத்தியது.

இத்தனைக்கும் ஜோதி நகைகளில்லிருந்து விலகியே இருந்தாள். தங்கம், வெள்ளி என்றால்தான் நகையா. வளையல்கள் என்ன, பாசிவகைகள் என்ன, அவைகளைக்கூட அணிவதில்லை. காதில் ஒன்றும் கிடையாது. கழுத்தில் ஒன்றும் கிடையாது. பல்கலைக்கழகத்திலிருந்து ஜோதி இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்க, மீன்வளத்துறையின் சுதந்தரமான என் ஆராய்ச்சிக் கூடங்களில் குனிந்து பணியாற்றுகின்ற நேரங்கள் தவிர்த்த இந்த ஒன்றரை ஆண்டுகளின் பழக்கத்தில், அவசரமின்றி, இயல்பாக, உணர்ந்து உணர்ந்து மலர்ந்த, புரிந்து புரிந்து விரிந்த இந்த உறவின் கீழ நடமாட நன்றாக இருந்தது. தனித்தனியாக இருக்கையில் எங்களிடம் இல்லாதிருந்த துளிர்ப்புகள் பழகத் துவங்கிய பின்பு, அவரவர் அறியாத பசுமையை உள்ளிருந்து பீறிட்டெழும்படியாக்கி அற்புதம் செய்தன.

பொந்துகளிலிருந்து கிளிகள் பறந்த, மருத மரங்கள் அடர்ந்த, ஒரு பக்கம் மட்டும் கண்ணுக்கெட்டும் தூரம் கரும்பாக வாழையாக நெல்லாகப் பச்சைபாய, இன்னொருபக்கம் நீர்முளைத்து, நீர் கிளைத்த, நீர் கனிந்து, நீர் உதிரும் நதியும் மணலும். ஜோதியும் நானும் இதன் வழியாக நடந்து நடந்து செல்லும்போது, ஒரு கவிதையிலிருந்து உருவி விழுந்த வரிபோல அந்த ஒற்றைக் கொலுசு மண்ணில் கிடந்தது. அதிலும் ஜோதியே புண்ணியம் செய்தவள். அவளுக்கே அதன் பார்வையும். கையில் எடுத்து மணல்போக வாய் குவித்து ஊதினாள். மண்டியிட்ட அந்த நிலையிலிருந்து என்னை நிமிர்ந்து பார்த்தபடி அதன் இரு முனைகளையும் பிடித்துச் சிறு ஆரமாக்கி, ‘அதோ அந்த சூரியனுக்கு ‘ என்று வானுக்குச் சூடினாள். சின்னதாக முத்தமிட்டாள். அதை அணிந்திருந்த காலையே ஒற்றிக் கொள்வதுபோல ஒற்றிக் கொண்டாள். நுகர்ந்தாள். மேலும் நுகர்ந்தாள். பரவசத்தில் அமிழ்ந்து கிறங்கும் கண்களுடன், சற்றே காலணியைத் தளர்த்திக் கொண்டு, புடவையை விலக்கி, பாதத்தின் மேல் அந்த கொலுசைப் படியவிட்டாள். ஜோதியின் அந்த ஒருநிமிடச் சித்திரத்தை முழுதாகப் பார்க்குமுன், எழுந்து நின்று கொலுசை வீசினாள். நிஜத்தில் கொலுசு, மிகச்சிறு தண்ணீர் சிலிர்ப்புடன் ஆற்றில் விழுந்தது எனினும், எனக்கு அது ஜோதியின் கால்களிலேயே இருந்தது. இருக்க விரும்பினேன்.

வெறும் கொலுசு. அதுவும் ஒற்றைக்கொலுசு. என்னை இப்படி மேல் கீழாகப் புரட்டிப் போடும் என்று நம்பவே முடியவில்லைதான். நம்பிக்கையின் ஆதாரங்கள் இந்த இந்த இடங்களில் இருந்து துவங்கப்பட வேண்டும் என்ற கட்டாயங்கள் இருக்கின்றதா என்ன ? ஜோதியே அவளின் முகத்தை எல்லாம் மறக்கிறபடிக்கும், கொலுசும் காலுமாயிற்று எல்லாம். கொலுசின் ஒற்றைப் புனைவுடன் பரதமாடி, மிருதங்கமும் வெங்கலத் தாளமும் நட்டுவாங்கமும் அதிர அதிர நெருங்கிக் கலந்து நின்றாடும் உடல் திரண்டு திரண்டு வர, திகம்பரத்தில் சிதம்பரம்.

பட்டை வீறும் வெயில். உந்தித்தள்ளும் முதுகில் வேர்வை. லாரியிலிருந்து கிடங்கிற்கு மாறும் எண்ணை டின்கள். கமிஷன் கடை தொலைபேசிகள். நெடியடிக்கிற சாக்கு மண்டிகள். பாதையில் புரளும் பூண்டு சருகும் தோலும். சால்னா வாசனைக்கு முதுகு காட்டியபடி தலால் வினியோகிக்கும் அரசு உடை முகங்கள். இதற்கு மத்தியில் கொலுசு வாங்க அலைகிற நான், வேடிக்கைதான்.

சினிமா சிலேடுகள், பஸ்டாண்டு விளம்பர போர்டுகள், மஞ்சள் துணிப்பைகள் எல்லாம் ஏகமாக உச்சரித்து மனப்பாடமாகியிருந்த அந்த பெரிய நகைக்கடைக்குப் போனால், அவர்கள் கொலுசுக்கு என்றே தனிக்கடைவைத்திருப்பதாக மிகப்பணிவாகப் புன்னகைத்து அப்புறப்படுத்தி அனுப்பி விட்டார்கள் இங்கே. கொலுசு விற்றால் என்ன. கோமேதகம் விற்றால் என்ன. நகைக்கடைக்கு என்று இருக்கிற ஜாடை மாறவா போகிறது. இல்லை.

அதேமாதிரிக் கண்ணாடி அட்டங்களில் உருப்படிகள். மோதிர விரல்களுடன் கும்பிடுகிற கடை முதலாளியின் புகைப்படம். தங்கம், வெள்ளி என்றைய கிராம் விலை எழுதப்பட்டிருக்கிற பட்டியல். கண்ணாடித் தடுப்பை ஒட்டி, சர்க்கஸில் யானையை நிறுத்துகிற ஸ்டூல் மாதிரி, உள்ளங்கை அகலம் உள்ள ஸ்டால் முக்காலிகள். கண் காணிக்காதது போல கண்காணிக்கிற குங்குமப் பொட்டு வைத்த காசுக்கடை கணக்கப்பிள்ளைகளின் விசுவாசமான பார்வைகள். விசிறி நிறுத்தப்பட்ட பிறகே எடைக்குத் தயாராகிற துல்லியத் தராசுகள்.

தன்னுடைய பெண்ணுக்குக் கொலுசும், தனக்குக் காலில் மெட்டியும் வாங்கிக் கொண்டிருந்த பெண், தன்னுடைய கணவனிடம் நான் வந்த பிறகு உரக்கவும், அலுத்துக்கொள்வதும் ஆன குரலிலும் பேச ஆரம்பித்தாள். கணவனும் ஆண்பிள்ளைதானே. ‘சரிதான், எல்லாம் தெரியும் ‘ என்பதுபோல அவளை அலட்சியம் செய்துவிட்டு மகளுடன் மிக நெருக்கமாக பேசியபடி, என்னை நிதானிக்க முயன்று ஆனால் அதுவும் இயலாது போன போலி அவசரத்தில், பர்ஸிலிருந்து விழாத காகிதமடிப்பைக் கீழே தேடியபடி வெளியே போக, ஏற்கெனவே, நான் உணர்ந்த வேடிக்கை இன்னும் கூடிற்று.

கடைக்குள் என்னுடைய வலது கடைசி கோடியில் இன்னும் ஒரு ஜோடி இருந்தனர். சமீபத்தில் கல்யாணம் என்று எழுதப்பட்ட முகங்கள். கல்யாண மஞ்சள் சட்டை, கல்யாண மயில் துத்தக் கலர்ப்பட்டு; அவர்களே அவர்களின் வாசனை என்று எல்லாம் எளிமையும் அற்புதமுமாய் இருந்தன. விருப்பமும் மறுப்புமாகப் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த பாஷையில் ஜீவன் ததும்பிக்கொண்டே போயிற்று. கடைசியில், அவன் வாங்கிக் கொடுக்க, அங்கேயே அணிந்து கொள்ளச்சொல்லி வற்புறுத்த, நானும் கடையில் இருக்கிற கூச்சத்துக்கு விலகி, அந்தப் பெண் கொலுசை அணிந்து கொண்டபோது- மறுபடியும் ஜோதி. வானமெங்கும் பரிதியின் ஜோதி. கொலுசு மட்டும் அணிந்து நிற்கிற ஜோதி.

புல்லாங்குழல் வைக்கிற பெட்டிகள் போல, ஒரு நாலைந்து பெட்டிகள் எனக்கு முன்னால் நகர்த்தி வைக்கப்பட்டன. ஒரு நிமிடம் கொலுசுகள் எல்லாம் மறைந்து, நிழலசைய நிழலசைய, புல்லாங்குழல் ஒலி மட்டும் திறக்காத பெட்டிகளிலிருந்து விம்மின. மாலியின் சின்னஞ்சிறு கிளியே கொலுசு கட்டி ஆடியது. ஒவ்வொரு மரப்பெட்டியிலிருந்தும் கொடி கொடியாய் சிவப்பு நூல் முடிந்து, வெள்ளி மினுமினுக்கும் ஜோடிக் கொலுசுகள். அவற்றில் ஏதோ ஒரு ஜதை ஜோதிக்கொலுசுகள். கையில் எடுத்தும் கற்பனையில் அணிவித்தும் பார்க்க, ஒவ்வொரு கொலுசுக்கும் ஒரு ஜோதி எழுந்தாள்.

காலில் கொலுசு, கை புஜத்தில் வங்கியாக கொலுசு. உச்சியில் நெற்றிச் சுட்டியாகக் கொலுசு. உட்கழுத்தில் அட்டிகையாக. மார்பிலும் அணியலாமோ கொலுசு ? உன்னதமும் உன்மத்தமுமாக ஊசலிடும் கற்பனைகள். ஜோதியின் நெற்றியில் மேலுதட்டில் எல்லாம் வேர்வை அரும்ப ஒரு சித்திரம் போன்று என் கற்பனையில் நெகிழ்ந்திருந்தாள்.

எத்தனை நேரம் செல்லுபடியாகும் கற்பனை. அதுவும் விளம்பரம் தூள் பறக்கிற இடத்தில் கற்பனைக்கு அதிக நேரம் எப்படி மரியாதை எதிர்பார்க்க முடியும் ?

‘என்ன சார்; எதை எடுத்துக்கிறீங்க ? ‘ என்று எல்லா பெட்டியையும் எடுத்து மூடிவதற்குத் துவங்கியதில் அதிர்ந்து திகைத்த போது, கடையின் வாசலுக்குள் அந்த பையன் நுழைந்து கொண்டிருந்தான்.

பதினெட்டோ இருபதோ என்று நிதானிக்க முடியாதபடி தாடி சிதறி இருந்த முகத்தின் கண்களில் மட்டும் கலங்கின பிரகாசம். தயங்கியும் கூசியும் நின்று கொண்டிருந்த கைகளில் ஒரு சிறு வெள்ளிக் கோப்பை. எந்த பந்தயத்தில் எந்தெந்த முகங்களை முந்தியோ இதை அவன் அடைந்திருக்க வேண்டும். வெற்றிகரமான தருணங்களின் அலாதிப் பொலிவைத் தருவித்த அந்த ஸ்போர்ட்ஸ் கப் சற்று மங்கியிருந்தது.

ஒரு வலிய கரம் பிசைந்து இந்த வாழ்க்கையை விட்டுக் கசக்கி அவனை எறிந்து விட்டது போன்ற குரலுடனும் துக்கத்துடனும் அவன் தணிந்த குரலில் அதை விற்கவேண்டும் என்று சொன்னான். ‘இது எவ்வளவுக்குப் போகும் ‘ என்று கேட்டான். இதை விற்க நேர்ந்ததற்கான துக்கமும், இதை என்போன்ற மூன்றாம் நபருக்கு மத்தியில் கேட்கவேண்டியதாகி விட்ட நிர்பந்தத்தின் விளைவான கூச்சமுமாக, அந்தச் சின்ன வயதின் முகம் தவித்தது. ‘ இதை வைத்துக்கொண்டு ஏதாவது கொடுங்கள் ‘ என்று நேரடியாகக் கேட்காமல், வெவ்வேறு தணிந்த பாவனைகளில் கெஞ்சியது. ‘என்ன விலைக்கு எடுப்பீங்க ‘ என்று அந்த சிறு கோப்பையை முன்னால் நீட்டியது.

எனக்கு சுளீர் என்றது. ஒவ்வொருத்தரும் தன்னுடைய வெற்றியின் அடையாளங்களை, அதை அடைந்த தருணத்தின் தனித்த சந்தோஷத்தை எல்லாம் எப்படி அற்பமாக இழக்க நேர்கிறதற்கு மத்தியில், நான் கொலுசு வாங்க அலைவதும், கொலுசே மட்டுமே அணிந்த ஜோதியின் கற்பனையே அதன் பிரதான தூண்டுதலாக இருப்பதும் எல்லாம் எவ்வளவு முரணானது. அபத்தம் சார்ந்தது.

‘அதையெல்லாம் மத்தியஸ்தர் கடையிலேயே கேளுப்பா சொல்லுவாங்க ‘ குங்குமப்பொட்டுக்காரர் முகத்தை வியாபாரத்தின் பக்கம் வைத்துக்கொண்டு பதில் சொன்னபோது, கோப்பையின் மீது இறுகிற கைகளுடன்- ‘அந்தக் கடை எங்கே இருக்கு ‘ என்று பையன் தயங்கினான்.

‘நாலு கடை தள்ளி விசாரிச்சா என்ன. படிச்சவங்க தானே ‘ – இதைச் சொன்ன கடைச் சிப்பந்தி என்னை பார்க்கிறதற்கு என்ன இருக்கிறது. வாங்குகிறதும் விற்பதும் தானே வியாபாரம். வாங்க வருபவனை, அதுவும் கொலுசு வாங்க அலைகிறவனை உட்கார்த்தி வைத்து அத்தர் புனுகு பூசுகிற மாதிரிப் பேசுகிறதும், ரொம்பவும் நெருக்கடியும் இக்கட்டுமாக இப்படி வந்து நிற்கிற முகத்தைக் கல்யாண வீட்டில் குறவன் குறத்தியை விரட்டுவது போல விரட்டுவதும் எதில் சேர்த்தி. ஒரு கொலுசின் தொய்வுவிழாத, முறுக்கேறிய கண்ணிகளுக்கும், பழுப்படித்து மங்கத் துவங்கிவிட்ட அந்தப் பந்தயக்கோப்பைக்கும் இடையில் உள்ள தூரங்கள் இப்படி நிதானிக்க முடியாத தொலைவுக்குப் போனதேன் ?

நான் வெளியே வரும்போது எஸ்.எம்.எஸ்.சீல் உத்தரவாதமுள்ள கொலுசு என் காற்சட்டைப் பையில் இருந்தது. உலகத்தில் அந்தப் பையனும் இருக்கிறான். ஜோதியும் இருக்கிறாள். நானும் இருக்க வேண்டியதிருக்கிறது.

வீடு தொகுப்பு அக்டோபர் 88

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< பொன் மொழிகள் உயிர் சுவாசிக்கும்.. >>

Scroll to Top