அதிநவீன மின் துகள் நட்சத்திரங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

புதியமாதவி, மும்பை


நவீனகவிதைகள் என்ற முத்திரையுடன் வெளிவந்துள்ள ‘மின் துகள் பரப்பு’ கவிதை தளத்தில் இந்திரன் செய்திருப்பது இலக்கிய
தளத்தில் துணிச்சலான சோதனை முயற்சி. கலை இலக்கிய விமர்சகராக அறியப்பட்டிருக்கும் கவிஞர் இந்திரன் அவர்களின் கவிதைகள் குறித்து வசந்த் செந்தில் அவர்கள் “இந்திரனின் கவிதைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெளிவந்தவை அல்ல, அவை அறிவின் கரை நின்று நிதானமாக பொய ட்ரி ஒர்க்ஷாப் முறையில் கருக்களை தேர்ந்துடுத்து பதப்படுத்தபட்டவை.” என்று சொல்வதை பல்வேறு கவிதைதளீல் மின் துகளில் வெளிச்சம் காட்டுவதைக் காணலாம்.

சக்கரத்தைக் காட்டிலும்
உன்னதமான ஒரு பூவை
நான் இதுவரையில் பார்த்ததில்லை

என்று எந்திரக்காதலுடன் வலம் வருகிறது நவீன கவிதை. ஆனால் அந்த எந்திரக்காதலிக் தன்னை இழக்காமல் வாழ
நடத்தும் போராட்டாமாகவே இவர் கவிதைகள் விரிகின்றன. சுவரொட்டிகளைப் பருகிக்கொண்டு நடக்கும் வாழ்க்கையில் விளம்பரங்களின் துரத்தலைக் கண்டு ஓடி விளம்பரங்கள் இல்லாத ஆதி மனிதனின் குகைகளுக்குள் ஒளிந்து கொள்ள துடிக்கிறது.

விளம்பரங்கள் துரத்துகின்றன
என்னை
கனவுகளின்
கடைசித்
தெருவரையிலும்

பனியன்களில்
கைப்பைகளில்
பேனாக்களில்
வாகனங்களில்
தொலைக்காட்சி
ஜன்னல்களில்
முட்டை ஓடுகளிலும்
வெறிபிடித்து
வேட்டையாடுகின்றன
என்னை.

கடைசியில் விளம்பரங்கள் வேண்டப்படாத ஆதிமிருகமாகிவிடத் துடிக்கிறது.

ஒருபக்கம் எந்திரத்தின் மீது காதல், மறுபக்கம் எந்திரமயமான உலகத்திலிருந்து தப்பி ஓட நினைக்கும் போராட்டம். இந்த இரண்டுக்கும் நடுவில்தான் இன்றைய கணினி யுக மனிதனின் வாழ்க்கை. இந்தப் போராட்டத்தளத்தையே மின் துகளின் கருவாக்கியுள்ளார்.

வார்த்தைகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த கவிதைகளை கோடுகளிலும் புள்ளிகளிலும் கட்டங்களிலும் ஓவியங்களிலும் காட்சியாக்கிக் காட்டும்போது கவிதை வாசிப்பு தளத்திலிருந்து நழுவி காட்சிப்படுத்தலாக பிறிதொரு உருவம் எடுக்கிறது.
காட்சி படுத்தல் வார்த்தைகளுக்கு மேலும் வலுசேர்ப்பதுடன் கவிதையை ஓவியமாக சிற்பமாக மாற்றிவிட்ட வித்தையையும் சேர்த்தே நடத்துகிறது.

குறிப்பாக ‘ஆதாம் கடித்த ஆப்பிள் ‘ (பக் 84.87) கவிதையில் நிமிடங்கள் தோறும் மாறும் இரு ஜோடி பாதங்களில் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது ஆண்-பெண் உறவு.

கோரமான சிதைந்த மனிதமுகத்தின் புகைப்படத்தின் கீழ் ‘நல்ல சுவையுணர்வின் மரணம்’என்ற வரிகள்
புகைப்படத்துக்காக எழுதப்பட்ட கவிதையாகிவிடுகிறது. இந்தப் புகைப்படத்தை எடுத்துவிட்டால் கவிதை வெற்று சொல்லில் மரணித்துவிடும்
அபாயம். எனினும் காட்சியின் வலுவான தாக்கம் கவிதையுடன் சேர்ந்து வாசிப்பவனில் பதிவாகி கவிதை என்பது கவிதையுடன் கலந்த காட்சியாகி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு தளத்தைக் கவிதை தளத்தில் கட்டிமுடிக்கிறது.
அழகியல் சிதைந்த எந்தக் காட்சியைப் பார்த்தாலும் ‘நல்ல சுவையுணர்வின் மரணம்’ என்ற வரிகள் காட்சியின் நடுவில் ஓடும் எழுத்துச்சுருளாக பதிந்து விடுகிறது.
சிச்கனமான வார்த்தைகளில் கட்டமைக்கப்படும் கவிதைகளில் புதிய முகம் காட்டும் இந்த நவீன உத்தி எல்லா இடங்களிலும் கவிதையின் முகம் காட்டுகிறதா என்பதும் சிந்திக்கத்தக்கது.குறிப்பாக கட்டங்களில் அடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளில் கவிதையின் முகம் முக்காடிட்டப்பட்டு மறைக்கப்பட்டும் உள்ளது.
குறுக்கெழுத்து முறையில் சொல்லப்படும் உருவமாக கொள்வதற்கும் இடமில்லை. குறுக்கு நெடுக்காக, வலமிடமாக எப்படியும் வாசிக்க முடியும் என்ற முறையில் இக்கவிதைகள் அமையவில்லை. கவிதை வரிகளைக் கட்டங்களுக்குள்
அடைத்து வைத்திருப்பதிலும் அம்புக்குறிகளில் அமையும் கவிதைகளிலும் இம்மயக்கம் வாசிப்பவனை தேவையில்லாமல் மண்டைக்காய வைத்திருப்பதைச் சொல்ல வேண்டும்.

இடைக்கால தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்திரக்கவிகள் இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்டது நினைவு கூரத்தக்கது.

மின் துகள் பரப்பு பக்கத்திற்கு பக்கம் கவிஞர் இந்திரன் நவீன கவிதைகளின் சோதனைக்கூடமாகவே காட்சியளிக்கிறது.
இந்திரன் அவர்கள் அறிந்தே செய்திருக்கும் சோதனை முயற்சிகள் இவை . அவரே சொல்வது போல,

” கவிதை என்பது ஒரு புதிய புரிதல் முறை. தற்கால வாழ்க்கை – வாகன நெரிசல், கணிப்பொறி, மின் துகள் பரப்பு, விமானத்தின்
வேகம், தார் உருக்கும் இயந்திரத்தின் அழகு, சின்னத்திரை பிம்பங்கள், வெள்ளித்திரை வேடிக்கைகள், தனக்கான புதிய
கவிஞனை எதிர்பார்த்து நிற்கிறது. கம்பனுக்கும் பாரதிக்கும் கிடைத்திராத அதிர்ச்சியூட்டும் காட்சி அனுபவங்களைக் கையில்
கொண்டு புதிய நறுமணங்களையும் வெறுக்கும் புதிய துர்நாற்றங்களையும் ஒவ்வொன்றாய் கையில் எடுத்து இன்றைய கவிதைக்கான
கருவாய் வழங்குகிறது. எழுத்து, சொல், மொழி, கவிதை குறித்த மானிடவியல் ரீதியான, உளவியல் ரீதியான, மொழியியல் ரீதியான குறியீட்டியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் இன்றைய கவிதையின் முக ஜாடையையே ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு உட்படுத்த முனைந்து நிற்கின்றன. அதிரடிப் பார்வைப் பண்பாடு ஒன்றோடொன்று கலந்த மொழி வெளிப்பாடாக இக்கவிதைகள் கலப்பின மரபு ஒன்றை ஸ்தாபிக்க முயல்கின்றன” (பக் 10,11)

கவிதை நூல்: மின்துகள் பரப்பு
யாளி பதிவு வெளியீடு
சென்னை 600 024,
பக்: 96/ விலை. ரூ. 50/

கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் குறித்து சிலவரிகள்:

*கி.பி.2000 ஆண்டின் துவக்கத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளூவர் சிலை திறப்புவிழாவின் போது அமைக்கப்பட்ட 122 ஓவியர்கள்
பங்கு கொண்ட ‘குறளோவியம்’ கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்

* டைம்ஸ் ஆ·ப் இந்தியா, எகானாமிக்ஸ் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய தேசிய நாளேடுகளிலும், தமிழின் பிரபல இதழ்கள்,
சிற்றிதழ்களிலும் நவீன ஓவியம், சிற்பக்கலைகள் குறித்து பரவலாக எழுதிவருபவர்.

*கவிதைநூல்கள்:
அதீநவீன அழகியல் போக்குகளைக் கொண்ட இவர் கவிதைகளை ” தமிழுக்கு ஒரு பரிமாண விஸ்தரிப்பு” என்கிறார்
எழுத்தாளர் சுஜாதா.

1972 – திருவடி மலர்கள்
1982 – அந்நியன்
1991 – முப்பட்டை நகரன்
1994 -சாம்பல் வார்த்தைகள்
1982 – Syllables of Silence
1996 – Acrylic Moon

* மொழிபெயர்ப்புகள்:

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் – 1982
காற்றுக்குத் திசை இல்லை – 1986
பசித்த தலைமுறை – 1994
பிணத்தை எரித்தே வெளிச்சம் -1995
கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் -ஆதிவாசி கவிதைகள் – 2002

ஆப்பிரிக்கக் கவிதையிலிருந்து ஆதிவாசி கவிதைகள் வரை உலகக்கவிதைப் போக்குகளைத் தனது மொழிபெயர்ப்புகள் மூலம்
தமிழுக்கு அறிமுகம் செய்த இவருடைய இம்மொழிபெயர்ப்புகள் இலக்கிய தளத்தில்- சிந்தனைப்போக்கில் -அதிரடி தாக்கத்தை
ஏற்படுத்தியவை.

கலை விமர்சன நூல்கள்:

தமிழ் அழகியல் – 1994
தற்காலக் கலை – அகமும் புறமும் – 1996
Taking his Arts to tribals – 1999
தேடலின் குரல்கள் – 2000
கவிதையின் அரசியல் : 2000

சினிமா விமர்சனம்: ரே -சினிமாவும் கலையும்

உரையாடல்: Man & Modern Myth: A Dialogue with S Chandrasekaran, Artist- Singapore 1994

————————————

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை