அண்ணாவின் பெருமை

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

தமிழநம்பி


பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள்

பெரிதாய்ப் போற்றும்

ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால்

உற்ற பேறே!

எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே

ஈந்த பெம்மான்

திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே

தெரிந்து கொள்வோம்!

அறிஞருளும் அறிஞரவர் அரசியல்சீர் கற்றறிந்தார்

அவரின் பேச்சைப்

பொறிமடுத்தார் வயப்படுவர்; புரிந்தபிறர் வேட்டிருப்பர்;

புரியார் தம்மை

நெறிப்படுத்தும் குமுகாய நிலைதிருத்தும் பெரும்பணியர்

நெஞ்சக் கூட்டில்

வெறியன்பால் தமிழ்மக்கள் விருப்பத்தோ டடைத்துவைத்த

வெல்லுஞ் சொல்லார்!

உலகினிலே முதன்முதலாய் உயர்ந்திருந்த ஓரினத்தை

ஒப்பே இல்லா

இலகுதமிழ் முதன்மொழியை ஏய்ப்பினிலே வீழ்த்திய”ஆ

ரியத்தின் மாயை”

துலக்கமுற விளக்கியவர் தோல்வியிலா எழுத்தாற்றல்

துணையி னாலே

இலங்குகதை கட்டுரைகள் ஏற்றமிகு மேடைதிரை

எல்லாம் வென்றார்!

பொருநரென மேடையிலும் புத்தெழுத்து நடையினிலும்

பொலிவு சேர

அருந்தமிழ்க்கு அணிசேர்த்தார்! அயற்சொற்கள் தவிர்த்தெழுத

ஆவல் கொண்டார்!

இருந்தமிழ்க்கு மறுமலர்ச்சி இவராலே வந்ததெனில்,

இதுவே உண்மை!

பெருஞ்சிறப்பில் செந்தமிழ்க்கே பீடுறவே எடுத்தாரோர்

பெருமா நாடே!

எழுத்தாளர் ‘கல்கி’மகிழ்ந் திவர்”அறிஞர்”, “தென்னாட்டின்

பெர்னாட் சா”என்(று)

அழுத்தமுறப் புகழ்ந்துரைத்தார்! ஆங்கிலத்தில் அண்ணாவின்

ஆற்றல் பேச்சு

இழுத்ததந்த வாச்பேயி நேருவுட னெல்லாரின்

இனிய சிந்தை!

வழுத்திதமிழ் மக்களெல்லாம் வாய்மகிழ அண்ணனென

வழங்கி னாரே!

இருபத்து மூன்றுதிங்கள் இவர்முதல்வ ராயிருந்தார்

இதற்குள் ளேயே

இருமொழியே போதுமென இந்திமறுத் தோர்சட்டம்

இயற்றித் தந்தார்!

பெருமகிழ்வில் தமிழ்நாடாய்ப் பெயர்மாற்றம் செய்திட்டார்!

பின்தன் மானத்

திருமணங்கள் செல்லுமெனுந் திருத்தத்தால் தமிழ்மானம்

திரும்ப மீட்டார்!

இனக்கொலைகள் அன்றைக்கும் ஈழத்தில் ஐம்பத்து

இரண்டாண் டின்முன்

கனக்குமனத் தோடண்ணா கனிவற்ற தில்லியினைக்

கடிந்து ரைத்தார்!

மனக்குமுற லோ(டு)ஐநா மன்றிற்கும் எழுதிநிலை

மாற்றக் கேட்டார்!

இனக்காவல் மறவனவர் இருந்திருந்தால் இன்றிருக்கும்

ஈழ நாடே!

அண்ணாவின் உரோம்செலவில் ஆற்றலுடை ஒருமறவர்

அடைப்பின் நீக்க

பண்ணவராம் போப்பவரும் அண்ணாவின் வேண்டுகைக்குப்

பரிந்தி சைந்தே

திண்ணமிகு இரானடேயை விடுவிக்கச் சிறைக்கதவும்

திறந்த தன்று!

எண்ணமெலாம் நன்னேயம் இயக்கமெலாம் நன்னெறியன்(று)

இலங்கி னாரே!

பெரிதுபெரி தண்ணாவின் பெரும்பெருமை முடிந்திடுமோ

பேசு தற்கே!

அரியதமிழ் மீட்பிற்கு அண்ணாவே முன்னணியர்

அறியார் யாரே!

விரிந்ததவர் சிந்தனைகள் தளையறுத்துத் தமிழருயர்

விடிவைத் தேடி!

அரிதவரின் பெருமைசொலல் அவரவரும் தம்முணர்வால்

அறிந்து கொள்வீர்!


thamizhanambi44@gmail.com

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி