அணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

தமிழில்: அசுரன்


இந்நூல் முற்றிலும் எமது கற்பனையே.

கி.பி. 2007 ஆம் ஆண்டிலோ அல்லது அதன் பின்னரோ

இதேபோன்றதொரு காட்சியை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தால்

அதற்கு நாங்கள் பொறுப்பல்ல…

நாள் : கி.பி. 2015ஆம் ஆண்டு

இடம் : காலன்குளம்

காலன்குளம் அணுமின் மற்றும் அணுகுண்டு திட்டம் (KNPBP) 2007ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டு வருகிறது. காலன்குளத்தைச் சுற்றிலுமிருந்த விவசாய கிராமங்கள், மீனவ கிராமங்கள், தலித் கிராமங்கள் எல்லாம் காலி செய்யப்பட்டு மக்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு மேம்பாட்டுக் குடியிருப்பு (Development Colony) என்று அழைக்கப்படும் நவீன குடியிருப்புக்கு மாற்றப்பட்டுவிட்டனர். ஆனால், தமது நிலத்தை, கடலை, தமது பாரம்பரிய வாழிடத்தைப் பறிகொடுத்த மக்கள் கொடும் வறுமையிலும் பெரும் துயரத்திலும் தள்ளப்பட்டனர்.

இந்துக்களுக்கு கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பு, நாடார்களுக்கு முக்குவர்கள் மீது வெறுப்பு, இவர்கள் எல்லோருக்கும் தலித்துகள் மீது வெறுப்பு… இப்படியாக ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் மீது வெறுப்பு. இப்படி, மக்களிடம் ஒருவர் மீது மற்றவருக்குள்ள வெறுப்புணர்வைப் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டது.

கொடிக்கம்பங்களில் பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் கொடிகள் காற்றில் அசைந்தாடிப் பறந்துகொண்டிருக்கின்றன. வருவாய்த்துறையின் அலுவலகமாக ஒரு சிறிய, பாழடைந்த கட்டிடம் நிற்கிறது. அதன் முன்புறம் “Camp Visit: KNPBP” என்ற பெயர்ப்பலகை தொங்குகிறது.

இந்தக் காலன்குளம் திட்ட பகுதியைச் சுற்றிலும் மின் வேலியுடன் சிறைசாலையைப் போல உயரமான கற்சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் (CISF) உலையைச் சுற்றிலும் உயரமான கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து தீவிரமாகப் பாதுகாத்துவருகின்றனர். அந்த உலையினுள்ளே பரபரப்பாக வேலைகள் நடந்துவருகின்றன.

நன்றாக உடையணிந்த, ஆங்கிலம் பேசும் பொறியாளர்களும் விஞ்ஞானிகளும் தமது குளிர்சாதனம் பொருத்தப்பட்ட கார்களை ஓட்டிக்கொண்டு முன்புற வாயிலருகே வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் வண்ண அடையாள அட்டைகளை பார்த்துவிட்டு காரினுள் இருப்பவரையும் பார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். உலைக்கு வரும் கார்களாலும் டிரக்குகளாலும் வாகனங்கள் நிறுத்துமிடம் எப்போதுமே நிரம்பிவழிந்துகொண்டிருக்கிறது.

பின்னணியில், வானை நோக்கி உயர்ந்த அனைத்து நான்கு புகைபோக்கிகளிலிருந்தும் தொடர்ச்சியாக நீராவியும் புகையும் வெளிவந்துகொண்டிருக்கிறது (உண்மையில் அது என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும்). எண்ணற்ற, பெரியபெரிய குழாய்களில் இலட்சக்கணக்கான லிட்டர் கதிரியக்க நீர் கடலில் கலக்கப்படுகிறது. இதனால் அதிகளவில் குறைந்த அளவு கதிர்வீச்சு அப்பகுதியில் பரவுகிறது.

முன்புறமுள்ள புகைபோக்கியொன்றில் ஒரு பிரமாண்டமான, வலது கையில் காவிக்கொடியேந்திய பாரத மாதா, தனது இடது கையில் கர்ஜிக்கும் ஆண் சிங்கத்தைப் பிடித்தபடி, கனன்ற கண்களுடன், உற்சாகமான சிரிப்புடன் வானிலிருந்து இறங்கி வருவதைப் போன்ற படம் வரையப்பட்டுள்ளது. பார்ப்பவர்களுக்கு தேசியவாத மற்றும் மதவாத சிலிர்ப்பை ஊட்டும் வகையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பாரத மாதாவின் பாதங்கள் இந்திய வரைபடத்தில் தென் எல்லையின் மீது உறுதியாகப் பதிந்திருப்பதைப் போல இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அப்படத்திற்குக் கீழே பெரிய எழுத்தில், “இந்த அறிவியல் ஆலயம் நமக்கு ஆற்றலையும் முதல் உலக தகுதியையும் தருகிறது” (This Temple of Science gives us Power and First World status) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்சி: ஒன்று

(தலையில் விறகுக் கட்டைச் சுமந்தபடி வரும் காளியம்மாள், கண்ணம்மாள் என்ற இரு, கல்வியறிவற்ற கிராமப் பெண்கள் காலன்குளம் திட்ட வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு திண்டில் தம் தலைச்சுமையை இறக்கி வைத்து சிறிது ஓய்வு எடுக்கின்றனர். முன் வாசலருகே நின்ற ஒரு மத்திய பாதுகாப்புப்படை வீரன் அப்பெண்களை அங்கிருந்து போகுமாறு விரட்டுகிறான்.)

கண்ணம்மா: நாம இங்ஙன நின்னா அவுனுக்கு என்ன எழவு நட்டம் ?. மொதலாளி சும்மா நின்னாலும் அவுனுக்க நாய் உடாது போலுக்கு. நாய்ப்பய…

காளியம்மா: நம்ம தல விதியப் பாருட்டா!. அவன் நிக்கியது எங்க குடும் நெலம். நல்லாப் பாரு, அந்த நாசமாப்போற கம்பெனி வாசலுலதாம் எங்குளுக்கு மூணு பெரிய புளிய மரம் நின்னு. அதுல இருந்து கெடச்ச வருமானத்துலதாம் எம் புள்ளயள வளத்தேன், குடும்பச் செலவு எல்லாம் கழிஞ்சி. (பெருமூச்சு விடுகிறார்) நெலம் போச்சி… வருமானம் போச்சி… நம்மளுக்கு என்ன கெடச்சி ?. ஒண்ணுமுல்ல!. நெலத்த வேற எவுனுக்காவுது வித்தா எவ்ளவு கெடச்சுமோ அந்த பைசாகூட கெடச்சல.

கண்ணம்மா: எக்கா… நான் ஒங்கிட்ட கேக்கணும்ணு நெனச்சேம் பாத்துக்க… ஒம் புள்ள இப்ப என்ன செய்வு ?. அவுளுக்க கொழந்தைக்கும் ஒடம்பு சொகமில்லண்ணு கேள்விப்பட்டேம்… என்ன கஷ்டகாலம் பாரு… ?

காளியம்மா: நான் என்னத்தச் சொல்ல… ? (மெளனம்) அந்த பெரிய ஆப்பரேசனுக்கப் பெறவு அந்தப் பயலுக்கு பாலு குடுக்கியதுக்கு அவுளுக்கு ஒத்த மாருதான இருக்குவு. ஒவ்வொரு தடவயும் பய பாலுக்கு அழச்சில எல்லாம் அவுளும் அழுதுதொலைக்கியா. அந்த ஆப்ரேசனுக்கு வாங்குன கடத்துக்கு நான் இன்னம் வட்டி கெட்டிக்கிட்டு இருக்கேம். நம்ம நெலம இப்பிடி இருக்கச்சில நான் கொழந்தைக்கி பாலுமாவு எப்பிடி வாங்க.. ? அந்த தேவிடியாப்பய இருக்காமுல்லா அவந்தாம்- அவ புருசன், அவன் அணுஒல டவுணுக்குள்ள எவுளோ வேசய கூட்டிக்கிட்டு திரியானாம். ஒத்த மாருள்ளவுள அவஞ் சேத்துக்கமாட்டானாம். ஆனா நீ நெனச்சிப்பாரு, இப்பிடி ஒரு அழகான ஆம்புளப் பிள்ளய உடுயதுக்கு யாருக்காவுது மனசு வருமா ?.

எம் பேரப்புள்ள ரொம்ப சந்தோசமா, நல்லாத்தாம்ட்டி இருந்தாம் (தேம்பி அழுகிறார்) … போன மாசம் அவுனுக்க வயித்துலயும் கழுத்துலயும் வீக்கம் வந்துச்சி. கொழந்த எப்பப்பாத்தாலும் உடாம பொரண்டுபொரண்டு அழத்தொடங்குனாம்… (மீண்டும் தேம்புகிறார்)… அவுனுக்கு காச்சல் வந்திச்சி, ஊனுல இருந்தெல்லாம் ரெத்தமா வந்திச்சி (இன்னும் தேம்புகிறார்) எஞ் சின்னச் செல்லம் படுய வேதனய தாங்க முடியலியே…

கண்ணம்மா: (காளியம்மாவின் வலது கையைப் பிடித்தபடி) அழாதக்கா… நீ பிள்ளய டாக்கிட்டருக்கிட்ட காட்டுனியா ?

காளியம்மா: எம் பொண்ணுக்கு ஆப்பரேசஞ் செஞ்ச சக்காராஸ்பத்திரிக்கி அவுன கொண்டு போனேம். டாக்கிட்டரு சொல்லியாரு… அவுனுக்க ரெத்தத்துல குத்தமாம்…

கண்ணம்மா: ரெத்தத்துல குத்தமா… (சிரிக்கிறார்) அந்த பஞ்சட்டப் பயலுக்கு பாலு பத்தியிருக்காது… அட பொம்புள… ஒம்பொண்ணுக்கு நல்லா மீனு கறி வச்சிக்குடு. கொழந்தைக்கி பாலு தேறும்.

காளியம்மா: நாங்க கேக்கு தின்னுயோமுன்னு நெனச்சியோ ? எப்பயும் மீனுஞ்சோறுந்தாம். அதும் இந்த அணுஒல வந்ததுல இருந்து மீனு சும்மா கெடைக்கியது மாதிரி கெடைக்குவு. அந்த மீனுக்காறிய மீனுக்காவுண்டி நாம என்னத்தக் குடுத்தாலும் வாங்கிட்டுப்போறாளுவ. ஒனக்குத் தெரியுமா ? டாக்கிட்டரு சொல்லியாரு இந்த மீனுனாலதாம் பிரச்சினண்ணுட்டு.

கண்ணம்மா: (பலமாகச் சிரிக்கிறார்) ஆமா.. பெரிய டாக்கிட்டரு… அந்தப் பணக்காரப் பயக்க பெரிய ஊருவள்ள போயி படிக்கானுவ… இங்கிலீசுல பேசியானுவ… மீனு எப்பிடியாக்கும் பிரச்சினயாட்டு ஆவும் ?. எனி அரிசிதாம் பிரச்சினம்பானுவ. அதுக்கம் பெறவு பாலுதாம் பிரச்சினம்பானுவ. அதுக்கம்பெறவு காத்தும் பிரச்சன ஆவுமோ ?. நாம படிப்பறிவு இல்லாதவியளாட்டு இருக்கிலாம்… ஆனா, முட்டாளுவ இல்ல பாத்துக்க…!

காளியம்மா: (வெறித்துப் பார்த்தபடி மெதுவாக முணுமுணுக்கிறார்) இதுமாதிரிதாம் அவுரு சொன்னதாட்டு நெனப்புருக்கு. ஒருவேள நாங் கேட்டது எல்லாந் தப்பாட்டு இருக்குலாம். நாம இதயெல்லாம் எப்பிடியாக்கும் அறியியது ?

கண்ணம்மா: ஒண்ணும் அறியாண்டாம்… நாம அறிஞ்சவரைக்கி போதும். பொண்ணுக்கு நெறயா மீனு அவிச்சிக்குடு, ஒனக்கு கெடைக்க பாலுலயும் கொஞ்சங் குடு. பசுவெல்லாம் மீனு திங்காதில்லியா… (வாய்க்குள் சிரிக்கிறார்). அந்தப் பயல அம்மங்கோயிலுக்கு கொண்டுவா!. பூசாரி பெரியசாமி எனக்க மயினிக்க மாமாவுக்கக் கூடப்பொறந்தவுருதாம் பாத்துக்க, ஒனக்குத் தெரியுமா ?. அவுரு தீர்த்தம் தெளிச்சி உட்டாருண்ணா… எந்த நோயா இருந்தாலும் செரியாப்போவும்… பயப்புடாத…

காளியம்மா: (முகம் உடனடியாக பிரகாசிக்கிறது) நெசமாட்டா… ? நாம இந்த வெள்ளிக்கெழம போவமாட்டி ? நீ எப்பிடியும் எங்கூட வரணும் பாத்துக்க… (காலன்குளஹ் திட்ட வளாகப் புகைக்கூண்டிலுள்ள படத்தைப் பார்த்து கை குவிக்கிறார்) அம்மா… எஞ் சின்ன செல்லத்தக் காப்பாத்து தாயே…! நாங்க ரொம்ப ஏழைய.. எழுத வாசிக்கத் தெரியாதவிய… ஒதவிக்கு ஒரு சனமும் இல்லாதவிய தாயே… எரக்கங்காட்டு அம்மா…!

(வாசலில் நின்ற பாதுகாப்புப்படை வீரன் தம்மை நோக்கி வருவதைக் கண்டதும் இருவரும் தத்தமது விறகுக் கட்டுகளைத் தலையில் தூக்கி வைத்தபடி நகர்கின்றனர்)

காட்சி: இரண்டு

“ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது…” என்று பாடியபடி பீடி புகைத்துக்கொண்டு அம்மன் கோவிலின் முன்புறம் அமர்ந்திருக்கிறார் பூசாரி பெரியசாமி. ஒரேயொரு அறையே உடைய அந்த சிறிய காளிக்கோவிலில் சிவப்பு சேலையணிந்த சுடுமண் காளி சிலை உள்ளே வைக்கப்பட்டிருக்கிறது. காலன்குளம் திட்ட புகைக்கூண்டில் இருந்தது போன்ற அம்மன் வடிவம் கதவில் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயில் கூரையின் நான்கு முனைகளிலும் பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கையில் குழந்தையோடு இரு பெண்கள் வருவதைக் கண்டதும், பீடியை வீசி எறிந்துவிட்டு, தன்னை தயார்படுத்திக்கொள்கிறார் பூசாரி. தனது கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருப்பதைப் போல காட்டிக்கொள்கிறார்.)

கண்ணம்மா: ஏங்க… ஒங்களத்தாம்… இந்தப்புள்ள சாவக் கெடக்கு. ஒங்க கையால தொட்டு தீர்த்தம் தெளிச்சி உடுங்கய்யா…

பூசாரி: (மெதுவாகக் கண்களைத் திறந்து, வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதைப் போல தலையை அசைக்கிறார்) வா… வா… அம்மய்க்கி என்னத்த வாங்கிட்டு வந்திருக்கிய ?

கண்ணம்மா: அண்ணே… இது எஞ் சொந்தக்காரியாக்கும். இவுளுக்க பேரப்புள்ளக்கி ரெத்தத்துல குத்தமாம். சக்காராஸ்பத்திரி டாக்கிட்டருமாரு ஒண்ணுஞ் செய்ய முடியாதுன்னுட்டு சொல்லிட்டாவுளாம். நாம் அவுளுக்கிட்ட நம்ம அம்மய பத்தியும் ஒம்மளப் பத்தியும் சொல்லி கூட்டிட்டு வந்தேம்.

பூசாரி: (பெருமூச்செறிகிறார். தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ உச்சாடனம் செய்கிறார். மறுபடியும் கண்களைத் திறந்து கையை அசைத்து குழந்தையை தன்னருகில் கொண்டு வருமாறு சைகை செய்கிறார். தனது வலது கையை குழந்தையின் தலையில் வைக்கிறார். பின்னர் முன்போல மந்திர உச்சாடனம் செய்கிறார். தன் கண்களைத் திறந்து, கையை எடுத்துக்கொள்கிறார். பின் இரகசியமாக முணுமுணுக்கிறார்.) இது… ரெத்தத்துல குத்தம் ஒண்ணும் இல்ல… இது அம்மைக்க கோவமாக்கும்.

காளியம்மா: என்னய்யா சொல்லுதிய… ? இந்த சின்னப்பிள்ள அம்மைக்கோ அல்லாம வேற யாருக்கோ என்னக் கேடுய்யா செஞ்சி… ? இந்த பச்சப்புள்ள ஒரு பாவமும் அறியாதேய்யா… (கன்னங்களில் கண்ணீர் வழிய அழுகிறார்) பூசாரிய்யா… எஞ்செல்லப் புள்ளக்கி எரக்கங்காட்ட அம்மய சாந்தப்படுத்த என்னய்யா செய்யணும் ?

பூசாரி: எம்மா… நல்லா கேட்டுக்க… அம்மய்க்க கோவம் ஒம் பேரப்புள்ள மேல மட்டும் இல்ல… இந்த மேம்பாட்டுக் காலனி மேலயே அம்மய்க்க கோவம் இருக்கு. இப்ப இங்க பெறக்கிய புள்ளய எல்லாம் ஏன் கைல ஆறு வெரலோட, கால்ல ஏழு வெரலோட, ஊதுன வவுத்தோட, வழுக்கைத் தலையோட எல்லாம் பெறக்குவு ?. ஏம் வயித்துப்போக்கு வருவு ?, ஏம் கரு அழிவு ?… இதெல்லாம் தெய்வ குத்தமாக்கும். நாம அம்மைய சாந்தப்படுத்தணும்.

காளியம்மா: எப்பிடிண்ணு எங்கக்கிட்ட சொல்லுமையா ?

பூசாரி: நாஞ் சொல்லியத யாரு கேக்கியா… ? காலனில உள்ள யாரு கேக்கியா… ? கடல்ல லெச்சக்கணக்குல மீனு செத்து மெதக்கியத முக்குவனுவ (மீனவர்) பாக்கியானுவ. பசுமாடுவ எல்லாம் செத்த கன்னுக்குட்டியளா போடுவுண்ணு சம்சாரிமாரு (விவசாயிகள்) சொல்லியாவ. எல்லாம் அம்மய்க்க கோவமாக்கும். நம்ம நெலத்துல… நம்ம தண்ணியில… நம்ம கடல்ல… நாம உள்ளுக்கு இழுக்கிய காத்துல… நம்ம சாப்பாட்டுல… ஏம்… தாய்மாருக்கப் பாலுல… இப்பிடி எல்லா எடத்துலியும்… எல்லா எடத்திலியும்…. அம்மய்க்க கோவம்…. (அமைதி)

(திடாரென்று ஆவேசமாக) நீயாவுது அம்மய நம்பு, அம்மய்க்க கோவத்த வெளையாட்டா நெனைக்காத… ஒம் பேரப்புள்ளய கொணப்படுத்தச்சொல்லி நான் அம்மைக்கிட்ட கேக்கியேன்.

(மெதுவாக முணுமுணுக்கிறார்) அம்மய்க்கி நூத்தியோரு தேங்கா காணிக்க வை. கொழந்தய ஒவ்வொரு செவ்வாக்கெழமயும் வெள்ளிக்கெழமயும் கோயிலுக்கு கொண்டு வா.

காளியம்மா: (101 தேங்காய் காணிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்) சாமி, நாங்க வெறம் ஏழை பொம்பிளைக… ஆம்பிளைக இல்லாத வீடு…

பூசாரி: (பொறுமையிழந்து) அட ஈனப் பொம்பிள… தேங்காய நான் திங்கதுக்கா கேட்டேம்…. ? அம்ம கேக்கியா… இது முடியலாட்டி ஒன்னால என்ன ஏலுமோ அதச் செய்யி… அம்மய்க்கி நூத்தியொரு ரூவா குடு, போ. (ஒரு குப்பியில் தண்ணீரும் ஒரு பொட்டலம் மண்ணும் கொடுக்கிறார்). கொழந்தைக்கி நெதம் இந்தத் தண்ணியில கொஞ்சங் குடு. இந்த மண்ண நாப்பத்தொரு நாளு நெத்தியில பூசு. அவஞ் செரியாயிருவாம்.

காளியம்மா: (குழந்தையை பூசாரியின் காலடியில் கிடத்துகிறார். பூசாரி கொடுப்பவற்றை இரு கைகளாலும் பயபக்தியுடன் வாங்கி கன்னங்களில் ஒற்றிக்கொள்கிறார்) ஒங்களுக்குப் புண்ணியமாப் போட்டுஞ் சாமி. நல்லதோ கெட்டதோ நான் எனிமே வாறப்ப நூத்தியோரு ரூவா தாறேம்.

காட்சி: மூன்று

(மேம்பாட்டுக் காலனிக்கு வெளியே ஒரு கள்ளச் சாராயக்கடை உள்ளது. சில மீனவர்களும் சில விவசாயிகளும் உள்ளூரில் வடிக்கப்படும் நாட்டுச் சாராயத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றனர். அங்கே வந்த பூசாரி பெரியசாமி கடைக்காரனிடம் ஒரு பெரிய குப்பி நிறைய சாராயம் தருமாறு கேட்கிறார். அவன் மறுக்கிறான்)

கடைக்காரன்: ஓய்… முந்தியே நீரு எழுவது ரூவா தரவேண்டியிருக்கு. இப்பவும் வந்துக் கடம் கேட்டா எப்பிடி ?. பாக்கிப் பைசாவ வச்சிக்கிட்டு வாரும் ? இல்லண்ணா போவும்.

பூசாரி: (பூசாரி தனது நடுங்கும் கையால் சட்டைப் பையில் கைவிட்டுத் துழாவி, ரூபாய் நோட்டுகளை எடுத்து அனைவர் முன்னிலையிலும் எண்ணுகிறார்.) இங்கப் பாருலே… எவ்ளவு தரணும்ணு சொன்னே… எழுவது ரூவாயா… இந்நா… அந்தப் பிச்சக்காச எடுத்துக்க. எனக்கு ஒரு பெரிய குப்பி தாலே… (கோபத்துடன் சப்தமிடுகிறார்)

குடிகாரன்1: ஓய் சாமி… ஏம் ஓய் கோவப்படுதீரு ?. நீரு ஒரு பெரிய மனுசம்லா… நீரு கோவப்படுலாமா… ? கோவப்படாதீயும் ஓய்…

குடிகாரன்2: ஓய்… பூசாரி, ஒம்ம கைல பைசா நெறயா நடமாடுவு போலுக்கே!. தீர்த்தந் தெளிச்சியதுக்கு ஆளுவ நெறய வருவோ… ?

பூசாரி: (பெரிய குப்பியிலிருக்கும் சாராயத்தை விழுங்கியபடி தலையை ஆட்டுகிறார்) ஆமா… காலனில இருந்து பொம்பிளய கொழந்தயள தூக்கிக்கிட்டு வருவுவ…

குடிகாரன்1: நாங்க பொண்டாட்டிமாரு உருப்படியள வித்து குடிக்கியோம். அவுளுவ அழுது சாவம் போட்டு எங்கள வீட்ட உட்டு சவுட்டித் தள்ளியாளுவ. நாங்க தொழிலுக்குப் போயி கொஞ்சம் மீனு பிடிச்சிட்டு வருலாம்ணா… முன்னுக்கு மாதிரி மீனு பிடிக்கமுடியில… ஆனா ஒமக்கு வரும்படியில கொறவுல்ல… பெரிய ஆளுதாம் ஓய்… நீரு.. போலிச் சாமியாருதான ஓய். (பலமாகச் சிரிக்கிறார்)

குடிகாரண்2: ஓய்… கம்பெனிக்குள்ள ஒம்மளப் பத்தி சொல்லி சிரிக்கியானுவ, தெரியுமா ஓய் ?

பூசாரி: அந்த சவத்துக்குப் பெறந்தயலுவ என்னத்தச் சொல்லியானுவ ?

குடிகாரன்2: அங்ஙன ஒலைக்கு உள்ளுக்க டேஞ்சரான எடத்துல வேல பாக்கிய பயக்க சொல்லியானுவ… மேம்பாட்டுக் காலனில வாற சீக்குக்கெல்லாம் அந்த அணுஒலதாம் காரணமாம். நீரு என்னண்ணா… அம்மய்க்க கோவம்ணு சொல்லிதீரு….

பூசாரி: எல்லாம் எனக்குத் தெரியும்லே… தெரியும். அது அந்த ஒலையில இருந்து வாற கதிர்வீச்சி தான.

குடிகாரன்1: ஆனா நீரு அந்தக் காலனி பொம்பிளயள ஏமாத்தத்தான செய்யிதீரு…

குடிகாரன்2: அதுமட்டுமா ஓய்… (பலமாகச் சிரிக்கிறார்) அந்த ரேடியேசன் சேந்த கடல் தண்ணிய வேற குடுக்கிதீரு…

பூசாரி: வாய மூடுல…. நாய்க்கிப் பெறந்தயல… சாயிப்புமாருக்க யுனானி மருந்து தெரியுமால… சீக்கு வந்தா நம்ம மோள நாமளே குடிக்கிலாமாக்கும்… நானம் அதத்தானல செய்யியேம். அவிய எல்லாம் அந்த ரேடியேசனாலதான சீக்கானாவ…. அதுனாலதாம் நான் அதே ரேடியேசன் சேந்த கடல் தண்ணியயும் ஒல மண்ணயும் குடுக்கியேம். அவியளுக்கு ஒருத்தரும் ஒதவி செய்ய மாட்டேங்காவ. ஏதோ என்னால ஏலுமட்டும் நான் செய்யியேன். தொயரத்துல கட்டப்படுய மக்களுக்கு நான்தாம்ல ஏதோ செத்தோல நம்பிக்க குடுக்கியேம்.

குடிகாரன்1: நீரு கடல் தண்ணிய எடுக்கியத நாம் பாத்திருக்கேம். அந்த ஒல மண்ண எப்பிடி ஓய் எடுக்கிதீரு ?.

பூசாரி: (இரண்டாவது குடிகாரனைச் சுட்டிக்காட்டுகிறார்) இவந்தாம் எடுத்திட்டு வாறாம்…. அந்த எழவு ஒலயில இருக்கிய எல்லா பேதியில போற குழியும் இவம் வெட்டுனதுதான!.

குடிகாரன்2: ஓய்… அதெல்லாம் பேலுயதுக்கு போற குழியில்ல வோய்… அந்த ரேடியேசன் தண்ணிய கடல்ல கொண்டு கலக்கியதுக்காக்கும் அதெல்லாம் வெட்டுனது.

குடிகாரன்1: ஓ…கோ… சாமி ஏம்பில ஒன்ன தூக்கியாருண்ணு இப்ப வெளங்கிச்சி. நீ சாமிக்கெல்லாம் சாமில… பெரீ…ய சாமி…

பூசாரி: ஒனக்க ஊத்தவாய மூடுல… (என்று சொன்னபடி அவனை தாக்குவதற்குப் பாய்கிறார்)

கடைக்காரன்: ஓய்… ஓய்ய்… எல்லாரும் குண்டியள தூக்கிட்டுப் போங்க ஓய்… எம் பொழப்பக் கெடுக்காதீய…

காட்சி: நான்கு

(குளிர்பதனம் செய்யப்பட்ட காலன்குளம் திட்ட கருத்தரங்கக்கூடம். மேடையின் நடுவில் டாக்டர் டி.ஏ.இ. தாஸ் அமர்ந்திருக்கிறார். அவர்தான் இந்திய அணுசக்தித்துறையின் தலைவர். அவருக்கு வலதுபுறம் இந்திய அதிபர் அமர்ந்திருக்கிறார். ஒரு அழுத்தலில் தெற்காசியாவையே முழுமையாக அழித்துவிடக்கூடிய அணுகுண்டின் விசை அவரது கையில் இருக்கிறது.

டி.ஏ.இ. தாசுக்குப் பின்புறம் பரம்ஹன்ஸ் பவர்மணியாச்சாரியாவும் ஜனாப் அல்-முஸ்லீம் ஆல்-ஐ-கேரும் அருட்தந்தை இக்னோரென்டேசியசும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களையடுத்து டெல்லி நீதிபாதி மேன்மைதாங்கிய பிளைண்ட் ஐயரும், தேசிய பத்திரிகையாளர் சங்கத் தலைவர் திரு. பிக் லையரும் அரசின் முதன்மைச் செயலாளர் திரு. பூட் லிக்கரும் அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் டாக்டர் டி.ஏ.இ. தாஸ் கொஞ்சம் கதிரியக்க காற்றை வெளியிடுகிறார். அவரது சக அதிகாரிகள் ஆழ்ந்து மூச்சிழுத்து, ஒருகணம் தடுமாறி பின் ஆனந்தப் பரவசமடைந்தனர். அது வரும்போதெல்லாம் டாக்டர் டி.ஏ.இ. தாஸ் மீண்டும் மீண்டும் குசுவாக விட்டு அவர்களின் மேம்பாட்டு நிலையைக் கவனிக்கிறார்.

முதலீட்டாள˜கள், பங்குதாரர்கள், தளபதிகள், விஞ்ஞானிகள், நிலவியலாள˜கள், பூகம்பவியலாள˜கள், மருத்துவர்கள் மற்றும் மிக முக்கியமானவர்களான அணுசக்தி கெட்டுப்பாட்டு வாரியத்தினர் மற்றும் நம்பத்தகுந்த பின்னணியாள˜கள் மேடைக்கு எதிரில் அரங்கில் அமர்ந்துள்ளனர்.

மேம்பாட்டுக் காலனியில் பெருமளவு காணப்படும் புற்றுநோய் குறித்த சிக்கலே இந்த உயர்கல்வி கற்ற, அதிக ஊதியம் வாங்கும் நபர்களை இங்கே இழுத்து வந்துள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான இந்த குற்றத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவே அவர்கள் இங்கு கூடியுள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் பேசியவை இங்கே தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன.)

டாக்டர் டி.ஏ.இ. தாஸ்:

நண்பர்களே! நம் அனைவருக்கும் இங்கே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது தெரியும் என்று நினைக்கிறேன். மேம்பாட்டுக் காலனியில் உருவாகியுள்ள சிலவகையான மாய சாபத்தினாலான அழிவுகள் தேச பக்தியற்றவர்களால், தேச விரோதிகளால், விஞ்ஞானபூர்வமற்ற, பகுத்தறிவற்ற, ஒழுக்கமற்ற, பாரபட்சமான மற்றும் மேம்பாட்டுக்கு எதிரான இழிந்தவர்களால் உலக அரங்கில் எழுப்பப்பட்டுள்ளது. மரங்களைஸ்ரீ கட்டிப்பிடிக்கும், வண்ணத்துப்பூச்சிகளைஸ்ரீ காதலிக்கும், பூமியை முத்தமிடும் இத்தகைய அறிவுஜீவிகள் இந்தியா அமெரிக்காவைப் போல பெரிய, கம்பீரமான, பேரரசாக, யு.எஸ்.ஐ.யாக (ஐக்கிய இந்தியக் குடியரசுகள்) உருவாவதற்கு எதிரானவர்கள்.

(அவரது குரல் உயர்கிறது, கைகளும் உடலும் நடுங்குகின்றன. டாக்டர் டி.ஏ.இ. தாஸ் மேம்பாடு குறித்தும் முதல் உலக அந்தஸ்து குறித்தும் பிரசங்கம் செய்கிறார். அறையிலுள்ள அனைவரும் முழந்தாளிட்டு ஒரே குரலில் பிரார்த்தனை செய்கின்றனர்.)

அம்மா எங்களை மேம்படுத்து!

அணுசத்தி அம்மா எங்களை மேம்படுத்து!

எல்லாம்வல்ல அம்மா, எல்லாம்வல்ல அம்மா!

எல்லாம்வல்ல அணுசக்தி அம்மா,

எல்லாம்வல்ல அம்மா எங்களை மேம்படுத்து!

மேம்படுத்து அம்மா, அணுசக்தி அம்மா!

குண்டுகள் தா! அணு குண்டுகள் தா!

உலைகள் தா! எல்லாம்வல்ல அணுஉலைகள் தா!

எங்களை அமெரிக்கர்களைப்போல சிந்திக்கவை, அமெரிக்கர்களைப்போல பேசவை!

அமெரிக்கர்களைப்போல உணரவை,

அமெரிக்கர்களைப் போல நடக்கவை!

அணுசக்தி அம்மா, அணுசக்தி அம்மா!

எங்கள் தகுதி, திறமை, கண்ணியமெல்லாம் நீக்கு!

எங்களை அமெரிக்கர்களைப் போலாக்கு!

அம்மா, எங்களை அமெரிக்கர்களை போலாக்கு!

அம்மா, எங்களை மேம்படுத்து!

(பிரார்த்தனையின் முடிவில் அந்த அரங்கத்திலுள்ள அனைவரும் டாக்டர் டி.ஏ.இ. தாசின் முன் குனிந்த தலையும் ஏந்திய கைகளுமாக வரிசையில் நிற்கின்றனர். டாக்டர் டி.ஏ.இ. தாஸ் கதிரியக்க நீக்கம் செய்யப்பட்ட புத்தம்புது ரூபாய் நோட்டுகளை அனைவரினதும் சட்டைப்பையில் வைத்துவிட்டு, கட்டித்தழுவி முத்தமிடுகிறார். பின்னர், யாரங்கே நிகழ்ச்சி தொடங்கட்டும் என்பதுபோல கை தட்டுகிறார்.)

தாஸ்: இனி காட்சி… மன்னிக்கவும் விசாரணை தொடங்குகிறது!.

அணுசக்தி கெட்டுப்பாட்டு வாரியப் பிரதிநிதி:

இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு (Environmental Impact Assessment -EIA) செய்யப்பட்டதா ?

தாஸ்: ஆம், உறுதியாக செய்யப்பட்டது. நாங்கள் மிகுந்த கருணையுடனும் மனச்சாட்சியுடனும் 2007 காலன்குளஹ் திட்டத்திற்காக 1988ஆம் ஆண்டிலேயே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு செய்துவிட்டோம்.

அ.கெ.வா.பி: அப்போது, உறுதியாக நீங்கள் அதை மக்களுடன் பகிர்ந்துகொண்டிருப்பீர்கள், மக்கள் அதனால் பின்னர் நேரிடக்கூடியவற்றை அறிந்தபோதிலும் இன்றுவரை அந்த உலைக்கு மிக நெருக்கத்தில் வாழ்கின்றனர். சரிதானே ?

தாஸ்: ம்… ஆ….மா… வந்து… நா…ங்கள் அதை மக்களுக்கு அளிக்க விரும்பினோம். ஆனால், அது மிகப் பெரியதாக இருந்தது, நீங்கள் கவனியுங்கள்… இங்கே நிறையபேருக்கு ஆங்கிலம் படிக்கவே தெரியாது… ஆங்கிலம் தெரியாதவர்களால் இந்தக் கடினமான அறிவியலைப் புரிந்துகொள்ள முடியாது. இவை எல்லாவற்றையும் தெரிந்தவர்களில் பெரும்பாலானோரை நாங்கள் ஏற்கனவே வாங்கிவிட்டோம்… அதாவது…. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்… அவர்களுக்கு நாங்கள் வேலை கொடுத்துவிட்டோம்.

அ.கெ.வா.பி: நியாயமாக அது போதும். அதோடு, அந்த அறிக்கையை மக்கள் படித்த பிறகு இதுகுறித்து அவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் உறுதியாக மக்கள் கருத்தாய்வுக் கூட்டமும் நடத்தியிருப்பீர்கள் அல்லவா ?

தாஸ்: அது… வந்து… நாங்கள்… எதையும் நம்பும் விவசாயிகளிடம் அவர்களின் கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதாகச் சொல்லியும், இனி எப்போதும் மீன் பிடிக்கவேமுடியாத அப்பாவி மீனவர்களுக்கு மீன் விலையை அறிந்துகொள்வதற்காக கம்ப்யூட்டர்கள், இண்டர்நெட் வசதி செய்து கொடுத்தும், உலையில் இல்லாத வேலைவாய்ப்புகள் எல்லாம் அவர்களுக்கே கிடைக்கும் என்று கூறி மாணவர்களை மூளைச்சலவை செய்தும்… இந்த திட்டத்தை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிட்டோம். யாரும் எதிர்க்கவில்லை.

அ.ஒ.வா.பி: இவையெல்லாம் உங்கள் இரக்ககுணத்தை வெளிக்காட்டுகின்றன. அதோடு, அணுஉலையை அமைப்பதற்கு முன்னதாக நீங்கள் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும் அனுமதியைப் பெற்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். சரியா ?.

தாஸ்: அது… வந்து… நாங்கள் முதலில் உலையை நிறுவிவிட்டோம். அதன் பின்னர் அதனால் மாசு பிரச்சினை ஏதும் இல்லை என்று அவர்களிடம் கூறிவிட்டோம். அதன்பின் நாங்கள் டெல்லியில் அனுமதியை வாங்கிக்கொள்ள அவர்கள் அன்புடன் அனுமதித்தனர்.

அ.ஒ.வா.பி: சபாஷ்… நீங்கள் அனைத்து நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்றியிருக்கிறீர்கள். நான் உங்களைப் பாராட்டுகிறேன். என்னுடைய கணிப்பு என்னவென்றால் இந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கு நீங்கள் காரணமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இந்தத் தகவலை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு மக்கள் அனைவரும் 2007ஆம் ஆண்டிலேயே ஈழத்திற்கும் மாலத்தீவுக்கும் குடிபெயர்ந்திருக்கவேண்டும்!.

அதிக ஆர்வமுடைய பத்திரிகையாள˜ ஒருவர்:

அங்கே போயிருந்தாலும் தப்பியிருக்க முடியாது. ஈழத்திலும் மாலத்தீவிலும் உள்ள மக்களுக்கும்கூட இதே பிரச்சினை இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்!.

தாஸ்: (கடுகடுப்புடன்) யார் அந்த முட்டாள் ?. ஒரு இந்திய கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளைப் பேசுவது ?. அவனுடைய சட்டைப்பையிலிருக்கும் ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு, அந்த நாயை இந்தக் கூட்டத்தைவிட்டு துரத்துங்கள்.

(“நான் ஒரு தேசபக்தியுள்ள இந்தியன்…. நான் ரொம்ப தேசபக்தியுள்ளவன்…” என்று கதறக் கதற அந்த பத்திரிகையாளரை அடித்து, உதைத்து அரங்கைவிட்டு வெளியேற்றுகின்றனர்.)

தாஸ்: (டாக்டர் ஹெல்த் செல்லரைத் திரும்பிப்பார்த்து) டாக்டர் ஹெல்த் செல்லர் நாம் தயார் செய்த அறிக்கையை தயை செய்து படியுங்கள்.

டாக்டர் ஹெல்த் செல்லர்:

(தாசை நோக்கிக் குனிந்தபடி தனது டையை சரிசெய்து, தொண்டையைக் கனைத்துக்கொண்டு) நண்பர்களே!, நமது தீபகற்பத்தின் தெற்கு கடற்கரையோரம் கேரளாவிலுள்ள சவராவிலிருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி வரையிலும் ஏற்கனவே இயற்கையான கதிர்வீச்சு அதிகளவில் உள்ளது. அதுதொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1990களிலேயே ஃபிரண்ட்லைன் போன்ற வெகுமக்கள் இதழ்களே இதுதொடர்பாகக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. இந்த சான்றுகளை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது மேம்பாட்டுக் காலனியில் திடாரென்று உயர்ந்துள்ள இந்தப் புற்றுநோய்களுக்கும் காலன்குளம் திட்டத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்திய மக்களுக்காகப் பணியாற்ற இந்த மாபெரும் வாய்ப்பை எனக்கு அளித்த டாக்டர் டி.ஏ.இ. தாஸ் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாஸ்: வணக்கம் டாக்டர் ஹெல்த் செல்லர். உங்களுடைய அற்புதமான அறிவியல் ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி. நீதிபாதி அவர்களே, நீதிமன்றத்தில் இப்பிரச்சினை தொடர்பாக பொதுநல வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்று நான் கருதுகிறேன். சரிதானே!.

நீதிபாதி: கனம் நீதிப… மன்னிக்கவும்…. நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால்… நான் வெறும் நீதிபாதிதான். நீங்கள்தான் இந்த நாட்டுக்கே அதிபதி, இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அதிபதி.

பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நவீன மனுதர்மமானது அனைத்து இந்தியர்களும் சமம், ஆனால் சில இந்தியர்கள் கூடுதல் சமம் என்கிறது. அதாவது, எல்லா தகவல்களும் சமமானவை, ஆனால் சில தகவல்கள் கூடுதல் சமமானவை என்பதுபோல. ஆக, கூடுதல் சமமான இந்தியர்களே கூடுதல் சமமான தகவல்களைப் பெறமுடியும். மிக முக்கியமாக, நமது இரகசிய பாதுகாப்புச் சட்டம், அணுகுண்டு மற்றும் அணுமின் சட்டம் போன்ற மனிதநேயச் சட்டங்கள் எல்லாம் எந்தவொரு சமமான இந்தியருக்கும் சமமான தகவல்களை அளிப்பதைத் தடுக்கின்றன. நீதிக்கு முன் அனைவரும் சமம்தான்.

தாஸ்: நன்றி ஐயா. புனிதப்பசு போன்ற புனிதமான இந்தத்துறைக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் புகார்களையும் நீங்கள் விரைவாகத் தள்ளுபடி செய்ததானது இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டியுள்ளது. நீங்கள் நீதிக்காக சேவை செய்கிறீர்கள். (பிற நண்பர்கள் பக்கம் திரும்பி) நமது பிற நல்ல நண்பர்களின் ஒத்துழைப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன். குறிப்பாக, இதழாசிரியர் பிக் லையர், செயலாளர் பூட் லிக்கர் மற்றும் இம்முக்கிய சிக்கலை கையாள்வதில் ஒத்துழைத்த நம் வணக்கத்திற்குரிய பரம்ஹன்ஸ் பவர்மணியாச்சாரியா, ஜனாப் அல்-முஸ்லீம் ஆல்-ஐ-கேர் மற்றும் அருட்தந்தை இக்னோரன்ட்டேசியஸ் ஆகிய துறவிகளுக்கும் எனது நன்றிகள்.

பிக் லையர்: எங்கள் செய்தியாளர் கடந்த வாரம் மேம்பாட்டுக் காலனிக்கு நேரில் சென்று பார்த்து, அங்கிருந்து உங்கள் செய்தி அறிக்கைகளை எங்களுக்கு அனுப்பினார். அங்கே எந்த உடல்நலச் சிக்கலும் இல்லை. சில தேச விரோத, சனநாயக விரோத, மேம்பாட்டிற்கு எதிரான தீய சக்திகள்… நமது நாடு ஆற்றல் துறையில் தன்னிறைவு அடைவதைப் பொறுக்காமல் இத்தகைய வதந்திகளைப் பரப்புகின்றனர். பணமும் அதிகாரமும் பெறுவதற்காக பத்திரிகைத்துறைக்கு மின்சாரம் தேவை.

பூட் லிக்கர்: (டி.ஏ.இ. தாசை திருப்பிப்பார்த்து) அனைத்து துறைகளுக்கும் தாய் நீங்கள்தான். ஒரு தாயைப்போல நீங்கள் எங்கள் எல்லோரையும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறீர்கள். இந்தச் சின்ன சலசலப்புகளைப் பற்றி எல்லாம் நினைக்காதீர்கள், உங்கள் பாதையில் தொடர்ந்து செல்லுங்கள். இந்தப் பாரத தேசமே உங்களுடன் இருக்கிறது.

மூன்று சமயக் குருமார்களும்:

(ஒன்றாகக் கையுயர்த்தி பிரார்த்திக்கின்றனர்)

ஓ… கடவுளே! நாங்கள் தெருக்களிலே சண்டையிட்டுக்கொள்கிறோம். ஆனால், இங்கே நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து, எங்களிடம் மிக அன்பாகவும், இனிமையாகவும் உள்ள இந்தப் புனிதமான துறைக்காக ஆசி வழங்குகிறோம். புனிதத்துறைவிகளாகிய எங்களிடம் கையூட்டு அளிப்பவர்களை ஆசிர்வதியும். அப்போதுதான் அவர்களிடத்தில் இருந்து இன்னும் அதிகம் கிடைக்கும்.

தாஸ்: நண்பர்களே, மேம்பாட்டுக் காலனியில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பான இந்த விசாரணை முழுவதிலும் ஒத்துழைக்கும் அவைருக்கும் நன்றி. (இந்திய அதிபரின் பக்கம் திரும்பி) அதிபர் அவர்களே இதுதொடர்பாக நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா ?

அதிபர்: எனது அரசு மிக நேர்மையானது. அதனால் அணுசக்தித்துறைக்காக இந்த ஆண்டு மேலும் 500 கோடி ரூபாய்களை ஒதுக்குகிறேன். இதற்காக நீங்கள் யாருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டியதில்லை… வழக்கம்போல இதற்கும் வரவுசெலவு அறிக்கை கிடையாது, கணக்குவழக்கு கிடையாது, நாடாளுமன்ற விவாதமும் கிடையவேகிடையாது.

காட்சி: ஐந்து

(மேம்பாட்டுக் காலனியில் புற்றுநோய் பிரச்சினை கைமீறிப் போய்விட்டது. காளியம்மாவின் குடும்பம் மிகக்கொடும் வறுமையிலும், துயரத்திலும், வேதனையிலும் மூழ்கிவிட்டது. அவரது மகள் அழகம்மாளின் மற்றொரு மார்பகமும் அறுவைச்சிகிச்சையில் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டது. அவர் வலியோடு கட்டிலோடு கிடக்கிறார். அவருக்கு அருகே சிறுவன் பாலன், அவனுடைய உடல்நிலையும் மேலும் மோசமாகிவிட்டது. அக்குழந்தையின் உடல் எப்போதுமே வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருக்கிறது, அவ்வப்போது வேதனையால் கீச்சொலி எழுப்புகிறான்.)

காளியம்மா: (படுக்கையிலிருக்கும் இருவரினருகிலும் அமர்ந்துகொண்டு ஓங்கிய குரலில் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்) அழாதிய மக்கா… அழாதிய…. எனி என்ன செய்யியதுக்குண்ணு ஒண்ணுந்தெரியாத்த பாவியாய்ட்டனே…. இப்பிடி ஏம்புள்ளய வேதனைல துடிக்கியத உசுரோட இருந்து பாக்கியனே…

ஒனக்கு அழகம்மாண்ணு பேரு வெச்சனே… எஞ் செல்ல மவளே… இப்பிடி அறுத்துப்போட்ட கோழியாட்டு ஒன்னய பாக்கியனே… ராசாத்தி மாதிரி ஒன்ன வளத்தேனே… இப்பிடி அநியாயமா சாவக்குடுக்கியதுக்கா… ? ஒன்ன நாம் ஒருக்காக்கூட அடிச்சது கெடையாதே ஏஞ்செல்லமே… இப்பிடி நீ வேதனயில கெடந்து துடிக்கியத பாக்கியனே நாம்…. பாவிமட்ட….

நீ ஒரு கட்டெறும்பக்கூட நசுக்கமாட்டியே… எம் மொவளே… எதுத்து ஒரு சொல்லுக்கு மறு சொல்லு சொல்லமாட்டியே… எங்கொலக்கொளுந்தே… மாப்பிள்ள உட்டுட்டாம்…. சாதிசனம் உட்டுட்டு… சக்காரும் கவனிக்கலியே… கடவுள் தந்த தங்க வரம் இப்பிடிப்போவே….

(பாலன் திடாரென்று புலம்புகிறான்) அழாத மக்கா… எஞ்சின்னச் செல்லமே அழாத மக்கா… அம்மயும் வலியிலதாம் மக்கா துடிச்சிக்கிட்டுருக்கா… ஒம் அழுவ தாங்கமாட்டா மக்கா….

ஒன்னப்பத்தி நா எப்பிடியெல்லாம் கனவு கண்டேம் எம் மக்கா… வலிக்கி குளுசகூட வாங்க வழியத்து எம் ஈரக்கொல துடிக்குவே எம்மக்கா…

(பாலனை தோளில் போட்டுக்கொள்கிறார்) எம்மா… தேவி… எங்கள யாங்கடவுளே இப்பிடி சோதிக்கியா… நான் எங்க போவேம் ? யாருக்கிட்ட ஒதவி கேப்பேம்… ?

சொந்தக்காரவிய எல்லாம் ஊர உட்டுப் போய்ட்டாவ… அக்கம் பக்கத்திலியும் ஆளு சனமில்ல… சக்காரயும் எங்கியிம் காணல… கடவுளும் காணாமப் போச்சே…

இங்க என்ன நடக்குவுண்ணு ஒரு எழவும் தெரியலியே… என்ன இதுண்ணு யாராவுது சொல்லுங்கையா… இங்க என்னய்யா நடக்குவு ? எம் புள்ளய எல்லாம் ஏம்யா இந்த கெதிக்கி ஆளாச்சி… ?

அவுனுவ சொல்லியானுவ சாப்பாடெல்லாம் வெசமாயிட்டாம்… தண்ணிகூட அப்பிடித்தானாம்… காத்து, மழ எல்லாத்திலியும் அந்த வெசம் இருக்குவாம்…. நெலம், பயிரு, பசுமாடு எல்லாமே மக்களக் கொல்லுவாம்… எங்கியாவுது முந்தி இப்பிடி முட்டாத்தனமா நடந்தது உண்டுமா ? நாங் கேட்டதுமில்ல கண்டதுமில்லியே… எல்லா அலங்கோலமும் இங்க நடக்குவே… எங்கியாவுது நெலம் மனுசனக் கொல்லுமா ? எந்தத் தாயாவுது தம் புள்ளயளஸ்ரீ கொல்லுவாளா… ?

ஏதோ பெரிய மாயப் பிசாசுதாம் பூமிய வேட்டயாடுவோ ?… எஞ்சாமி காடன், மாடன், காளி எல்லாம் தோத்துப்போய்ட்டாவுளோ… இந்தப் பெரிய பிசாசுவளுக்கிட்ட பாவம்… இந்த சின்ன, ஏழச் சாமியளால என்னத்த செய்யமுடியிம் ? (அணுஉலை புகைபோக்கியை நோக்கித் திரும்புகிறார்) ஆணு, பொண்ணு, கொழந்த குட்டிய, ஆடுமாடுவ எல்லாத்தியிம்… கொறச்ச நீ எங்க காவச் சாமிக்க சக்தியயும் கொறச்சிப்புட்டியே…

எனக்குத் தெரியிம்… எனக்குத் தெரியிம்… நீ வேல தந்தா, சந்தோசத்தக் குடுத்தா, எல்லாருக்கும் நல்ல வாழ்க்கய குடுத்தாண்ணு நெனச்சோம்… ஆனா… சாவையிம் வேதனயயிந்தான எங்குளுக்கு தந்துருக்கா…

என்னப் பாக்க வச்சி எம் புள்ளயளுக்க உசுரக் குடிக்கியே… அட நாசம் புடிச்ச எழவே… ஒன்ன உடமாட்டேம்… ஒன்ன இப்பிடியே உடமாட்டேம்… ஒன்னக் கொல்லாம உடமாட்டேம்… கொல்லாம உடமாட்டேம்… எனக்கு எம் புள்ளய வேணம்… எம் புள்ளய… (கற்களைத் தூக்கி கண்டபடி எறிந்தபடி மயங்கி விழுகிறார்)

(இரண்டு நாட்களுக்குப் பிறகு, 2015 ஏப்பிரல் 26ஆம் நாள், காலன்குளம் அணுஉலையினுள்ளும் வெளியிலும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அபாயச் சங்குகள் ஓலமிடுகின்றன, ஒலிபெருக்கிகள் பிளிறுகின்றன, ஹெலிகாப்டர்கள் வட்டமிடுகின்றன, வானொலிகளும் தொலைக்காட்சிகளும் அலறுகின்றன காலன்குளம் அணுஉலையில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கின்றன.

என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை கடலில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பார்களோ ?. என்ன நடந்திருக்கும், எப்படி நடந்திருக்கும் ?. யாருக்கும் தெரியவில்லை, யாரும் சொல்லவுமில்லை. ஆனால், ஏதோ மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. அதோடு காலன்குளத்தில் இருந்து 30 கி.மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள மக்கள் அனைவரும் மிகமிக அவசரமாக வெளியேற்றப்பட்டுவருகின்றனர். ஆணையிடும், ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு மையம் ஏதும் இல்லை, யாரிடமிருந்தும் தெளிவான விவரங்கள் தரப்படவில்லை, எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது.

கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தவர்கள் தமக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, தம் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்துக்கொண்டு வெளியேறினர். துணிமணிகள் நிரம்பிய சாக்கு மூட்டைகள், குழந்தைகள், முதியோர் போன்றோரோடு சாலைகள் நெடுகிலும் கிராம மக்கள் நிற்கின்றனர். ஆனால், யாருக்குமே அங்கிருந்து எப்படி வெளியேறுவது என்பது குறித்து ஏதும் தெரியவில்லை.

நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் அதிகாரபூர்வ அறிவித்தல்களே தெளிவற்ற வகையில் வெளியிடப்பட்டன. இந்தியாவின் தென் முனையில் உள்ள மக்களில் நிலைமைதான் பொறியில் சிக்கிய எலிபோல் ஆயிற்று.

“கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அணுஉலையை நோக்கி ஓடுங்கள்!, கேரளா செல்வதற்காக மேற்கு நோக்கி ஓடாதீர்கள்! ஏனென்றால், மேற்கு நோக்கி வீசுகிற ஈரக்காற்றில் பெருமளவில் கதிர்வீச்சு கலந்திருப்பதால் நீங்கள் அதனால் பாதிக்கப்படலாம்”, “கன்னியாகுமரி மாவட்ட மக்களே, தயவுசெய்து கடலில் குதிக்காதீர்கள்!. அக்கடல் மிக ஆழமானது, பாறைகள் நிறைந்தது. கரையோரமெங்கும் பாறைகள் நிறைந்திருக்கின்றன. எனவே, நீங்கள் எளிதாக நீந்த முடியாது, அதோடு, அணுஉலையிலிருந்து பெருமளவு கதிரியக்க நீரும் கடலில் கலந்துகொண்டிருக்கிறது”.

ஒருபுறம் ஊரைவிட்டு வெளியேறுபவர்கள், மற்றொருபுறம் ஏதுமறியாது சதுப்பு நிலத்தில் சிக்கியதைப்போலத் தவிக்கும் மக்கள் என்று அப்பகுதியே ஒரு போர்க்களஹ் போல காணப்படுகிறது.

மக்களுக்கு எதிரி யாரென்று தெரிந்தால், அவர்கள் இரக்கமற்ற அவனைக் கண்டால் கழுத்தை நெரித்தே கொன்றுவிடுவார்கள். ஆனால், மக்களால் இந்த எதிரியைப் பார்க்கவும் முடியாது, வெல்லவும் முடியாது.

அடர் மஞ்சள் நிற முகமூடிகள் அணிந்த மீட்புப் பணியாள˜கள் மேம்பாட்டுக் காலனியில் இறங்கி ஒவ்வொருவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். வீடுவீடாகச் சென்ற அவர்கள் காளியம்மாவின் வீட்டிற்கும் வருகிறார்கள்.)

மீட்புப் பணியாளர்:

வீட்டுக்குள்ள யாரு… ? வெளிய வாங்க… ஒடன இந்த எடத்த உட்டு போங்க…

காளியம்மா: (கல்லாய் அமர்ந்திருக்கிறார்) போவதுக்கா.. ? நானா ?… எங்க போவ ? இப்பிடி எம் புள்ளயள உட்டுட்டு எங்ஙன போவ ?

பணியாளர்: அம்மா, தயவுசெஞ்சு சொல்றத புரிஞ்சுக்குங்க. இனி நாம இங்க பாதுகாப்பா இருக்கமுடியாது.

காளியம்மா: இப்பமட்டும் இங்க யாராவுது பாதுகாப்பா இருக்காவுளா ? சொல்லு பாப்பம் ?

பணியாளர்: தயவுசெய்து இப்ப வெளிய வாங்க. அவங்க விரும்புனா இந்த இரண்டு பேரையும் நாங்க டிரக்குக்கு தூக்கிட்டு வாறோம்.

காளியம்மா: ஒனக்கு வேணுமா ? நாங்கேட்டனா ? அவியள எங்ஙன தூக்கிட்டுப்போவிய ? அவிய முந்தி இருந்தாவுளே அது மாதிரி நல்ல வாழ்க்கைக்கி ஒங்களால தூக்கிக்கிட்டுப் போவமுடியிமா ?

பணியாளர்: முட்டாத்தனமா பேசாத பொம்பிள. நீ வராண்டாம். எல்லாங் கெடந்து இங்கியே சாவுங்க.

காளியம்மா: ஆமால.. ஆமா… இது எனக்க மண்ணாக்கும்… எம் புள்ளைய, எங்கனவு, எங்க வாழ்க்க எல்லாம் நாசமாப் பெய்யாச்சே (கட்டுப்படுத்த இயலாமல் அழுகிறார்).

இல்லல.. இல்ல… எல்லாம் அழியலல… என்னம் ஒண்ணு பாதுகாப்பா இருக்குவு… நீங்க எல்லாம் அத அழிக்கமுடியாதுல… முடியாது… ஒங்களால தொடக்கூட முடியாதுல… அதுக்கக்கிட்ட போவக்கூட முடியாதுல…. ஒங்களால…

(இப்படி ஓலமிட்டுக்கொண்டே பித்துப்பிடித்தவரைப்போல அறையைச் சுற்றிச்சுற்றி வருகிறார். அவர்களுக்கு ஏதோ நடக்கப்போவது போல இருந்தது. குழந்தை பாலன் உச்ச குரலில் அலறினான், மார்புகளற்ற அழகம்மாள் தன் நெஞ்சை உயர்த்தி “அம்மா… அம்மா…” என்று வீறிட்டார். குழப்பமடைந்த மீட்புப் பணியாளர்கள் அவசரமாக வீட்டைவிட்டு வெளியே ஓடினர். ஒரு பாதுகாப்பான தொலைவுக்கு வந்த பின்னர் அவர்கள் நின்று திரும்பிப் பார்த்தனர். அந்தக் கூரைவீடு பற்றி எரிந்துகொண்டிருந்தது…. அந்த மூன்று மனித உயிர்களுடனும். அக்கணத்தில் எங்கும் நெருப்பே நிறைந்திருப்பதுபோல தோன்றியது. கொழுந்துவிட்டெரியும் தீயின் பின்னணியில் அணுசக்தி அம்மன் ஜொலித்துக்கொண்டிருந்தாள்.)

திரை

Series Navigation