அடகு

This entry is part [part not set] of 14 in the series 20010415_Issue

காஞ்சனா தாமோதரன்


செல்வி கொண்டு வந்த தவலைப் பானையைச் செல்லத்தாயம்மாள் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள். சில இடங்களில் சப்பி நசுங்கியிருந்தது. ஒரு பக்கத்தில் ‘மா.செ. ‘ என்று கொஞ்சம் கோணலாய் வெட்டியிருந்தது. விளிம்பு பித்தளை விட்டுப்போய் இளித்தது. உள்ளே ஈயப்பூச்சு தேய்ஞ்சிருந்தது. பானையைத் தள்ளி வைத்தாள். வெற்றிலைச் செல்லத்தைத் தன் பக்கம் இழுத்தாள். உள்ளே இருந்ததைப் பார்ப்பதாகப் பாவலா செய்கிறாளோ. செல்விக்கு உடம்பு ன்னும் கொஞ்சம் கூனிக் குறுகிற்று. அவளை விட அந்த வெற்றிலைச் செல்லம் பெரிசுதான் போல. வெங்கலத்தில் நல்ல பூ வேலைப்பாடு. உள்ளே வெற்றிலை, சீவல் பாக்கு, ரோஸ் நிறத்தில் வாசனைச் சுண்ணாம்பு. செல்வியை விட அது உசத்திதான். செல்லத்தாயம்மாள் வெற்றிலை மடிப்பு செய்ய ஆரம்பித்தாள்.

செல்வி சுற்றிலும் பார்த்தாள். முற்றத்து ஓலைத்தடுக்கில் மோர்வற்றல் தங்க மரவட்டையாய்ச் சுருங்கி சுருண்டிருந்தது. எதிர்த்த திண்ணையில் வெளிச்சத்தை மறைக்கும் நெல் மூட்டை அடுக்கு. அதைச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் அந்துப் பூச்சிகள். கோணிச்சாக்கும் நெல்லும் சேர்ந்த ஒரு வாசம் அடித்தது. நெல்லுச்சோறு தின்று எவ்வளவோ நாள் ஆயிற்று. போன அறுப்புக் கதிரடிப்பு முடிஞ்சதும் களத்து மேட்டில் தர்மத்துக்கு வட்டிலில் அளந்து போட்ட நெல்தான். அதற்கப்புறம் நெல்லை எங்கே கண்ணால் பார்க்க முடிஞ்சுது.

செல்லத்தாயம்மாள் வெற்றிலைச் செல்லத்தைச் சத்தமாய் மூடினாள். வெற்றிலையை வாய்க்குள் அடக்கிக் கொண்டு வீட்டுக்குள் திரும்பி மீனா ‘க்காவைக் கூப்பிட்டாள். மீனா ‘க்கா அடகுக் கணக்குப் புத்தகத்தோடு வந்தாள். செல்லத்தாயம்மாள் சொல்லச் சொல்ல எழுதினாள். தேதி. இன்னார் என்கிற விவரம். சாமான் விவரம். செல்வி மீனா ‘க்காவைச் சாடையாய் நோட்டம் விட்டாள். அவளை விட ஒரு வருசம்தான் வயசில் பெரியவள் மீனா ‘க்கா. பார்க்க ரொம்ப ரொம்ப பெரியவளாய்த் தெரியும். நெட்டையாய், பூசினாற் போல, பளபளன்னு புளி தேய்த்து விளக்கின பித்தளைப் பாத்திரம் கணக்காய். நிதம் நெல்லுச்சோறு தின்று வளர்கிற உடம்பு. ‘சரக் சரக் ‘ பாவாடை தாவணி சத்தத்தோடு அவள் நடந்து வருகிறதே கண்ணைப் பறிக்கும்.

பின்னே, வற்றின நோஞ்சான் முருங்கைக்காய் செல்வி மாதிரியா. மீனா ‘க்கா போன வருசமே சடங்காகி விட்டாள். பந்தலும் வாழைமரமும் லெளட்ஸ்பீக்கர் சினிமாப்பாட்டும் ஊர்ப்பந்தியுமாய் கல்யாணம் கணக்காய்ச் சடங்கு. செல்விக்கு இன்னும் ஒன்றும் ஆகவில்லை. ஆகாதோ. மேல வீட்டு ராமக்கா மாதிரி. அவளுக்குக் கொஞ்சம் பயம்தான். ‘இந்தாட்டா ரூவா. கூறு கெட்டதனமா அங்கன இங்கன வாய் பார்த்துக்கிட்டு நிக்காத. நேரா உங்கம்மைகிட்டே குடுத்துரு என்ன. ‘ செல்லத்தாயம்மாள் கொஞ்சம் கூடுதலாய்ப் பணம் கொடுத்திருக்கிறாளோ. இதையும் திருப்பப் போகிறதில்லைன்னு தெரியும் போல.

செல்வி பணத்தைப் பத்திரமாய் முடிந்து கொண்டு நடந்தாள். ஆறு சுருங்கி ஓடிற்று. எல்லார் குளியலும் முடிந்து ஆற்றங்கரை வெறிச்சோடிக் கிடந்தது. கரண்டை அளவுத் தண்ணீரைக் காலால் அளைந்தபடி கரையோரமாய் நடந்தாள். ஐரை மீன் கூட்டம் நீட்ட நீட்டமாய் நெல்லுச்சோற்றுப் பருக்கை கணக்காய் அலைந்தது. நெல்லுச்சோறும் மீனுமாய்த் தின்றவள்தான் அவளும். அப்படியும் இருந்தோம் என்பதை நினைக்கையில் அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது. ஏதோ சினிமாப் படத்தில் இன்னொருத்தியின் நிழல் கணக்காய்.

ஒவ்வொரு புதன்கிழமையும் மீன்காரி வருவாள். செல்வி மீன்காரி பக்கத்தில் குத்த வைத்து, கூடைக்குள் உற்றுப் பார்ப்பாள். ஐஸ் மேல் பரத்திய வாழையிலையில் சீலாவும் வாழையும் சாளையுமாய் வாசம் அடிக்கும். சில நாளில் விலாங்கு மீன் கூட கூடைக்குள் கிடக்கும். கண் மூடாமல் குளிர்ந்து போய்க் கிடக்கும் மீனைப் பார்க்க செல்விக்குக் கொஞ்சம் பாவமாய் இருக்கும். எங்கேயோ நீந்தி விளையாடின மீன், அன்றைக்குச் செல்வி வயிற்றுக்கு.

மீன்காரி செல்விக்கு இரண்டு ஐஸ் கட்டி தருவாள். அதை வாயில் உதப்பினபடி அம்மை மீனைத் துண்டு போடுவதைப் பார்ப்பாள். செதிலைச் சுரண்டிக் கழுவி வழுவழுக்கும் மீன். பலகையில் உட்கார்ந்து அரிவாள்மணையில் மீனை அம்மை அறுப்பதே அழகுதான். எவ்வளவு நைசாய். மீனுக்கு வலிக்கக் கூடாது என்கிறது மாதிரி. அப்புறம் மண் உலைமூடியில் உப்பும் மஞ்சள் தூளும் மிளகாய்த் தூளும் நல்லெண்ணெயும் போட்டு விரவுகையில் அம்மையின் நீட்டக் கைவிரல் வாசமும் மீன் துண்டத்தில் அப்பிக் கொள்ளும். பச்சை மீன் துண்டங்களையும் மஞ்சளான அம்மையின் கைவிரல்களையும் ருசி பார்க்க ஆசை வரும். நாக்கு ஊறும். அம்மையின் கையைப் பிடித்து ழுத்து மோந்து பார்க்கையில் அம்மை சிரிப்பாள்.

அம்மையின் சிரிப்பும் தூரத்து நிழலாய்த்தான் போயிற்று.

ஆறு வளைந்து மூணாத்துப் பிரிச்சல் வந்தது. இரண்டு பிரிச்சலில் தண்ணீர் இல்லை. தண்ணீர் கோர யாரோ தோண்டின ஊற்று இன்னும் வற்றாமல். ஊற்று தோண்டுவது அவளுக்கும் பிடிக்கும். குபுக்கெனத் தண்ணீர் ஊறும் போது கரையில் ஆறே வந்து பொங்குகிறது போலத் தெரியும். ஆற்றை விட ஆற்றைப் பொத்திக் காப்பாற்றும் ஆற்றங்கரை பெரிசோ. கையால் மோந்து ரண்டு மடக்கு ஊற்றுத்தண்ணீர் குடித்தாள். ஆலமரத்து நிழலில் துணிதுவைக்கும் கல் மேல் ஒரு தேய்ந்த சோப்புச் சில்லு. எடுத்து ரூபாயோடு சேர்ந்து முடிந்து கொண்டாள். அம்மைக்கு. கல் மேல் உட்கார்ந்து கொண்டாள். மணல் வெதுவெதுப்புள் பாதத்தைப் புதைத்தாள். ஆற்று மணலுக்கும் கடல் மணலுக்கும் எவ்வளவு வித்தியாசம். கடல் மணலில் இன்னும் கூடவே ரகசியங்கள்.

திருச்செந்தூர்க் கடற்கரை மணல். ஊருக்கு பஸ் விட்ட புதிது. அப்பச்சி அவளையும் அம்மையையும் கோயிலுக்குப் பஸ்சில் கூட்டிக்கிட்டு போனாக. பஸ் கிளம்பவும் அவளுக்குள்ளே பாட்டு கிளம்பிற்று. உச்சிவகிடு கணக்காய் ஒற்றையடிப்பாதை வளைகிற செம்மண் தரிசுக்கு ஒரு பாட்டு. வாய்க்காலில் எருமையைக் குளிப்பாட்டிக் கொண்டு பஸ்சைப் பார்த்துக் கையாட்டும் பையன்களுக்கு இன்னொரு பாட்டு. கல்யாணச் சத்திரத்தைக் கடக்கையில் கேட்ட ரெண்டு வரிகள் ஞாபகப்படுத்தின பாட்டு. வெள்ளரிப் பிஞ்சைக் கடிக்கையில் கடக்கும் ரயில் பெட்டிகளை எண்ணுகையில் அதன் தாளத்துக்கு ஒரு பாட்டு. ‘பக் பக் ‘ கோழிகள் கூடைக்குள் இல்லையென கண்டக்டரிடம் சாமி சத்தியம் செய்யும் பாம்பட ஆச்சிக்கு ஒரு தனிப் பாட்டு. இப்படியே பஸ் பிரயாணம் முழுக்க ஊற்றாய்ப் பாட்டு பொங்கிற்று. பாட்டு எழுதுகிறவர்கள் எல்லாரும் அடிக்கடி பஸ்சில் போகிறவர்கள் போல.

கோயில் பெரிசு. நல்ல கூட்டம். கோயிலின் சந்தனக் ‘கசகச ‘விலிருந்து வெளியே வரவும் சில்லென அப்பின உப்புக் குளிர்ச்சி. கோயில்வாசல் யானை அர்ச்சனை ஓலைப்பெட்டியிலிருந்து அவள் கொடுத்த அரைத் தேங்காய் மூடியை வாங்கிப் பாகனிடம் கொடுத்தது. கும்பிட்டு நின்ற அவள் தலையில் தும்பிக்கை வைத்து ஆசீர்வாதம் பண்ண மறந்து போயிற்று. பாவம். நல்ல தூக்கக் கலக்கம் போல. கடற்கரை இருட்டில் கோபுரத்து எலெக்ட்ரிக் வேல் நீலமாய் மினுங்கிற்று. வெள்ளை நுரை கடலை அலை அலையாய் அடையாளம் காட்டிற்று. வாயில் மணல்புட்டு பிரசாதத்தின் இனிப்பு. அம்மை எலுமிச்சஞ்சோறு கிண்டியிருந்தாள். சோறு அன்றைக்கு இரட்டிப்பு ருசியாய் இருந்தது. ஊறுகாயாய்த் தொட்டுத் தின்ன எலுமிச்சை நிலா. உடைந்த சிப்பியை வைத்து அப்பச்சி அவளுடன் விளையாடின ‘கீச்சி கீச்சி தாம்பாளம் ‘. தூண் மண்டபக் கடையில் ஓலைப் பெட்டி நிரம்ப சில்லுக் கருப்பட்டி. கடைசி பஸ்சைப் பிடிக்க ஓட்டமும் நடையுமாய்ப் போக வேண்டியிருந்தது. ஓடுகிற அப்பச்சி தோளில் உட்கார்ந்து அண்ணாந்து பார்க்கையில் நட்சத்திரம் மொய்ச்சுக் கிடந்த வானத்தில் பறக்கிறது கணக்காய்ச் சுகம்.

திரும்பக் கிடைக்காத சுகம். திரும்பக் கிடைக்காது என்கிறது அப்போ எப்படித் தெரியும்.

அவளுக்குப் பசித்தது. எழும்பி நடந்தாள். கையில் துட்டு ருந்தும் ஏன் ஓடிப் போய் முக்குக்கடையில் சோறு வாங்கித் தின்ன மனசில்லை. வயிறு ஒரேயடியாய் ஒட்டியே போயிற்றோ. சாயங்காலம் அம்மை கையினாலேயே சோறு தின்னலாம். அவள் வடிக்கிற சோறின் ருசி தனி. பலசரக்குக் கடை சாய்பு, ‘என்ன செல்வி, செல்லத்தாயம்மாளைப் பார்த்துட்டு வர்றாப்பல ‘, என்று சிரித்தார். அம்மையை விசாரித்தார். தகப்பனில்லாத பெட்டைப் பிள்ளை என்கிற பரிதாபம் போல. ஒரு துண்டு நிலக்கடலை மிட்டாயைத் துட்டு வாங்காமல் கொடுத்தார். அதை வாயில் போட்டுக் கொண்டாள். பொதி கனத்தது. அரிசி. கத்தரிக்காய். புளி. தலைக்கு எண்ணெய். அம்மை பொரிக்கிற கத்தரிக்காய்க்குள்ளே மீன் பொரி ருசி எப்படித்தான் ஏறுமோ. அப்படியே கொஞ்சம் புளி கரைச்சு இரண்டு வெங்காயம் மிளகாய் அரிஞ்சு போட்டு புளிக்கூட்டும் வைக்கலாம். உப்பும் உறைப்புமாய்.

செல்வி கொஞ்சம் நடையை வீசிப் போட்டாள். அப்பச்சி ருந்தால் இப்படியா. சோற்றுக்கு அலர்ந்து போய். எண்ணெய் காணாத செம்பட்டைப் பரட்டையாய். ஒடிஞ்சு விழப் போகிற ஒல்லி ஓமக்குச்சியாய். அப்பச்சி ஏன் இப்படிச் செத்துப் போனாக. ‘வாவரசியா இருக்க வயசுல அறுத்துக்கிட்டு நிக்கியே தாயீ…… அந்த நாசமாப் போன டவுணு டாக்டரை நம்பாதியன்னு படிச்சு படிச்சு சொன்னாவளே எங்க வீட்டு ஐயா…… கேக்காம ப்டி மோசம் போவியளா…… எத்துவாளிப் பய டாக்டர் அந்த மருந்துக் கம்பேனி குடுக்குற பணத்துல கொழுத்துப் போயில்லா அலையுதான்…… ரூவாயக் காட்டி ஏமாத்தி உம் புருசனுக்கு மருந்து ஏத்தி எமலோகத்துக்கு அனுப்பிப்புட்டு கல்லுளிமங்கன் கணக்கா ருக்கான் பாரு……அந்தக் கம்பேனிக்கு மருந்து டெஷ்ட்டு நடத்த நம்ம ஊரு ஏழை பாழைதான் கிடச்சுதா…… அவுக ஊரிலயே அதெல்லாம் நடத்துனா என்னவாம்….. ‘ மச்சு வீட்டுக்காரம்மா ஒப்பாரியை நிறுத்தி நிறுத்தி ஒவ்வொண்ணா சொன்னது செல்விக்கு விளங்கவே இல்லை. டாக்டர் ஊசி போட்டால் சீக்காளி கூட பிழைப்பாகளே. சீக்கே இல்லாத அப்பச்சி எப்படி செத்துப் போனாகளாம்.

செல்வி பொதியைத் தலை மேல் வைத்தாள். வெயிலுக்கு நிழல். குறுகல் வரப்பில் நடக்க வசதி. வரப்பு வெடிப்பில் சின்னச் சின்ன ஊதாப்பூக்கள். சாயங்காலத்துக்குள் வாடிப் போகும். பாவம். அப்பச்சி போன பிறகு அம்மையும் வாடித்தான் போனாள். சிரிப்பு கிடையாது. அடிக்கடி அவளை அடிக்கிறதும் கிள்ளுறதுமாய். மூஞ்சியில் ஒரு கோவம். கோவம் இல்லை, ஒரு எரிச்சல். எரிச்சலும் இல்லையோ. பின்னே என்னது அது. எரிகிற தணல் கணக்காய். அம்மைக்கு அவளைப் பிடிக்கவே இல்லை.

இரண்டு நாளுக்கு முன்னால் பட்ட அடி இன்னும் எரிந்தது. அன்றைக்கு மாலைப்பதநீர் விற்கிறவன் தெருவுக்கு வந்திருந்தான். மண்கலயத்து அடியில் வெள்ளைச் சுண்ணாம்பு மேகமூட்டம். மேலே தெளிசலாய்ப் பதநீர். அவன் பனை ஓலையை வளைச்சு மடிச்சு எவ்வளவு நைசாய்ப் பட்டை செய்தான். துட்டு கொடுத்த பிள்ளைகளுக்குப் பட்டையில் பதநீர் ஊற்றிக் கொடுத்தான். கூட கொஞ்சம் துட்டு கொடுத்தால் ஒரு நுங்கைச் சீவி ரண்டு கண்ணையும் பெருவிரலால் கிள்ளிப் பதநீருக்குள் போட்டுக் கொடுத்தான். சுழியுள்ள பிள்ளைகளுக்கு மூணு கண் நுங்கு கிடைத்தது. பட்டையிலிருந்து பாதி கொட்டியும் கொட்டாமலுமாய்ப் பதநீர் குடிக்கும் பிள்ளைகளைப் பார்த்ததும் அவளுக்கும் ஆசை வராதா.

செல்வியும் அம்மையிடம் பதநீருக்குத் துட்டு கேட்டாள். உண்டு இல்லைன்னு சொல்லியிருக்கலாம்லா. ஒண்ணுமே சொல்லாமல் விசிறி மட்டையால் விளாசு விளாசுன்னு விளாசி விட்டாள் அம்மை. முதுகு. கால். நெஞ்சு. கை. மூஞ்சி. விசிறி உடைஞ்சே போயிற்று. உடைஞ்ச விசிறியும் கையுமாய் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அம்மை நின்றாள். அம்மன் கொடைச் சாமியாடி கணக்காய். செல்விக்கு வலியை விட பயம் அதிகமாயிற்று. ஈரக்குலை நடுங்கிற்று. சத்தம் போட்டு அழுதாள். பக்கத்து வீட்டு பாமா ‘த்தை ஓடி வந்தாள். ‘போனவன் போயாச்சு…இருக்கவா ஏன் இருக்கான்னு நெதம் இப்டிப் புள்ளைய போட்டு அடிக்கியா, பாதவத்தி….அரளிய அரச்சு ஊத்தி ஒரேயடியாய்க் கொன்னு போடேன்….அவன் கொள்ளிச் சூட்டுல ஈரக்கொல ஈரம் ஒனக்குமா வத்திப் போச்சு, பாவிமவளே…….. ‘ அவள் ஏச ஏச அம்மை பேச்சு மூச்சு காட்டாமல் இருந்தாள். பாமா ‘த்தை கொஞ்சம் எண்ணெய் காய்ச்சி ரத்தக்களறியாகிப் போன உடம்பெல்லாம் தடவி விட்டாள். காந்தி எரிஞ்சது. உள்ளுக்கும். விசும்பல் அடங்கினப்புறமும் ஈரக்குலையில் ஏதோ அடைத்தது. அப்பச்சிக்குப் பதில் நாம செத்திருக்கணும். அம்மை இப்படி ஆகியிருக்க மாட்டாள். இப்பவும் கண்ணில் நீர் முட்டித் தொண்டை கமறிற்று.

கிணற்றடி பம்பு செட் ஓடிக் கொண்டிருந்தது. செல்வி மோட்டார் ரூமுக்குள் பொதியை இறக்கி விட்டு, வெளித் தொட்டியில் முகம், கை கால் கழுவிக்கொண்டு வந்தாள். அதற்குள் பொதி மேல் பிள்ளையார் எறும்புச் சாரை. ஒவ்வொரு பொட்டலத்தையும் எடுத்து எறும்பைத் தட்டினாள். பொட்டலத்தைச் சுற்றியிருந்த அச்சுக்காகிதத்தை இன்னும் படிக்க முடிஞ்சுது. நல்ல காலம், படிச்ச எழுத்து இன்னும் மறக்காமல். அப்பச்சி இருந்தால் இப்போ அவள் பள்ளிக்கூடத்தில் இருப்பாள். அதுவும் ஸ்டெல்லா டாச்சர் வகுப்பில். டாச்சர் கஞ்சி போட்ட சேலை கட்டி பூப்போட்ட குடையைப் பிடிச்சு வரும்போதே அவளுக்கு அவுக வகுப்பில் படிக்க ஆசையாய் இருக்கும்.

இனி பள்ளிக்கூடமும் படிப்பும் கிடையாது. கஞ்சி போட்ட சேலை கட்டி பூப்போட்ட குடை பிடிச்சுப் போகிற டாச்சர் ஆகணும்னு நினைக்கக் கூட முடியாது. அவளும் அம்மை கூடச் சேர்ந்து பத்துப் பாத்திரம் தேய்ச்சு, அடிபம்பில் தண்ணீர் பிடிச்சுக் கொடுத்து, காட்டுக்குப் போய்ச் சுள்ளி பொறுக்கி, தெருவில் கிடக்கும் சாணியள்ளி வரட்டி தட்டி விற்று, பீடி சுற்றிக் கொடுத்து, இன்னும் நிறைய வேலை செய்தால்தான் வயிற்றுப்பாட்டைப் பார்க்க முடியும். இருந்துமே அன்றாடம் வேலை இருக்கிறது நிச்சயமில்லை. அப்பச்சி அண்ணார் அவுக ஊருக்கு வரச் சொன்னாக. அவுக வீட்டிலேயே அவள் நிற்கலாமாம். செல்வி தீக்குச்சிக்கு மருந்து வைச்சு வயிற்றுக்கு வழி பண்ணலாமாம்.

எல்லாம் வயிற்றுக்காகத்தானா. படிச்சு, கஞ்சி போட்ட சேலை கட்டி, பூப்போட்ட குடை பிடிச்சுப் போய், நாலு பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறதும் வயிற்றுக்காகத்தானா. இப்போ அப்பச்சி இல்லாதது பெரிசாய்த் தெரிகிறது கூட அதனால்தானா. அம்மைக்கும் அப்படித்தானா.

வாழையிலைக் காற்றில் முறுக்கு சுடும் வாடை வந்தது. பக்கத்தில் எங்கேயோ நாகப்பாம்பு. அவள் பொதியைக் கையில் எடுத்துக் கொண்டாள். வழக்கம் போல் மச்சு வீட்டு வைக்கோல் படப்பில் புரண்டு விளையாடாமல், விறுவிறுன்னு வீட்டைப் பார்த்து நடந்தாள். சோறாக்க அம்மைக்காகக் காத்திருக்க வேண்டாம். சுள்ளியைத் திணித்து பெரிய அடுப்பில் உலை ஏற்றினாள். புடையடுப்பில் கத்தரிக்காய் பொரித்தாள். கூட்டுக்குப் புளி நனையப் போட்டாள். சோற்றை வடிக்கவும் அம்மை வரவும் சரியாய் இருந்தது.

சுள்ளிக்கட்டைப் போட்டு வரும் வழியில் அம்மை வாய்க்காலில் குளித்திருந்தாள். சோறு வடிச்ச கஞ்சியில் உப்பு போட்டு வட்டிலை அம்மையிடம் நீட்டினாள். பேசாமல் இரண்டு பேரும் கஞ்சி குடிக்கையில் ஒண்ணுமே மாறாதது கணக்காய்ஸ..அப்பச்சி இன்னும் இருக்கிறது கணக்காய். அம்மையின் மூஞ்சியில் எப்போதும் இருக்கும் தணல் அமைஞ்சிருந்தது. அடகு வைச்சு நெல்லுச்சோறாக்கின நாளெல்லாம் அம்மை அமைதியாய்த்தான் இருப்பாள்.

இனி அடகு வைக்க வேறு பாத்திர பண்டத்துக்கு எங்கே போக. ‘என்னையும் ஒன்னையுந்தான் அடவு வைக்கணும். ‘ அம்மை நேற்று எரிஞ்சு விழுந்தது ஞாபகம் வந்தது. தீக்குச்சி ஊருக்கு அவள் அடுத்த வாரம் போகிறதாக அம்மைகிட்டே சொன்னாள். புளிக்கூட்டுக்கு வெங்காயம் அரிய ஆரம்பித்தாள். அம்மைக்குக் கண் கரித்தது.

‘முல்லை ‘ (வாஷிங்டன்)

டிசெம்பர் 2000

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்