எஸ்.வி.வி. என்னும் எஸ்.வி.விஜயராகவாச்சாரியார்

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

வெங்கட் சாமிநாதன்.


“அந்நாட்களில், நாம் நம் மனைவியரை நாமே தேர்ந்துகொள்வதில்லை. நம் முன் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவ்வளவே. ஏன் இது பற்றி யாரும் கவலைப்படவேண்டும்?. நாம் நம் மற்ற உறவினர் யாரையாவது இவர் வேண்டும், அவர் வேண்டாம் என்று பொறுக்கிக் கொண்டோமா? இல்லையே. நாம் நம் அப்பாக்களையும் அம்மாக்களையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், மாமாக்களையும் அத்தைமார்களையும் பொறுக்கியா வைத்துக் கொண்டோம்? அவர்கள் நம் விருப்பத்தையோ சம்மதத்தையோ கேட்காமலேயே நமக்கு உறவினராக வந்து வாய்த்துவிடுகிறார்கள். நாமும் அப்படியே இவர்கள் தான் நமக்கு என்று ஏற்று, அவர்களோடு அன்போடும், நட்புணர்வோடும் வாழ்ந்து விடுகிறோம். உங்கள் சகோதரிக்கு ஒரு குழந்தை, அது ஆணோ, பெண்ணோ பிறக்கிறது. அதற்கு நீங்கள் மாமாவாகும் கட்டாயத்துக்கு ஆளாகிறீர்கள். அந்த நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து அக்குழந்தை பிறந்த க்ஷணத்திலிருந்து உங்கள் மாமா பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு செல்ல மாமாவாகவே ஆகிவிடுகிறீர்கள்.

உறவினர்களை விட்டு விட்டாலும், மற்ற யாரைத் தான் நாம் இப்படிப்பட்டவர் தான் நமக்கு வேண்டும் என்று தேர்ந்துகொள்கிறோமா என்றால் அதுவும் நம் கையில் இருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக, சின்ன வயசில், குப்பு ராவ் எனக்கு வாத்தியாராக வந்து வாய்த்தாரே, அது என் இஷ்டத்திற்கு விடப்பட்டிருந்தால், கட்டாயம் அவரை நான் வாத்தியாராகக் கொண்டிருந்திருக்க மாட்டேன். அப்படி அது என் இஷ்டத்திற்கு விடப்படாததால், எனக்கு அறவே பிடிக்காவிட்டாலும், குப்பு ராவ் தான் எனக்கு வாத்தியாரானார். ”

மிகவும் சத்தியமான வார்த்தைகள். இதில் தான் விவேகமும் இருக்கிறது. இல்லையா? அப்படியிருக்க நாம் ஏன் நமது பழம் சம்பிரதாயங்களை சந்தேகத்தோடும் வெறுப்போடும் பார்க்கிறோம்? நம் பெரியவர்கள் ஏன் நமக்கு ஏதோ பழம் பஞ்சாங்கங்களாகத் தோன்றுகிறார்கள்?

இவர்தான் 1880-ல் பிறந்த எஸ்.வி.வி. என்று அறியப்பட்ட எஸ்.வி.விஜயராகவாச்சாரியார். அவர் ஒரு வழக்கறிஞர். 1920-களிலும், 30-களிலும், ஹிந்து பத்திரிகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாது ஒரு பத்தி எழுதி வந்தார். அவர் நகைச்சுவையாக எழுதுபவர் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவரது கேலியும் கிண்டலுமான பேச்சையும் சுபாவத்தையும் கண்டு ரசித்த அவரது வக்கீல் சகாக்களும் மற்றஅன்பர்களும், பெரியவர்களும் அவரை எழுதும்படி தூண்டவே அவர் எழுதத் தொடங்கினார். Everyman’s Review-வில் வெளியான ‘An Elephant’s creed in Court’ தான் அவரது முதல் எழுத்து. அப்போது அவருக்கு வயது நாற்பதைத் தாண்டியாயிற்று. இப்படி ஒரு சில வெளியான பிறகு, ஹிந்து பத்திரிகையில் அவருக்கு என ஒரு முழு பத்தி ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரது நகைச்சுவைப் பத்திகள் வரத் தொடங்கின. An Elephant’s creed in court” என்ற அந்த முதல் கட்டுரையே, எஸ்.வி.வி. என்னும் மனிதரைப் பற்றியும் அவரது எழுத்தின் குணத்தைப் பற்றியும் நிறையச் சொல்லும். அது வைஷ்ணவர்களின் இரண்டு பிரிவுகள் உண்டல்லவா, வடகலை, தென்கலை என்று.? அவர்கள் தம் நெற்றியில் தீட்டிக்கொள்ளும் நாமங்களிலும் இரண்டு வகைகள் உண்டல்லவா, தென்கலை நாமம், வடகலை நாமம் என்று. அவர்கள் அடையாளமே அந்த நாமத்தில் இருப்பதால், கோவில் யானைக்கு எந்த நாமம் சாத்துவது? வடகலை நாமமா, தென் கலை நாமமா? என்பது தான் பிரசினை. முதலில் முன்சீப் கோர்ட்டில் ஆரம்பித்த அந்த வழக்கு பின்னர் பூதாகரமாக வளர்ந்து, ஹைகோர்ட் வரை வருஷக்கணக்கில் இழுத்துக் கொண்டு போகிறது. கோர்ட்டில் யானைக்கு வடகலை நாமம் சாத்தலாம் என்று தீர்ப்பு சொல்லப்பட்டால், மற்ற தரப்பு யானைக்கு கோர்ட்டின் தீர்ப்புப்படி வட கலை நாமம் சாத்தி, அதற்கு மேல் தென் கலை நாமம் தைத்த வெல்வெட் முக படாமை யானையின் முகத்தில் தொங்கவிடும். இந்த தந்திரத்தை எதிர்த்து மறுபடியும் வழக்கு தொடரப்படும் கீழ்க்கோர்ட்டிலிருந்து. கடைசியில் ஏதோ ஒரு தரப்புக்கு வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வரும். ஆனால், இதற்குள் யானை செத்துப் போகும். கோவிலுக்கு புதிதாக ஒரு யானை வரும். வழக்கில் தோற்ற தரப்பு, கோர்ட்டின் தீர்ப்பு செத்துப் போன பழைய யானைக்குத் தான். இந்த புதிய யானைக்கல்ல என்று மறுபடியும் வழக்காடுவதற்குத் தயாரானது.

நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் இந்த முதல் நகைச்சுவைக் கட்டுரையே, எஸ்.வி.வி.யின் சுபாவத்திற்கும், அவரது எழுத்துக்கும் முழு அடையாளம் காட்டும் எழுத்தாகியது. எஸ்.வி.வியும் வக்கீல் தொழில் பார்ப்பவர்தாம் என்பதையும், அவர் ஒரு பக்தி நிறைந்தவர், வைஷ்ணவ ஆசார சீலர் என்பதையும், பழமைப் போக்கில் ஆழ்ந்தவர் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வது நல்லது. அப்படி இருந்த போதிலும் அவர் எழுத்தில், எஸ்.வி.வியின் ஆளுமை பற்றிய மேற்சொன்ன ஒவ்வொரு அம்சமும் மிகுந்த கேலிக்குள்ளாகிறது. இந்த குணங்கள் அவ்வளவின் கோணல்களையும் கேலி செய்வதில் அவருக்கு எவ்வித தயக்கமும் இருக்கவில்லை. அத்துடன் இன்னொன்றும் சொல்லவேண்டும். அவர் எழுத்தில் வரும் எவரைப் பற்றிய சித்தரிப்பிலுமோ, அல்லது சம்பவங்களை அவர் நமக்கு விவரிக்கும் முறையிலுமோ படிக்கும் நமக்கு சிரிப்பூட்ட வேண்டுமென்பதற்காக யதார்த்தத்தை மீறி அவர்களைக் கோமாளிகளாகவோ, சம்பவங்களைத் திரித்தோ எழுதியுள்ளதாகச் சொல்ல முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பார்க்கிறோமோ அவ்வாறே அவை பற்றி அவர் எழுதுகிறார், இந்த கோவில் யானை நாமம் பற்றிய விவரங்களை எஸ்.வி.வி. எழுத நாம் படிக்கும் போது இது மிகவும் கோமாளித்தனமான காரியமாக நமக்குப் படக்கூடும். ஆனால் இந்த சம்பவமும், அது பற்றிய வழக்காடலும் மிகப் பழமையான, உண்மைல் நடந்த சண்டை. மிகத் தீவிரமாக, ஒவ்வொரு தரப்பும் தன் கட்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வழக்காடப்பட்ட சண்டை. தலைமுறை தலைமுறையாக, நூற்றாண்டுகளாக தொடர்ந்து வழக்காடப்பட்ட ஒன்று. எஸ்.வி.வியின் நகைச்சுவைக் கட்டுரைத் தொகுப்பு (‘Soap Bubbles and more Soap Bubbles’ – சோப் நீர்க்குமிழிகள், இன்னும் சோப் நீர்க்குமிழிகள்)- க்கு தாம் எழுதியுள்ள முன்னுரையில் கே.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார் சொல்கிறார் “1754-லேயே செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் கவர்னர், ‘இந்த வடகலை-தென்கலை தகராறு பெரிதாகக் கொழுந்துவிட்டெரியும் மிக தீவிர பிரசினையாகி அதைத் தணித்துத் தீர்க்கவேண்டிய ஒன்றாகிவிட்டது’ என்று தன் ஆவணம் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்”. இந்தப் பதிவு நாம் இதன் சரித்திரத்தைப் பின் நோக்கிச் சென்று பார்க்கும் போது கிடைப்பது. மாறாக நாம் முன்னோக்கிச் சென்று பார்ப்போமானால், இப்பிரச்சினை இன்னமும் தீராத ஒன்றாகத் தொடர்வதைப் பார்க்கலாம். ஸ்ரீனிவாச அய்யங்கார் மேற்கோளையே தொடர்ந்தால், அவர் சொல்கிறார். “காலமாகிவிட்ட என் ஒன்றுவிட்ட சகோதரர், சென்னை அட்வகேட் வி.ராகவாச்சாரி, தான் எடுத்துக் கொண்ட வழக்கு ஒன்றை கோர்ட்டில் வாதாடும்போது, எஸ்.வி.வி.யின் இந்த யானைக்கு எந்த நாமம் சாத்துவது என்னும் கதையை எடுத்துக்காட்டி அந்த வழக்கை வென்றதாகச் சொல்லியிருக்கிறார்”. இத்தோடு இந்த பிரச்சினை முடிந்தது என்றோ, இத்தகைய வழக்கு எதுவும் தென்னிந்திய கோர்ட் எதிலும் இப்போது நிலுவையில் இல்லை என்று நிச்சயமாகச் சொல்லிவிடமுடியாது.

வெகு தீவிரமாக நூற்றுக்கணக்கான வருஷங்களாகத் தொடர்ந்து நாம் சண்டையிட்டு வந்தது, பார்க்கப் போனால், உண்மையில் கேலிக்கூத்தும் சிரிப்புக்கிடமுமான விஷயம் தான் என்பது தெரியும், அதைப் பார்க்க மட்டும் கண்கள் நமக்கு இருக்குமானால். இது தென்னிந்தியாவின் சில மதத்தவர்களுக்கே உரிய ஒரு கோணல் என்று சிலர் வாதிக்கக் கூடும். சரி. அப்படியே இருக்கட்டும். நாம் தினமும் பார்க்கும் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வெளிவரும் ஆயிரக்கணக்கான கல்யாண விளம்பரங்களையே பார்க்கலாம். இவற்றை நாம் வெகு சகஜமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இது அப்படி ஒன்றும் லேசாக ஒரு சிரிப்பைச் சிரித்துவிட்டு உதறிவிடக்கூடிய சமாச்சாரம் இல்லை. மிக தீவிரமான பிரச்சினை, எல்லோருக்கும் தான். சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும், இதற்கு விளம்பரம் கொடுக்கும் பத்திரிகைகளுக்கும் தான். இதை எஸ்.வி.வி. அவர் காலத்தில், அதாவது 1920களில் எப்படிப் பார்த்தார் என்று பார்க்கலாமா? அப்போது கூட இந்த விளம்பர நடைமுறை அதன் ஆரம்பக் கட்டத்தில் தான் இருந்தது. இதோ எஸ்.வி.வியே சொல்லட்டும்:

“தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவதைவிட ஒரு மனிதனை முற்றிலுமாக நிலை குலையச் செய்யும் இன்னொரு விஷயம் கிடையாது. மாப்பிள்ளைகள் என்னவோ உலகத்தில் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கிறார்கள் தான். அப்படியில்லை என்றால், நம் பெண்களில் நிறையப் பேர் கல்யாணமாகாது குமரிகளாகவே இருந்திருப்பார்கள். வாஸ்தவத்தில் நம் ஹிந்து சமூகத்தில் பிறந்த எந்த பெண்ணுக்கும் அப்படி நேர்ந்தது இல்லை. ஒவ்வொரு சேஷிக்கும் எங்கேயோ ஒரு சேஷனுக்கும் கல்யாணம் நடந்து விடுகிறது. அதன் பிறகு அவர்கள் எப்படியோ காலத்தை ஒட்டத் தான் செய்கிறார்கள். ஆனால், கஷ்டம் என்னவென்றால், இந்த நம் சேஷிக்கு வாய்க்கப் போகும் அந்த சேஷன் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கண்டுபிடிப்பதில் தான். ஆனால் இதில் ஒரு சௌகரியம் என்னவென்றால், மாப்பிள்ளைகளை அவர்களுக்கான விலையைக் கொடுத்தால், வாங்கிவிட முடிகிறது. இந்த மாதிரி ஏதோ ஒரு விலைக்கு படியாத ஒரு மாப்பிள்ளையை நான் பார்த்ததில்லை. அவர்கள் ஒன்றும் ஒரு கடைக்குள் இருக்கும் கண்ணாடிப் பெட்டிக்குள் உட்கார்ந்து கொள்வதில்லை தான். ஆனால் என்னவோ அவர்களை வைத்து ஏலம் போட்டாலும் அதற்கும் அவர்கள் ஆவலோகத் தயாராகத் தான் இருக்கிறார்கள். இதிலும் என்ன சிரமமென்னவென்றால் இந்த மாப்பிள்ளைகள் எல்லாம் அவரவர் தரத்திற்கேற்றவாறு பிரிக்கப்பட்டு, லேபிள் ஒட்டி, விலையும் குறித்து, இவர்கள் எல்லாருடைய விவரங்களையும் குறித்த விலைப்பட்டியல் எதுவும் தயாரிக்கப்பட்டு ஒரு இடத்தில் கிடைப்பதில்லை. அப்படி இருக்குமானால், அவரவர் மனைவிகள் பி.ஆர் அண்ட் சன்ஸ் விலைப்பட்டியலைப் பார்த்து தனக்குப் பிடித்த அட்டிகையைப் பொறுக்கிக் கொள்வது போல, ஒருத்தர் ஒரு இடத்தில் உட்கார்ந்து, விலையையும் தரத்தையும் பார்த்து அவரவருக்கு பொருத்தமான மாப்பிள்ளையைப் பொறுக்கிக் கொள்ளலாம். மதராஸ், பங்களூர், உதகமண்டலம் இங்கெல்லாம் இருக்கும் ஸ்பென்ஸர் அண்ட் கம்பெனியின் வியாபார சாதுர்யத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒரு ஆணின், பெண்ணின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் தன் திறமையைக் காட்டும் இந்த கம்பெனி போன்ற ஒன்று உலகத்தில் எந்த மூலையிலாவது இருக்குமா என்பது எனக்கு சந்தேகம் தான். இவர்களிடம் நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். மருந்து சாமானிலிருந்து மோட்டர் கார் வரை. துப்பாக்கியா, ரொட்டியா, கட்டிலா, மெத்தையா, சோடாவா, வாசனை சாமான்களா, புத்தகமா, எதானாலும் சரி, உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு க்ஷணத்தில் உங்கள் கற்பனையில் உதிக்கும் ஏதோ ஒரு கிடைத்தற்கரிய பொருள், அதுவும் இவர்களிடம் கிடைக்கும். ஒரு மனித ஜீவனுக்கு தேவையான எந்த பொருளானாலும் இவர்களிடம் கிடைக்காத ஒன்றைக் கற்பனை செய்வது சிரமமாக இருக்கும். மாப்பிள்ளைகளைத் தவிர. இந்த ஒரு எல்லாருக்கும் தேவையான ஒரு பொருளின் வியாபார சாத்தியங்கள் ஏன் ஸ்பென்ஸர் அண்ட் கோவின் புத்திக்குள் சிக்காது தப்பிவிட்டது என்பதை நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதில் ஏதும் சிரமங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எல்லா விவரங்களுடன் ஒரு விலைப்பட்டியல் தயாரிக்கவேண்டும். அவ்வளவு தான். “தாழ்வான இருக்கைகள், முழுதும் எ·கிலான கட்டமைப்பு, ஆறு சிலிண்டர்கள், விண்ட் ஸ்க்ரீன், புது மாடல் டாஷ் போர்ட், ஹைட்ரோ ஸ்டாடிக் பெட்ரோல் காஜ், என்ஜின் தெர்மாமீட்டர்” என்று இப்படியெல்லாம் சந்தை வைக்கும் பொருளின் குணங்களை அடுக்குவதற்குப் பதிலாக, “புகைப்படத்தில் உள்ளது போன்ற முகம், 5′ 4″ உயரம், 33″ மார்பின் சுற்றளவு, நல்ல ஆரோக்கியமான உடல். தாராளமாக பணமும், அடிக்கடி பரிசுகளும் கொடுத்தால், அமைதியாகவும் கலகலப்பாகவும் இருக்கும் சுபாவம், எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ், ரொக்கமாக ரு. 2500, 1500 ருபாய்க்கு வெள்ளிப் பாத்திரங்கள்;” என்றோ, அல்லது “தவணை முறை உண்டு: புகைப்படத்தில் உள்ளது போன்ற முகம், சட்டப்படிப்பில் இருப்பவர்; ஹை கோர்ட்டில் நீதிபதியாகும் எதிர்பார்ப்பு; ரொக்கமாக உடனே ரூபாய் 5000; அல்லது சுலபமான தவணைகளிலானால், ஆவணி அவிட்டத்தின்போது ரூ 1,000, தீபாவளியின் போது ரூ 1,400; சாந்தி முகூர்த்ததன்று ரூ 2,500. மாப்பிள்ளைக்குத் தரும் பரிசுகள் வாங்க வரும் போதோ, அல்லது தவணைகளை வசூலிக்கச் வரும் போதோ, போக வரச் செலவுகள், சிவில் செர்வீஸ் ரெகுலேஷன்ஸ் படி தரவேண்டும்” என்றோ விவரங்களை விலைப்பட்டியலில் தரலாம்.”

இது ஒன்றும் தெற்கே நடைமுறையில் இல்லாதவை என்றோ, மிகைப்படுத்தப் பட்டவை என்றோ நிச்சயமாகச் சொல்லமுடியாது. இவை ஏதோ போன நூற்றாண்டின் இருபதுக்களில் இருந்தவை என்றோ, இப்போது நம் காலத்தில் நடைமுறையில் இல்லாத சரித்திரமாகி விட்ட பழங்கால சமாச்சாரங்கள் என்றும் சொல்லிவிடமுடியாது.

எஸ்.வி.வியைப் பற்றி க.நா.சு இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “லேசான, நம்மைச் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் சித்திரங்கள். அவர் எழுதி ஐம்பது வருஷங்களுக்குப் பின் இப்போது இவற்றைப் படிக்கும் போது, மனித சுபாவம், முக்கியமாக இந்திய சமூகத்தின் சுபாவம் அப்படியொன்றும் அதிகம் மாறிவிடவில்லை என்று தோன்றுகிறது. வைஸ்ராய் லின்லித்கோவின் காலத்திலும் சரி, இன்று பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் காலத்திலும் சரி, மனித சுபாவம் அப்படியேதான் இருந்து வந்திருக்கிறது.”

“மனித சுபாவம் அப்படியேதான் இருக்கிறது.” க.நா.சு. சொல்வது உண்மைதானா? எனக்குத் தோன்றவில்லை. எஸ்.வி.வி தன் காலத்தில் பார்த்த எந்த வேடிக்கையான மனித குணங்களை, சமூக நியதிகளை, பழக்க வழக்கங்களை, துவேஷத்தோடு பார்க்காது, மலிவாக்காது, கொச்சைப் படுத்தாது, தன் மெல்லிய நகைச்சுவை உணர்வு கொண்டு கிண்டல் செய்தாரோ, அவையெல்லாம் இன்னமும் மோசமாகத் தான் ஆகியிருக்கின்றன, ஸ்தாபனமாக கட்டமைக்கப்பட்டுள்ள காரணத்தால் அவை நமக்கு கேலிப் பொருளாகப் படுவதில்லை. அவற்றை நாம் மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு தீவிரமாக கடைப்பிடிக்கிறோம். மேலும் இவையெல்லாம் இன்றைய நவீன காலத்தின் அறிகுறிகள் என்றும் நம்புகிறோம்.

சரி, இதே போன்று இன்னொரு விஷயத்தையும் எடுத்துக்கொள்ளலாமே. ஒரு ஸ்தாபனமாகவே வளர்ந்து பெருகிவிட்ட நிர்வாகத்தையே பார்க்கலாம். 1920-களில் இன்றுள்ளது போல நிர்வாகம் ஜனங்களை இவ்வளவு அலட்சியப்படுத்தியது கிடையாது. இன்றுள்ளது போல பகாசுரத் தனமாக வளர்ந்து எல்லாக் காரியங்களிலும் தன்னை பரப்பிக்கொண்டதும் கிடையாது. ஒரு கிராமத்து மக்கள் ஒரு கிணறு தோண்ட ஜில்லா போர்டு அதிகாரிகளிடம் அனுமதி பெறப் பட்ட பாட்டை எஸ்.வி.வி. சொல்லியுள்ளதைப் பார்த்தால், அந்த நிர்வாகத்தின் நடைமுறைகள் சிக்கலான சுற்றிச் சுற்றி அலைகழிக்கும் கா·ப்காத் தனமான ஒன்றாகவே தோன்றும். இப்போது அந்த நடைமுறைகளும் சிக்கல்களும் எப்படி வளர்ந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். நாமெல்லாம் நம் விஞ்ஞான அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சர் சி.வி. ராமன் சொன்ன அறிவுரையைத் தொடக்கமாகக் கொண்டு ஒரு கதை சொல்கிறார் எஸ்.வி.வி. ஜலதோஷம் பிடித்து விட்ட ஒருவன், அதற்கு மருந்து ஏதும் சாப்பிடும் முன், அது பற்றிய மருத்துவ விஞ்ஞான அறிவு என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள ‘சாதாரண நோய்கள் பற்றிய கையேடு’ ஒன்றைப் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறான். தன் நோய்க்கூறுகளைக் கொண்டு அவனைப் பீடித்திருக்கும் நோய்தான் என்ன என்று பார்க்கும் போது, இன்·ப்ளூயன்ஸா விலிருந்து தொடங்கி மஞ்சக்காமாலை வழியாக எத்தனையோ பயங்கர வியாதிகளுக்கெல்லாம் அவனை இட்டுச் செல்கிறது அந்தக் கையேடு. அந்தப் பெயர்கள் எல்லாம் உச்சரிக்க கஷ்டப்படுத்தும் வார்த்தைகளாகவும், பல வார்த்தைகளின் தொடர்சங்கிலி போலவும் லத்தீன் மொழியில் இருந்தன. கடைசியில் பாவம் அவன் பரிதாபகரமாக செத்தே போகிறான். அளவுக்கு மீறிய அறிவு தான் அவனைக் கொன்று விட்டது என்கிறார் எஸ்.வி.வி. நான் அறிவை வளர்த்துக் கொள்கிறேனாக்கும் என்னும் விளையாட்டு ஆர்வத்தை நாம் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். கையேடுகளைக் கொண்டு பாடம் கற்றுக்கொள்வதையும் விட்டு விடவேண்டும் என்றும் எஸ்.வி.வி. சொல்கிறார். அதே போல இந்த வியாபார நாகரீகம், சுவரொட்டிகள், விளம்பரங்கள் இவற்றிலிருந்து நாம் ஜாக்கிரதையாக ஒதுங்கி இருக்கவேண்டும் என்றும் அவர் அபிப்ராயப் படுகிறார். “ஒரு குறிப்பிட்ட ப்ராண்ட் பெருங்காயத்தையே உபயோகியுங்கள், இந்தப் புகழ் பெற்ற தலைவலி மாத்திரையையே வாங்குங்கள்” என்றோ நமக்குக் கட்டளையிடாத மின்சாரக் கம்பமே கிடையாது”. பின் இருக்கவே இருக்கிறார்கள் கிராம மக்களை சுற்றி வளைத்துக் கொள்ளும் சமூக ஊழியர்களும், கிரிக்கெட் சுரமும். “உண்மையில் இருபத்தி நாலு மணி நேரமும் யார் யாரெல்லாமோ எது எதெற்கெல் லாமோ வந்து படையெடுத்து வந்துவிடுவார்கள். கிராமத்து ஜனங்கள் வயலுக்குப் போய் விவசாயத்தைக் கவனிக்கவோ, வீட்டை, தெருக்களைப் பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளவோ அவர்களுக்கு நேரம் மிஞ்சாது. ஒரு ஜில்லா ஆணையரோ, பத்திரிகை ஆசிரியரோ தன் அலுவலகச் சுவரில் நோட்டீஸ் போர்டு தொங்க விட்டிருப்பார்களே, “மாலை இரண்டிலிருந்து நாலு மணி வரை பார்வை நேரம். மற்ற நேரங்களில் அனுமதி கிடையாது” என்று எழுதி. அது போல ஏதாவது தான் அவர்கள் செய்ய வேண்டும்.

அடுத்து இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்களின் இடைவிடாத தொந்திரவு:

“ஸார். நீங்கள் இன்ஷ்யூரன்ஸ் செய்து கொண்டு விட்டீர்களா?”

“இல்லை” என்று சொல்லிக்கொண்டே என் கைப்பையைத் துளாவுகிறேன், இந்த ஆளை விரட்ட ஏதாவது, பத்திரிகை கிடைக்குமா என்று தேடி. அவன் விடுவதாக இல்லை.

” ஏன் செய்து கொள்ளவில்லை.”

“காரணம் ரொம்ப சாதாரணமானது. உயிரோடு இருக்கும் என்னை விட, என் செத்த உடலுக்கு மதிப்பு அதிகம் என்று நம்புவது எனக்கு கௌரவ குறைச்சல் என்று நான் நினைக்கிறேன்,” என்று பதில் சொல்லிக்கொண்டே, பத்திரிகையை விரித்து நான் படிக்கத் தொடங்குகிறேன்.”

ரயிலில் பிரயாணம் செய்யும் போதும், பொது விருந்துகளிலும், வக்கீல்கள் என்று சொல்லிக்கொண்டு நம் ரத்தத்தை உறிஞ்சுகிற கூட்டத்தை, நம்மை வருத்தி எடுக்கும் கோர்ட் விசாரணைகளில் இது போன்று இன்னும் பல இடங்களில் பார்க்கிறோம். ஆனால் எஸ்.வி.வி போல இவர்களை நாம் கேலியாகப் பார்ப்பதில்லை. இந்த நவீன யுகத்தின் முக்கிய அங்கமாக, நாகரீகத்தின் கொடையாக நாம் இவர்களைக் கருதுகிறோம்.

இப்படியெல்லாம் எழுதும் எஸ்.வி.வி. ஒரு பழங்கால மனிதராகத்தான், பழம் வாழ்க்கை மதிப்பு களைக் கொண்ட மனிதராகத்தான் இருந்தார். அவர் ஆசாரங்களைத் தழுவிய மனிதர் தான். இருப்பினும் அவர் தன் உலகத்தின் கோணல்களையெல்லாம், மென்மையாக, யார் மனதையும் புண்படுத்தாது, அக்கோணல்களை மிகைப் படுத்தி, இன்னமும் கோணலாக்காது, நகையாடினார். அவர் தன் காலத்தில் நகையாடிய கோணல்கள் இன்று ஸ்திரமாக ஸ்தாபிதமாகி, நவீன தோற்றங்களையும் கொண்டு நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகியுள்ளன. எஸ்.வி.வி. தான் நகையாடிய மனிதர்களை அதற்காக கார்ட்டூன்களாக்கிவிடவில்லை. நம்மைக் கிளுகிளுக்க வைப்பதற்காக எந்த சம்பவத்தையும் செயற்கையாக கற்பித்துக் கொள்ளவில்லை. அதற்கெல்லாம் அவருக்கு அவசியமிருக்கவில்லை. அவர் தன்னைச் சுற்றியுள்ள உலகை, மனிதர்களை, வாழ்க்கையை தான் கண்டவாறே எழுதினார். அவை எதுவும் அவர் முகத்தில் ஒரு கேலிப் புன்னகையைத் தர தவறவில்லை. இவ்வளவு கேலி செய்யும் எஸ்.வி.வி. 1980-ல் பிறந்த இந்த மனிதர், தலையை மழுங்கச் சிரைத்த தலையும், உச்சிக் குடுமியும், நெற்றியில் பளபளவெனத் தீட்டிய வைஷ்ணவ நாமமுகாகக் காட்சியளிக்கும் எஸ்.வி.வி. நம்மைவிட புதுமைப்பார்வை கொண்ட மனிதராகத் தான் இருந்தார். மெல்லிய காற்று வீசும் மாலை வேளைகளில், சூடான காபியை முன் வைத்துக்கொண்டு அவருடன் அளவளாவுவது, ஒரு வேளை நம் பார்வைகளையும் சிந்தனைகளையும் புதுமைப் படுத்தலாம். நம் வாழ்க்கையில் இழந்த விவேகத்தை நமக்குத் திரும்பத் தரலாம். அவர் இறந்து கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்குப் பிறகுதான் அவர் ஆங்கிலத்தில் எழுதிய குறிப்புகளும், கதைகளும் திரும்ப வெளியிடப்பட்டன.

1930-களில், வாசனுடன் கல்கி திருவண்ணாமலைக்குச் சென்று எஸ்.வி.வியைச் சந்தித்து, அப்போது தான் ஆசிரியப் பணியாற்றிக்கொண்டிருந்த ஆனந்த விகடனுக்கு எழுதவேண்டும் என எஸ்.வி.வியைக் கேட்டுக்கொண்டதும், ஆனந்த விகடனுக்காக எழுதத் தொடங்கியவர், முற்றிலுமாக தமிழிலேயே தான் விடாது எழுதினார், அவர் உயிர் பிரிந்த 1950வரை.


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்