கவிதைகள்

This entry is part of 46 in the series 20090108_Issue

க.செ.வெங்கடேசன்.. அபுதாபி.


சந்தி(ப்) பிழை

அவள் இவள்
சந்தித்தது, சந்திப்பதே,..
பிழையெனில்,
இவர்களைப் பற்றி
எழுதுகையில் ஏற்படும்
சந்திப் பிழை
பிழைபடில்,
பெரும்பிழையோ?என் காதலி

குறும்புப் பார்வை,
குறுகுறுத்த கண்கள்,
மென்மையான ஸ்பரிசம்,
அன்பான முத்தம்,
என்னில் விளையாடும் கரங்கள்,
காதல் வழியும் மொழி,
என்னில் ஏற்படுத்திய தாக்கம்,
எல்லாம் என் கண்முன்னே,
இமைகள் மூடும் போதெல்லாம்,
என்னுள்ளே உள்ள காதல் அவளின்பால்,
இத்தனை வயதிலும் மாறவே இல்லை,
என் மகள்.களவு கூட சந்தோஷம்தான்

குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்
சிமெண்ட் பெஞ்சில்
தி ஜாவின் மோகமுள்
உடனான தணிமை,

முன் வராண்டா வேப்பமர
முன்னிரவு தென்றலில்
இளையராஜாவின் இசையுடன்
ஜென்சியின் இனிமையுடனான
எப் எம் அலைவரிசை.

அலுவலகம் முடிந்து
நண்பர்கள்
பாய் கடை டீ பிஸ்குத்
தம் அரட்டை,

காலை செய்தித்தாள்,
மாலை தொலைக்காட்சி,
செய்தி, மெகா சீரியல்,
பின்னிரவு பால் பழம் தம்,

மற்றும் எத்தனை எத்தனையோ?!!..
களவு போயும்கூட
கவலையில்லை,
சந்தோஷமே!!..
என்னுடனான என்
குழந்தையின் திருடப்பட்ட
சந்தோஷ தருணங்கள்
களவு போனதில்..


Series Navigation