வழக்கம் போல் இருப்பதில்லைதான் வழக்கமான மழை

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

ஆனந்த செல்வி



மும்பையில் இலக்கிய நிகழ்வுகள் நடந்தவண்ணமிருக்கத்தான் செய்கிறது. தமிழ்ச்சங்களும் இலக்கிய அமைப்புகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பது தகவல். அதே நேரத்தில் செய்தி என்னவென்றால், மும்பை இலக்கியப் பரப்பில் புதிய பதிவாக பிரபல எழுத்தாளர் எஸ். ஷங்கரநாராயணன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப் பட்டு அவரது படைப்புகள் குறித்து மதிப்புரை, ஆய்வுரை மற்றும் விமர்சனங்கள் வைக்கப் பட்டது என்பதுதான்.

அக்டோபர் 27ல் சனிக்கிழமையன்று மாலை 7 மணிக்கு கோரேகான் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் எஸ். ஷங்கரநாராயணன் (ஷ.நா) தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. ஆகா ஒகோ என்று சொல்லும் படியான கூட்டம் இல்லைதான் ஆனால் அடக்கமான அளவு கூட்டமிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. சங்கப் பிரமுகர் கே. ஆர் சீனிவாசன் ஷ.நா சிறுகதைகள் குறித்து மதிப்புரையை வாசித்தார். கனத்த பலாச்சளையை உரித்து கொடுத்தாற்போல் ஷ.நா கதைகள் குறித்து சிறப்பம்சங்களை மிக சுறுக்கமாகவும் நயமாகவும் வாசித்தார்.
அடுத்தாக கவிஞர் அன்பாதவன் அவர்கள் ஷ.நா அவர்களின் நான்கு கவிதைத் தொகுதிகள் குறித்து மதிப்புரை வழங்கினார். புதுக்கவிதைகளின் வீச்சு/ வசனக் கவிதையின் தோற்றம் என கவிதை வரலாற்றையும் மதிப்பு கலையாமல் உதாரணக் கவிதைகள் வாசித்து விளக்கினார். ஷ.நா கவிதைகள் குறித்து ஆழமாக ஏதும் சொல்லிவிட வில்லை. ஆனால் அழுத்தமாக சில புள்ளிகளை வைத்தார்.

அடுத்தாக கே. ஆர் மணி ஷ.நா நாவல்கள் குறித்து மிகச் சிறப்பான மற்றும் ஆழமான ஆய்வினை வழங்கினார். மணி வாசித்த ஆய்வுக் கட்டுரையின் அத்தனை பத்திகளும் அவரது ஈடுபாட்டையும் உழைப்பையும் வெளிப்படுத்தியது. ஏற்புரை என்று இல்லாமல் தனது படைப்புகள் குறித்து வைக்கப் பட்ட ஆய்வுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து மறு விமர்சனம் செய்யாமலும் விளக்கம் தராமலும் ஷ.நா ஏற்றுக் கொண்டார். மேலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு மிகவும் அமைதியாகவும் ஆழமாகவும் பதிலளித்தார். பார்வையாளர்களிலிருந்து ஒரேயொருவரைத் தவிர அனைவரும் இறுதி வரை இருந்தது குறிப்பிடத் தகுந்த ஒன்று. ஒரு மணி நேரத்தில் வெளியேறிய அந்த ஒரேயொரு நபர் நானும் கடைசி வரை இருந்திருக்க வேண்டும் என நண்பர் யாரிடமாவது கண்டிப்பாய் வருத்தப் படுவார். அந்த அளவுக்கு நிகழ்ச்சி நிறைவாய் இருந்தது.

மறுநாள் அக்டோபர் 28, ஞாயிறு காலை 11 மணிக்கு வாஷி தமிழ்ச் சங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. ஷ.நா நாவல்கள் குறித்து மணியும்/ கவிதைகள் குறித்து கவிஞர் அன்பாதவனும் தொடர்ந்தார்கள். இந்த முறை அன்பாதவன் இயல்பாக தனது கருத்துகளை வாசித்து விட்டு பெருமூச்சு விட்டார். இந்த முறை வார்த்தைகளை தீட்டிக் கொண்டு வந்திருந்தார் போலும் கூர்மையை உணர முடிந்தது. மேலும் வாஷி சங்கத்தில் ஷ.நா கதைகள் குறித்து அவசர ஆய்வு ஒன்றினை திருமதி மீனாட்சி அவர்கள் வழங்கினார். மேலும் ஒரு பெருஞ்சத்தத்துடன் ஷ.நா வை பாபாராட்டி விட்டுப் போனார். விழாவானாது அளவுச் சாப்பாட்டுடன் இனிதே நிறைவுற்றது.

ஓய்வெடுக்க விருப்பமில்லா ஷ.நா மாலை ஐந்து மணி வரை வாஷி சங்க அரங்கத்திலேயே அமர்ந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது இந்த கலந்துரையாடல்.

அதே நாள் மாலை சயான் பகுதியிலுள்ள மும்பை தமிழ்ச் சங்கத்தில் ஷ.நா இறுதி வரவேற்பு கொடுக்கப் பட்டது. இதில் கவிஞர் புதியமாதவி ஆய்வுரை வாசித்தார். புதியமாதவி அவர்கள் அவருக்கே உரிய பாணியில் மிக வெளிப்படையாக ஷ.நா எழுத்து குறித்து தனது கருத்தை முன் வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. வழக்கம் போல் மணியும் சங்க பிரமுகர்களும் தங்கள் கருத்துகளை முன் வைத்தார்கள். இங்கும் கே.ஆர் மணியின் ஆய்வு கவனிக்கப் பட்டது.

மூன்று இடங்களிலும் ஷ.நா தான் எழுதிக் கொண்டு வந்திருந்த உரையின் நகலைக் கொடுத்தார் மேலும் வாஷி, மற்றும் சயான் சங்கத்தில் அதனை வாசிக்கவும் செய்தார்.

இந்த மூன்று இடங்களிலும் நடந்த நிகழ்ச்சி நவீன ‘ஓரங்க நாடகம் ‘ ஒன்றால் துவக்கப் பட்டது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய ”மொகித்தே” சிறுகதையை மதியழகன் சுப்பையா நாடகமாக்கி இயக்கி இருந்தார். மராட்டி கதாபாத்திரம் மராட்டி மொழியில் பேசி நடித்ததும், அந்த மராட்டி பாத்திரத்திடம் இந்தியில் பேசி நடித்ததும் எதார்த்தமாகவும் கதைப்படி தவிர்க்க இயலாததாகவும் இருந்தாலும் பலர் அது குறித்து குறைபட்டுக் கொண்டார்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் ஓரிரு புதிய வசனங்கள் சேர்க்கப் பட்டு காட்டப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

கே. ஆர் மணியின் ஒருங்கினைப்பால் மூன்று இடங்களிலும் விழா சிறப்பாக ஏற்பாடாகி இருந்தது. மும்பையில் இது புதிய வகை நிகழ்ச்சி. பலருக்கும் பிடித்துப் பொயிருந்தது. சங்கத்தார்கள் இவ்வாறான நிகழ்ச்சிக்கு முழு ஆதரவு தர உள்ளதாகவும், இவ்வாறான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தலாமெனவும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.


Series Navigation

ஆனந்த செல்வி

ஆனந்த செல்வி