கவிதைகள்

This entry is part of 54 in the series 20080110_Issue

கருணாகரன்


மியூசியத்தில் வைக்கப்படும் நாள்

இந்தக்களைப்பு நீங்க

தண்ணீரைக்குடி

கைவிடப்பட்ட இந்த நாள்

இனி ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை

இன்று

துக்கத்தின் கடைசிப்புள்ளியிலிருந்து

திரும்பி

அவரவர் இடத்துக்குச் செல்வோம்.

மெல்ல மெல்ல

வேதனையின் வலி பின்னகர

இறந்தவனின் உயிர்

நம்மை விட்டு நெடுந்தொலைவு போன திசையில்

போகிறது

அவனின் நினைவுகளும்

கரைந்து

கனமற்று.

மெதுவாகவே

பதுங்கி நகர்ந்து வருகின்றன

துக்கத்தின் போது மிரண்டு பின்தங்கிய

வார்த்தைப் பூனைகள்

நம் கால்களுக்கிடையில்

மீண்டும்.

கழிந்து போன பருவகாலமாகிவிட்ட

அவன்

இனி ஒளி மங்கியதொரு புகைப்படமே

வெட்கமாகவேயிருக்கிறது

இந்த நாடகத்தில்

நாமே

நடிப்பதாகவும் நாமே

அதைப்பார்ப்பதாகவும் இருப்பதையிட்டு

தற்செயலாய்

இறந்தவனைக் காணநேர்ந்தால்

உலர்ந்த நினைவுகளை வைத்துக்கொண்டு

என்ன செய்வது

எந்தப்புள்ளியிலிருந்து அவனைத்

தொடர்வது

என்பதும் ஒரு பிரச்சினையே

எல்லாமே மியூசித்திற்குத்தான்

ஒரு போது, எனலாமா


தொண்டன்

இந்தக்கதவுக்கு வெளியே

நிறுத்தப்பட்டிருக்கிறது நெடுநேரமாய்

வரவேற்பு

யாரடையதோ வருகைக்காக

பூட்டப்பட்ட கதவின் வெளியே

நெடுநேரமாய் தனித்திருக்கும் போது

அவமானத்தையும்

நெருடலையும்

சகித்துக் கொள்ள முடியாது

வெளியேறவும்

உள்நுளையவும்

வழியற்று

சலிப்போடு காத்திருக்கிறது

வரவேற்பு

இன்னும் யாருக்காகவோ

அவசரமா

மகிழ்ச்சியா

துக்கமா

தனிமையா எது வருமெனத்

தெரியாமலே காத்திருக்கும்

அசைகின்ற நீள் பொழுது

எந்த முகமும்

இல்லை அதனிடம்

எனினும்

இன்னும் காத்துக் கொண்டேயிருக்கிறது

அது

பூட்டப்பட்ட கதவை விட்டுப் போக முடியாமல்


poompoom2007@gmail.com

Series Navigation