கவிதைகள்

This entry is part of 51 in the series 20041007_Issue

பாஷா


காத்திருப்பேன் காதலா

பாஷா

என்னைச்சுற்றி நீ
விட்டுப்போன கேள்விகள்
நீயில்லாத வெற்று நிமிடங்களை
சுமந்துகொண்டு சூன்யவெளியில்
அலைந்திருக்கும்!

கனவில் வந்து
கன்னம் வருடிப்போகும்
உன் உள்ளங்கை உரசலை
இனி யாரிடம் சொல்வேன்!

மறுபிறவி நம்பியவளில்லை
உன்னை மறுக்கும்வரை
இன்று சொல்கிறேன்
இந்த பிறவியுடன்
இனியென் உடன் நீ
வரும் பிறவிகள் ஏராளம்!

இனிஒரு பிறவியில்
உன் மதத்தில்
உன் குலத்தில்
உன் பிரிவில்
உன் முறையாக
பிறக்கும் ஒரு நாளில்
பிறந்த என் காதல் சொல்வேன்
அதுவரை
இறந்துகிடக்கட்டும்
சொல்லப்படாத என் காதல்
முற்றுபெறாத இந்த கவிதையுடன்!


மயானம்

பாஷா

அது ஒரு தனி உலகம்
அலைபாயும் காற்றில்
நிபந்தனைகளற்ற அன்பு
தொட்டில்கட்டி ஆடுமிடம்!
ஆரம்பத்தின் பிறப்பிடம் அந்த சாம்பல்மேடு
அர்த்தநாரீஸ்வரன் ஆடும் காடு
ஆணவம் தொலைப்பவர் வீடு!

திருவாசகம் பாடும்
மாணிக்கவாசகர்களும்
தெருகல்லென தூற்றும்
நாத்திக நீசர்களும்
நித்திரைகொள்ளுமிடம்!

குடுமிகொண்ட மண்டையோடும்
குருதிதொலைத்த பிண்டமும்
கணக்கில்லா உடல் எச்சங்களும்
கூடிக்கிடக்கும் ஒரே
குலமிலா உலகது!

காதலாய்,கண்ணீராய்
அவமதிப்பாய்,அன்பாய்
தெளிக்கப்படும் வார்த்தை கலைந்து
ஆபாச நகர இரைச்சல்களுக்கிடையே
அமைதி சொல்லும்
மயான பூமியின்
துருப்பிடித்த கதவு திறந்து
விருப்பி வாருங்கள் தனியனாக
ஒருமுறையேனும்!


Series Navigation