கவிதைகள்

This entry is part of 52 in the series 20040617_Issue

பாஷா


நிகழ்வுகள்

சில சொற்களால்
சில நிகழ்வுகள்
நித்தம் நடந்தேறிகொண்டிருக்கிறது
சொற்கள் சம்பிரதாயமாக
தெளிக்கப்பட்டபோதும்….

உணர்வுகள் உள்ளத்தில் புதைந்து
உதடுகள் வார்த்தைகள்
ஒப்பிக்கும் இயந்திரங்களாய்
மாறிப்போனது.

சமூக பார்வையாளர்களின்
ஜன்னல்வழி காட்சிக்காக
நித்தம் ஒரு
நாடகம் நடந்தேறிகொண்டிருக்கிறது.

கல்யாணமென்றே வழிப்போக்கர்களின் வாழ்க்கை
குப்பை காகிதத்தில்
கோட்பாடுகளாக நிரப்பபடுகிறது.

சகித்துகொள்வேனென்றே
சாவிகொடுக்கும் பொம்மைகளாய்
மாறிப்போனது அன்னையர் இனம்

காதல்,கண்ணீர்
பாசம்,அன்பு
இவையெல்லாம் இலக்குதேடி
பிரபஞ்ச வெளியில்
அலைபாய்ந்துகொண்டிருக்கிறது
நாகரீகம் மட்டும்
நைல் ஆற்றிலேயே
மூழ்கிப்போனது!
—-
நீ இல்லாத நான்

அந்திம நாட்களின்
இருண்ட இரவுகளோ இவை ?
உன்சுவடுகள் வருடாமல்,
மூன்று இரவுகள் நினைவுதப்பி
கருந்துளையில் காணாமல்போய்விட்டது.

உன்குரல் எழுப்பாமல்
என் தொலைபேசி
உறக்கத்திலேயே உயிர்துறந்துவிட்டது
பூஜையறை,சமையலறை
இவற்றுடன் என்
உயிரிலும் ஒரு
வெற்றிடத்தை விதைத்துவிட்டாய்.

இப்பொழுதெல்லாம் எழுதும்
என்கவிதைகளை கிழித்தெறிகிறேன்
உன்பிரியத்தை எனக்கல்ல,
என்கவிதைக்கே கொடுத்தாயென்ற
பொறாமையால்….

கடல்நடுவில் மிதக்கும்கட்டையில்
தனித்துவிடப்பட்ட குழந்தையாய்
கதறியழுகிறேன்!
வேலைபளு கொண்டவனாய்
வேதனை புதைக்க
வேடம்தரித்து திரிகிறேன்
இதயம்பிளக்கும் வேதனையை நீ
இல்லாத வெறுமைக்கு
சொல்லிகொண்டிருக்கிறேன்!
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation