கவிதைகள்

This entry is part of 54 in the series 20040527_Issue

சேவியர்


தவறான புரிதல்கள்

0

மொட்டை மாடியில்
தனியே அமர்ந்து
நட்சத்திரங்களின்
கவியரயரங்கத்தை
ரசித்துக் கொண்டிருக்கையில்,

இருளின் மெளனத்தை
காகிதத்துக்குப்
புரியும் வகையில்
எழுதிக் கொண்டிருக்கையில்,

தென்னை மரத்தடியில்
மாலை வேளையில்
தென்னம் பூக்களை
நலம் விசாரிக்கையில்,

புழுதியற்ற காற்றுக்கு
புன்னகை
கொடுத்துக் கொண்டிருக்கையில்

அம்மா
அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பாள்
எனக்கு
கல்யாண வயதாகி விட்டதாய்.

0
….
காதல் இலவசமில்லை

0

உனக்கும் எனக்கும்
இடையே
நீண்டு கிடக்கும் சாலையில்
சீறிப் பாய்கின்றன
வாகனங்கள்.

நீ இந்தப் பக்கமும்
நான் அந்தப் பக்கமும்
காயமின்றிக்
கடந்து வரல்
சாத்தியமில்லை என்றே
தோன்றுகிறதெனக்கு.

வாகனங்கள்
எப்போதுமே
வழிவிடுவதில்லை.

பொறு
இரவு
சாலையில் இறங்கிய பின்
சந்தித்துக் கொள்ளலாம்.

அதுவரைக்கும்
காப்பாற்றி வைத்திரு
என் காதலையும்
உன்னையும்.

====

விழாக்கால வாழ்த்துக்கள்

0

வயலோர
ஒற்றையடிப்பாதையில்
சாயமிழந்து போன
சைக்கிளை நிறுத்தி
வைத்து விட்டு
வருவார் தபால்காரப் பெரியவர்.

கிறிஸ்மஸ்,
புது வருடம்,
பொங்கல்
என
ஒவ்வோர் பண்டிகைக்கும்
அவருக்கான
காத்திருப்பு அதிகரிக்கும்.

காத்திருத்தலைக் கலைக்க
ஒரு சில
வாழ்த்துக் கடிதங்களேனும்
இருக்கும்
அவருடைய கைகளில்
எனக்காய்,

எப்போதும்
தோன்றியதே இல்லை
அவருக்கும்
ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப.
—-
Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation